கட்டுரைகள்

இஸ்ரேல் அடாவடி முற்றுகையில் காசா!  திறந்தவெளி சிறையில் பாலஸ்தீன மக்கள்!

வ.மணிமாறன்

காசா முனை… துண்டு நிலம்… மத்திய தரைக்கடல், இஸ்ரேல், எகிப்து நாடுகளால் சூழப்பட்டுள்ளது. 41 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதற்குள் 22 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். காசா நிலமெங்கும் ரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாக காட்சியளிக்கிறது. 

இஸ்ரேலின் குண்டு மழை எப்பொழுது பொழியும் என்பது யாருக்கும் தெரியாது. கட்டடங்கள், வீடுகள் எல்லாம் கண் முன் நொறுங்கி, வெற்று இடிபாடுகளாக குவிந்து கிடக்கின்றன. காசாவின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் மூடிவிட்டது. மின்சாரம் கிடையாது. உணவு, குடிநீர் எப்போது கிடைக்கும்? எப்போது உண்போம்? என்பது யாருக்கும் தெரியாது. ரொட்டி துண்டுகளை வாங்குவதற்கும் மணி கணக்கில் நீண்ட தொலைவு காத்திருக்க வேண்டும். இதுவரை பாலஸ்தீனர்கள் 2800 பேர் உயிரிழந்துள்ளனர் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், மின் வினியோகம் தடுக்கப்பட்டதால் ஜெனரேட்டர்களை நம்பியே மருத்துவமனைகள் இயங்குகின்றன. அவற்றுக்கான எரிபொருள் எந்நேரமும் தீர்ந்து விடலாம். மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு. இதனால் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கும் நிலையில் உள்ளன.  இஸ்ரேல் குண்டு வீச்சால் படுகாயமடைந்த பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெறக்கூட வழியின்றி, செத்து மடிய நேரிடலாம்.  சின்ன நிலப் பகுதிக்குள் பாலஸ்தீனர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் யாரும் சாகலாம்; இருப்பவர்களை கண்டுகொள்வோம் என்பதுதான் அவர்களின் நிலை…

கவிஞர் மகமூத் தர்வீஷின் பின்வரும் கவிதை இந்த நிலையை படம்பிடிக்கிறது…

“எங்கள் இழப்புகள்: தினமும்
இரண்டிலிருந்து எட்டு தியாகிகள்.
பத்து பேர் காயமடைகிறார்கள்.
மேலும் இருபது வீடுகள்…
மேலும் ஐம்பது தேவதாரு மரங்கள்
இதனுடன் சேர்ந்து…
இந்தக் கவிதையும் நாடகமும்,
முடிக்கப்படாத ஓவியமும்

சந்திக்கும் கட்டமைப்பு பிழை..”

காசாவை இஸ்ரேலின் முப்படைகளும் முற்றுகையிட்டுள்ளன. இஸ்ரேலின் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. எகிப்தை ஒட்டிய ஒரே ஒரு வழி – அதுவும் எப்பொழுது திறக்கும் என்பது தெரியாது. எந்த நாடு தங்களை அரவணைக்கும் என்பதும் தெரியாது. பல்வேறு நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளும் எல்லையிலேயே காத்திருக்கின்றன. அவை அனுமதிக்கப்படுமா அல்லது மக்கள் அழிக்கப்படுவார்களா என்பது இஸ்ரேலுக்கு மட்டுமே தெரியும். 

காசாவை ஆளும் ஹமாஸ் படையினர், இஸ்ரேலுக்குள் புகுந்து அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இரும்புக் கோட்டை என இறுமாந்திருந்த இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி. உலகக் கில்லாடி என பெயர் எடுத்திருந்த மொசாத் உளவு அமைப்பு திகைத்தது. ஹமாஸ் பயங்கரவாதம் என இஸ்ரேலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளும் அலறுகின்றன.

உள்நாட்டில் மக்கள் கிளர்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாத ஹமாஸை படுகுழியில் தள்ளியே தீருவோம் என சபதம் எடுக்கிறார். 

