
இந்திய ஒன்றியத்தில் வாழும் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகளில் இணை என்பதையும் சமயம், இனம், சாதி, பாலினம், வழிமுறை, பிறப்பிடம், வாழிடம் ஆகியவற்றால் பாகுபாடு காட்டக்கூடாது என்பதையும் அரசமைப்புச் சட்டத்தின் 16 (1) மற்றும் (2) பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அதேபோன்று, அரசமைப்புச் சட்டம் 16 (4), அரசுப் பணிகளில் போதுமான அளவு வாய்ப்புகளைப் பெறவில்லை என்று அரசு கருதும் குடிமக்களில் எந்த ஒரு பின்தங்கிய வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு செய்வதற்கு வழிசெய்துள்ளது.
ஆயினும், ஒன்றிய மாநில அரசுகளின் அரசாணைகள், உச்ச, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் போன்றன இந்த உரிமைகளை நிலைநாட்டுவதில் தெளிவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் குழப்பங்கள் இன்று வரை தொடர்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள சாதிப் பிரிவினர் எவரும் இந்து சமயத்துக்குள் அடங்கியிருக்கவில்லை என்றாலும், இந்துவாகப் பிறந்த பரமசிவரா என்பவர் இசுலாம் சமயத்துக்கு மாறியுள்ளார். அவருக்குக் கயத்தாறு சுன்னத் சமாத், சமீர் அகமது என்று பெயரிடப்பட்டதாகச் சான்றளித்துள்ளது.
இதனையடுத்து அவர் வகிதா என்பவரை மணமுடித்ததுடன், தான் முசுலிம் லப்பை முறைமைகளைப் பின்பற்றுவதாக உரிமை கொண்டாடுகிறார். லப்பைப் பிரிவு முசுலிம்களின் ஏழு பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்றாக இருப்பதால், தனக்குப் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க வேண்டி கயத்தாறு வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார்.
ஆனால், அவர் மதம்தான் மாறியுள்ளாரேயன்றி, சாதி மாறவில்லை எனக் குறிப்பிட்டு அது ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
ஒப்புதல் தந்த அரசாணை
இதற்கிடையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தினர், முசுலிம் சமயத்தில் உள்ள ஏழு பிரிவுகளில் ஒன்றுக்கு மாறியிருந்தால், அவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் தரலாம் என்று தமிழ்நாடு அரசு 09-04-2024 நாளிட்ட அரசாணை எண் (எம்.எசு) 314இல் ஒப்புதல் தந்தது.
இந்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சமயம் மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் தரவியலாது என மறுத்ததுடன், அது குறித்த அரசாணையையும் செல்லாது என அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, அதுவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.
மாறாத பிறப்புச் சாதி
பிறப்பின் அடிப்படையிலான சாதி முறை நடைமுறையில் இருக்கின்ற நாட்டில் சாதியை மாற்றிக்கொள்ள வழியில்லை என்பது உண்மைதான். நடைமுறையில் பார்த்தால், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற முடிவுகள் முறையானதாகவே தெரியும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் முசுலிம் அல்லது கிறித்துவச் சமயத்துக்கு மாறியிருந்தாலும், அவரது பிறப்புச் சாதி மாறிவிடுவதில்லை. முசுலிம், கிறித்துவ சமயங்களில் சில சாதியினர் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், இந்துச் சமயத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டாலும், ஒருவர் குறிப்பிட்ட சாதியில் பிறந்ததாகத்தான் கருதப்படுவார். அந்தக் குறிப்பிட்ட சாதியின் பெயர் முசுலிம் அல்லது கிறித்துவத்துக்கான பிற்பட்டோர் பட்டியலில் இடம்பெறவில்லையென்றால் அவருக்குப் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் தருவதற்குச் சட்டத்தில் இடமில்லை என்று சொல்லப்படுகிறது.
பிறந்த சாதி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது என்பதற்காக மட்டுமே முசுலிம் அல்லது கிறித்துவச் சமயத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஏதாவதொரு சாதியை அவர் தழுவிக்கொள்ளவியலாது. இவையே உச்ச, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கான அடிப்படையாகும்.
இந்துவாகக் கருதப்பட்டபோது பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்திருந்தாலும், இந்த வழக்கினைத் தொடுத்த சமீர் அகமது இசுலாமியத்தைத் தழுவியவுடன், அதிலுள்ள லப்பை என்ற பிரிவை ஏற்றுக்கொண்டதாகக் கூறுவது இயலாதுதான். ஏனெனில், இசுலாத்தின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏழு பிரிவுகளுமே பிறப்பை அடிப்படையாகக் கொண்டவைதாம். அதனால், அந்த ஏழு பிரிவுகளில் பிறக்காத ஒருவர், அந்தப் பிரிவுகளில் ஒருவராகத் தன்னை மாற்றிக்கொள்ள இயலாது.
