கட்டுரைகள்

சிலப்பதிகாரம் குறித்த நிர்மலா சீதாராமன் பேச்சு: வடிகட்டிய பொய்

இளசை கணேசன் காட்டம்

சிலப்பதிகாரம் கூறியுள்ளபடி தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அதுவும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் விளக்குகிறார். சிலப்பதிகாரத்தில் அப்படி எதுவும் இல்லை என்பதுடன், நிர்மலா சீதாராமன் பேச்சு வடிகட்டிய பொய் என்பதை தோலுரிக்கும் கட்டுரை.

“பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்ற தமிழ் பழமொழி போன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது கனிமொழி எம்பிக்கு பதில் கூறும் தோரணையில்.. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படும் ம.பொ.சி. சிலப்பதிகாரத்தில் புலமை பெற்றவர். அவர் 1951ல் எழுதியதை கூறுகிறேன் என்று ஆரம்பித்து..

சிலப்பதிகாரம் கூறுவது..

  • நாம் திராவிடர் அல்லர்- நாம் தமிழர்.
  • நமது தாயகம் திராவிடம் அல்ல- தமிழகம்.
  • தமிழகத்தின் வடக்கு எல்லை விந்தியம் அல்ல- வேங்கடம்.
  • தமிழ்நாட்டு அந்தணர் ஆரியர் அல்லர்- தமிழர்.
  • தமிழர்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் வேங்கடத்திற்கு வெளியே உள்ளவர்களின் பண்பாட்டுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் சற்றே வேறானது. ஆயினும் விரோதமானது அல்ல.

– இப்படி சிலப்பதிகாரம் கூறுவதாக ம.பொ.சி. எழுதியுள்ளார் என்றும், ஏதோ கிடைக்காத ஆதாரம் கிடைத்து விட்டது போலவும் நிர்மலா சீதாராமன் துள்ளிக் குதித்து பேசியுள்ளார்.

இதிலிருந்து சிலப்பதிகாரத்தை நிர்மலா சீதாராமன் படிக்கவே இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

அது மட்டுமல்ல, தமிழ் முரசு ஏட்டில் ஏப்ரல் 1951ல் ‘கண்ணகியை பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்’ என்ற தலைப்பில் ம.பொ.சி. எழுதிய கட்டுரையைக்கூட நிர்மலா சீதாராமன் வாசிக்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

நிர்மலா சீதாராமனுக்கு இந்த வரிகளை எழுதிக் கொடுத்தவராவது ம.பொ.சி.யின் கட்டுரையை முழுமையாக படித்து எழுதிக் கொடுக்கவில்லை.

இந்த உண்மையை அறிய நிர்மலா சீதாராமன் அந்தக் கட்டுரையை படித்திருந்தால் எழுதிக் கொடுத்த நபரை சும்மா விட்டிருக்க மாட்டார்.

ம.பொ.சி. கூறியிருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிடுவது சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட வரிகள் அல்ல. அதற்கான எந்த மேற்கோளையும் ம.பொ.சி காட்டவில்லை. நாடாளுமன்றத்திலும் நிர்மலா சீதாராமனும் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள்காட்டிப் பேசவில்லை.

ஆதாரமில்லாத எதையும் நாடாளுமன்றப் பதிவேடுகளில் பதிவிடக் கூடாது என்பது நிர்மலா சீதாராமனுக்கு தெரியாத ஒன்றா?

ம.பொ.சி. இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு மறுப்புக் கூறியிருப்பார். அவர் இல்லை என்ற துணிச்சலில் தான் நிர்மலா சீதாராமன் துணிச்சலாகப் பேசிவிட்டார்.

ஆர்எஸ்எஸ்-க்கு ஆபத்பாந்தவனாக எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக விளங்கும் செந்தமிழ்ச்செல்வன் சீமானிடமாவது நிர்மலா சீதாராமன் கேட்டுத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.

சிலப்பதிகாரம் பற்றி ம.பொ.சி‌. கூறியது, எழுதியது அவரின் மதிப்பீடே தவிர சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட வரிகள் அல்ல.

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று, சமணர்களால் தமிழ் மொழியில் படைக்கப்பட்ட இலக்கிய படைப்பாகும்.

சிலப்பதிகார காப்பியம் பற்றி எல்லாருக்கும் ஒரே மதிப்பீடு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மதிப்பீடு இருக்கும்!

