
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது கதாநாயக பிம்பத்தை நிலைநிறுத்துவதுடன், திமுகவை தீயசக்தி என்ற எடுத்துரைப்பை (நேரேட்டிவ்) கட்டமைக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8, 2026 அன்று நிறைவடைந்தது. 28 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. மொத்தம் 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், முதல்-அமைச்சரின் 17 முக்கிய அறிவிப்புகள் உள்பட 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கூட்டத்தொடர் எப்படி நடந்தது என்பதற்கு செப்டம்பர் 7, 2026 அன்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆற்றிய உரையே எடுத்துக்காட்டாக இருக்கிறது.
செப்டம்பர் 7, 2026 அன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பதிலளித்து உரையாற்றினார். அவர் 54 நிமிடங்கள் பேசினார். அவருடைய அரசியல் பேச்சுகளிலேயே அதிக நேரம் பேசியது இதுவாகும். முதல் 25 நிமிடங்கள் இயல்பாகப் பேசிய முதலமைச்சர் விஜய், அதன் பிறகு உச்சக் குரலில், தொண்டை கிழிய கத்திப் பேசினார். தொனியில் ஏற்ற இறக்கமின்றி உரத்த குரலில் மிக நீண்ட பேச்சு.
முதலமைச்சர் விஜய்யின் உரை, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசுவது போன்று அனல் பறந்தது. ஆவேசம் கொப்பளித்தது. வன்மம் கலந்த பிழம்பாக வெடித்தது. வழக்கம் போல் அவர் நின்றுகொண்டு பேசும் ஊர்தி மட்டும் அங்கு இல்லை.

இந்த உரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு (செப்டம்பர் 3) “எதிர்க்கட்சிகள் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். ஓடிப்போய் விடாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை சாடிப் பேசிவிட்டு, அவர் சென்றுவிட்டார். தயாரித்துக் கொடுத்த உரையை மூன்று நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்த அவருடைய பேச்சில், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. அவரது பேச்சு முழுவதும் திமுக எதிர்ப்பு சரவெடியாக இருந்தன. பஞ்ச் வசனங்கள் பறந்தன. அதற்கேற்ப முதலமைச்சர் விஜய்யின் உடல் மொழியும், கை அசைவுகளும், முக பாவனைகளும் பேச்சுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தும் ரீல்ஸ்களுக்கான கன்டென்ட்டுகளாக அமைந்தன.
தேர்தல் பரப்புரையின் போது தன்னை தூய சக்தி என்றும் திமுகவை தீய சக்தி என்றும் பேசி வந்தார். அதே பாணியில், 70 ஆண்டு கட்சி, மிசாவையே பார்த்தவர்கள் என்று திமுக பேசுவதை குறிவைத்துப் பேசினார்.
“சர்க்காரியா கமிஷன் என்று ஒன்று இருக்கிறது” என்று தொடங்கிய முதலமைச்சர் விஜய், “பவளவிழா கட்சியோட பொன்விழா கண்ட சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை” என்று உச்சகுரலில் அதிலிருக்கும் குற்றச்சாட்டுகளை எடுத்துக் காட்டி வாசித்தார். 75 ஆண்டு வரலாறு காணும் திமுகவை தீயசக்தியாக கட்டமைக்க, கலைஞர் கருணாநிதியில் இருந்து தொடங்குகிறார்.
இடையில், “எனக்கு கலைஞர் மேல் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. இதெல்லாம் எங்களுடைய குற்றச்சாட்டு இல்லை. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருக்கிற குற்றச்சாட்டுகள்” என்று விஜய் விளக்கம் அளிக்கிறார்.
“திமுக செய்த ஊழலுக்கு ஆதாரம் கேட்டால் பாராளுமன்றம் வரை செல்லத் தேவையில்லை. நமது சட்டசபையில் உள்ள நூலகத்தில் இருக்கிறது. திமுகவுக்கு எப்போதும் பழக்கம் ஒன்று உண்டு. ஆதாரத்தை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு, மற்றவர்களிடம் போய் தேடிக்கொண்டு இருப்பார்கள். அப்படி நாங்கள் பார்ட்டி பண்ட் (கட்சி நிதி) என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். இப்பவும் சொல்கிறேன் ஆதாரம் பக்கத்தில் தான் இருக்கு” என்று தொண்டை கிழியும் சத்தத்தில் பேசினார்.