இந்த விவரங்கள் அனைத்தும் சமயம் மாறியவர்கள் தொடர்பான இட ஒதுக்கீட்டுச் சிக்கலில் அவ்வப்போது ஆணைகளை வெளியிடும் ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அதைப் போன்று இவை தொடர்பான வழக்குகளில் தீர்வுகளைக் கூறவேண்டிய உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கும் புரியாமல் இருக்கவியலாது.
இருப்பினும், சட்டப்படியே செயல்படுவதாகக் காட்டிக்கொள்ள விரும்பும் ஒன்றிய, மாநில அரசுகளும் உச்ச, உயர் நீதிமன்றங்களும் ஏதோவொரு வகையில் நிலைத்துள்ள சமூக முறைமைகளைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டோராகவே தெரிகிறது.
அரசமைப்புச் சட்டம் சமயம், சாதி பற்றிப் பேசவில்லை
அரசமைப்புச் சட்டம் பிரிவு 16 (4) சமயம் அல்லது சாதி பற்றிப் பேசவில்லை.
பிறந்த சாதி மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படை என்பதை உச்ச நீதிமன்றம் அவ்வப்போது மறுத்து வந்துள்ளது. சமூக, பொருளிய நிலைகளில் தவித்திருப்போரும், தொழில், வாழ்வியல் முறைமைகளில் தாழ்ந்திருப்போரும் மட்டுமே வாய்ப்புகளைப் பெறாதவராகக் கருதப்பட்டு இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியாகின்றனர். இதனையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடாமலில்லை.
இந்த நிலையில், இட ஒதுக்கீடு என்பது இந்து சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் என்ற ஒரு வரையறையையும் சில வழக்குகளில் உச்சநீதிமன்றமே வகுத்திருக்கிறது.
ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்துச் சமயத்திலிருந்து ஒருவர் இசுலாம், கிறித்துவம் அல்லது வேறு சமயத்துக்கு மாறினால் அவர் இந்துச் சமயத்திலிருக்கும் இழிவுகளைக் கொண்டுசெல்வதில்லை என்னும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
மாறாக, இந்துச் சமயத்திலுள்ள பாகுபாடுகள், வேறு சமயத்துக்குச் செல்லும்போது மறைந்துவிடுகின்றன என்றுகூட உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மாறியோர் நிலை என்ன?
இசுலாம் அல்லது கிறித்துவச் சமயத்துக்கு மாறும்போது, புதிய சமயத்தின் பாகுபாடுகள் அல்லது பிற்படுத்தப்பட்டோர் என்ற வகுப்பிலுள்ள ஒப்புக்கொள்ளப்பட்ட பிரிவுகளுக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியாது என்ற நிலை வரும்போது ஒருவருடைய இருப்பு எங்கேயுள்ளது என்பதை நீதிமன்றங்கள் நிலைநாட்டவில்லை.
சமயம் மாறும்போது, சமூக நிலை, பொருள் வருவாய், செய்தொழில், வழிபாடில்லாத பிற வாழ்முறை என எவையும் மாறிவிடும் சூழல் இந்திய ஒன்றியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்திய ஒன்றியத்தில் இந்துச் சாதி, முசுலிம் சாதி, கிறித்துவச் சாதி அல்லது வேறு சமயச் சார்பான சாதி என்று தனித்து எதுவுமில்லை. எங்கிருந்தாலும் சாதி, சாதியாகத்தான் தொடர்கிறது.
இது தீர்வு காண முடியாத சிக்கலென்று கூறவியலாது. அடிப்படையில் ஒன்றிய, மாநில அரசுகளும் உச்ச, உயர் நீதிமன்றங்களும் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு குழப்பம்தான் இதுவாகும். அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டினைச் சமயம் அல்லது சாதியோடு இணைக்கவில்லை. ஆயினும் இட ஒதுக்கீட்டைச் சாதியோடும் சமயத்தோடும் இணைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள்தான் இப்போது முன்னிற்கின்றன.
இட ஒதுக்கீட்டுக்கு சாதி மட்டுமே அடிப்படையல்ல என்று தெளிவுபடுத்திய இந்திரா சகானி வழக்கு, சமயம் மாறியோர் தொடர்பாக எதுவும் கூறவில்லை.