திருக்குறள் குறித்து எல்லோருக்கும் ஒரே மதிப்பீடா இருக்கிறது? ராமாயணத்தில் எத்தனை வகையான ராமாயணங்கள் இருக்கின்றன! எத்தனை வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன?

சமூக விஞ்ஞானம் என்று கூறப்படுகிற மார்க்சியத்தில் கூட மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் என்று வகைப்படுத்தப்படுகிறதே!

விவேகானந்தரை. பாரதியாரை, டாக்டர் அம்பேத்கரை சனாதனத்திற்குள் கொண்டுவர சங்கிகள் முயற்சிக்கவில்லையா.? வள்ளலாரின் சுத்த சமராச சன்மார்க்கத்தை கூட சனாதானத்திற்குள் கொண்டுவர முயற்சி நடக்கிறதே!

தற்போது தமிழகத்தில் ம.பொ.சி.யையும்‌‌ சனாதனத்திற்குள் கொண்டுவரும் முயற்சியை நிர்மலா சீதாராமன் செய்திருக்கிறார்.

“எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்பது தமிழ் பழமொழி

எதைச் செய்தால் தமிழ்நாட்டில் திமுக அணியை தோற்கடிக்க முடியும்! சனாதனம் காலூன்ற முடியும்! தமிழ் தேசியத்தை ஆதரித்தாலாவது சாத்தியமாகாதா? என்பதே குறி!

‘இந்துத்துவா பாசிசம்’ என்பது எதிர்த்தும் அழிக்கும். அணைத்தும் அழிக்கும். நிர்மலா சீதாராமன் பேச்சு தமிழர்களை அணைத்து அழிக்கத் துடிக்கும் சூழ்ச்சியாகும்.

தமிழ் முரசு ஏட்டில் ம.பொ.சி. எழுதிய கருத்து என்பது தந்தை பெரியாருக்கும்- ம.பொ.சிக்கும்‌ நடந்த கருத்தியல் தர்க்கப் போராட்டம். இதில் அவரவரது கருத்து பிரதிபலிக்கும்.

வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு சிலப்பதிகாரக் கதையை ஒரு உத்தியாகவே துவக்கத்தில் திராவிட இயக்கத்தார் பயன்படுத்தி வந்தனர்.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விளக்கும் வகையில் “தமிழன் தொடுத்தப் போர்” என்ற‌  நூலை மா.இளஞ்செழியன் 1948ல் எழுதி வெளியிட்டார். இந்த நூலுக்கு பெரியாரும் அண்ணாவும் அணிந்துரை தந்துள்ளனர்.

இந்த நூலில் “தமிழன் தொடுத்தப் போர்- சேரன் செங்குட்டுவன் பரம்பரையை வீழ்த்திய காதை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தநேரத்தில், விடுதலை ஏடும் சிலப்பதிகாரம் குறித்து உயர்வாகவே எழுதி வந்தது.

சிலப்பதிகாரம் குறித்து திராவிடர் கழக இலக்கிய அணி பரப்புரையாளர் சி.இலக்குவனார் அவர்களின் மதிப்பீடு..

“சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திய இலக்கியம். சிந்தித்து ஆய்விடக்கூடிய சிறந்த தமிழ் நூல். ராமாயணத்தை போல், பெரிய புராணத்தைப் போல், சீவக சிந்தாமணியைப் போல் பூஜை செய்யும் மனப்பான்மையை வளர்க்கவில்லை” இதுதான் நூலின் தனிச்சிறப்பு என்று மதிப்பீடு செய்துள்ளார். (விடுதலை 15.3.1951)

தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அவர்களின் மதிப்பீடு..

“பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானம்ஆகியவைதான்‌ தமிழர் பண்பு.”

“தெய்வீக சடங்குகளால் பயனில்லை”

“அறிவின்றி விசாரணை இல்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொது மக்களால் அழிக்கப்படும்”.

“தன்னை அழிக்கும் எவனுக்கும் தமிழன் தலைவணங்க மாட்டான்! தன்னை அவமதிப்போரை அடக்கி தன்மானத்தை காப்பாற்றியே தீருவான்”. என்று மதிப்பீடு செய்துள்ளார். (விடுதலை 21.3.1951)

சிலப்பதிகாரம் பற்றி தந்தை பெரியாரின் மதிப்பீடு..