சர்க்காரியா கமிஷன் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவை. சர்க்காரிய கமிஷன் அமைப்பதற்கு காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஆன பிறகு, சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்தோ, திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தோ கண்டுகொள்ளவே இல்லை.
திமுக மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் அமைத்தது மட்டுமல்ல, ஊழல் புகார்களை காரணம் காட்டி திமுக ஆட்சியையும் காங்கிரஸ் கலைத்தது. அந்தக் காங்கிரஸ் கட்சியே அடுத்து திமுகவுடன் கூட்டணி அமைத்தது.
திமுக கூட்டணியை தீயசக்தியுடன் சேர்ந்திருக்கும் கல்லாப்பெட்டி கூட்டணி என்று தேர்தல் பரப்புரையில் ஜோசப் விஜய் கடுமையாகச் சாடினார். அவர் தூற்றிய அந்தக் கல்லாப்பெட்டி கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்து அருகில் வைத்துக்கொண்டிருக்கிறது. அதே கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்த பின்புதான், அதுவரை அழைக்க முடியாதென அடம்பிடித்த ஆளுநர், விஜய்யை ஆட்சியமைக்க அழைத்தார். அதனால்தான் இப்போது ஆட்சி நடத்துகிறார்.
முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஊழல் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான உத்தியாக இருக்கிறது. இந்தக் கட்சிகளின் ஒலிம்பிக் விளையாட்டாக இருக்கிறது. அதனால்தான் ஊழல், சர்க்காரியா கமிஷன் என்று வாய்ப்பாடு போல் சொல்லிக் கொண்டே இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அப்படித்தான் விஜய் பேசிக்கொண்டிருக்கிறார்.
“பாதாளத்துக்கும் கீழே போய், ஆழமாகத் தோண்டித் துருவி, எல்லாவற்றையும் மேலே கொண்டுவந்து, மக்களை ஏமாற்றுகிற அந்த போலி பிம்பம் உடைக்கப்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லவில்லை. நாகரிகமாக, அன்பாகச் சொல்லிக் கொள்கிறோம்” என்கிறார் முதலமைச்சர் விஜய். அதாவது, திமுக தீயசக்தி, தவெக தூயசக்தி – இந்தக் கருத்து மக்கள் மனதில் பதிய வேண்டும். தன்னுடைய பிம்பம் தூய பிம்பமாக என்றும் காட்சியளிக்க வேண்டும். இதற்காகத்தான் ஊழல் பற்றிய பேச்சு. அதாவது திரைப்படம் வெளிவரும் முன்பு முதல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக்), டிரைலர், ஆடியோ வெளியீடு என ஒவ்வொன்றாக வெளிவரும். அதுபோல ஊழல் பற்றிப் பேசுவது ஃபர்ஸ்ட் லுக் வெளியீடாகும்.
எனவே, ஊழல் செய்வதற்காகவே தி.மு.க. பிறந்ததைப் போல விஜய் பேசுவது திசை திருப்பும் உத்தியாகும். அதற்காக திமுகவில் யாரும் ஊழல் செய்யவில்லை என்பதல்ல. யார் மீதான ஊழல் புகாராக இருந்தாலும், அதனை ஆதாரங்களுடன் நிரூபித்து சட்டப்படி தண்டிப்பதுதான் ஒரு ஜனநாயக, குடிமைச் சமூக அரசின் கடமை ஆகும்.
இதைவிடுத்து, ஊழல் நிரூபிக்கப்படவில்லை என முடிந்துபோன சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் பகுதிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் பேசுவது ஊழல் எதிர்ப்பாகிவிடாது. இந்த ஊழலில் வரி ஏய்ப்பும் அடங்கும். முதலமைச்சர் விஜய் மீதும் வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். வரிசையில் விஜய். இறைவனும் இயற்கையும் மக்களும் நம் பக்கம். இதனால் யார் என்ன தில்லுமுல்லு வேலை செய்தாலும் ஒன்றும் எடுபடாது. அந்த அன்புக்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி” என்று முதலமைச்சர் விஜய் தனக்கான வரலாற்று தொடர்ச்சியுடன் விளக்கம் அளிக்கிறார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.டி.ஆரை எப்படி வரலாற்று முன்னோடியாகக் காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை அண்டை மாநிலமாக இருந்தாலும் திரைப்பட கதாநாயக பிம்பத்தால் ஆட்சிக்கு வந்தவர் என்பதால் முன்னோடியாகக் காட்டுகிறார் போலும்.
