கட்டுரைகள்

அருஞ்சொல்லின் கட்டுரைக்கு எமது விளக்கம்

வகிதா நிஜாம்

ஒரு மெய்நிகர் சந்திப்பில், நான் ஆற்றிய உரையின் தொகுப்பு, ஜனசக்தியில் (28.09.2022 பதிப்பு) ‘பாட்டாளி படிப்பு வட்டம்’ கோர்பச்சேவ் அமைதி நாயகரா? அவல நாயகரா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையை விமர்சித்து ‘அருஞ்சொல்’ என்ற இணைய இதழில் எஸ்.வி.ராஜதுரை ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

என்னடைய பேச்சுகள், எழுத்துகள் பற்றிய விமர்சனங்கள் ஆக்கபூர்வமாகவும், உண்மைகள் அடங்கியதாகவும் இருப்பின் நான் எப்போதும் தலைவணங்கி ஏற்றுக் கொள்வேன். ஆனால், எஸ்.வி.ராஜதுரை என் கட்டுரையில் விவரப் பிழைகள் என்றும் அபத்தங்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளவற்றிற்கு விளக்கம் அளித்துத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.

‘மய்யப்படுத்தப்பட்ட பொருளாதாரமா லெனினிடையது?’ என்ற கேள்வியை முன்வைத்து, தோழர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து தான் சோவியத் யூனியனின் மய்யப்படுத்தப்பட்ட பொருளாதாரம் தொடங்கியது என்கிறார் ராஜதுரை. மேலும், சோவியத் ஒன்றியம் 1922 ஆம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது என்றும், அதற்கு முன் ரஷ்யாவில் மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சிகர அரசாங்கம் நிறுவப்பட்டது என்றும், உள்நாட்டு போர் முடிவடைந்த பிறகு, நசிவுக்குள்ளாகி இருந்த பொருளாதாரத்தை வலிமைமிக்கதாக மாற்றுவதற்கு 1921 ஆம் ஆண்டு தோழர்.லெனின் கொண்டு வந்ததே ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ என்றும் கூறியிருக்கிறார். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பல்வேறு சோவியத் ஒன்றியம் உருவாவதற்கான அனைத்து ஆக்கபூர்வமான ஒப்பந்தங்களும் 1920 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலேயே கையெழுத்திடப்பட்ட வரலாற்று விவரங்களை ராஜதுரை இணைக்க மறந்து விட்டார். அதனால் தான் என்னுடைய பேச்சில் விவரப் பிழை அவருக்கு தோன்றியிருக்க கூடும்.

1922ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30ஆம் தேதியில்தான் சோவியத் ஒன்றிய உருவாக்கத்திற்கான ஒப்பந்தம் (Treaty of Creation of USSR), முதல் அனைத்து சோவியத் யூனியன் பேராயத்தில் அங்கீகரிக்கப்பட்டது. பேராபத்தான முதலாளித்துவ சூழலில், ரஷ்ய பேரரசின் கீழ் இருந்த அனைத்து குடியரசுகளையும் ஒன்றிணைத்து, ஒரு வலிமைமிக்க ஒன்றியத்தை உருவாக்க வேண்டியது, மிகவும் அவசியம் என்று போல்ஷவிக்குகள் எண்ணினார்கள். சோவியத் குடியரசுகளான பெலாரஸ், உக்ரைன், ரஷ்யா மற்றும் டிரான்ஸ் காக்கேசியன் சம்மேளன நாடுகளோடு ஏற்பட்ட ஒற்றுமை ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் 1922ல் சோவியத் யூனியன் உருவானது. 1920ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தமும், 1921ல் ரஷ்யாவிற்கும், பெலாரஸ் மற்றும் காக்காசிய குடியரசு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தமும் கையெழுத்தாயின. இந்த ஒற்றுமை ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான், ரஷ்ய சம்மேளன சோஷலிசக் குடியரசு, அனைத்து குடியரசுகளின் சர்வதேச பிரதிநிதியாகவும், அவர்களின் சார்பாக அரசியல் செயல்பாட்டிற்குரிய ஆவணங்களில் கையெழுத்திடும் உரிமை பெற்றது. மேலும், ‘மக்கள் கமிஸார்’ எனப்படும் அரசியல் அதிகாரமுடைய அமைச்சர்கள், பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், அந்நிய வணிகம், நீதி, தொழிலாளர் துறை, ரயில்வே, தபால் தந்தி போன்ற துறைகளை மய்யப்படுத்தினர். இவை மட்டுமன்றி, ஒன்றியத்தின் மற்ற சோஷலிசக் குடியரசுகளையும் உள்ளடக்கி மையப்படுத்தப்பட்ட ஆட்சி அதிகாரம் செலுத்தினர். எனவேதான், 1922 ஆம் ஆண்டிலேயே, சோவியத் யூனியன் அங்கீகாரத்திற்கு முன்பே, ஒப்பந்தங்களின் அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட நிர்வாகமும், பொருளாதாரமும் இயங்கத் துவங்கி விட்டன.

