
ஊர் முழுவதும் கொள்ளை நடைபெற்றது – தங்களது உடமைகளை இழந்தோர் கதறினர். நாள்தோறும் நடைபெற்ற கொள்ளை – யாரால் நடைபெறுகின்றது என்று தெரியாத நிலையில், பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப அகப்பட்டு விட்டான்.
ஊர் மக்களிடம், உடைமைகளை இழந்த மக்களிடம் கையும் களவுமாக பிடிபட்டு விட்டான்.
பிடிபட்டத் திருடனை, கொள்ளையனைப் பிடித்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்று உரிய முறையில் விசாரணை செய்து, அவன் களவாடிய பொருட்களை ஒன்று விடாமல் மீட்டு, பறிகொடுத்தவர்களிடத்தில் ஒப்படைப்பதுடன், களவாணிப் பயலை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியங்கள் மூலமாக நிரூபணம் செய்து, நீதிமன்றத்தின் வாயிலாக தண்டனை பெற்றுத் தருவார்கள் என்று அரசையும் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காவல் துறையினரையும் மக்கள் நம்பினார்கள்.
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டிய அரசும், காவல்துறையும் கொள்ளையனைப் பாதுகாப்பதுடன், அவனுக்கு நாட்டின் குடியரசுத் தலைவருக்கு, பிரதமருக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயரிய பாதுகாப்பளிப்பது போன்று, பாதுகாப்பு அளித்து வருவது விந்தையாக இல்லையா? வேதனையாக இல்லையா?
திருடனுக்குப் பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, திருடனை விடாதே… பிடி! நடவடிக்கை எடு!! என அமைதியான முறையில் அரசைக் கோரினால், கோரிக்கை வைக்கும் மக்களின் மீதே காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலை அரசு மேற்கொள்வது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
நாடு விடுதலை பெறுவதற்கு முன்பும் நம் நாட்டில் மாகாண சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்குமான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அத்தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களுக்கும், பட்டா, நிலம் உள்ள பணக்காரர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டன.
நாடு விடுதலைப் பெற்ற பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் (1952) பாகுபாடுகள் இன்றி வயது வந்த (அன்று வயது 21) அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
வாக்குரிமை இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வயது வந்த அனைவருக்கும் வழங்கப்பட்ட மகத்தான உரிமையாகும். 140 கோடி மக்களை கொண்ட இந்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது வன்முறையால் அல்ல; அல்லது பாகிஸ்தான் போன்று ராணுவப் புரட்சியால் அல்ல; அல்லது மன்னர் போய் அடுத்த மன்னர் என்றல்ல;
மாறாக, ஒவ்வொரு வாக்காளரும் தான் விரும்பிய கட்சிக்கு, வேட்பாளருக்கு வாக்களித்து, அமைதியான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் மிக உயரிய வாய்ப்பு பெற்றுள்ளார்கள் இந்திய குடிமக்களான வாக்காளப் பெருமக்கள்.
அவர்கள் உண்மையான எஜமானர்கள். அவர்கள் தங்களுக்கு சேவை செய்ய, மக்களின் வாழ்வை மேம்படுத்த, நாட்டின் வளர்ச்சிக்கு மேன்மேலும் மிகச் சிறந்த முறையில் சேவகம் செய்ய தங்களுக்கான ஊழியர்களாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்ற மிகப்பெரும் பொறுப்பை, கடமையை ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு தான் 1952 முதல் தற்போது வரை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு ஏற்பட்ட மாற்றத்தின் விளைவே 2014 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அமைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தாலும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக கோலோச்சினாலும், உண்மையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இரட்டையர்களே!
அவ்விரட்டையர்கள் புதிதாக தோன்றியவர்கள் அல்லர்! இருவரும் குஜராத்தில் தொடங்கி இன்று வரை தொடர்கின்றார்கள். குஜராத் மாநில முதலமைச்சர் மோடி- அம்மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா!
இவ்விருவரும் ஆட்சி நடத்திய குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் – அதன் தொடர்பாக காவல்துறையின் முழு ஒத்துழைப்போடும், பாதுகாப்போடும் நடைபெற்ற கொடூரமான வன்முறை- அதன் விளைவாக 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், குழந்தைகள், முதியவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதை நாடு மறக்கவில்லை.
அவ்விருவர் தான் இன்று நாட்டின் பிரதமர் – உள்துறை அமைச்சர் அதிகாரத்தை பெற்றுள்ளார்கள்- ஜனநாயகப் போர்வையில் பெற்றார்கள்- அத்தகைய ஜனநாயகத்தை தங்களின் வசதிக்கேற்ப, தங்களை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்ள, நாடாளுமன்ற ஜனநாயக முறையைத் தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசியல் அமைப்புச் சட்டம் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பகிரங்கமாக பறிக்கின்றார்கள்- இத்தகைய படுபாதகச் செயலை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட நபர்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்.
இம்மனிதர் ஓர் நேர்மையற்ற நபர் என்பது தற்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றது.
கேரள மாநிலத்தில் பொதுப்பணித் துறை செயலாளராக பணியாற்றியபோது நடைபெற்ற ஊழல், அதன் விளைவாக மலேசிய நாட்டின் பொறியாளர் தற்கொலை-
கேரள மாநில தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவரை பாஜகவில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கோரியது.–
இவை போன்றும் இன்னும் ஏராளம் வரலாம்!