அதிமுகவை விட்டுவிட்டு வரலாற்றுத் தொடர்ச்சி பற்றி முதலமைச்சர் விஜய் பேசுவது ஏன்?
கலைஞர் கருணாநிதி மீதான விமர்சனங்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கும் பொருந்தும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது அத்தனை ஊழல் புகார்கள் இருக்கின்றன. ஜெயலலிதா ஊழல் வழக்கில் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றவர். சிறையில் இருந்தவர். இவற்றை விட்டுவிட்டு வரலாற்றுத் தொடர்ச்சி பற்றி விஜய் பேசுவது, திரைப்பட கதாநாயக பிம்பத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதைத் தவிர வேறு இல்லை.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தால், திரைப்பட ஹீரோ பிம்பம் சரிவடையாமல் எப்படித் தடுக்க முடியும்?
“ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூற முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் – ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது” என்று முதலமைச்சர் விஜய் பேசுகிறார். இது திமுக ஆட்சியின் போது அவர் பேசியதற்கு நேர்மாறானது.
ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் 8 காவல்நிலைய சாவுகள், 6 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இதேபோன்று பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகரித்திருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண தொடர் முயற்சிகள் தேவை. இவற்றுக்கான பொருளாதார, பண்பாட்டு காரணிகள், பின்னணி பற்றி ஆய்ந்து தீர்வு காண குறிப்பிட்ட காலமும் உறுதியும் தேவைப்படுகிறது. இதையெல்லாம் பேசினால் தன்னுடைய கதாநாயக பிம்பம் என்ன ஆவது?
தன்னுடைய ரசிகர்களை – தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களைக் கொண்டாடச் செய்திட வேண்டும். இதற்கேற்பத் தயாரிக்கப்பட்ட பேச்சுதான் முதலமைச்சர் விஜய் பேசியது. அவர் வெறித்தனமாகக் கத்தியது, பஞ்ச் டயலாக் பேசியது, வெறுப்பு, வன்மம், குரூரம், தந்திரம், திசை திருப்பல், அநாகரிகம், சுயநலம் என அனைத்தும் கொண்ட திட்டமிட்ட தயாரிப்புதான் அவரது பேச்சு.
திமுக தலைவரை உருவக்கேலி செய்ததும் வெறுப்பூட்டும் உடல்மொழியும், கவிஞர் கண்ணதாசனின் அவதூறுகளை எடுத்துக்காட்டி, அவரின் அடுக்குத்தொடர் வசனங்களை பேசியதும் தொண்டர்களை ரசிக்க வைப்பதற்கான திரைப்பட உத்தியுடன் தயாரிக்கப்பட்டதாகும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையைப் பேச வேண்டிய முதலமைச்சர் சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசுகிறார். அந்த சர்க்காரியா கமிஷனை வைத்து என்ன செய்ய முடியும்.?
நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் சித்ரவதைகள் அனுபவித்து, உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை உருவக்கேலி செய்கின்றார். கண்ணதாசன் எழுதிய அவதூறுகள் ஆவணமாக காட்டப்படுகிறது. அந்த அவதூறுகளுக்கும் காவல்துறை மானிய கோரிக்கைகளுக்கும் என்ன தொடர்பு?
அரசியல், பண்பாடு, ஆக்கப்பூர்வமான இலக்குகள் என எதுவும் இல்லாத ஒரு முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை இந்தியாவிலேயே இதுவாகத்தான் இருக்கும்.
தி.மு.க எதிர்ப்பு என்ற ஒன்று மட்டும்தான் விஜய் அரசியல். ஒரு எதிரியை முன்னிறுத்திவிட்டு தனது தவறுகளை எல்லாம் மறைத்து, பிரச்சனைகளை மடைமாற்றும் பாஜகவின் உத்தியே இது. தற்போது தவெகவும் இதைச் செய்கிறது.
திமுக தீயசக்தி, ஊழல் சக்தி – கலைஞர் கருணாநிதி தொடங்கி மு.க.ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி வரை திமுக என்றாலே ஊழல் என்ற எடுத்துரைப்பை (நேரேட்டிவ்) உருவாக்குவது, தன்னுடைய பேச்சைக் காட்சி மொழியில், ரீல்ஸ் வடிவில் எடுத்துச் செல்வதற்கேற்பப் பேசுவது என்பதைத் தவிர எதுவுமில்லை.