“மேற்குறிப்பிட்ட பதிவுகளின்படி மையப்படுத்தப்பட்ட பொருளாதாரமா லெனின் உடையது?” என்கிற வினாவிற்கான தெளிவான விடை “ஆம்” மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் என்பதுதான். இதன் அடிப்படையில் லெனின் கொண்டு வந்த பொருளாதாரத் திட்டங்கள மையப்படுத்தப்பட்டவைதான்.

1921 ஆம் ஆண்டு கேஸ்பிளான் (GOSPLAN) என்ற மையப்படுத்தப்பட்ட, திட்ட மேலாண்மை கமிஷன் நிறுவப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தின் அனைத்து குடியரசுகளுக்குமான மைய அமைப்பாகும். 1928 ஆம் ஆண்டு, முதல் ஐந்தாண்டு திட்டத்தின் பொழுதுதான் இதன் முழுமையான செயல்பாடு இருந்தது என்றாலும் இது உருவாக்கம் பெற்றது லெனின் மையப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அழுத்தம் தான் முதலாளித்துவம் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தடையாகவும், சோஷலிச சமுதாயத்தை நிலைநாட்டுவதற்கான காரணியாகவும் இருந்தது. எனவே தான், சோவியத் யூனியனில் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் முன்னோடியாக தோழர் லெனின் திகழ்கிறார்.

எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின்கீழ் நான் உரை நிகழ்த்தும்பொழுது தோழர் ஸ்டாலின் பொருளாதார திட்டத்திற்கும், தோழர் லெனின் பொருளாதார திட்டத்திற்கும் இடையேயான வேறுபாடு பற்றி பேசுவதற்கான வாய்ப்பே எழவில்லை.

சோஷலிச சமுதாயத்தின் முக்கிய மூலக்கூறும், அடிப்படையும் திட்டமிட்ட மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம்தான் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதன் செயல் முறையில் தோழர் லெனின் அவர்கள் மூல முன்மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்தி உள்ளார் என்பது வரலாற்று உண்மை.

பொருளாதார பேராசிரியருமான Leon Smolinski அவர்கள் 1960 ஆம் ஆண்டுகளில் சோஷலிச நாடுகளில் பொருளாதார விவாதங்கள், குறிப்பாக தோழர் லெனினின் திட்டமிட்ட மையப்படுத்தப்பட்ட பொருளாதார பற்றிய விவாதங்கள் பற்றி குறிப்பிடும் பொழுது, “இந்த விவாதங்களில் பங்கெடுத்தவர்களில் சிலர் தோழர் லெனினை Decentralisation of Decision Making ஐ ஆதரிப்பவர் என்றும் வேறு பலர், “போல்ஷவிக்குகளாகிய நாங்கள் கொள்கை ரீதியாகவும் கோட்பாடு ரீதியாகவும் நம்பிக்கை ரீதியாகவும் மையநிலைவாதிகள். பொருளாதாரம் முழுவதும் மையத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான எந்திரம் போல் நிதி ஒதுக்கீட்டிற்கு வழிகாட்டியாக செயல்படக்கூடிய திட்டத்தை வேண்டுபவர்கள்” என்று கூறிய தோழர் லெனினினை நினைவூட்டியவர்களாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மதுவை ஊக்குவித்தார்களா கம்யூனிஸ்டுகள்? என்ற தலைப்பிட்டு ஒரு விமர்சனம். விமர்சனங்களில் ஒரு வகை ஒரு சார்பு விமர்சனம், (Biased Criticism). இது அதுதான். என்னுடைய உரையிலும் அதன் தொகுப்பிலும் மது விலக்குப் பற்றி சொல்லி இருப்பது, ஏற்கனவே சீரழிந்து கிடந்த பொருளாதாரத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கொள்கைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, அக, புற சூழல்களின் காரணமாக ஏற்பட்டிருந்த பொருளாதார வீழ்ச்சி இவற்றோடு அரசுக்கு வருமானம் ஈட்டி கொடுத்த மது விற்பனை தடை செய்யப்பட்டது, என பொருளாதார வீழ்ச்சியின் காரணங்களின் பட்டியலைத் தான் குறிப்பிட்டு இருந்தேனே தவிர இதில் மது அருந்துவது சரியா தவறா என்கிற கேள்வி எழவில்லை. நான் இதை சொன்னதால் மதுப்பழக்கத்தை கம்யூனிஸ்டுகள் ஊக்குவிப்பதாக சொன்னதாக அர்த்தமும் இல்லை.

