கட்டுரைகள்

மாற்றத்தை மறுக்கும் சனாதனம்; ஆன்மீக மறுமலர்ச்சிக்கும் எதிரானது

வ. மணிமாறன்

சாதி, தீண்டாமை, சமத்துவமின்மை, பெண்ணடிமை நிலவும் வரை தற்போதுள்ள இந்து மதத்தில் ஆன்மீக மறுமலர்ச்சியோ ஆன்மீக ஜனநாயகமோ ஒரு போதும் ஏற்படாது. சனாதனிகளே தடையாக இருந்து வருகின்றனர்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்க வேண்டும்” என்று பேசினார்.

சனாதன கோட்பாடு

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு இந்துத்துவ வாதிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்த போதும், “நான் பேசியதில் உறுதியாக இருக்கிறேன். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். இனப்படுகொலை (Genocide) என்று பேசியதாக சிலர் சொல்கின்றனர். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்” என்று உதயநிதி தெரிவித்தார்.

சனாதனம் பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே பேசித் திரிகிறார். மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது; வன்முறையால் அந்த மாநில மக்கள் திக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கூட வாய் திறந்து பேசாத பிரதமர் மோடி, சனாதனம் பற்றிப் பேசினார். ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் பேசினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் சனாதனம் பற்றி திருவாய் மலர்ந்தருளினார்.

“சனாதனத்தின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் முதலும் முடிவும் இல்லாமல் எல்லா காலமும் இருக்கக் கூடிய தர்மம், சனாதன தர்மம். இது எப்போது பிறந்தது என்று யாருக்கும் தெரியாது; எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது” என்று (2023 செப்டம்பர் 10) தென்காசியில் அண்ணாமலை பேசினார்.

சனாதனம் பற்றிய இந்த விவாதம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலங்களில் நடைபெற்றுள்ளது.

சீர்திருத்தங்களை எதிர்க்கும் சனாதனிகள்

வங்காளத்தில் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சனாதனம் பற்றி பெரும் விவாதம் நடைபெற்றுள்ளது. உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகள், “இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் சமூகத்தை மாசுபடுத்தும்” என கண்டித்தனர்.

இதேபோன்று மகாராஷ்டிராவில் ஜோதிராவ் பூலே சீர்திருத்தக் குரலை ஓங்கி ஒலித்த போது, சனாதனிகள் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் வைதீக மதத்தை வள்ளலார் எதிர்த்த போது, சனாதனிகள் கடும் சண்டையில் இறங்கினர்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்

முதலா நவின்ற கலைச் சரிதம்

எலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல் வருணம்

கண்டறிவார் இலைநீ” என்று சாடினார் வள்ளலார்.

தன்னை சனாதனி என அறிவித்து கொண்ட மகாத்மா காந்தி, தீண்டாமைக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஆதரவாகவும் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த சனாதனிகள், நாடு முழுவதும் சனாதன தர்ம மகாசபைகளை தொடங்கினர். தீண்டாமைக்கு எதிராகவும், தலித்துகளின் கோயில் நுழைவு உரிமையையும் காந்தியார் வலியுறுத்திய போது, மதன் மோகன் மாளவியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காந்தியாரின் முடிவுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுமாறு மதன் மோகன் மாளவியா அழைப்பு விடுத்தார். (1933 ஜனவரி 23) இந்த மதன் மோகன் மாளவியாவைத்தான் இன்றைய பாஜக போற்றிப் பாடுகிறது. காந்தியார் வலியுறுத்தி வந்த சீர்திருத்தங்களால், வெறுப்படைந்த சனாதனிகள் அவரது உயிரையே பறித்து விட்டனர்.

தமிழ்நாட்டில் தீண்டாமை, குலக்கல்வி, குழந்தை திருமணம், தேவதாசி முறை, மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் கட்டாயம் போன்றவற்றை எதிர்த்தும், அனைவருக்கும் கல்வி, விதவை திருமணம் போன்றவற்றை ஆதரித்தும் சீர்திருத்தக் குரல்கள் ஒலித்தன. ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற சனாதன பற்றாளர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், சீர்திருத்தங்களை ஏற்க மறுத்தனர்.
சாதி ஒழிப்பு; சமத்துவம் ஏற்பட எழுதியும் பேசியும் போராடியும் வந்த அம்பேத்கரை பெரியார் தான் ஆதரித்தார். அன்றைக்கு பெரியாருக்கு எதிராக இருந்த ராஜாஜி அம்பேத்கரை ஆதரிக்கவில்லை. ஆனால், குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர முயன்றார்.

