
கடந்த 2001 அக்டோபர் 7-ல், குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற மோடி, 13 ஆண்டுகளும் பிறகு 12 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்ததை கூட்டி 25 ஆண்டு ஆட்சி நிர்வாகம் நடத்தியதை ஓராண்டிற்கு சாதனை விழாவாக கொண்டாடுவது என்று பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
நல்லவேளையாக வார்டு கவுன்சிலராக அவர் இருக்கவில்லை. இருந்தால் அதையும் கணக்கில் சேர்த்துக் கொண்டாடுவார்கள்.
வளர்ச்சியின் நாயகனாக அவரை நிலைநிறுத்தக் கட்டமைக்கப்பட்ட பொய்களை ஊடகங்களின் உதவியோடு அடுக்குகிறார்கள். சரி, அவர்கள் வழியிலேயே சென்று 56’ இஞ்ச் அகண்ட மார்புடைய நமது பிரதமர் மோடியின் முதல் பகுதியை பார்ப்போம்.
குஜராத்தின் முதல்வராக அவர் இருந்தபோது குஜராத் ஒளிர்ந்ததா, இருள் சூழ்ந்திருந்ததா?
இதுகுறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியரான மைத்ரீஷ் கடக் குஜராத் வளர்ச்சி குறித்து கூறுவதை பார்ப்போம்:
“குஜராத், விளக்குகளுக்குக் கீழே இருள் சூழ்ந்த ஒரு பழமொழிக்கு ஒப்பானது.” என்றார்.
“பல ஆண்டுகளாக, உயர் வளர்ச்சி புள்ளி விவரங்கள், வறுமை, சமத்துவமின்மை மற்றும் மனித மேம்பாட்டுக் குறிகாட்டிகளில் மோசமான செயல்திறன் ஆகிய இருண்ட பக்கங்களை மூடி மறைத்துள்ளன” என்று மைத்ரீஷ் கடக் குறிப்பிடுகிறார்.
அது எவ்வளவு உண்மை என்பதற்கான சில தரவுகளைப் பார்ப்போம்.
2001 அக்டோபரில் நரேந்திர மோடி மாநில முதலமைச்சராகப் பதவியேற்ற போது, குஜராத்தின் கடன் சுமார் 53,000 கோடி ரூபாயாக (8.23 பில்லியன் டாலர்) இருந்தது. அவர் முதலமைச்சராக 13 வருடம் ஆட்சி நிர்வாகம் நடத்தி விடைபெறும் போது குஜராத்தின் கடன் 1,65,000 கோடி ரூபாயாக (25.62 மில்லியன் டாலர்) உயர்ந்து இருந்தது.
அவருடைய ஆட்சி நிர்வாகத்தில் குஜராத்தில், 49% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாகவும், 80% பொறியியல் பட்டதாரிகள் உட்பட 60 லட்சம் குஜராத்தி இளைஞர்களுக்குப் பொருத்தமான வேலைகள் கிடைக்காமலும் இருந்தனர்.
அவர் காலத்திய குஜராத் வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட சுமார் 6.8% உயர்ந்து இருந்தது. இது மூடிமறைக்க முடியாத உண்மையாக இவர்களின் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சமிடுகிறது.
சிசு மரண விகிதம் மற்றும் மனித ஆயுட்காலம் போன்ற பிற சமூகக் குறியீடுகளைப் பார்க்கும்போது, குஜராத் முறையே 17வது மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளது. பாலின விகிதத்தில் குஜராத் 21வது இடத்திலும், கல்வியறிவில் 7வது இடத்திலும் உள்ளது.
ஒட்டுமொத்தமாக, மனித மேம்பாட்டுக் குறியீட்டின் அடிப்படையில் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால், கேரளம், தமிழ்நாடு, கர்நாடக, ஹரியானா, மகாராஷ்டிராவை விடவும் பின்தங்கி குஜராத் 10வது இடத்தில் உள்ளது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலில் குஜராத் 13-வது இடத்தில் உள்ளது.
மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த முழுக் காலகட்டத்தையும் ஆராய்ந்தால், இந்த எண்கள் ஏறக்குறைய அப்படியேதான் இருந்தன.
பெங்களூரைச் சேர்ந்த ‘பொது விவகார மையம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வும், இந்தியா டுடே வெளியிட்ட ‘ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ்’ விருதுகள் குறித்த ஒரு செய்தியும் இதையே உறுதி செய்கிறது
அதுமட்டுமா, மனித குலமே வெட்கித் தலைகுனியும் ஈனச் செயலும் குஜராத்தில் இவர் முதல்வராக இருந்தபோதுதான் நடந்தது. கோத்ரா ரயில் எரிப்பு நாடகத்தை அரங்கேற்றி, அதையே காரணமாக வைத்து சிறுபான்மை இஸ்லாமிய மக்களை ஏறத்தாழ 2,500 பேரை கொன்று குவித்தது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல். இதில் பெண்களை, அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கூட்டுக் கற்பழிப்பு செய்து கொலை செய்தனர். சிறுமிகள், குழந்தைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை, குடும்பத்தினர் முன்னிலையில் இந்த கொடுஞ்செயலை செய்வதன் மூலம் எப்போதும் பயத்திலேயே சிறுபான்மையினர் அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது,
காக்கிக் கால்சட்டை மற்றும் காவி நிறத் தலைப்பட்டி அடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (RSS) சீருடையை அணிந்துகொண்டு, அந்தக் கும்பல்கள் மிகவும் ஒருங்கிணைந்த முறையில் தாக்குதல்களை நடத்தினர்.