கோர்பச்சேவின் ‘பெரெஸ்த்ரயிகா’ பற்றி பேசுவதற்கு நான் மார்க் லாரன்ஸ் ஷார்ட் இன் ஓட்கா பாலிட்டிக்ஸ் படிக்க வேண்டும் என்று ராஜதுரை சொல்வதுதான் அபத்தமாக இருக்கிறது. வோட்கா பாலிடிக்ஸும் படித்திருக்கிறேன். அதோடு அதைப் பற்றிய விமர்சனங்களையும் படித்து இருக்கிறேன். ரஷ்யாவில் 400 ஆண்டுகால ஓட்காவின் அரசியல் வரலாறு பற்றின ஒரு நல்ல புத்தகம். பலவீனப்படுத்தும் சமூக மது பழக்கம் ரஷ்யர்களுடைய மரபணு குறியீடுகளில் இல்லை. மாறாக, எதேச்சதிகார அரசியல் அமைப்பின் ஆட்சிக் கலையாக கையாளப்பட்டது என்று விவரித்து எழுதப்பட்ட நல்ல புத்தகம். புத்தகத்தை நினைவூட்டிய வரையில் நன்றி.

1979 ஆம் ஆண்டு அரசின் ஏக போக மது உற்பத்தியின் மூலம் வந்த வருவாய் 25.4 பில்லியன் ரூபில் சரிந்து கொண்டிருந்த பொருளாதரத்தில் இது ஒரு மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது என்பது உண்மை. பிராவ்தாவிற்கு கோர்ப்பசேவ் கொடுத்த பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார் “நான் மதுவிலக்கு அறிமுகப்படுத்தியது தவறு என்று பின்பு அறிந்து கொண்டேன். முறையாக நீண்ட கால திட்டமாக செய்திருக்க வேண்டும் என்று உணர்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். என்னுடைய உரையில் இது ஒரு statement அவ்வளவுதான். இதில் எங்கே லெனினை இழிவு படுத்தினேன்? பொறுப்பற்ற அபத்தமான, உள்நோக்கம் கொண்ட விமர்சனம் இது. “பாட்டாளி வர்க்கத்திற்கு குடிப்பழக்கம் தேவையில்லை; அவர்களுக்கு தேவை தெளிவு, தெளிவு மீண்டும் தெளிவு” என்று தெளிவாக, ஆழமாக லெனின் கூறியிருப்பது தொழிலாளி வர்க்கத்தில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டிய முழக்கம். 1914 ஆம் ஆண்டு ஜார் நிக்கோலஸ் போட்ட மது தடையை லெனின் நீக்கமறுத்துவிட்டார். “மதுவிலக்கினால் கிடைக்கக்கூடிய எந்த ஒரு தற்காலிக அணுகூலத்தையும் தியாகம் செய்வோம்“ என்று கூறியது வரலாற்றில் பதிவாகியுள்ள மகத்தான உண்மை.

ரஷ்யாவில் ஜார் ஆட்சியின் பொழுதும் சோவியத் யூனியன் வந்த பிறகும் பல்வேறு கட்டங்களில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த விவரங்களை இந்த உரையில் சொல்வதற்கான தேவையும் அவசியமும் இல்லை. மேலும், உரை முடிந்த பிறகு Interactionகான அவகாசமும் இருந்தது. அன்றைக்கு அந்த உரையை கேட்டவர்களில் யாருக்கும் இத்தகைய ஒரு அபத்தமான கருத்து தோன்றவில்லை. அதனால் யாரும் கேட்கவும் இல்லை.

ஜனநாயக முன்னகர்வு பிழையானதா? என்று மூன்றாவது விமர்சனத்தை முன்வைக்கிறார் ராஜதுரை. என்னுடைய உரையில் எந்த இடத்திலும் ஜனநாயக முன நகர்வு பிழையானது என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் எந்த விவரத்தையும் கூறவில்லை.