சனாதனம் நித்தியமானது; நிலையானது; மாறாதது என்று பேசும் சனாதனிகள் ஒருபுறமும் சாதி, தீண்டாமை, சமத்துவமின்மை; பெண்ணடிமை போன்றவற்றுக்கு எதிரான குரல்கள் மறுபுறமுமாக இருந்து வருகின்றன. இதுதான் வரலாறு.

சனாதன தர்மத்தின் காலம்

இந்த சனாதன தர்மத்தின் காலத்தை கணிக்க முடியாது; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதெல்லாம் ஆதாரமற்ற வெற்று சலம்பல்கள். சனாதனத்துக்கு அளிக்கப்படும் விளக்கங்கள், மரபுகள் அனைத்தும் 1500 ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

1, சனாதன தர்மம்

2, வர்ண தர்மம்

3, ஸ்வய தர்மம்

இப்படி வகைப்படுத்தும் தர்மங்கள் தனிமனிதன், சமூகக் குழு, சமூகம் ஆகியவற்றுக்கான இயல்பு அல்லது கடமைகள், உரிமைகளை வரையறுக்கின்றன. இது குறித்து வெவ்வேறு நூல்கள் வெவ்வேறு பட்டியலைத் தருகின்றன. ஆனால் அனைத்தும் படிநிலை சாதிய அமைப்பு, தீண்டாமை, சமத்துவமின்மை, பெண்ணடிமை ஆகியவற்றில் ஒன்றுபடுகின்றன.

சனாதனம் குறித்து திருவாளர் அண்ணாமலை அளித்திருக்கும் விளக்கங்களே இதற்கு சான்றாகும்.

சனாதனத்தின் பெயரால் அநீதி

“திருப்பாணாழ்வார் கோயிலுக்கு சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். ஏன் இப்படி விலகி இருக்கிறது? ஒரு கீழ் சாதியை (அண்ணாமலை கூறிய வார்த்தை) சேர்ந்த மனிதர் சிவனை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரது கீழ் சாதியை காரணம் காட்டி அவருக்கு அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த சிவனின் நந்தி, தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று, அந்த மனிதர் சிவனைப் பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தர்மம்” (2023 செப்டம்பர் 10, மதுரை) – இது அண்ணாமலை கூறியது.

நந்தி விலகியதையும் சிவன் காட்சியளித்ததையும் எடுத்துக் கூறி திருவாளர் அண்ணாமலை புல்லரிக்கிறார். இங்கு பிரச்சனையே சமூகத்தின் ஒரு பகுதியினரை கீழ் சாதி என்று கூறி கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததும்; அவர்களின் வழிபாட்டு உரிமையை பறித்ததும் தான். இந்த அநீதி சனாதன தர்மத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது. (திருப்பாணழ்வார் சென்ற கோவில் பெருமாள் கோவில். அங்கு சிவன் கிடையாது. கதையே தவறு என்பது வேறு விடயம்)

“தற்போது மங்கை அம்மாளுக்கு பூசை செய்தவர் 225வது தலைமுறை. நான் இப்போது போய் அனைவரும் சமம் என்று கூறி, அந்த பூசையை நான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கலாமா..? அது அவருடைய கடமை, அவர்தான் செய்ய முடியும். அதேபோல், அவரை அழைத்து வந்து நான் செய்யக்கூடிய விவசாயத்தை செய் என்று சொல்ல முடியாது. என் வேலையை நான் செய்கிறேன், அவர் வேலையை அவர் செய்கிறார்” (2023 செப்டம்பர் 6)

“உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை உனது சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட வேலையை உனது சாதிக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் சனாதன தர்மம்” (2022 ஏப்ரல் 24) – இவை எல்லாம் அண்ணாமலையின் கூற்றுகள்.

அவர் இங்கு குறிப்பிடுவது குலத்தொழிலை அதாவது அந்தந்த சாதிக்குரிய கடமையை, தொழிலை செய்ய வேண்டும் என்பதைத்தான் அண்ணாமலை கூறுகிறார்.

ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுமா?

சாதி,

தீண்டாமை,

சமத்துவமின்மை,

பெண்ணடிமை –

நிலவும் வரை தற்போதுள்ள இந்து மதத்தில் இருந்து ஆன்மீக ஜனநாயகம், ஆன்மீக மறுமலர்ச்சி ஒரு போதும் ஏற்படாது. மக்களுடைய கடவுள் நம்பிக்கை, பக்தி மட்டும் இந்து மதத்தில் மாற்றத்தை கொண்டு வந்து விடாது.

