தமிழகம்

ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: டி. இராமச்சந்திரன் MLA வலியுறுத்தல்

எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீது தளி சட்டமன்ற உறுப்பினர் T. இராமச்சந்திரன் பேசியதாவது:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

எரிசக்தி துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையின் மீது பேச வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

தளி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று இந்த அவையில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தளி சட்டமன்ற தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் என் சார்பாகவும் தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கையின் மீது முதலில் என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
150 ஆண்டு காலமாக தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் 44 தொழிலாளர் சட்டங்களை 4 கட்ட தொகுப்புகளாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 36 நல வாரியங்கள் அமைக்கப்பட்டது. இந்த நல வாரியங்களை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்ட தொகுப்புகள் உள்ளது.
கொள்கை ரீதியாக ஒன்றிய அரசின் சட்ட தொகுப்புகளை எதிர்க்கின்ற இந்த அரசு, அதேவேளையில் மாணவர்களுடைய கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் தேர்விற்கு எதிராகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற 3 வேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்ததைப் போல ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற 4 சட்ட தொகுப்புகள் தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டோம் என சட்டமன்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கத்தின் சார்பாக இந்த அரசை நான் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே முதல் முதலாக சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நமது தமிழ்நாட்டில் இதே சென்னையில் நமக்கு பக்கத்தில் இருக்கும் கடற்கரையில் 1923ஆம் ஆண்டு மே தினத்தை கொண்டாடினார். அந்த மே தின நினைவாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் மே தின பூங்காவும், மே தின நினைவுச் சின்னம் அமைத்து தந்தார். தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாட வேண்டிய நூற்றாண்டு இது. அதன் நினைவாக இந்த ஆண்டு முழுமையிலும் தொழிலாளர்கள் நலன்களுக்காக தனித்த திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும்.

அதேபோல 10 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த தொழிலாளர் நலனை இந்த அரசு மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி மாநிலம் நமது தமிழ்நாடு. ஏராளமான தொழிலாளர் பிரச்சினைகள் இங்கு நிலவுகின்றன. போதிய அக்கறையோடு இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நமது மானியக் கோரிக்கையில் கொள்கை குறிப்புகள் அனைத்திலும் வாரியங்கள் மட்டுமே வந்து போகின்றன. வேறு செயல்பாடுகளைப் பற்றிய விவரங்கள் பெரிய அளவில் இல்லை என்பதையும் அவையின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பணிக்கொடை, தொழிலாளர் இழப்பீடு, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல வழக்குகளில் தொழிலாளர் துறை தீர்ப்பு தரும் அதிகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்புகளை வழங்குவதற்கான, தொழிலாளர் இணை ஆணையர், தொழிலாளர் கூடுதல் ஆணையர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. ஒரு அதிகாரி வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பணியிடங்களில் பொறுப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். எந்த வழக்கையும் நடத்தாமல் வாய்தா போடும் நிலைதான் உள்ளது. ஆகவே, இந்த பணிக்கொடை போன்ற நலன்களை பெறுவதற்காக வயது முதிர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தொழிலாளர் துறை அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதையை நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டின் செல்வங்களை உருவாக்கித் தந்த தொழிலாளி வாழ்நாள் முழுமையும் வேலை பார்த்த பின்பு தனது சட்டபூர்வமான ஓய்வுக்கால பலன்களை பெறுவதற்காக பல ஆண்டுகள் அலைய வைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. உடனடியாக காலதாமதமின்றி தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்கிறது. இதை வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வசூலிக்கும் அதிகாரம் தொழிலாளர் துறைக்கு இருக்கிறது. ஆனால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான தொகையை மாவட்ட ஆட்சியர்களே அந்தந்த மாவட்டத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் என்று அறிவிக்கிறார்கள். உள்ளாட்சி போன்ற அரசு சார்ந்த துறைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம சம்பளம் இல்லை, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைப்பதில்லை என்ற அவலநிலை நிலவுகிறது. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான தொகையை வழங்க ஆணை வெளியிட கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த அரசு வலியுறுத்த வேண்டும்.