மெய்யான ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் கம்யூனிச சித்தாந்தத்தில் அல்லாது வேறு எந்த அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. அரசியல் வெளிப்படைத்தன்மை அவசியம்தான். 500 ஆண்டுகள் உலகம் முழுவதும் வியாபித்து அதிகாரத்தில் இருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக சவால் விடுகிற முறையில் வளர்ந்து வரும் சோஷலிச அமைப்பு ஒரு பரிசோதனை கட்டத்திலேயே இருக்கும் பொழுது கிளாஸ்நாஸ்ட் ஏற்படுத்திய தாக்கம் சோவியத் பரிசோதனைக்கு முற்றிலும் அன்னியமானது.

நான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் சோஷலிச ஜனநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டைச் சொல்ல முயற்சிக்கவில்லை. முதலாளித்துவத்தில் மெய்யான ஜனநாயகமே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் கோர்பசேவ் சீர்திருத்த முயன்ற சோவியத் யூனியன், முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக ஒரு சித்தாந்த போர் நடத்திக் கொண்டிருந்த பொழுது சில அரசியல் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நாம் உணர்கிறோம். இந்தப் பின்னணியில் தான் ஜனநாயகம் என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கிளாஸ்நாஸ்டும் கட்சி அமைப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் விவரிக்கப்பட்டது. இதில் எங்குமே ஜனநாயக முன்னகர்வு பிழையானது என்ற அர்த்தம் வரவில்லை.

“சோவியத் ஒன்றியத்தின் நெடிய பாரம்பரியத்தை மக்கள் மறந்தார்கள்”. என்று என் உரையில் கூறியதற்கு அர்த்தம் அவர்களும் கோர்பசேவுடன் சேர்ந்து சோவியத் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்கள் என்பது என் குற்றச்சாட்டல்ல.

போல்ஷிவிக்குகள் ஆட்சி அமைத்த உடன் ரஷ்யாவின் பாரம்பரியத்தைப் பற்றி தோழர் லெனின் கூறுகிறார் (V I Lenin, Collected Works), “அதுதான் மார்க்சியத்தைக் கண்டடைந்தோம் – உலகின் ஒரே சரியான புரட்சிகர சித்தாந்தம்- அரைநூற்றாண்டு துயரங்கள், இணையில்லா தியாகங்கள், ஈடில்லாத புரட்சிகர எழுச்சி, நம்பமுடியாத சக்தி, அர்ப்பணிப்புமிக்க தேடல், கல்வி, செயல்பாடுகள், இழப்புகள், ஏமாற்றங்கள் ஐரோப்பிய பரிசோதனைகளோடு ஒப்பிடூகள்…”

ஒரு ரஷ்ய புரட்சியாளரை விவரிக்கும் பொழுது இளம் ட்ராஸ்கி சொல்கிறார், “ஆண்களும் பெண்களுமான ஒரு அதிசயிக்கத்தக்க தலைமுறை இந்த புரட்சியை செய்து முடிக்கப் பிறந்தது”. சோவியத் யூனியனின் மக்கள் மத்தியில் இருந்த இத்தகைய சோஷலிச உணர்வு அவர்களின் நெடிய பாரம்பரியம். “உணர்வு நிலை வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை; வாழ்க்கையே உணர்வு நிலையை தீர்மானிக்கிறது”, என்று கார்ல் மார்க்ஸ் சொன்னது சோவியத் யூனியன் வீழ்ச்சியில் காண முடிந்தது. இதற்கு மக்கள் காரணமாக இருந்தார்கள் என்று குற்றச்சாட்டு பொருத்தமானதல்ல.

எல்ஸ்டின் எவ்வாறு செல்வாக்கு பெற்றார் என்ற கேள்வியை எழுப்புகிறார் ராஜதுரை. இதைப் பற்றி என்னுடைய உரையில் பேசி இருந்தேன். உரைத் தொகுப்பில் அது இடம்பெறவில்லை. எல்ட்ஸ்னின் ரஷ்ய சோஷலிச சோவியத் குடியரசின் தலைவராகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்ட்ஸ்னின் தாராளவாத கொள்கைகளும் ரஷ்ய தேசியவாதத்திற்கு அவர அளித்த ஆதரவும் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது.

கோர்பசேவ் அமைதி நாயகரா அவல நாயகரா என்ற தலைப்பில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரையில் ஆற்ற வேண்டிய உரையில் எது எல்லாம் சம்பந்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களோ அவற்றையெல்லாம் சொல்ல முடிந்த அளவிற்கு சொல்லி இருக்கிறேன். ராஜதுரைக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்ற போதிலும் என்னுடைய உரைத்தொகுப்பை விமர்சிக்கும் பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜன சக்தியையும் மிக மோசமாக விமர்சித்து இருப்பது காரணமாக நான் இந்த விளக்கத்தை அளிக்க முன் வந்தேன்.

தொடர்புக்கு: 9444175993

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button