இவை ஒரு புறம் இருக்க, யார் அனுமதியும் இன்றி- தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யாமல் -அரசின் அனுமதி பெறாமல்- படிவம் 6-ஐ தன் விருப்பத்திற்குத் திருத்தியது உட்பட, 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் உரிமையை பறித்த கொடுஞ்செயல் புரிந்துள்ளார்.
இவைதான் தற்போது நாட்டில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
- நாடே மிக கொந்தளிப்பான நிலையில் உள்ளது
- கொந்தளிப்பு என்பது எல்லை மீறி நடக்கவில்லை-
- ரயில்கள் எரிக்கப்படவில்லை-
- தண்டவாளங்கள் பெயர்க்கப்படவில்லை-
- ஒன்றிய அரசு அலுவலகங்கள் சூறையாடப்படவில்லை.
மாறாக, அமைதி வழியில்,
- ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம்
- அமைதி வழியில் போராட்டம்
- அமைதியான முறையில் பேரணி
- அமைதியான முறையில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம்.
- நாட்டின் முதல் குடிமகனாம் முப்படைகளின் தலைவர் என்பது மட்டுமல்ல-அரசியல்
அமைப்பு சட்டத்தின்படி நாடு நடைபெற்று வருகின்றதா? என கண்காணிக்கும் ஆக உயர்ந்தபட்ச பொறுப்பை வகிக்கும் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று – அவர் அளித்த தேதியில், நேரத்தில்- மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட்டார்கள்.
இவை அனைத்தும் மிகுந்த அமைதியுடன் ஜனநாயக முறையில் பகிரங்கமாக அறிவித்தே நடைபெறுகின்றன.
கோரிக்கை என்ன?
தன்னிச்சையாக, எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரத்தனமாக 13 கோடி வாக்காளர்களை நீக்கியதற்குக் காரணமான ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய் என்பதே!
தவறு செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, ஒன்றிய மோடி-அமித்ஷா கூட்டாளிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகக் கொடூரமானப் போரை நாட்டுமக்களின்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
- ஜனநாயகத்தை முற்றிலுமாக சீரழிக்கக்கூடிய முறையில், தலைநகர் டெல்லி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- வெளியூர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
- இணையதளம் முடக்கப்பட்டது.
- எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
- துணை ராணுவ படை பட்டாளம் பட்டாளமாக டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளது.
- இவர்களோடு போலீசாரும், போலீஸ் உடையில் ஆர்.எஸ்.எஸ்- குண்டர்கள் எல்லோருமாக சேரத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிகளோடும் தடி கம்புகளோடும் டெல்லியை வலம் வருகின்றனர்.
- அந்நிய தேசத்தவர் டெல்லிக்குள் படையெடுத்து விட்டது போல, அதனைப் பாதுகாக்கப் படைகள் குவிக்கப்பட்டு இருப்பது போல மோடி-அமித்ஷா பித்தலாட்டக் கும்பல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
- அரசியல் கட்சித் தலைவர்கள் – மாணவர் இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- போராட்டத்திற்கு வருபவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமல்ல, தடி கொண்டு கடுமையாகத் தாக்கி காயப்படுத்துகிறார்கள்.
- அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது மேல் ஆடை கிழிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.
- நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என பாகுபாடு இன்றி கைது செய்வதுடன்-தாக்குதலும் தொடுக்கின்றார்கள்.
ஒரே ஒரு நபரை ஜனநாயக விரோதி- வாக்குரிமை பறித்த ஒரு திருடனைக் காப்பாற்ற – இந்திய ராணுவம் மற்றும் காவல் துறை அனைத்தும் பயன்படுத்தும் ஆகப்பெரும் அராஜகம்!
அந்நிய சக்திகளின் தூண்டுதல்பேரில் இப்போராட்டம் நடப்பதாகவும், அரசு வேடிக்கை பார்க்காது கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் பாஜகவின் தேசிய தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
கொடிய அடக்குமுறைகள் ஆட்சியாளர்கள் மேற்கொள்வது புதிதல்ல.
இன்று நாடு முழுவதும் நடைபெற்று வரும் பெரும் போராட்டம் என்பது
- ஜனநாயகத்திற்கான போராட்டம்.
- ஜனநாயகம் காப்பதற்கான போராட்டம்
- ஜனநாயகத்தின் மீது அக்கறை உள்ளோர், கவலை உள்ளோர் அனைவரும் பங்கேற்கும் போராட்டம்.
இப்போராட்டம் மட்டுமல்ல; இம்மகத்தான போர்க்களத்தில் நாள்தோறும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தொடரும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி நிலையங்களை புறக்கணித்து, போர்க்களம் காண்பார்கள்.
இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பார்கள்.
இன்று தடிகொண்டு தாக்கி, கைது செய்து வரும் போலீசும், துணை ராணுவமும் தாங்கள் வைத்துள்ள துப்பாக்கிகளையும், தடிகளையும் தூர வீசி எறிந்து விட்டு ஜனநாயகம் காப்போம் என்ற அட்டையை உயர்த்தி பிடித்து முழக்கமிடும் காலம் வரும்!
மோடி-அமித்ஷா கூட்டுக் களவாணிகளின் அடக்குமுறை தூள் தூளாகும்!
அமைதியை விரும்பாத அராஜக ஆட்சி புரியும் மோடி-அமித்ஷா கூட்டுக் களவாணிகளின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுங்கள்! ஜனநாயகம் காக்கப் போராடுங்கள்!!