அவர்கள் கையில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பட்டியலுடன் வரைபடமும் கையிலிருந்தது.
அவர்கள் கும்பல், கும்பலாக கையில் வாள்கள், இரும்புக் குழாய்கள் மற்றும் திரவப் பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரிகளில் சுற்றி முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து வெறித்தனமாகச் செயல்பட்டனர்.
அந்தக் கும்பல், இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் மிகவும் மதிக்கப்பட்ட முஸ்லிம் உறுப்பினரான எஹ்சான் ஜாஃப்ரியின் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் வீடு பாதுகாப்பாக இருக்கும் என்று தஞ்சம் அடைந்த 68 முஸ்லீம்களையும் எஹ்சான் ஜாஃப்ரியையும் எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செய்து கொலை செய்தனர்.
நரோடா பாட்டியாவைச் சேர்ந்த ஹினா கௌசரை பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணி. எனவே, அவரின் வயிற்றை வாளால் கிழித்து கருவை வெளியில் எடுத்து கண்டம் துண்டாக வெட்டி அந்த பெண்ணையும் கருவையும் நெருப்பில் போட்டு எரித்துக் கொண்டாடினார்கள்.
பில்கிஸ் யாகூப் ரசூல் என்கிற மற்றொரு பெண் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர் அவரது கண் முன்னாலேயே கொலை செய்யப்பட்டனர்.
இதுவெல்லாம் பொதுவெளியில்தான் நடந்தது. காவல்துறை கண்முன்னால் நடந்தது. காவல்துறையின் கை, கால்களையும், மனசையும் கட்டிப் போட்டது சாட்சாத் சேவைநாயகன் முதல்வர் மோடிதான். இப்படிப்பட்ட ரத்தக்கறையுடன்தான் இவர் பிரதமர் பொறுப்புக்கு வந்தார்.
2014-ல் இவர் பிரதமரான போது இந்தியாவின் கடன் ரூ. 55 லட்சம் கோடியாக இருந்தது.
2023 வரை இவருடைய 9 ஆண்டு ஆட்சியில் ரூ. 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மூடிஸ் அறிக்கை கூறுகிறது, 2025-ல் ரூ. 181 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
விடுதலை கிடைத்த காலகட்டத்தில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிய காலத்திலிருந்து 67 ஆண்டுகளில் 14 பிரதமர்கள் இருந்த காலத்தில் வாங்கிய கடன் ரூ. 55 லட்சம் கோடி மட்டுமே. வாய்சவடால் வளர்ச்சியின் நாயகன் ஆட்சியில் மட்டும் ஏறத்தாழ ரூ. 126 லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளது.
இந்த கடன் தொகை அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் திட்டங்களுக்காக வாங்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை,
இந்தியாவில் உள்ள 6 இலட்சம் கிராமங்களுக்கு அடிப்படை வசதி கூட கிடைக்கவில்லை, புதைக்க சுடுகாடு இல்லாமல், போக்குவரத்து வசதி கூட இல்லாமல் பிணத்தை தோளில் சுமந்து நெடுந்தூரம் நடந்து சென்று புதைத்து வருவதை செய்திகளில் பார்க்கிறோம்.
ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை உயர்ந்திருக்கிறதா? அதுவும் இல்லை. பிறகு யார்தான் பயனடைந்துள்ளனர்?
♦ 2023 கணக்குப்படி ஒன்பது ஆண்டுகளில் தனியார் முதலாளிகளுக்கு மோடி அரசு கடன் கொடுத்து வராக் கடனாக தள்ளுபடி செய்த தொகை மட்டும் ரூ. 25 லட்சம் கோடி அதாவது ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி.
♦ இந்தியாவில் மக்கள் தொகையில் 10% பணக்கார்களிடம் மட்டும் தோராயமாக 65 சதவீதம் இந்திய நாட்டினுடைய வளம் உள்ளது. அதுவும் குறிப்பாக ஒரு சதவீதம் பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவினுடைய மொத்த வளத்தில் 40 சதம் உள்ளது.
♦ “நிதி பொறுப்புக்கான மையம் மற்றும் வெல்த் டிராக்கர் இந்தியா 2026” கணக்குப்படி முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல், கௌதம் அத்தானி சாவித்திரி ஜென்டால், சிவ நாடார் இவர்களுடைய சொத்து மதிப்பு 2019-ல் இருந்து 2025 வரை 400 சதவீதம் அதிகரித்துள்ளது.
தெரிகிறதா, வளர்ச்சி யார் அடைந்துள்ளார்கள் என்று?
♦ எல்லா நாடுகளிலும் சாதாரண மக்கள் செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரி குறைவாகவும், கார்ப்பரேட் வரி கூடுதலாகவும் இருக்கும்.
நாடாளுமன்றத்தினுடைய நிலை குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் முப்பது சதவிகிதமாக இருந்த இருக்கவேண்டிய கார்ப்பரேட் வரியை குறைத்ததால் 2019ஆம் ஆண்டு மட்டுமே ரூ. 1.84 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று சுட்டிக் காட்டியுள்ளது
2014க்கு முன் தமது வாயிலேயே வடை சுடும் பிரதமராக மோடி பொறுப்புக்கு வரும் முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது சராசரியாக ரூ. 43,000 கடன் மட்டுமே இருந்தது.
தற்போது 2023 வரை மட்டும் ரூ. 1,10,000 ஆக அது உயர்ந்துள்ளது. தற்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
வளர்ச்சி முகமூடியை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்,
இப்போது சொல்லுங்கள் மோடி ஆட்சி சாதனையா, வேதனையா?