மிக பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்கள்தான் துப்புரவு பணியில் இருக்கிறார்கள் அவர்களை தலைதூக்க விடாமல் மிகக்கடுமையான சுரண்டல் நடக்கிறது. ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக பெறமுடிகிறது. மிகுந்த கவலையோடு இந்த மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த சமூக அநீதிக்கு சமூகநீதி ஆட்சியிலே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு 18000 ரூபாய்க்கும் குறையாத குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து செயலாக்குவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் துறையில் பல முத்தரப்பு குழுக்கள் கூட்ட படாமலேயே ஓராண்டு கழிந்துவிட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்ததைப் போல அந்தந்த சட்டங்களில் குறிப்பிடப்பட்ட கால இடைவெளிகளில் அந்தக் கூட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல தொழிலாளர்களுக்கான சட்ட தொகுப்புகளுக்கான விதிகளை கடந்த 13ஆம் தேதி மாநில அரசால் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிற்சங்கங்கள் இந்தச் சட்டங்களை ஏற்கக்கூடாது தொழிற்சங்கங்களுக்கு வரைவு விதிகளை அனுப்பிவைத்து இறுதி படுத்தாமல் பொதுவெளியில் வெளியிடக்கூடாது சென்று ஆட்சேபனை தெரிவித்து விதிகள் பொதுவெளியில் வெளியிட்டிருப்பதை தொழிலாளர் துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் இ-ஷரம் திட்டத்தினை பற்றி இங்கே பேசினார்கள். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியத்திற்கு போட்டியாக ஒன்றிய அரசு இ-ஷரம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதனை தொழிலாளர் நலத்துறை மூலமாக ஒன்றிய அரசே அமுலாக்க தொடங்கியது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் முறையிட்டனர். இ-ஷரம் குறித்து ஒரு குழு அமைப்பதாகவும் அதில் கருத்து சொல்லுமாறும் கூறி 14 தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தனர். பல மாதங்களாகியும் அந்தக் கூட்டத்தை நடத்தவில்லை ஆனால் மிக விரைவாக இ-ஷரம் திட்டத்தை நம்முடைய அதிகாரிகள் கீழே கொண்டு செல்கின்றனர். ஆகவே, ஒன்றிய அரசு மாநில தொழிலாளர் நலவாரியங்களுக்கு எதிராக கொண்டுவந்துள்ள இ-ஷரம் திட்டத்தை தமிழக அரசு ஏற்க போகிறதா அல்லது எதிர்க்கிறதா என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல் ஒன்றிய அரசு முன்வைத்துள்ள குறித்த கால வேலை நியமனத்தை Fixed Term Employment அது எப்படியென்றால், திருமண தேதிக்கு முன்பே Divorce தேதியை வழங்குவது போல தான் இந்த Fixed Term Employment என்பது இருக்கின்றது. இதுவரை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை ஆகவே இந்த Fixed Term Employment -ஐ தமிழக அரசு ஏற்க போகிறதா என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழகத்தில் குடிப்பழக்கம் வெகுவாக அதிகரித்து குடி நோயாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் நாற்பது வயதுக்குள்ளாகவே உடல் திறனை இழந்து நடைப்பிணங்களாக கணிசமான சதவீத தமிழ் மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நமது சமூகம் ஏராளமான இழப்புகளை சந்திக்கிறது எதிர்காலத்தில் இது இன்னும் அதிகமாகும்.