“சிலப்பதிகாரம் ஆரியத்தை பரப்புகின்ற நூல்”

“கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த திருமணம் பெண்ணடிமைத் திருமணம் என்பது மட்டுமல்ல பண மூட்டைகளின் திருமணம்”

“கண்ணகிக்கு‌ சிறிதளவாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருக்கிறதா?”‌ என்று மதிப்பீடு செய்திருக்கிறார் (30.3.2951 காங்கேயம் பேச்சு)

“சிலப்பதிகாரம் விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினி தளத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம் ஆகும்” என்றும் பெரியார் கூறியிருக்கிறார். (விடுதலை 23.9.2964)

சிலப்பதிகாரம் பற்றி அறிஞர் அண்ணாவின் மதிப்பீடு..

“சிலப்பதிகாரம் சித்தரிக்கும் பத்தினியை உலகு புகழ்ந்து ஏற்றது.”

“நீதி தவறிய அரசு கெடும்”

“அவனவன் செயலின் விளைவு அவனவனைத் தாக்கும்”

“தனது இளமை, எழில், செல்வம் யாவற்றையும் பரத்தைக்கு ஈந்து வறியவனாக திரும்பிய கோவலனை கண்ணகி கண்டபோது தனக்குற்ற இடரெல்லாம் மறந்து கோவலனிடம் கனிமொழி பேசிய மாண்பு” என்றவாறு சிலப்பதிகாரத்தை தூக்கிப்பிடிக்கிறார். (தீ பரவட்டும் 2005:11- 2005;14)

அறிஞர் அண்ணா பெரியாரிடம் இருந்து உடன்பட்ட இடங்களில் சிலப்பதிகாரத்தின் மீதான மதிப்பீடும் ஒன்றாகும்.

சிலப்பதிகாரம் சொல்வதென்ன? ம.பொ.சியின் மதிப்பீடு..

  • நாம் திராவிடர் அல்லர்- தமிழர்.
  • நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அன்று.- தமிழகம்.
  • அதன் வடக்கு எல்லை விந்தியம் அன்று- வேங்கடம்.
  • தமிழ்நாட்டு அந்தணர் ஆரியர் அல்லர்- தமிழர்.
  • தமிழருடைய பண்பாடும் பழக்கவழக்கமும்; வேங்கடத்திற்கு வெளியே உள்ளவர்களின் பண்பாட்டுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் சற்றே வேறானது, ஆயினும் விரோதமானது அல்ல”

என்று மதிப்பீடு செய்திருக்கிறார். (1951 ஏப்ரல் தமிழ் முரசு)

சிலப்பதிகாரம் குறித்து இடதுசாரிகளும் மதிப்பீடு செய்துள்ளனர்.

“சிலப்பதிகாரக் காப்பியம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியம்”

“அரசர்களைப் புகழ்ந்து பாடும் காலகட்டத்தில் அரசர் அல்லாத கோவலனை நாயகனாகக் கொண்ட படைப்பு.”

கற்பு நிலை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு, நிலவுடமை அமைப்பில் ஆணாதிக்கம் மற்றும் உடமை சார்ந்த பண்பு நிலைகளாகும்.

“அரையர் குலத்தில் பிறந்த கண்ணகியும், பரத்தையர் குலத்தில் பிறந்த மாதவியும் காப்பியத்தில் நாயகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்”.

“கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடைபெறுவது கலப்புத் திருமணம். இது அந்தக் காலத்திலேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.”

இந்த வகையில் சிலப்பதிகாரம் ஒரு முற்போக்கு படைப்பிலக்கியம் என்று இடதுசாரிகள் மதிப்பீடு செய்கின்றனர்.

அவரவர் அரசியல் நிலையில் நின்று மதிப்பீடு செய்தால், அதற்கேற்ற மதிப்பீடு தான் உருவாகும்.

  • ம.பொ.சி – தமிழ் பண்பாட்டுத் தளம்.
  • பெரியார்- திராவிட, பகுத்தறிவு தளம்.
  • இடதுசாரிகள்- மார்க்சிய தளம்.

என்ற அடிப்படையில் ஆய்வுகள்  நடத்தப்படுகின்றன. இதற்குள் பிரிவுகளும் இருக்கின்றன.

தமிழ் தேசியம் என்ற அரசியல் நிலையில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன, நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் தேசியம் பேசும் கட்சி அல்ல. இதிலும் கூட…

  • வலதுசாரி தமிழ் தேசியம்
  • இடதுசாரி தமிழ் தேசியம்
  • திராவிட தமிழ் தேசியம்

என்ற பிரிவுகளும் உண்டு. வலதுசாரி தமிழ் தேசியம் என்பது பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு சமத்துவத்திற்கு எதிராகவும், திராவிடத்தை எதிரியாகவும் கார்ப்பரேட் மற்றும் , இந்துத்துவ சனாதனத்தை ஆதரவு சக்தியாகவும் அரசியல் நிலையெடுக்கும்..

