
மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், வேலைவாய்ப்பை உருவாக்குவதில், வெளியுறவுக் கொள்கையைக் கையாளுவதில் படுதோல்வி அடைந்து விட்டது.
ஆனால் தனது தவறுகளுக்கு மற்றவர்களைக் குறை சொல்வது, மற்றவர்கள் செய்ததை நகலெடுத்து, பின்னர் அதற்கான பெருமையை தனதாக்கிக் கொள்வது என்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.
குறை கூறுவதில் குறி
டெல்லியில் புகழ்பெற்ற ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பேசிய மோடி ‘வருத்தத்தில் மாமா’ (நாராஸ் பூப்பா) என்று பேசியதைக் கேட்டு எவராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
இது வேடிக்கையானது என்பதற்காக மட்டும் அல்ல, மாறாக இது மிகவும் தவறாக குறி வைக்கப்பட்டது என்பதற்காகவே ஆகும். அந்தக் கிண்டல் பேச்சு ராகுல்காந்தியை நோக்கியது என்பது தெளிவானது.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது மீம்ஸ்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய பாடல்கள் அந்த சந்தேகங்கள் அனைத்தையும் முற்றாக நீக்கிவிட்டது.
கோபக்கார மாமா
நரேந்திர மோடி, ராகுல் காந்தியை ‘கோபக்கார மாமா’ என்று அழைத்தது மிகையானது. ராகுலை விட மோடி 20 வயது மூத்தவர் என்பதால், இந்தச் சூழலில் மோடிதான் உண்மையான ‘மாமா’ ஆகிறார்.
மனம் புண்பட்ட அல்லது சலிப்படைந்த அத்தையின் கணவர்’ என்று நேரடிப் பொருள் தரும் ‘நராஸ் பூபா’ என்பது வட இந்தியக் குடும்பங்களில் மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒரு உவமையாகும்.
ஒரு குடும்பத் திருமணத்தில், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மற்றும் தன்னைத்தானே பெரிதாக மதித்துக்கொள்ளும் மாமாவே நராஸ் பூபா ஆவார். அப்படி என்றால் இது மோடிக்கு மிகச் சரியாக பொருந்துகிறது அல்லவா?
தனக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என நினைக்கிறார்.
தனக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட இடம் குறித்து எரிச்சலடைகிறார். உணவு, ஏற்பாடுகள் அல்லது தங்குமிடம் குறித்துப் புகார் கூறுகிறார். தன்னிடம் முறையாகக் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் அவர் உணர்கிறார். சோகமான முகத்துடன் தனியாக அமர்ந்திருக்கிறார். முன்கூட்டியே கிளம்பி விடுவதாக மிரட்டுகிறார், அத்துடன் எல்லோரும் வந்து தன்னைச் சமாதானப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார் என்று ராகுலைக் குத்தலாகப் பேசியது யாருக்குப் பொருந்தி வருகிறது?
தற்போதைய தேசிய அரசியலில், ‘சோகமான முகத்துடன் தன்னைத்தானே பெரிதாக நினைத்துக்கொள்ளும் மாமா’ என்று யாராவது ஒருவர் இருக்கிறார் என்றால், ராகுல் காந்தி அல்ல அது சாட்சாத் பிரதமர் மோடிதான்!
ராகுலின் பேச்சுகள் ஒன்றிய அரசு மற்றும் அதன் கொள்கைகள் மீதான தாக்குதல்களே தவிர, அவை தனிப்பட்ட முறையில் புண்பட்ட அல்லது அவமதிக்கப்பட்ட ஒருவரின் பேச்சுகளாக இல்லை, ஒரு “கோபமான இளைஞனின்” கண்டனங்களாகவே அது இருக்கின்றது.
உண்மையில், மோடிதான் தனிப்பட்ட முறையில் புண்பட்டுள்ளார், அத்துடன் அவர் பல சந்தர்ப்பங்களில், எதிர்க்கட்சிகளையும், குறிப்பாக ராகுல் காந்தியையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதற்கான வாய்ப்புகளை அவர் ஒருபோதும் தவறவிட்டதில்லை.
மற்றவர்களை காப்பி அடிப்பதில் கில்லாடி
மோடி-ராகுல் உறவை இன்னும் சுவாரஸ்யமாக்குவது என்னவென்றால், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவரை இகழ்ந்து திட்டிக்கொண்டே, அவரது செயல்பாட்டு முறையைக் காப்பி அடிப்பதிலும் ஈடுபடுகிறார் என்பதுதான்.
ராகுல் தனது ‘சத்ரோன் கி கூஞ்ச்’ பேரணிகளைத் தொடங்கிய பிறகு, மோடியும் ‘ஜென் சீ’ தலைமுறையினரை அணுகும் தனது முயற்சியை முடுக்கிவிட்டுள்ளார். மும்பை நிஃப்ட் மாணவர்கள் நிறைந்த அரங்கத்தில், பேசியபோது தன்னை “நான் 74 வயதில் புதிதாகப் பிறந்த குழந்தை” என்று கூறியது, கிரிராஜ் சிங் போன்ற அமைச்சர்களுக்குக் கூச்சத்தை ஏற்படுத்திவிட்டது, பிரதமருக்கு சற்றும் நிதானமே இல்லை என்பது உறுதியாகிறது.
ராகுல் காந்தியின் இணக்கமான மற்றும் உரையாடல் பாணிக்கு மாறாக, மோடியின் இளைஞர்களுடனான உரையாடல்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டவை. இவர் மட்டுமே உரையாற்றுவது அரங்கில் இருந்து எந்த கேள்வியும் எழாமல் பார்த்துக் கொள்வது என்பது போன்ற பழைய பாணிதான் இதிலும் தொடர்ந்தது.
