தலையங்கம்

குரல்வளையை நெரிக்கும் விலை உயர்வு!

ஜனசக்தி தலையங்கம்

கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வின் பிடியில் தமிழ்நாட்டின் மக்கள் செய்வதறியாது துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அதாவது 4 மாதங்களுக்கு முன்பு 10,000 ரூபாய்க்கு வாங்கிய பொருள்களை இப்போது 13,000 கொடுத்தால்தான் வாங்க முடியும் என்ற நிலை வந்து விட்டது.

ஆனால், அதற்கேற்ப ஊதியம் உயரவில்லை. பணி நிரந்தரம் என்று பேசினாலே, தமிழ்நாட்டின் அதிகார வர்க்கம் கடும் கோபத்தோடு, அது சாத்தியமில்லை என்று அடுத்த நொடியே பேசுகிறது. குறைந்தபட்ச ஊதியமும் சட்ட நியதிகளின்படி நிர்ணயிக்கப்பட வேண்டிய தொகையைவிட மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அதைக் கூட அரசுத்துறைகளில் அமல் நடத்துவதில்லை, தனியார் துறைகளில் செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

புதிய ஆட்சி வந்த பிறகு, தொழிலாளர் துறை குறட்டை விட்டு உறங்குகிறது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் இல்லை.

விலை உயர்வு நகர்ப்புறங்களை விட கிராமங்களில் இன்னும் அதிகமாக இருப்பது, இதற்கு முன் கண்டிராதது. முப்போகம் விளையும், செழிப்பான நிலங்களில் கூட இப்போது போதிய விளைச்சல் இல்லை. 100 நாள் வேலை திட்டம், 125 நாள், 150 நாள் என்று ஏலம் போடப்பட்டாலும், ஓர் ஆண்டில் 30 நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை.

விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறது. உணவு தவிர்த்து, மருத்துவம், கல்வி, உடை உள்ளிட்ட மற்ற செலவுகளுக்கெல்லாம் மக்கள் தவிர்க்கிறார்கள்.

உணவுப் பொருட்களிலும் கூட, எண்ணெய், பருப்பு வகைகள், தக்காளி, வெங்காயம், காய்கறிகள் ஆகியவற்றின் அளவைப் பெருமளவு குறைத்து, மொத்தத்தில் உணவு என்பதே அரிசி சோறு என்று மாற்றுகிறார்கள். அரிசியைக் கூட, அதன் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக குருணை வாங்குவது அதிகரித்திருக்கிறது.

உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், 75 ரூபாய்க்கு அரிசி வாங்குவதை கௌரவம் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்கிறார். எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி, விலையை உயர்த்துகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

அரிசி பதுக்கப்பட்டால், பதுக்கியவர்களைத் தண்டித்து, அரிசியை வெளிச்சந்தைக்கு கொண்டு வர வேண்டிய அதிகாரமும், கடமையும் தனக்கு இருக்கிறது என்பதை அவர் உணரவே இல்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கவே இல்லை என்றும் அழிச்சாட்டியமாகப் பேசுகிறார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கைவிட்டுவிட்டு, இதற்கும் அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது அரசை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடும்.

அரிசி, பருப்பு ஆகியவற்றை பொது விநியோகக் கடைகளின் மூலம் விற்பதாக அரசு அறிவித்தது. அது எல்லா பொது விநியோகக் கடைகளுக்கும் சென்று சேரவில்லை. மேலும் தரம் குறைந்த அரிசியை பாலிஷ் போட்டு விற்கிறார்கள். பருப்பின் தன்மையே இல்லாத ஏதோ ஒரு பொருள், பருப்பு என்ற பெயரில் விற்கப்படுகிறது.

பொது விநியோகக் கடைகளில் விற்பதற்காக கொண்டுவரப்பட்ட வெங்காயம் எங்கு இறக்குவது என்று தெளிவாக சொல்லப்படாததால், லாரிகளிலேயே இருந்து அழுகுவது பொறுக்க முடியாத பொறுப்பற்ற செயலாகும்.

நெல் கொள்முதலில் ஏற்படும் தாமதம், தனியார்களிடம் விவசாயிகளை தள்ளிவிட்டு இருக்கிறது. விவசாயிகளிடம் விலையைக் குறைத்து நெல்லை வாங்கி, மக்களுக்கு மிக அதிக விலை நிர்ணயித்து அரிசியாக விற்கும் போக்கு கூடுதலாகி இருக்கிறது.

பொதுமக்களுக்கான பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதில், பெரு வணிகர்களின் கை ஓங்கி விட்டது. இதில் நுகர்வோரான பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாயிகளும், சிறு வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வீட்டு வாடகையும், மின்சாரக் கட்டணமும் உயர்ந்திருப்பது, மக்களின் தவிர்க்க முடியாத செலவை உயர்த்துகிறது. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்புக்குள், மின் கட்டண உயர்வை நுழைத்திருப்பது அநியாயமான செயலாகும்.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படுவது, உணவுப் பொருட்களின் இறக்குமதி என ஒன்றிய அரசு விலை உயர்வுக்குக் காரணமாகிறது.

விலைவாசி உயர்வு, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து உழைக்கும் மக்களையும் பாதிக்கும் பிரச்சினை.

அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், விவசாய அமைப்புகளும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி களத்துக்கு வரவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button