இடதுசாரி தமிழ் தேசியம் என்பது இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட்டுகளை எதிரியாகவும், மதச்சார்பின்மை ஐனநாயகம் சமூக நல்லிணக்கம் போன்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், திராவிடத்தை, தேசிய இனங்களை ஆதரவு சக்திகளாகவும் அரசியல் நிலை எடுக்கும்.

திராவிட தமிழ் தேசியம் என்பது ஆரிய எதிர்ப்பையும், மாநில சுயாட்சி, சமூக நீதி கொள்கைக்கு ஆதரவாகவும், தமிழ் தேசிய ஆதரவு சக்தியாகவும் அரசியல் நிலை எடுக்கும்.

இதில் ம.பொ.சி திராவிட எதிர்ப்பு வலதுசாரி  நிலை எடுத்தார். அப்போது இந்திய தேசத்தை ஆதரித்தார். 1967 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு அணி சேர்ந்து போட்டியிட்டார். திராவிட கட்சிகளோடு நெருக்கமாகி மேலவை உறுப்பினராகவும், மேலவைத் தலைவராகவும்‌ சங்கமமாகி விட்டார்.

ம.பொ.சி.யின் முடிந்து போன அரசியல் நிலைக்கு உயிர் கொடுத்து தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது நிர்மலா சீதாராமனின் சனாதனம்.

ம.பொ.சி. யின் அதே கட்டுரையில் திராவிட எதிர்ப்பு மட்டுமல்ல ஆரிய எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார். நிர்மலா சீதாராமனுக்கும் அவருக்கு எழுதிக் கொடுத்தவருக்கும் இது தெரிய நியாயம் இல்லை. இருவருமே படிக்கவில்லை!

  • கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும் கண்ணகியின் புரட்சி ஆரியமா?
  • அறியாது செய்த பிழைக்கு தனது உயிரையே அர்ப்பணிக்கும் பாண்டிய நெடுஞ்செழியன் தியாகம் ஆரியமா?
  • அரசன் உயிர் நீத்த அக்கணமே தானும் உயிர் நீத்த கோப்பெருந்தேவியின் அன்பு கலந்த காதல் ஆரியமா?
  • வாய்க்கொழுப்புடன் பேசிய வடவேந்தருடன் போரிட்டு தமிழரின் ஆற்றலை பலப்படுத்திய செங்குட்டுவனின் வீரம் ஆரியமா?
  • மூன்றாகப் பிளவுபட்டு கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக் காட்டிய இளங்கோ அடிகளின் சித்திரம் ஆரியமா?
  • பரத்தையர் குல மகளுக்கு பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்த பிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் துறந்துவிட்ட மாதவியின் மன மாண்பு ஆரியமா?

இவை அனைத்தும் ஆரியப் பண்பு அல்ல, தமிழ்ப் பண்பாடுகள் என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஒருவேளை இவை ஆரியப் பண்பு என்றால், ஆரியம் நீடூழி வாழ்வதாக! என்று ம.பொ.சி. தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

இதையும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கோடிட்டு பேசி இருக்கலாமே!. பேச மாட்டார்.

நிர்மலா சீதாராமனுக்கு நாக்கைப் பிடுங்குற மாதிரி நறுக்கென்று ஒரே ஒரு கேள்வி!?

கனிமொழியின் கேள்விக்கு பதில் சொல்வது இருக்கட்டும். உங்கள் கணவர் ஒன்றிய அரசு மீது எழுப்பும் நேர்மையான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லத் தயாரா?

உங்கள் கணவர் பிரகலா பிரபாகர், “THE CROOKED TIMBER OF NEW INDIA (வளைந்த மரமான புதிய இந்தியா) என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

அந்த நூலைப் படித்தீர்களா?

படிக்கவில்லை என்றால் நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய மூவரும் கண்டிப்பாக படியுங்கள். பதில் சொல்ல முயற்சியுங்கள்.

முடிந்தால், முதுகெலும்பு இருந்தால், உங்கள் கணவரின் குற்றச்சாட்டுகளுக்கு  நெஞ்சுயர்த்திப் பதில் சொல்லுங்கள்!

Related Articles

One Comment

  1. தோழர் இளசை கணேசனின் கட்டுரை மிகவும் சிறப்பானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button