நான்கு வண்ணத்தை வலியுறுத்தும் சனாதன இந்துச் சமயத்தைத் தவிர, பிற சமயங்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் இணை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நடைமுறையில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை மறுக்க முடியாதென்பதை இப்போதைய வழக்கில்கூட உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், சமயத்தை மாற்றிக்கொண்டோர் நிலை குறித்துத் தனக்குள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தீர்வினைத் தரவில்லை.
அரசுப் பணிகளில் போதிய அளவுக்கு வாய்ப்புப் பெறாதவர்களுக்கு மட்டுமேதான் அரசமைப்புச் சட்டம் 16 (4) விலக்குத் தருகிறது. ஆயினும், அரசுப் பணிகளில், குறிப்பாக உயர் பணிகளில் 80%க்கு மேல் வாய்ப்புப் பெற்றுள்ள சமூகத்திற்கு – சாதிக்கு வருவாய் அடிப்படையில் 10% இடம் வழங்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சமயம் மாறியவர்களுக்கும் ஒரு வழியமைத்துக் கொடுத்திருக்கலாம்.
சமயம் மாறியோர் சமூக நிலை, பொருள் வருவாய், செய்தொழில், வாழ்நிலை ஆகியவற்றைக் கருதி அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரலாம் என்ற தீர்வினைத் தந்திருக்க முடியும். அல்லது அவர்கள் பிறப்படிப்படையில் வாய்ப்புகள் தொடரலாம் என்றவோர் முடிவினைக் கூறியிருக்கலாம்.
சாதியில்லாச் சான்றிதழ் பெற்றோர் நிலை
சமயம் மாறியோர் மட்டுமல்லாமல், சமயத்திலும் சாதியிலும் நம்பிக்கையில்லை என்ற கொள்கையுணர்வோடு சாதியில்லாச் சான்றிதழ்களைப் பெற்றோரும் இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கிவைக்கப்படுகின்றனர். அரசமைப்புச் சட்டம் சமயத்தையோ சாதியையோ குறிப்பிடாதபோது சாதியில்லை எனக் கூறுவதால், இட ஒதுக்கீடு கிடைக்காது என்பதே சட்டத்துக்குப் புறம்பாகும். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது ஏவப்படும் வன்முறையாகும்.
இந்திய ஒன்றியத்தைப் பொருத்தவரை, பொதுவாக இந்துக்களாகக் கருதப்படுவோர்தாம் பிற சமயங்களுக்கு மாறுகின்றனர். இவர்களைத் தடுப்பதற்காகவே சனாதனச் சார்புள்ள அரசுகளும் நீதிமன்றங்களும் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துகின்றனவா என்ற அய்யப்பாடும் எழுகிறது.
இசுலாம் சமயத்தில் ஏழு பகுதியினர் பிற்பட்டோராக கருதப்படுகின்றனர். அவர்களோடு சமூக, வருவாய் அளவீடுகளில் கீழ்நிலையில் இருப்போரும் பயன் பெறலாம் என்னும் ஒரு திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும். இத்தகைய திருத்தம் அரசமைப்புச் சட்டத்தின் 16 (4) பிரிவுக்கு எவ்வகையிலும் முரணாகாது. இதுவே பிற சமயங்களுக்கும் பொருந்தும்.
பிறப்பு மட்டுமே இன்றைய பாகுபாடுகளுக்கு அடிப்படையாக அமைவதால், எந்தச் சமயத்தை ஏற்றிருந்தாலும் பிறப்பு, சமூக நிலை அடிப்படையிலேயே வகைப்படுத்தி இட ஒதுக்கீடு கருதப்படவேண்டும். தங்கள் சமயத்தில் சாதிகள் இல்லையென்று கூறி, சமயத் தலைவர்கள் எளிய மக்களின் வாய்ப்புகளைப் பறித்துவிடக்கூடாது. ஒன்றிய, மாநில அரசுகள் சமயப் பெரியோரிடம் கலந்துரையாடினால் தக்க தீர்வுகளை மேற்கொள்ள இயலும்.
எளிதில் காணவேண்டிய தீர்வினைப் பெருஞ்சிக்கலாகக் காட்டிச் சிலரை ஒதுக்குவது ஏற்புடையதல்ல.
குறிப்பாக, பட்டியலின மக்கள் பெரிதும் வாய்ப்பிழக்கின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு ஏற்ற முடிவுகளை விரைவில் காணவேண்டும்.