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய குடிமக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் பாலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறைக்கு தனிப்பட்ட பொறுப்பாளிகள் அல்ல. இருப்பினும் இங்கு நாம் எழுப்ப வேண்டிய கேள்வி அவர்களின் மரணத்திற்கு யார் இறுதிப் பொறுப்பு? இந்த மனிதத் துயர்களுக்கு, சோகங்களுக்கு யார் பொறுப்பேற்பது?

இஸ்ரேலிய இனவெறி அரசும் அதற்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்காவும் தான் முதல் பொறுப்பு. பாலஸ்தீனர்களை, அவர்களின் மண்ணிலிருந்து வெளியேற்றிவிட்டு யூத அரசு ஒன்றை நிறுவும் பிற்போக்குத்தனமான சியோனிச திட்டத்துடன்; மிகச்சிறிய காசா நிலப்பகுதியை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றி பாலஸ்தீனர்களை அடைத்து வைத்திருக்கும் இஸ்ரேல் இனவெறி அரசும் அதனை பாதுகாத்துக் கொண்டிருக்கும் மேற்கு நாடுகளும் தான் பொறுப்பு. 

ஆனால், பாலஸ்தீன மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இஸ்ரேல் அரசு அதற்குப் பலியாகிறது என்றும் இஸ்ரேலும் அமெரிக்காவும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இது நடந்த நிகழ்வுகளை தலைகீழாக மாற்றிப் பேசுவதாகும். தங்களின் பரப்புரை பலத்தின் மூலம் இதனை சாதித்து விடலாம் என இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் நினைக்கின்றன. அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பாலஸ்தீன மக்களை முற்றிலும் ஒரு சார்பாக ஒடுக்கி வருகின்றன.

பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனி நாடு என்ற பிரிட்டனின் திட்டத்திற்கு சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு 1922 இல் ஒப்புதல் வழங்கியது.  ஐரோப்பிய நாடுகளில் இருந்த யூதர்களில் 90 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான ஐ.நா. சபை பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரித்து அரபு நாடு, யூத நாடு, ஜெருசலம் தனி என 1947 நவம்பர் 29ல் அறிவித்தது. இதன்படி 70 விழுக்காடு உள்ள இஸ்லாமியர்களுக்கு பாலஸ்தீனத்தில் 43 விழுக்காடு இடமும்; 30 விழுக்காடு உள்ள யூதர்களுக்கு 56 விழுக்காடு இடமும் சொந்தம் என பிரிவினை செய்யப்பட்டது. 

1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பாலஸ்தீனத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது. அதுவரை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் பாலஸ்தீனம் இருந்தது. பிரிட்டன் வெளியேறியவுடன் இஸ்ரேல் என்ற தேசம் உருவாகிவிட்டதாக யூதர்கள் அறிவித்தனர். 

பாலஸ்தீன இஸ்லாமிய படுகொலைகள், ராணுவ ஆக்கிரமிப்புகள் என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் அந்த நிலப் பகுதியே ரத்தமானது.

பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் விழுங்கியது. தங்கள் மக்களை அழைத்துச் சென்று குடியேற்றினர்.  இதனால் பாலஸ்தீனத்தின் வரைபடம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு போல் ஆகி, காசா துண்டு நிலத்துக்குள் சுருங்கி விட்டது. இன்றைய இஸ்ரேலின் பரப்பளவு 21 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். பாலஸ்தீனத்தின் பகுதி வெறும் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்.

அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் ஆயுத மயமாக்கப்பட்ட இஸ்ரேலிய அரசு, முக்கால் நூற்றாண்டுகளாக பாலஸ்தீன மக்களின் அனைத்து எதிர்ப்புகளையும் மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கி வைத்துள்ளது. 

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; இஸ்ரேல் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள்;  பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் என எதையும் இஸ்ரேல் அரசு பின்பற்றியதில்லை.  இவற்றுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தங்களுக்கு இருக்கும் ரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தி அமெரிக்காவும் பிரிட்டனும் அந்த தீர்மானங்களை நிறைவேற விடாமல் செய்துவிடுகின்றன.

