
இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, த.வெ.க. தலைமையிலான கூட்டணி, தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மக்களோடு கூட்டணி, கடவுளுடன் கூட்டணி- இப்படியாக இன்று பலப்பல கூட்டணி. இது அரசியல் கட்சிகள் (இன்று) அமைத்துள்ள கூட்டணி.
இவை நிரந்தரமல்ல – இவை நாளை மாறலாம் – மாற்றம் என்பதே மாறாத ஒன்று.
இந்தக் கூட்டணிக் கட்சிகளில் ஆண்ட கட்சிகள் உண்டு. ஆளும் கட்சியும் உண்டு. இவற்றில் ஆட்சி அமைக்காத, ஆட்சியில் பங்கு பெறாத கட்சிகள் எனில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே!
எதிர்காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் கட்சியை அதிகாரத்தில் அமர வைக்கலாம். அதற்குரிய காலம் கனியும்.
பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைவதும்- பின்னர் மாறுவதும் – புதிய அணி உருவாகுவதும், தொடர்வதும் ஒருபுறம் இருக்க, யார் ஆட்சியில் இருந்த போதும் மாறாத, வலுவான – நிரந்தரமான கூட்டணிகள் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அக்கூட்டணி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது – வருகின்றது. செவிமடுத்து கேட்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் – காது கொடுத்து கேட்பது இல்லை- அல்லது கேட்டும் அதனைப் பொருட்படுத்துவது இல்லை.
அதிகார செல்வாக்கு மிக்கவர்கள்- அரசு அதிகாரிகள்-சமூக விரோதிகள் தங்களுக்குள்ளாக கூட்டணி அமைத்துக் கொண்டு செல்வாக்கு மிக்க பலம் பொருந்திய கூட்டணியாக செயல்பட்டார்கள் – செயல்பட்டு வருகின்றார்கள்.
இவர்களது கூட்டணி என்பது தொகுதி பங்கீடு அல்ல – மாறாக தங்களின் வருமானத்தை குறுக்கு வழியில் நாள்தோறும் அதிகரித்து தங்களின் கல்லாப்பெட்டியை நிரப்புவது ஒன்றே குறிக்கோள்.
இது குறித்து, முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை தெளிவுபடுத்துகின்றது.
அறிக்கை-தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், அது நடத்திய சட்டமன்ற கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்மீது தற்போதைய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பது ஒருபுறம். அறிக்கை கள்ளக் கூட்டணி குறித்து என்ன சொல்கின்றது என்பதே முக்கியம்.
இதுகாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்த கருத்தை ஏக்காதவர்கள் – ஏற்க மறுத்தவர்கள் – அல்லது அலட்சியப்படுத்தியவர்கள் இனியாவது கவனம் கொள்வார்களா? என்பதே நமது கேள்வியாகும்.
ஏனெனில் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் அலட்சியப்படுத்துவதற்கு இல்லை என்பதனையாவது உணர்வோர் உணர்வது –மக்களுக்கும் – நாட்டிற்கும் நற்பயன் அளிக்கும்.
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கருணையற்ற முறையில் 70 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதும், 161க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல் பாதிப்புக்கு உள்ளானதும் நினைவிருக்கின்றதா?
2024 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 19ஆம் நாள் அப்பகுதியில் உறவினர் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும், உள்ளூர் மக்களும் இத்துயரத்திற்கு ஆளானார்கள்.
இச்சம்பவம் எதேச்சையாக நடைபெறவில்லை – அல்லது ஒரு பெரும் விபத்தால் ஏற்பட்ட துயரம் அல்ல – அல்லது இரு ஜாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட துயரம் அல்ல –
மாறாக, புகழ்மிக்க தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் மதுவிலக்கு அமல் பிரிவு (காவல் துறையின் ஒரு பிரிவு), வருவாய் துறை, இவர்களின் பின்னால் உள்ள சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் – அதிகாரிகள் அமைத்துக் கொண்ட கூட்டணியின் கொடிய விபரீதம் – கோரத் தாண்டவமாடி, அப்பாவி ஏழை, எளிய மக்களின் உயிரை பறித்து பந்தாடியது.
இங்கே குறிப்பிடப்படுகின்ற கள்ளக்குறிச்சி கருணாபுரம் என்பது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் உள்ள ஒரு குக்கிராமம் அல்ல.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் அலுவலகங்கள், கிராம வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.), கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) அலுவலகங்கள் அனைத்தும் நிரம்ப உள்ளன.
கருணாபுரத்திற்கு காவல் நிலையம் வழியாகத்தான் சென்றாக வேண்டும் – அதுதான் பாதை. இவ்வளவு இருந்தும், இவை அனைத்தும் செயலற்று செத்த பாம்பாக இருந்த காரணத்தால் தான் துயரம் நிகழ்ந்தது என்று அறிக்கை கூறுகின்றது.
அரசாங்கக் கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பார்கள்.
ஆனால், இங்கே கள்ளக் கூட்டணி அரசாங்க அம்மியையே உடைத்து நொறுக்கி விட்டது.
அபாயகரமான மெத்தனால் ரசாயனம் கள்ளக்குறிச்சியில் உற்பத்தியாகவில்லை. சென்னை மாநகரத்திலிருந்து எவ்விதத் தங்கு தடையற்ற முறையில் எவ்வித சோதனைகளும் கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கின்றது. முதலமைச்சர் சாலை வழி பயணம் மேற்கொண்டால்- உரிய பாதுகாப்புடன் தங்கு தடையின்றி மின்னல் வேகத்தில் பயணிப்பது போன்று, ரசாயனம் கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொள்கிறது.
அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரி மீது வழக்குகள் பல இருந்த போதும், தனது வியாபாரத்தை தொடர்ந்து தங்கு தடையற்ற முறையில் மேற்கொண்டு வந்தார் என்பது மட்டுமல்ல, மதுப்பிரியர்கள் இவரிடத்தில் அக்கவுண்ட் வைத்து தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்கள்.
கிராம டீக்கடை, மளிகைக் கடைகளில் கையில் காசு இல்லாத போது கடன் வாங்குவதும், கடைக்காரர் இவர்களுக்கு தனி வரவு, செலவு கணக்கு நோட்டு பராமரிப்பதும் உண்டு.
அதனைப் போன்றே கள்ளச்சாராய வியாபாரி கடன் கொடுத்து வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார் என்பது அங்கு நேரில் சென்ற போது நம்மால் அறிய முடிந்தது. அதுமட்டுமின்றி, கள்ளச்சாராயம் விற்பனை செய்ய ஏலம் எடுத்துள்ள விபரங்களையும் விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது.
மக்களின் வரிப்பணத்தின் மூலம் மாதந்தோறும் உரிய ஊதியத்தை பெரும் அதிகாரிகள், காவல்துறையினர் அனைவரும் தங்களது கடமைகளை, நேர்மையை காற்றில் பறக்க விட்டுவிட்டு- தங்களின் வருமானத்தை பன்மடங்கு மேலும் பன்மடங்கு என உயர்த்திக் கொள்வதிலேயே கருத்தாக கவனமாக இருந்தார்கள் என்பது வெளிப்படை.
கள்ளக்குறிச்சி சம்பவம் மட்டுமல்ல அண்மையில் விநாயகர் சதுர்த்தி, அதன் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் – சேர்ந்தார் போல் பண்டிகை அதனையொட்டிய விடுமுறை நாட்கள் மூன்று நாட்கள் என்று வரும்போது மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் ஆம்னி பேருந்துகளை நடத்தும் வாய்ப்பை பெற்ற அதிட்டக்கார பஸ் முதலாளிகள் தான்.
விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விடுமுறையை மகிழ்ச்சியோடு குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ விரும்புவோர் – ரயில் டிக்கெட் முன்பதிவு பெற இயலாதவர்கள் – ஆம்னி பேருந்துகளை நாடுகின்றார்கள்.
ஆம்னி பேருந்துகள், வெளிமாநில பேருந்துகள் உட்பட ஏறத்தாழ 5900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் சென்னையில் இருந்து மட்டும் 3000 ஆம்னி பேருந்துகளை முதலாளிகள் இயக்குகின்றார்கள்.
இக்காலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையில் அரசுப் பணிகள் மற்றும் இதர பெரு நிறுவனங்களில் பணிபுரியும் மாத ஊதியம் பெறுகின்றவர்கள். முன்பதிவு என்ற பெயரால் டிக்கெட் கட்டணம் வசூல் செய்து விட்டார்கள்.
சில தினங்களுக்கு பின்னர் பேருந்து பழுதடைந்து விட்டது, ஆகவே உங்களின் முன்பதிவு ரத்து செய்யப்படுகின்றது என்று தகவல் அளித்து தங்கள் நிறுவனத்தின் நாணயத்தை, நேர்மையை நிலைநாட்டினார்கள்.
முன்பதிவு செய்த நபர் மீண்டும் முன்பதிவு செய்ய முனைகின்றபோது, பழுதாகிவிட்டது என்று கூறப்பட்ட அதே பேருந்துக் கட்டணமாக நடைமுறையில் உள்ளதை காட்டிலும் ஐந்து மடங்கு உயர்த்தி வசூல் செய்கின்றார்கள்.
1000 ரூபாய் கட்டணம் 5000 ரூபாய் என அநியாயமாக உயர்த்தி வசூல் முடித்தனர்.
பட்டப்பகல் கொள்ளையை எந்த உயர் அதிகாரிகளும் அறிய மாட்டார்களா?
ஒருவன் கள்ளச்சாராயம் விற்று அதிகாரிகளின் துணையோடு கொள்ளை அடிக்கின்றான் – இது அவனுக்குத் தெரிந்த தொழில். அவனுக்கே அத்தகைய செல்வாக்கு என்றால் – ஆடம்பரமாக ஆடையணிந்து கழுத்திலும், கைகளிலும் தங்க அணிகலன்கள் அணிந்து விலை உயர்ந்த காரில் பவனி வரும் பஸ் முதலாளியின் செல்வாக்கு எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்?
சாராய வியாபாரி – நாள்தோறும் வியாபாரம் செய்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு – கொடுக்க வேண்டியதை கொடுத்து – ஈட்ட வேண்டிய லாபத்தை ஈட்டுகிறான்.
பஸ் முதலாளி – கொடுக்க வேண்டியவர்களுக்கு – கொடுக்கக்கூடியதை கொடுத்து – ஓரிரு நாட்களில் கோடியாய் பல கோடியாய் பட்டப்பகல் கொள்ளை பகிரங்கமாக நடைபெறுகின்றது.
வியாபாரி சமூக விரோதி என்றால் – ஆம்னி பஸ் முதலாளி யார்?
இத்தகைய கொள்ளையர்களின் கூட்டாளிகள் யார்?
சமூக விரோதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என இந்த கேடுகெட்ட கூட்டணியை யார் தடுத்து நிறுத்துவது?
அரசுக்கு தலையாய பொறுப்பும், கடமையும் நிரம்ப உள்ளது என்று மக்கள் நம்புகிறார்கள்!
மக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசாக இல்லை!
மக்கள் ஒன்று திரண்டு கள்ளக் கூட்டணிக்கு எதிராக களப்போர்களை மேற்கொள்ளும்போதுதான் அக்கூட்டணி உடைக்கப்படும்- உடைக்கப்பட வேண்டும்!