தமிழகம்

அனைத்து தற்காலிக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நடமாடும் கிளினிக் ஓட்டுநர்களின் பணிகளை நிரந்தரப்படுத்துக! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இன்று (நாள்: 23. 09.2022) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி .ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு, தடுப்பூசியை, ஒன்றிய அரசு இலவசமாக வழங்கிட வேண்டும்.

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக ஏற்றிட வேண்டும்.

கோவிட் காலத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் ஆறு மாத கால ஊதியப் பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும்.

அனைத்து தற்காலிக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ,நடமாடும் கிளினிக் ஓட்டுநர்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது.தமிழக குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடும், இரத்த சோகையும் அதிகமாக உள்ள நிலையில் தமிழக அரசின் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையின் போது தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கட்டணத்தை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்திலேயே செலுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்புக் குரியது. அதை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் விரிவு படுத்தி,இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்திட வேண்டும். இதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் கட்டணக் கொள்ளையைத் தடுத்திட முடியும்.

இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் இறக்கிறார். இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், 75,000 பேர் உயிரிழக்கிறார்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை அந்நோயை தடுப்பதற்கான எச்.பி.வி ( Human Papilloma Virus ) தடுப்பூசியை வழங்குவதின் மூலம் பெருமளவில் தடுத்திட முடியும் என பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் உறுதி செய்கின்றன.

பல்வேறு நாடுகளில் இந்த எச்.பி.வி தடுப்பூசி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் தனியார் மருத்துவமனைகளில் இத் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அரசு இதுவரை இத்தடுப்பூசியை இலவசமாக வழங்கிடவில்லை.

தற்பொழுது இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் கூட, இத்தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் நிலையில், இத்தடுப்பூசியை ஒன்றிய அரசு , 11 வயது முதல் 15 வயது உள்ள பெண் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 95 விழுக்காடு, இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் ( Human Papilloma Virus) தொற்றால் தான் ஏற்படுகிறது. இத்தொற்று ஏற்படாமல், எச்.பி.வி தடுப்பூசி கிட்டத்தட்ட 100 விழுக்காடு தடுக்கிறது. இதன் காரணமாக இத்தொற்றால் ஏற்படும் 95 விழுக்காடு கர்ப்பப்பை வாய் புற்று நோயை வராமல் தடுத்திட முடியும்.

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட 48.35 கோடி பெண்கள், கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளனர்.
எனவே, ஒன்றிய அரசு பெண்களின் நலன் கருதி எச்.பி.வி தடுப்பூசியை இலவசமாக வழங்கிட வேண்டும்.

அரசு மருத்துவர்கள் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை நீண்டகாலமாக கோரி வருகிறார்கள். ஊதியப் பட்டை ( Pay band 4 ) நான்கை, பணியில் சேர்ந்த 12 வது ஆண்டின் முடிவில் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு தனியான படியை வழங்கிட தனி உத்தரவை வழங்கிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி, அதிக அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அரசு PHC மருத்துவர்களின் வேலை நேரத்தை அதிகரித்ததை ரத்து செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

வரும் 25.09.2022 அன்று அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் பங்கேற்பர்.

கோவிட் காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்
கான 6 மாத கால ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும்,மருத்துவப் பணியாளர்களுக்கும், பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

கோவிட் காலத்தில் பணியமர்த்தப்பட்ட , எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கடந்த மார்ச் இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து நிரந்தர அடிப்படையில் மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.

கோவிட் காலத்தில் பணி அமர்த்தப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டும்.

15 ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும், நடமாடும் கிளினிக் ஓட்டுநர்களுக்கு ,சென்னை உயர்நீதிமன்ற ஆணையை மதித்து பணி நிரந்தரம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கேரளாவில் வெறிநாய்கடியால் ஏற்படும் வெறி நோய் இறப்புகள் கவலை அளிக்கிறது. தமிழகத்திலும் கடந்த 8 மாதங்களில் 18 பேர் வெறி நோயால் இறந்துள்ளனர். தமிழக அரசும் கவனத்தோடு செயல்பட வேண்டும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி வழங்கிட வேண்டும்.

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் கொரோனா தடுப்பூசியை மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஃபுளூகாய்ச்சலை தடுக்கவும், அக்காய்ச்சல் தடுப்பிற்கான தடுப்பூசிகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு,அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாட்டை போக்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ. ஆர் .சாந்தி , பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.காளிதாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button