தமிழகம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் அவதூறு கட்டுரைக்கு ‘ஜனசக்தி’யின் பதில்!

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 29.05.2022 அன்று திரு செல்வ புவியரசன் ‘எழுதி’ வெளியான ‘அரசியல் கலை பெருமன்றம்’ எனும் (அவதூறு பரப்பும்)கட்டுரைக்கு ‘ஜனசக்தி’ வார இதழ் கட்டுரை வடிவத்திலேயே பதில் அளித்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகின் சீரிய சிந்தனைக்காக அந்தக் கட்டுரை இங்கே:

என்றந்தப் பேதை உரைத்தான்!

‘அரசியல் கலை பெருமன்றம்’ என்றொரு கட்டுரை தமிழ் இந்துவில் வந்திருந்தது. அந்தத் தலைப்பு என்ன சொல்கிறது என்பது, அதை எழுதியவருக்குத்தான் வெளிச்சம்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை, கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் கெடுத்து விடக்கூடாது என்று உருகோ உருகு என்று உருகுகிறார், பாவம் அந்தத் தமிழ் இந்துக் கட்டுரையாளர். கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டிற்கும், கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கும் ஒரு மூன்றாவது முடிச்சு போட்டு விடவும் முயன்றிருக்கிறார்.

‘கலை கலைக்காகவே’ என்ற கருத்து நிலவிய காலத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே எழுதுவார்கள், படிப்பார்கள், நடிப்பார்கள், பேசுவார்கள், பார்ப்பார்கள், சாமானிய மக்களுக்கும் கலைக்கும் சம்பந்தம் இல்லை என்று இருந்தது.”கலையும் இலக்கியமும் உழைக்கும் மக்களுக்காகத் தான்” என்ற இயக்கத்தை தமிழ்நாட்டில் தோற்றுவித்தது கம்யூனிஸ்டுகள் தான்.

ஆன்மீக கவி, பண்டிதக் கவி என்றெல்லாம் சொல்லப்பட்ட பாரதியை ஒரு மக்கள் கவிஞனாக தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று பரப்பியது கம்யூனிஸ்டுகள் தான். கம்பராமாயணம் போன்ற இதிகாசத்திலும், எல்லாரும் எல்லாமும் பெற்று வாழும் சமதர்ம சமுதாயம் குறித்து கம்பன் கண்ட கனவை எடுத்துச் சென்றது கம்யூனிஸ்ட்டான இலக்கியப் பேராசான் ஜீவா தான்.

மக்களுக்காகத்தான் கலையும் இலக்கியமும் என்பதை நிலைநிறுத்த ஒரு இலக்கிய அமைப்பு வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்து, தோழர் ஜீவா அவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தது. 1961 -ல் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்ட போது அதன் முதலாவது செயலாளராக தோழர் தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக காரைக்குடியில் தான் பார்த்த ஆங்கிலப் பேராசிரியர் பணியிலிருந்து விலகி சென்னையில் குடியேறினார். அதன் பின்பு பல ஜாம்பவான்கள் அந்த பொறுப்பில் நின்று தொண்டாற்றியுள்ளனர்.

60 ஆண்டுகளைத் தாண்டி, கலை இலக்கிய பெருமன்றம் ஆயிரக்கணக்கான கலைச் செல்வர்களை ஈன்று கொடுத்துள்ளது. தமிழ்நாட்டுக் கலை இலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்புகளைத் தந்திருக்கிறது. தமிழ் இந்து கட்டுரையாளர் ஏனோ அதை அரை நூற்றாண்டாகச் சுருக்கிவிட்டார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்து, “கலை இலக்கியப் பெருமன்றம், சித்தாந்தத்தை மீறிப் போனாலும் கம்யூனிஸ்ட் கட்சி அதைக் கண்டு கொள்ளக் கூடாது” என்று போதிக்க தமிழ் இந்து கட்டுரையாளர் முயற்சிப்பதுதான் வேடிக்கை.

“கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாடு நடந்த மூன்று நாட்களிலும் கட்சி நிர்வாகிகள் சாத்தூரிலேயே முகாமிட்டுள்ளனர்” என்று ஏதோ மாபாதகக் குற்றம் செய்தது போல் இவர் ஏன் கதைக்கிறார்? துவக்க உரையாற்றுவதற்கும், நிறைவுரை ஆற்றுவதற்கும் அவர்களை கலை இலக்கியப் பெருமன்றம் தானே அழைத்திருந்தது. கட்டுரையாளர் செல்வ புவியரசன் அந்த அழைப்பிதழைக் கூடவா பார்க்கவில்லை!

“இதற்கு முன்பெல்லாம் எழுத்தாளர்கள் சந்திப்பு, விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் என்பதாகவே இந்த மாநாடுகள் நடந்து முடியும்”என்று கட்டுரை சொல்கிறது. அப்படியானால் இந்த மாநாட்டில் எழுத்தாளர் சந்திப்பு, விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லையா? மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எழுத்தாளர்களே இல்லையா? சாத்தூர் அதிர அருமையான கலைநிகழ்வுகள் நாள்தோறும் நள்ளிரவையும் தாண்டி நடந்துகொண்டிருந்ததைச் செல்வ புவியரசனுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை போலிருக்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டம் தட்டுவதாக எண்ணிக் கொண்டு, அந்த அருமையான மாநாட்டையே கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மருத்துவர் த.அறம், கலை இலக்கியத்துடன் அவ்வளவாக நெருக்கமில்லாதவராம். எந்தத் தெர்மா மீட்டர் கொண்டு இதைச் செல்வ புவியரசன் சோதித்துப் பார்த்தார் எனத் தெரியவில்லை. மருத்துவர் த. அறம், கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கலை இலக்கியத்திற்கு அவர் பரிச்சயமே இல்லாதவர் என்றால், எப்படி இவ்வளவு பெரிய மாநில மாநாடு நடத்தும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது? காலமெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு, களைகட்டிய மாநாட்டை நடத்திய திறமை ஒன்று போதுமே மருத்துவர் அறம் அவர்களின் திறமையைப் பறைசாற்ற!

தமிழ்நாடு முழுக்க ஆய்வு நடத்தி, விருதுநகர் மாவட்டத்தில் மக்களால் கொண்டாடப்படும் மருத்துவராக த.அறம் அவர்களைக் கண்டறிந்து, “மக்கள் மருத்துவர்” என பட்டம் தந்ததே, தமிழ் இந்து பத்திரிக்கை தான். மக்களோடு இருக்கிறார். மனிதநேயம் ததும்பப் பணிபுரிகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வராக, பிறந்ததிலிருந்து இலக்கியத் தொடர்போடு இருக்கிறார். சாய்வு நாற்காலிகளில் சஞ்சாரம் செய்து கொண்டிராமல், மக்களோடு களத்தில் இருக்கும் த.அறம், கலை இலக்கியப் பெருமன்ற செயலாளர் பொறுப்புக்குப் பொருத்தமானவர் என்பதாலேயே மாநாடு அவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதில் புவியரசனுக்கு என்ன பொறாமை?

கலை இலக்கியப் பெருமன்றத்தினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து காப்பாற்றி வாழ வைப்பதற்கு, பாவம் இந்தத் தமிழ் இந்து புவியரசன் போராடுகிறாராம்! கேப்பையில் நெய் வடிகிறது என்கிறார்கள்.

கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற ஒரு அமைப்பை, கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் செலுத்தப்படும் ஒரு வாக்குக்காக, கட்சி சிதைத்துக் கொண்டிருக்கிறது என்று ஒரு கம்யூனிஸ்டு எதிர்ப்பு கற்பனைக் கதையைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு புவியரசன் தந்திருக்கிறார்.

யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இது செய்யப்படுகிறது? இதன் பின்னே யார் யார் இருக்கிறார்கள்? அந்தச் செய்திக் குழுமத்தின் பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றி நமக்கும் தெரியும் என்றாலும், அதைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கி ‘ஜனசக்தி’யின் தரத்தை நம்மால் தாழ்த்த முடியாது.

யமுனா ராஜேந்திரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளவாறு “கஇபெம இலக்கியம்- உள்அரசியலை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வெட்டிப்பயல் வேலையை விட்டுவிட்டு இந்துக் குழுமம் பற்றி ஆராய்ச்சி செய்கிற வேலையைப் பாரு அன்பே..”

டி எம் மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button