அறிக்கைகள்

2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

2024 புத்தாண்டு வாழ்த்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பரபரப்பும், பதற்றமும் நிறைந்ததும், சாதனை முத்திரை பதித்ததும், நம்பிக்கை விதை முளைத்து, அது வளமாக  வளர்ந்து வரும் காலத்தின் அடையாளமாக விளங்கிய 2023 ஆம் ஆண்டு விடை பெறுகிறது.

அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு வலது பக்கம் திருப்பப்பட்ட, அரசியல், சமூக, பொருளாதார திசை வழி, மீண்டும் ஜனநாயக மைய நீரோட்டத்திற்கு திருப்பப்படும் ஆண்டாக அமைய வேண்டும் என விழைகிறோம்.

விண்வெளி ஆய்வில் சாதனை படைத்து வரும் சந்திரயான் திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுக்கலம் இறக்கி சாதனை படைத்து உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த மகத்தான சாதனையில் தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் பங்களிப்பு பாராட்டுதலை பெற்று, பெருமை சேர்த்துள்ளது.  

ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள், ஒன்றிய அமைச்சர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக செயல்படுவதை தடுக்கும் பிளவுவாத அரசியல் அழுத்தத்தை எதிர்த்து  இந்திய காவல் பணியில் இருந்த பெண்  அதிகாரி பணியில் இருந்து விலகியதையும் பார்த்து நாடு வெட்கி தலைகுனிந்தது.  

காலனி ஆட்சியாளர்கள் நாட்டை பிளவு படுத்திய காலத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள், மதவாத உணர்வுக்கு இரையாகாமல் இந்திய ஒன்றியத்துடன் இணைந்து நின்றார்கள். காஷ்மீர் மாநில மக்களின் உணர்வை  மதித்து, அவர்களது பாதுகாப்புக்கு உறுதியளித்து, அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370 உருவாக்கியது. இது இன்று முற்றிலும் நீக்கப்பட்டு, ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி கோட்பாடு நிராகரிக்கப்பட்டு, அதிகார குவிப்புக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. இதன் வழி மாநில உரிமைகள் முற்றாக பறிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக வாழ்வு நெருக்கடியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள சட்டங்கள் காலனி ஆட்சி  காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அவை அடிமை சின்னமாக இருப்பதாக கூறி, பெயர் மாற்றி வருவது அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கிவிட்டு, மனுதர்ம சிந்தனையில், சனாதன கருத்தியல் கொண்ட சட்டம் உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும்.

இரண்டாயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் கூட தராமல் சனாதன சம்பிரதாய முறையில், செங்கோல் ஊன்றி, திறந்து வைத்த புது நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் படுதோல்வி அடைந்துள்ளது. அவையில் எழுப்பப்படும் வினாக்களுக்கு விடை கூறும், ஜனநாயக நெறிமுறைகள் கைவிடப்பட்டு உறுப்பினர்கள் நீக்கம், இடைநீக்கம் என தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலும், தென்பகுதியில் பெய்த பெரு மழையும் வரலாறு காணாத இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எஞ்சியிருப்பதை  பாதுகாத்து, மறுவாழ்வு அமைத்துத் தர மாநில அரசு போர் கால முனைப்போடு இயங்கி வருகிறது. இங்கேயும் ஒன்றிய அரசின் வஞ்சனையும், வன்மமும் அரசியல் ஆதாயம் தேடி வருகிறது.

இந்த சூழலில் நாட்டின்  ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் ‘இண்டியா’  கூட்டணி  வகுப்புவாத இருள் நீக்கும் நம்பிக்கை ஒளிச் சுடராக எழுந்து வருகிறது. இது 2024 ஆம் ஆண்டில் அதிகாரத்தை கைப்பற்றி, நாட்டின்  மதச்சார்பற்ற மாண்பையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மரபையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு வரும்  2024 – ஆங்கில புத்தாண்டில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button