பாலஸ்தீன மக்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது அடக்குமுறை மூலமே இஸ்ரேல் பதிலளித்து வந்துள்ளது.

1948-1949 மற்றும் 1967 போர்களின் போது விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமை கோரி 2018-19ல், “வீடு திரும்புவதற்கான பெரும் அணிவகுப்பு” என்ற பதாகையின் கீழ் காசாவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய ராணுவம், அவர்களை சுட்டுக்கொன்று அந்தப் போராட்டத்திற்கு பதிலளித்தது. இதில் 223 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 9,200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  

2008 – 09ல் காசா மீதான வான்வழி குண்டுவீச்சில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய உயிரிழப்புகளைவிட பாலஸ்தீனர்களின் உயிரிழப்புகள் 1:100 என்ற விகிதத்தில் அதிகமாக இருந்தது என்று மதிப்பிடுகின்றனர். 

மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன மக்கள் நூற்றுக்கணக்கான தனித்தனி கொட்டடிகளில், ராணுவ சோதனைச் சாவடிகளால் சூழப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில், பெரும் திறந்தவெளி சிறைச்சாலையாக காசா மாற்றப்பட்டுள்ளது: காசா பகுதியில் வாழும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள், ஒவ்வொரு தேவைக்கும் இஸ்ரேலிய அரசின்  தயவில் வசித்து வருகின்றனர். 

“காசா மீது ஒரு முழுமையான முற்றுகையை” இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலாண்ட் அறிவித்துள்ளார். “மின்சாரம் இருக்காது, உணவு, தண்ணீர் கிடைக்காது, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்படும். நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம்” என்று கலாண்ட் கூறியுள்ளார். 

ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான நிக்கி ஹேலி, “இஸ்ரேலின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அமெரிக்கா மீதான தாக்குதல்” என அறிவித்தார். 

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு  “அடுத்த சில நாட்களில் எதிரிகளுக்கு நாம் செய்யப்போவது தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும்” என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

காசா மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புகள் எழும் போதெல்லாம் ஆதிக்க சக்திகள் இப்படித்தான் அச்சுறுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றன. 

“அடக்குமுறையாளர்களான நாங்கள், எமது நலன்களுக்குத்  தேவைப்படும் போதெல்லாம் எந்தத் தடையும் இன்றி ஆயுத பலத்தை பயன்படுத்தி இருக்கிறோம். வெடிகுண்டுகளை வைக்கலாம். முற்றுகையிட்டுப் பட்டினி போடலாம். சிறையில் அடைக்கலாம். கழுத்தை காலால் நெரிக்கலாம். படை என்பது எங்களின் ஏகபோகம். ஒடுக்கப்பட்ட மக்களான நீங்கள், எந்த சூழ்நிலையிலும் பதிலுக்கு பலத்தை பயன்படுத்தக் கூடாது” என்பதுதான் ஒடுக்குமுறையாளர்களின் அடிப்படை வர்க்க அணுகுமுறை. இவற்றை யார் மீறினாலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் பரப்புரை கட்டவிழ்த்து விடப்படும். 

இப்படித்தான் ஈராக் மீது படையெடுத்த போது அமெரிக்கா கூறியது. வியட்நாம் மீது படையெடுத்த போதும் கூறியது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் கூறியது. அவர்களின் மொழி என்றைக்கும் மாறாது. 

அதேநேரத்தில், இஸ்ரேல் ராணுவத் தாக்குதலாலும்; உணவு, தண்ணீர் கிடைக்காமலும் பாலஸ்தீன மக்கள் செத்து மடியும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக் கண்டித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உட்பட உலக  நாடுகளில் மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  

காசா மீதான இஸ்ரேலின் கொலைகாரப் போருக்கு எதிராகவும், இந்தப் போருக்கு துணை நிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் பரப்புரைகளையும் போராட்டங்களையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. இதனை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் ஜனநாயக சக்திகளும் மேற்கொள்ள வேண்டும். இது அவசரமும் அவசியமும்கூட.

கட்டுரையாளர்: வ.மணிமாறன்                                                                                 manimaran2@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button