தமிழகம்

அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும்: நூல் அறிமுகம்

– பீட்டர் துரைராஜ்

மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன், அறம் இணைய இதழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல், சமூகம் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறார். அப்படி எழுதிய நானூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இருந்து, தேர்ந்தெடுத்த 44 கட்டுரைகளின் தொகுப்பு நூல், ‘அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும்’. பட்டாம்பூச்சி வெளியீடு வெளியிட்டுள்ள இந்த நூல், தமிழ்ச் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் போல உள்ளது.

‘அதிகாரத்திற்கு அஞ்சுவதால் மட்டும் உருவாவதல்ல, அடிமைத்தனம்! நியாயமற்ற ஆசையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்படுவதே அடிமைத்தனம்’ என்று சாவித்திரி கண்ணன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவர் கூறியபடி, நியாயமற்ற ஆசையின் விளைவாக ஏற்படும் அவலங்களை இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன எனலாம்.

முதலமைச்சர் ஸடாலின் மருமகன் சபரீசன் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் வருகிறது. ‘சபரீசன் எந்த மேடையிலும் தோன்றி பேசியவரல்ல. அவர் எண்ணங்கள், போக்குகள் எப்படிப்பட்டவை என்று மக்களுக்கோ, கட்சித் தொண்டர்களுக்கோ தெரியாது. நாளைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், அதற்கு அவரை யாரும் பொறுப்பாக்க முடியாது’. ஒரு கட்சியின் பண்பாட்டு விழுமியங்களுக்கு இது உகந்தது அல்ல என்று சொல்லும் அதே வேளையில், தேவைப்பட்டால், ‘ சபரீசனுக்கு வெளிப்படையாக ஒரு பொறுப்பைத் தந்துவிடட்டும்’ என்று ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

ஏறத்தாழ 37 ஆண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் சாவித்திரி கண்ணன். இவருடைய அனுபவம், இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் என்பவர் பணத்திற்காக வேலை செய்யும் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்துபவர்தானே? அவரை ஏன் இதுவரை தனக்கான ஆபத்தாக பாஜக அரசு பார்க்கவில்லை? ஏனெனில் பாஜக மீது இல்லாத விமர்சனமும், கோபமும் காங்கிரஸ் மீது கிஷோருக்கு இருக்கிறது என்கிறார். காங்கிரசை அழித்திட இவரை பாஜக களத்தில் இறக்கிவிட்டுள்ளது என்கிறார்.

பத்திரிகையாளரின் விமர்சனம் பெரும்பாலும் ஆளும் கட்சியை எதிர்த்து இருக்கும். இவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதே சமயம், சில ஆளுமைகளை வியந்து, ஒரிரு கட்டுரைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். ‘மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்குவோம்’ என அறிவித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.ஆனந்த கிருஷ்ணனின் வீடு புகுந்து அடியாட்களால் (அம்மாவின் ஆசியோடு) தாக்கப்பட்டாலும் சமூக நீதியை அமலாக்கியதைச் சொல்கிறார். பெருந்திரளான ஏழை, எளிய குடும்பத்து பிள்ளைகள் உயர்கல்வி பெரும்வகையில் உருவான ‘ஒற்றைச் சாளர முறை’ வர, இவருடைய அறிக்கை காரணம் என்கிறார். அரும்பெரும் சோசலிச, காந்தியத் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் தாக்கத்தால் வி.பி்.சிங், முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தனர் என்கிறார்.

சாவித்திரி கண்ணன், காந்திய சிந்தனை கொண்டவர். அந்தச் சிந்தனைக்கு ஏற்ப சிறுதானியங்களை ரேஷன் கடையில் விற்பனை செய்தல், நகரமயமாக்கலுக்கு எதிராக, குமரப்பா குறித்த கட்டுரைகள் போன்றவை உள்ளன.

ஒரு மாநகராட்சி இருந்த தமிழ்நாட்டில் உலகவங்கியின், பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தத்தால்தான் இருபதுக்கும் மேற்பட்ட மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார். அங்கு குப்பை அள்ளும் பணியையும், குடிநீர் தரும் பணியையும் கூட வெளிநாட்டு நிறுவனங்கள்தான் பெறப் போகின்றன என்கிறார்.

திறந்தவெளி சிறை அமைக்க வைத்திருந்த காவல்துறையின் 58 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அபகரித்தது குறித்து ‘ஊர்ப்பட்ட நியாயங்களை பேசுகின்ற ஊடகங்கள்’ பேசினவா என்கிறார். குருமூர்த்திகள், ஜி.ஆர்.சுவாமிநாதன்கள், சேதுராமன்கள் பேசும் சாஸ்த்ரம் இதுதானா என்கிறார்.

இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமானவை. இவைகளில் ஆசிரியரின் விசாலமான பார்வையை காண இயலும். மருத்துவம், கல்வி, அதிகாரப் பரவல் என பல அதிகாரங்களில் இக் கட்டுரைகளை வகைப்படுத்த இயலும். இதில் விளக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு சொல்ல வேண்டிய அவசியத்தை கட்சிகளுக்கும், சமூக இயக்கங்களுக்கும் சாவித்திரி கண்ணன் உருவாக்கியுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் சேவை உரிமைச் சட்டம், தரமான மருத்துவம் போன்றவைகளைப் பாராட்டும் சாவித்திரி கண்ணன், அவருடைய இறை பக்தியை இந்துத்துவ செயல்பாடாகப் புரிந்து கொள்வது சரியல்ல என்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்தினை எதிர்த்த ஷமீம் பாக் போராட்டம் போன்றவைகளில் கேஜ்ரிவாலை இவ்வளவு மென்மையாகப் பேசுவது சரியா ?

மிராசுதாரர்களால் உருவாக்கப்பட்டது பாஜக. மிராசுதாரர்களால் உழைக்க முடியாது. அவர்களிடம் நேர்மை கிடையாது. நிர்வாகம் பண்ணத் தெரியாது. அதனால்தான் இந்த நாட்டுச் சொத்துகளைப் பாஜகவினர் விற்று வருகிறார்கள் என்கிறார்.

வைத்தியநாதன் தினமணியில் பணியாற்றிய காலத்தில், தில்லி மயூர் விகாரில் ஒரு வீடும், தாழம்பூரில் 16 கிரவுண்ட் மனையும், புழலில் வீட்டுமனையும் வாங்கினார் என்கிறார். அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் ஒரு பத்திரிகையாசிரியர் இப்படி சொத்து சேர்ப்பது சரியா என்கிற கேள்வி வாசகருக்கு வருகிறது ?

தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம் இன்றைய ஆட்சியாளர்களால் சிதைக்கப்படுவது குறித்து வருந்துகிறார். சுகாதாரமற்ற சூழலில் நடத்தப்படும் டாஸ்மாக் பார் குறித்து பேசுகிறார். தபால் அலுவலகம், நெய்வேலி நிறுவனம், வங்கி போன்றவைகளில் நடத்தப்படும் வட இந்தியர் ஆக்கிரமிப்பு குறித்து பேசுகிறார். பல்வேறு தலைப்புகள் இந்த நூலில் உள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், தொடர் நடவடிக்கைகளுக்கான கையேட்டை நமக்கு சாவித்திரி கண்ணன் அளித்துள்ளார். என்ன செய்யப்போகிறது இந்த தமிழ்ச் சமூகம் !

பட்டாம்பூச்சி வெளியீடு, 90436 05144, சென்னை- 28/ரூ.250/பக்கம் 240

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button