மெட்ரோ பயணம்
அவரது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மக்களை சந்திக்கும் மெட்ரோ ரயில் பயணங்களும் அவ்வாறுதான் இருந்தது. மோடி ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்களின் ஒன்றில், “மெட்ரோ தருணங்கள். எஸ்.ஆர்.சி.சி நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும் வழியிலும்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
எஸ்.ஆர்.சி.சி நூற்றாண்டு விழாவிற்கு அவர் மேற்கொண்ட பயணம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். பிரதமருடன் மெட்ரோ பெட்டியில் பயணித்த குழந்தைகளும், இளைஞர்களும், தாங்கள் சந்தித்து வாழ்த்துவதில் உண்மையாகவே உற்சாகம் கொண்ட ஒரு தலைவருடன் இயல்பாக உரையாடும் குழந்தைகளைப்போல் சிறிதும் தோன்றவில்லை. மாறாக, அது மிகவும் செயற்கையாக இருந்தது.
எஸ்.ஆர்.சி.சி. யில் ஆற்றிய தனது உரையில் மோடி “OG” மற்றும் “flex” போன்ற ஜென் சி தலைமுறை வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார், ஆனால், அந்த நிகழ்விற்கானப் பார்வையாளர்கள் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. இதன்மூலம் ஒரு பாசிச நாடக அரசியலை இளைஞர்கள் என்றும் நாடாத அரசியலை, இளைஞர்களைக் கவர நாள்தோறும் அவர்கள் பயன்படுத்தி வருவது கண்கூடாக தெரிந்தது.
எதிரான ராப் பாடல்!
கடந்த செப்டம்பர் 8 அன்று, குஜராத்தின் வதோதராவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைக் கழகத்தின் பெவிலியன் மைதானத்தில் ஒரு பெரிய இளைஞர் ஜென் சி கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
ராப்-கச்சேரி பாணியிலான நிகழ்வாக அரங்கேற்றப்பட்ட இதில், ‘துரந்தர்’ திரைப்படத்தின் ‘வி வில் ராக் யூ’ மற்றும் ‘ஆரி ஆரி’ பாடல்கள் ஒலிக்க, மோடி Y-வடிவத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நுழைந்தார்.
‘வி வில் ராக் யூ’ பாடலின் வரிகள் உண்மையில் எப்படி இருக்கிறது என்றால்,
“நண்பா, நீ ஒரு வயதான ஆள், பாவம்.
உன் கண்களால் மன்றாடுகிறாய், ஒருநாள் உனக்கு நிம்மதியைத் தருவேன்.
உன் முகத்தில் சேறு படிந்துவிட்டது.
பெரும் அவமானம்!
யாராவது உன்னை உன் இடத்திற்குத் திரும்ப கொண்டு வர வேண்டும்.
நாங்கள் உங்களை அசத்துவோம்”.
என்பதாக உள்ளது. அதில் கூட இந்த பாடல் அவருக்கு எதிராக அமைந்துவிட்டது என்பதே உண்மை!
மக்கள் தொடர்புத் திருட்டு
இளைஞர்களைக் கவர பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் ஒவ்வொன்றும், அவர்களுக்கு எதிரான பகடிகளாக மாற்றப்பட்டு விடுகின்றன. பிரதமரும் மற்ற அமைச்சர்களும் வெளியிடும் காணொளிகள் யாவும் இளைஞர்களால் “மீம்ஸ் உள்ளடக்கமாக” மாற்றப்படுகின்றன.
முந்தைய யுபிஏ அரசின் திட்டங்களின் பெயரை மாற்றுவதில் மோடி அரசாங்கத்தின் திறமை, மெச்சத் தகுந்தது. நிர்மல் பாரத் ஸ்வச் பாரத் ஆனது, இந்திரா அவாஸ் பிரதான் மந்திரி ஆவாஸ் ஆனது, ராஜீவ் காந்தி கிராமீன் வித்யுதிகரன் யோஜனா, தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா என்பது, ஸ்வாவலம்பன் அடல் பென்ஷன் யோஜனா ஆனது. தேசிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் பாரத்நெட் ஆனது.
ஆகவே, ‘ஜென் சி தலைமுறை’யைச் சென்றடைவதற்கான பாஜகவின் தீவிர முயற்சிகளிலும், ‘நகலெடுத்து ஒட்டும்’ மாபெரும் ‘மோடி பாணி’ பாரம்பரியம் தொடர்வதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால், பாஜகவால் இளைஞர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை, இளைஞர்களின் கல்வி உரிமை, வேலை உரிமை, மேலும் அவர்களுக்கான கருத்து சுதந்திர உரிமை இவை அனைத்தும் கண்மூடித்தனமாக பாஜகவால் சிதைக்கப்படுகிறது என்பதை எல்லாம் அறிந்தவர்கள்.
எனவே, பாஜகவின் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்பது மட்டும் திண்ணம். கரப்பான் பூச்சிகள் இயக்கம் பாஜகவின் பிளவு அரசியலுக்கு எதிரான ஒற்றுமை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்தியா எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான, புதுமையான தீர்வுகளைக் கொண்டுவரத் தவறும் ஓர் பாசிச அரசாங்கம், தனது இளைஞர்களுடன் உரையாடுவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளை எப்படிக் கொண்டிருக்க முடியும்?
அது எதிர்க்கட்சிகளில் உள்ள இளம் தலைவர்களை, இடதுசாரி முழக்கங்களை எந்த அளவுக்குப் பின்பற்ற முயற்சிக்கிறதோ, அந்த அளவுக்கு அது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் என்பது மட்டும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
ஜென் சி மற்றும் ஆல்ஃபா தலைமுறையினர் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இந்துத்துவ பாசிச அரசியலுக்கு முடிவுரை எழுதப்போவதும் இவர்கள்தான்!