கட்டுரைகள்

ஆயிரம் பிறை கண்டவர் தந்த உற்சாகம்: ஓராண்டு போராட்டத்தில் திரும்பி ஓடிய வேளாண் சட்டங்கள்

சென்ற ஆண்டு, 12 மாதங்கள் ஒரு வினாடி நேரம் போராட்டக் களத்தைவிட்டு நீங்காது -அங்கேயே தங்கி மழை, வெயில், கடும் குளிர், கரோனா தாக்குதல், காவலர்களின் லத்தி தாக்குதல், தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை, தடுப்புச் சுவர்கள் நிர்வாகத்தின் எத்தனை தொல்லைகள் எதனாலும் பின்வாங்காது அத்தனையும் பொறுத்துக் கொண்டு போராடிய மூத்த விவசாயப் போராளிகளின் தற்கால வாழும் உண்மை வரலாறு:
சென்ற ஆண்டு நவம்பர் 26ல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தலைநகர் டெல்லியின் எல்லைகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களில் பலரும் இடையே சில நாட்கள், மாதங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க சொந்த ஊர் திரும்பிச் சென்றபோது, ஒரு வினாடி பொழுதும் போராட்டக்களத்தை நீங்காத வைர நெஞ்சுக்காரர்கள் பற்றிய பதிவு:
நிஷ்டார் சிங் கரேவால் (86)
போலீஸ் குண்டாந்தடி, கோடை வெப்பம், கடுங்குளிர் இவற்றைத் தாண்டி கோவிட் தொற்று பாதித்தபோது 86 வயதான நிஷ்டார் சிங்குக்கு ஆக்ஸிஜன் செலுத்த வேண்டி வந்தது. ஆனால் லூதியானாவைச் சேர்ந்த ‘தொண்டு செய்து பழுத்த ப(கி)ழம்’ மனைவி மக்களைக் காணக்கூட களத்தை விட்டு நீங்கவில்லை. மாறாக உடன் போராடிய விவசாயிகளுக்கு அவர் ஆற்றிய சேவையால் மிகவும் பிரபலமானார். இதோ நிஷ்டார் சிங் கிரேவால் பேசுகிறார்:
“இங்கே வரும்போது எனக்கு 85 வயது, இப்போது 86 வயதை எட்டிவிட்டேன். நான் போராட்டக் களத்திலிருந்து ‘அவுட்’ ஆகவில்லை! கடந்த ஆண்டு பல மோசமான நாட்களைப் பார்த்து விட்டேன். கழிவறை இல்லை, தண்ணீர் இல்லை – ஆனால் நான் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் இழக்கவில்லை. இங்கே போராடும் சக விவசாயிகளுக்காகத் தேநீர் தயாரிக்க நானும் என் மகனும் தினமும் குருட்ஷேத்திரா சென்று பால் வாங்கி வருவோம். அதன் பிறகு அரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து வந்த இளைஞர்கள் எங்களுக்கு உதவிட முன்வந்தனர். பலரும் இடையே சென்று பிறகு மீண்டும் இரண்டு அல்லது ஆறு மாதங்களில் திரும்ப வந்தனர். ஆனால் அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை நான் இந்த இடத்தை விட்டுச் செல்வதில்லை என முடிவு செய்தேன்” என்று கூறிய இளைஞர் நிஷ்டார் சிங்குக்கு ஊரில் இருக்கும் 1.6 ஏக்கர் நிலத்தில் நெல்லும் கோதுமையும் பயிரிடுகிறார்.
குருதேவ் சிங் (70)
இவரும் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சிங்கு எல்லையில் தங்கியுள்ளார். அவர் பேசும்போது, “சட்டங்கள் ரத்து என்பது எங்களுக்கு, குறிப்பாக சிறு அளவில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு, வெற்றிதான். சென்ற ஆண்டு முழுவதும் எங்களுக்குப் போராட்ட ஆண்டாக இருந்தது. அவர்கள் எங்களைக் காலிஸ்தான் தீவிரவாதிகள், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் என்றனர். ‘எங்கள் மகன்களும் மகள்களும் இந்தத் தேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்கப் போராடி வருகிறார்கள்’ என்பதைக் கண் இருந்தும், அவர்களால் காண முடியவில்லை” எனக் கூறியபோது குரல் தழுதழுக்க அழுகையில் வெடித்து அவர் கண்களில் கண்ணீர் அரும்பியது.
உள்ளூர்வாசிகளின் நிறை அன்பினால் குருதேவ் நெகிழ்ந்து போயிருக்கிறார். ”எங்கள் தியாகங்களைத் தரிசித்த அங்கே வசிப்பவர்களும் கடைக்காரர்களும் எங்களுக்கு உதவ முன் வந்தார்கள். ஆனால் கங்கணா ராவத் போன்ற நடிகர்கள், ‘காலில் அணியும் ஷ¨வால் கொசுக்களை நசுக்குவது போல எங்களை நசுக்க வேண்டும்’ என (வாய்கொழுத்து தடிப்போடு) பேசினார்கள். நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், உண்மையாக தேசத்தை நேசிக்கும் குடிமக்கள்” என்று உறுதிபடக் கூறினார் ஜலந்தரிலிருந்த வந்த இந்த மூத்த போராளி.
சாது சிங் கச்சார்வால் (63)
தேசியத் தலைநகருக்குள் முதலில் நுழைந்தது இவரது டிராக்டர். இவரும் போலீசாரின் காட்டுமிராண்டித் தாக்குதலில் காயமடைந்தார். பெருமிதத்தோடு கூறுகிறார்: “நானும் இங்கேதான் இருக்கிறேன், எனது டிராக்டரும்கூட இருக்கிறது. டிராக்டரையே திரை கொண்டு மூடி ஓர் அறையாக்கித் தங்கினோம். குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்க்காத ஓராண்டாக எங்கள் வாழ்கை ஒரு போராட்டம்தான். மோடி இறுதியில் உணர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்தது நல்லதுதான். ஆனால் எங்களுக்கு வேறு கோரிக்கைகளும் உள்ளன, அவைகளுக்கும் தீர்வு காணும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என உறுதிபடக்கூறினார் 70வயது கச்சார்வால்.
ஆயிரமாய் எல்லையில் குவியும் விவசாயிகள்
பஞ்சாப், அரியானா மற்றும் உபி மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கான விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் டெல்லி எல்லையில் அமைந்த சிங்கு, காஸிப்பூர் மற்றும் திக்ரி எனும் மூன்று இடங்களில் தங்கள் போராட்டத்தின் ஓராண்டைக் கொண்டாட, வெள்ளிக்கிழமை வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். இந்த நாள் சரித்திரத்தில் மக்கள் போராட்டங்களின் மிகப் பெரிய இயக்கமாக என்றென்றும் நினைவு கொள்ளப்படும் என விவசாயச் சங்கத்தினர் கூறினர்.
–செய்தி நன்றி: காயத்திரி மணி, எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்

— தமிழில் நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button