மாநில அரசின் நிதி வருவாய் அனைத்தையும் ஒன்றிய அரசு பறித்துக் கொண்ட பிறகு வருவாய்க்கான வழியாக மது விற்பனை இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதேவேளையில் நாளைய தமிழகத்தை மனிதில் கொண்டு மது விற்பனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதுக்கடை இல்லாத நாட்கள் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்கப்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மதுக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். டாஸ்மார்க் நிர்வாக செயல்முறைகளை முறைப்படுத்தி சீரமைக்க வேண்டும். மதுக்கடைகளை முற்றிலும் கணினி மயமாக்கி கேரளா மாநிலத்தை போல் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரசீது வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தற்போதுள்ள வருவாயை இரட்டிப்பாக மாற்ற முடியும். ஊழல் இல்லாத இயக்கத்தை மேலிருந்து துவங்கி அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் பணம் சிந்தும் ஓட்டைகளை சரிபார்த்து அடைக்க வேண்டும். மறு சீரமைப்பு என்பது வருவாயை பெருக்கும் நோக்கத்தில் மட்டுமில்லாமல் நிர்வாக நலன் பணியாளர் நலன் மக்கள் நலன் இளைஞர் நலன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதியுடன் மதுக்கடைகளை கட்டித்தர வேண்டும். ஊருக்கு ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே இருக்க வேண்டும். டாஸ்மாக் மது கடைகளோடு இணைந்த மதுக்கூடங்கள் முழுமையாக மூடி விட்டு கேரளம் போல் தனியாக நடத்திட வேண்டும். 

டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக தொகுப்பூதியத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மூடிய கடைகளின் பணியாளர்களை தகுதிக்கு ஏற்ப அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களிடையே இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது ஆகவே ESI திட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும். அதேபோல் பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மின்சார தேவை 14000 மெகாவாட்டுக்கும் அதிகம் இதுபோன்ற கோடைகாலங்களில் 17000 மெகாவாட்டையும் தாண்டி தேவை ஏற்படுகிறது. ஆனால் நாம் சொந்தமாக உற்பத்தி செய்வது 5 ஆயிரம் மெகாவாட்டுக்கு குறைவாகவே இருக்கிறது. உடனடியாக கவனம் செலுத்தி அரசு சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நமது தமிழ்நாட்டிலேயே உலக தரமிக்க பொதுத்துறை நிறுவனமான பிஎச்இஎல் இருக்கிறது. அங்கிருந்து நாம் பாய்லர்களை வாங்கினால் நமது மின்வாரியத்துக்கு மிக தரமான பாய்லர்கள் கிடைப்பதோடு நம் தமிழ்நாட்டிலேயே இருக்கும் பொதுத்துறை நிறுவனம் வளரும் வாய்ப்பு ஏற்படும். வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு பி ஜி ஆர் என்ற தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் தரப்பட்டுள்ளது அந்த நிறுவனம் காலதாமதம் செய்து வருகிறது. எனவே அந்த உடன்பாட்டை ரத்து செய்து பி ஹெச் இ எல் மூலம் பாய்லர் வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது வாரியம் சொந்தமாக மின்சார உற்பத்தி செய்யும்போது ஒரு யூனிட்டுக்கு 20 பைசாவிலிருந்து அதிகபட்சம் ஐந்து ரூபாய் வரை உற்பத்தி செலவு ஏற்படுகிறது. ஆனால் தற்போது தனியாரிடமிருந்து 10,000 மெகாவாட் மின்சாரம் வாங்குகிறோம். வாங்கும் விலை யூனிட்டுக்கு ஏழு ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாய் வரை இருப்பதாக அறிகிறோம் எனவே சொந்த மின் உற்பத்தியை வேகமாக அதிகரிக்க திட்டமிட்டு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மின்சார தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள மறு நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. சென்ற 1.12.2019 தேதியுடன் பழைய ஒப்பந்தம் முடிந்துவிட்டது மூன்று ஆண்டுகள் தாண்டியும் கூட புதிய பேச்சுவார்த்தை துவக்கப்படவில்லை.

மேலும் என்னுடைய தளி தொகுதியில் ESI மருத்துவமனை மற்றும் தேன்கனிக்கோட்டையல் ITI – அரசு தொழிற்பயிற்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். மற்ற தொகுதி கோரிக்கைகளை நான்படித்ததாக கருதி பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button