சாதியை ஒழிப்பதற்கு;

தீண்டாமையை அகற்றுவதற்கு;

சமூக சமத்துவம் ஏற்படுவதற்கு

பாஜக விரும்புகிறதா?

அதற்காக போராட முன் வருகிறதா?

இதனை சனாதனிகள் விரும்புகின்றனரா?

போராட முன்வருகின்றனரா?

என்பதில் தான் இந்து மதத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

இந்திய சமூகம் குறித்து மார்க்ஸ்

இது தொடர்பாக காரல் மார்க்ஸ் நியூயார்க் டெய்லி டிரிப்யூன் இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு…

“இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் மனித மூளையைச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து அதை மூடநம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும், பரம்பரைச் சம்பிரதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும், சகல வகைப்பட்ட சிறப்புகளையும் சரித்திர பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் நாம் மறக்க முடியாது…

இந்தச் சிறுசமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எஜமானன் ஆக்குவதற்குப் பதிலாக, அவனைச் சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தின. தானாக வளர்ந்துகொண்டிருந்த சமூக நிலையை, ஒருபொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இந்தவிதமாக, இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையைச் சிருஷ்டித்தது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன், குரங்காகிய அனுமான் முன்பும், பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில், இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக் கூடாது.

அவை மனிதனது சிந்தையைக் குன்றிய வட்டத்தில் சுழலச் செய்து, அதனை மூடநம்பிக்கைக்கு ஏற்ற கருவியாகவும், மரபின் அடிமையாகவும் செய்து, அதன் மேன்மை முழுவதையும் வரலாற்றுப் படைப்பாற்றல் அனைத்தையும் இழக்கச் செய்துவிட்டன என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. பேரரசுகளின் அழிவையும், சொல்வதற்கு முடியாத கொடுமைகள் நிகழ்ந்ததையும், பெரிய நகரங்களின் மக்கள் படுகொலைக்கு ஆளானதையும், ஏதோ இயற்கை நிகழ்ச்சிகளைக் காண்பது போல் பார்த்துக்கொண்டு வாளாவிருந்த இக்கிராம சமூகங்களது தன்னகங்காரத்தை இவ்வளவுக்குமிடையில் தத்தம் துண்டு துக்காணி நிலத்தின் சாகுபடியிலேயே கண்ணும் கருத்துமாயிருந்த அவற்றின் செருக்கை – நாம் மறக்கக் கூடாது. இவற்றின் மீது பார்வையைத் திருப்பிய எந்த ஆக்கிரமிப்பாளனுக்கும் இரையாகி வந்த இச்சமூகங்களின் அவல நிலையையும் நாம் மறக்கலாகாது. மாண்புக்கும் முன்னேற்றத்துக்கும் இடமில்லாத இந்தத் தேக்கமான, செயலற்ற வாழ்க்கை, நேர்மாறான விளைவுகளை உண்டாக்கி, குறியோ நெறியோ இல்லாத அழிவுச் சக்திகளைத் தாண்டவமாடச் செய்து, நரபலியையே இந்துஸ்தானத்தின் (இந்தியாவின்) சமயச் சடங்காக ஆக்கியது என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

இந்தச் சிறு சமூகங்கள் சாதி வேற்றுமையாலும் அடிமை முறையாலும் கெட்டிருந்தன என்பதையும், அவை மனிதனை புறநிலைமைகளுக்கு எஜமானனாக்குவதற்குப் பதிலாக அவற்றுக்கு அடிமைப்படுத்தின என்பதையும், தானே வளர்வதற்குரிய சமுதாய வாழ்வை அவை என்றும் மாறாத இயற்கை விதியாக மாற்றின என்பதையும், இவ்வாறாக மிருகத்தனத்தை வளர்த்திடும் படியான முறையில் இயற்கைக்கு அடிபணிந்து அதனை வழிபடும் நிலையை உண்டாக்கின என்பதையும், இயற்கையை ஆட்சி புரியவேண்டிய அதிபனாகிய மனிதன், குரங்காகிய அனுமானுக்கும் பசுவாகிய சபலைக்கும் தண்டனிட்டு அஞ்சலி செலுத்த நேர்ந்ததில் இக்கிரமாச் சமுதாயங்களின் இழிநிலை புலனாகிறது…

…ஆசியாவின் சமூக நிலையில் அடிப்படையான புரட்சி ஏற்படாமல், மனிதகுலம் தன் லட்சியத்தில் நிறைவு எய்துமா என்பதே கேள்வி.

(1853 ஜூன் 25, நியூயார்க் டெய்லி டிரிப்யூன்)

(ஜனசக்தி, அக்டோர் 1-7 இதழ்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button