கட்டுரைகள்

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மலர்ச்சியும், வளர்ச்சியும், தொடர்ச்சியும்…! – ஒரு கண்ணோட்டம்

க.திருநாவுக்கரசு

காந்தியார் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பணியாற்றத் தொடங்கிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன்பே, காரல் மார்க்ஸ் வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அறிமுகமாகி இருந்தார். கற்றறிந்தவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இன்னும் சொல்வதானால் 1881-ஆம் ஆண்டிலேயே பால கங்காதர திலகரின் எழுத்துகளில் மார்க்ஸ் பேசினார். ஆம்; இந்திய மண்ணில் அவர் அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருந்தார்.

1925 ஆம் ஆண்டு டிச.26 முதல் 28 வரை கான்பூரில் மாநாடு ஒன்று கூடியது. இம்மாநாட்டில் கம்யூனிஸ்டுகளின் பல்வேறு குழுவினர்களும், ஆதரவாளர்களும், கொள்கை பற்றுடையவர்களும் பங்கேற்றனர். இம்மாநாட்டிற்கு கிரேட் பிரிட்டனின் கம்யூனிஸ்டு நாடாளுமன்ற உறுப்பினர் சக்லத் வாலாதான் முதலில் தலைமை தாங்குவதாக இருந்தது. ஆனால், அவரால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. பிறகுதான் ம.சிங்காரவேலர் தலைமையில் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில்தான் ‘இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி’ என்று பெயர் சூட்டப்பெற்றது.

இம்மாநாட்டை முன்னின்று நடத்தியவர் சத்யபக்தா. இவர்தான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் செயலாளர். இதை நடத்துவதற்கு ஓராண்டை அவர் எடுத்துக்கொண்டார். அந்தக்கால நிலைக்கு அது தேவையாக இருந்தது. இம்மாநாட்டில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். சிலருக்கு ‘இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி’ என்கிற பெயர் பிடிக்கவில்லை. வேறு பெயர் வைக்கலாம் என்று கருதினர். அக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆக, 1925 டிசம்பர் கடைசி வாரத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக இந்தியாவில் ஆங்காங்கே கம்யூனிஸ்டுக் குழுக்கள் விவாதங்களை நடத்திவந்தன.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோற்றுவிக்கப்பட்ட மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ம.சிங்காரவேலரை அறிஞர் அண்ணா ‘சிந்தனைச்சிற்பி’ என்று பெருமைப்படுத்தினார். அவரைப் பற்றி அண்ணா குறிப்பிடுகிறபோது, “இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுவுடைமை சம்பந்தாகவும் அதிகம் படித்துப் புரிந்து கொண்டு அந்த அறிவைக்கொண்டு மற்றவர்களுக்கும் புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன்வரிசையில், முதலிடம் அவருக்கே அளித்தாக வேண்டும். அவர், வீரர், தீரர், யாரும் மறுக்கமாட்டார்கள். கிளர்ச்சிகள் அவர்க்கு நிலாச்சோறு” என்று எழுதினார்.

இவர் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி குடிஅரசு வார ஏட்டில் சுமார் 5 ஆண்டுகள் கட்டுரைகள் எழுதினார். தென்னிந்தியர் சமதர்மக் கட்சியைத் தோற்றுவிக்க ஆலோசனை வழங்கி வந்தார். இவை அத்தனையும் 1930 களில் நடந்தன. ஆனால் அவர் 1920 முதல் 1930 வரை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்புகளில் கவனம் கொண்டவராக விளங்கி இருக்கிறார். இவருடைய அணுகுமுறைகளை, அமைப்புப் பணிகளை எம்.என்.ராய் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தவை எல்லாம் பதிவுகளில் காணக் கிடைக்கின்றன.

மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய சிங்காரவேலர் மாநாட்டுக்கு முன்பு நடைபெற்ற கயா காங்கிரஸ் (1922) மாநாட்டில் பங்கேற்று பொதுவுடைமைத் தாக்கமுள்ள கொள்கைகளை வலியுறுத்திப் பேசினார். காங்கிரசில் எல்லாவகையான ‘சார்பு’ உடையவர்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தோன்றுவதற்கு முன்பாக இரஷிய புரட்சி மகத்தான வெற்றி பெற்று இருந்தது – அது அய்ரோப்பாவை அதிர்ச்சி அடையச் செய்தது. அப்போது ஆசியாவில் உள்ள சீனா, புரட்சியில் கால் எடுத்து வைக்க முயன்று கொண்டு இருந்தது. சூ-என்-லாய் முதல் முயற்சியில் தோற்றுப் பின்வாங்கி இருந்தார்.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அரசியல் களத்தில் இங்கே மலர்ச்சியுற்ற காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. அதுபோது கம்யூனிஸ்டுகளோ அல்லது கட்சியோ இடதுசாரி சிந்தனையாளர்களோ தம் நிலைக்கு உகந்த பணிகளை மேற்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. அதுபோது விடுதலைப் போராட்ட உணர்வே மேலோங்கி இருந்தது. இந்த உணர்வு மக்களுக்கு கம்யூனிசத்தின் வேர்களை காணவொட்டாமல் மறைத்தது. கட்சியைக் கட்டவும் மக்களுக்கான அமைப்பை பொதுவெளியில் காட்டவும் மட்டுமே கம்யூனிஸ்டுக் கட்சியால் முடிந்தது. ஆனால் அதே நேரத்தில் அமைப்பு வழியான போராட்டங்கள் நடைபெறாமல் தன்னெழுச்சியானவையாக அவை நடந்தன. அவை ஒடுக்கப்பட்டன. அதில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர். இவை போன்றனவும் ஆங்காங்கே நடந்து வந்தன.

என்னதான் முழு மனதோடு கம்யூனிஸ்டுகள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றாலும் காந்தியார் ‘கம்யூனிசத்தை’ நம்பவில்லை. காந்தியார்க்கு ஓர் அச்சம் இருந்தது. இந்தியாவில் கம்யூனிசத்தைப் பரப்ப லெனின் முயல்வார் என்பதே அது. காந்தியார் கருத்தை வழிமொழிவதைப் போல காங்கிரசில் பல தலைவர்கள் இருந்தனர். இரஷியப் புரட்சி காந்தியாரிடத்திலே வரவேற்பை ஏற்படுத்தவில்லை. கம்யூனிசத்தையும் அவர் ஏற்கவில்லை என்பதை அவரது கருத்தைக் கொண்டே நாம் தெரிந்து கொள்ளலாம்.

காந்தி சொல்கிறார்:

“இரஷியாவை நான் நோக்குகையில் அவர்களுடைய வாழ்க்கை என் மனத்தைக் கவரவில்லை. கிறிஸ்தவ வேதமாகிய பைபிள் கூறுவது போல், “நமது ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையெல்லாம் ஜெயித்தாலும் என்ன பலன்?” ஒரு எந்திரத்தின் ஆணிபோல வாழ்வது மனித வாழ்க்கையின் கௌரவத்திற்கு ஏற்றதல்ல. ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் பூரண பக்குவம் பெற்ற உறுப்பினராக விளங்க வேண்டும் என விரும்புகிறேன்”

காந்தியாரின் இக்கருத்தைப் பற்றி நாம் இங்கே விளக்கப் போவதில்லை. ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய ஒரு பயம், பீதி, ஒர் அச்சம், பயங்கரம் நிலப்பிரபுகளாலும் முதலாளித்துவத்தாலும் இவர்களின் ஆதரவாளர்களாலும் கிளப்பிவிடப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸ்டு அறிக்கை வெளிவந்தபோதே இப்படிப்பட்ட ஒரு போக்கு உலகம் முழுமையும் பரப்பப்பட்டது. அது தொடர்ந்தது. இந்தியாவிலும் இக்கருத்துகள் வேகமாகப் பரவின. இப்படிக் கற்பனையைக் கிளப்புபவர்களுக்கு ‘மார்க்சியம் என்பது அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சமுதாய அறிவியல்’ என்கிற பாலபாடம் தெரியாததே காரணமாகும்.

மேலும் இரஷியாவில் லெனினுக்குப் பிறகு ஸ்டாலின் ஆட்சியில் இரண்டுவித போக்குகள் வெளிப்பட்டன.

(1) ஸ்டாலின் மாபெரும் சர்வாதிகாரி;

(2) அவர் ஆட்சியில் மக்கள் ‘எல்லாம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.’

இதுவன்றி பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வந்தால் இந்திய மண்ணின் நிலை என்னாவது? எல்லாவற்றிற்கும் ‘இரும்புத்திரை’ என்கிறார்கள். அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். இப்படியான பரப்புரைகளை அமெரிக்கா செய்துகொண்டே இருந்தது. சோவியத் இரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா இருந்தது. ஆகவே இரஷியப் புரட்சி சீனப் புரட்சியைப் போல் இல்லாமல் இந்தியாவில் காந்தியார் தலைமையில் நடந்த ‘வித்தியாசமான புரட்சி’யை உலகம் பார்த்தது; வியந்தது என்பது இன்னொரு பக்கம்.

விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த கம்யூனிஸ்டுகள் காந்தியாரின் மற்ற நடவடிக்கைகளை ஆதரித்தாகச் சொல்வதற்கில்லை. அவற்றையெல்லாம் எதிர்க்கவே செய்தார்கள். இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஆங்காங்கே கட்சி அமைப்புப் பணிகளைத் தீவிரமாகக் கட்டமைப்பதில் இயங்கினார்கள். இந்திய மக்கள் கம்யூனிஸ்டுகளைப் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியவில்லை.

காந்தியின் மக்கள் போராட்டங்களான (1) ஒத்துழையாமை இயக்கம். (2) அந்நிய துணிகளை-பொருள்களை பகிஷ்கரித்தல் (3) உப்பு சத்தியாகிரகம் (4) வெள்ளையனே வெளியேறு ஆகியவற்றில் கம்யூனிஸ்டுகள் ஈடுபட்டனர். சிலவற்றில் தண்டனையும் பெற்றார்கள். பிரிட்டிஷ் அரசு காங்கிரசுக்கு- அதன் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்ததைக் கண்காணிக்காமல் இல்லை. இருப்பினும் அது கம்யூனிஸ்டுகளின் ‘தனித்த ‘ராஜபாட்டையை’ தடை செய்த வண்ணமாகவே இருந்தது. விடுதலைப் போராட்ட இயக்கம் தமக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்டுகளைத் தட்டிக் கொடுத்ததாகவும் தெரியவில்லை. அதைப் பற்றி கம்யூனிஸ்டுகள் கவலைப்படவுமில்லை.

இரஷியாவில் கம்யூனிஸ்டுப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைந்ததை இந்திய மக்களிடையே ஆதரவு நிலை இருந்தது. எனினும் அது மற்றபடி கம்யூனிஸ்டுகளுக்கு ‘பலன் தருவதாக இல்லை. அதில் ஏதோ பெரிய மர்மம்’ ‘சிக்கல்’ இருப்பதாகக் கருதினர். ஒரு வேளை ‘வெளிப்படை’ தன்மை இல்லை என்று கருதினார்களா? என்றும் தெரியவில்லை. ஒரு கம்யூனிஸ்டு ஆகிவிட்டவன் களத்தில் இறங்கியபின் மக்களிடம் செல்வதிலும் இலட்சிய முனைப்புக்கு ‘சாரங்கட்டி’ கட்டமைப்பை தூக்கி நிறுத்துவதிலும்தான் இயங்குவான். 1925 டிசம்பருக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளிடையே அந்தப் போக்கு அதிகரித்தது. அந்தத் துணிவுகள் எல்லாம் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து தெரிகிறது.

இங்கிலாந்திற்கு ஐ.சி.எஸ். படிக்கப் போனவர்களுள் சிலர் படிப்பை முழுமையாக்காமல் கம்யூனிசத்தின்பால் ஈர்க்கப்பட்டு தாயகம் திரும்பியவர்கள் உண்டு. சிலர் படிப்பை முடித்துவிட்டு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டனர். இவர்கள் காங்கிரசிலும் கம்யூனிஸ்டுகளாகவும் இயங்கினர். சிலர் ஆயுதமேந்திய தீவிரவாதிகளாயினர். இவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டக்களத்தில் பணியாற்றியவர்களே ஆவர். பிரிட்டிஷ் இந்தியாவைத் தவிர இதர சுதேச சமஸ்தான பகுதிகளிலும் இயங்கியவர்கள் உண்டு. அப்பகுதிகள் 1857க்கு பிறகு மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்டன. ஆலைத் தொழில்கள் ஏற்பட்டு அதற்கான சாதன உற்பத்தி செய்யும் தொழில்களும் பெருகி இருவகை தொழிலாளர்கள் உருவாயினர். இதனால் வேலைத்தேடும் விவசாயத் தொழிலாளர் நகர்புறம் நோக்கி விரைந்தனர். பெரிய பஞ்சங்களும் சிறிய பஞ்சங்களும் மழை இல்லாததால் ஏற்பட்டு வறட்சிகள் மக்களை வாட்டின. ஆங்காங்கே மக்கள் தலைவர்கள் தோன்றினர். இவர்கள் தன்னெழுச்சியானார்கள். கம்யூனிஸ்டுத் தலைவர்கள் அல்லர். இவர்களையும் கம்யூனிஸ்டுகள் கவனிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள்.

நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறும் கால கட்டத்தில் பல இழப்புகள் நேர்ந்தன. மிக எளிதாகத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக்கு அரசோ, நிலப்பிரபுத்துவமோ, புதிதாக வளர்ந்து வரும் முதலாளித்துவமோ சலுகைகளோ, உரிமைகளோ வழங்கிவிட மாட்டார்கள். இதனால் ஆங்காங்கே சர்ச்சைகள் எழுந்தன. கொலைகள் நிகழ்ந்தன. தலைமை தாங்கியவர்கள் கம்யூனிஸ்டு ஆக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இப்படி நடந்தவைகளுக்கு கணக்குகள் இல்லை. பதிவுகள் இல்லை. புள்ளி விவரங்கள் இல்லை. விடுதலைப் போராட்டக் களத்தில் நடந்தவை எல்லாம் பூமிக்கடியில் சரஸ்வதி ஆறு ஓடுகிறது என்று சொல்கிறார்களே அது போல ‘நிஜ ஆறுகளாக’ எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி இயங்கத் தொடங்கியதற்கு பிறகு பிரிட்டிஷ் போலீசார் வாளாய் இருக்கவில்லை. உளவுத்துறை பேசாமல் இருக்கவில்லை. இதற்கிடையேதான் கம்யூனிஸ்டுகளின் பணி நடந்தேறி இருக்கிறது. இதனூடே தடைகளும், வழக்குகளும் போடப்பட்டு இருக்கின்றன. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு என இப்படிப் பல வழக்குகள் நடந்து இருக்கின்றன. கம்யூனிஸ்டுகள் எல்லாம் தண்டனை பெற்று இருக்கிறார்கள். கைதிகள் தப்பியோடி கிளர்ச்சி செய்து இருக்கிறார்கள். மீரட் வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு மட்டும் நான்கரை ஆண்டுகள் நடைபெற்று இருக்கிறது. மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி பெரியார் குடிஅரசில் எழுதினார்.

“தலைவர்களுக்கு இப்படிப்பட்ட தண்டனைகளை வழங்குவதன் மூலம் கம்யூனிஸ்டு இயக்கத்தை அழித்துவிட முடியும் என்று நினைப்பது முழுமையான முட்டாள்தனமாகும். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை எண்ணெயை ஊற்றி அணைத்து விடலாம் என்று எண்ணுவது போலத்தான் முடியும். மீரட் கைதிகளை நாங்கள் பாராட்டுகிறோம். நமக்கும் நம்போன்ற வாலிபர்களுக்கும் இப்பெரும்பேறு கிடைக்கப்பெறும் நிலையை அடைய முடியவில்லை என்று வருந்துகிறோம். மனதாலும் பேச்சாலும் எழுத்தாலும் அவர்களை உளமாரப் பாராட்டுகிறோம்”

மீரட் சதி வழக்கு என்பது என்ன?

மீரட் 1857ல் இருந்தே புகழ்பெற்ற ஒரு சிறிய நகரம். டெல்லியிலிருந்து 100 மைல்கல் தூரம் உள்ள ஒரு ஊர் இது. இந்த ஊரில்தான் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் சதி செய்தனர் என்பதற்கு வழக்கு. 33 தொழிற்சங்கத் தலைவர்களின் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு, 121 ஏ- பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 8 குற்றச்சாட்டுகள் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் இந்தியாவின் இறையாண்மையைப் பறிப்பதற்கான சதிச்செயலில் ஈடுபட்டதாக வழக்கு; அதுவும் இரஷியாவோடு சேர்ந்து கொண்டு! எண்ணிப் பாருங்கள், எவ்வளவு பயங்கரமான வழக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பட்டியலிட்டு நினைவு கூரவிரும்புகிறோம்.

(1) முசாபர் அகமது (கல்கத்தா), (2) எஸ்.எ.டாங்கே (பம்பாய்), (3) எஸ்.வி.காட்டே (பம்பாய்), (4)டாக்டர் ஜி. அதிகாரி (பம்பாய்), (5) பி.சி.ஜோஷி (அலகாபாத்), (6) கே. என்.ஜோக் லேக்கர் (பம்பாய்), (7) ஆர்.எஸ்.நிம்ப்கர் (பம்பாய்), (8) எஸ்.ஒய். மிராஜ்கர் (தாதர், பம்பாய்), (9) சவ்கத் உஸ்மினி (பம்பாய்), (10) எம்.ஏ.மஜீத் (லாகூர்), (11) சோகன்சிங்ஜோஷ் (அமிர்தசரஸ்), (12) தரணிகாந்த் கோஸ்வாமி (கல்கத்தா), (13) கோபால் சந்திர புரசக் (டாக்கா), (14) ஷிப்நாத் பானர்ஜி (ஹவுரா), (15) எம்.ஜி.தேசாய் (பம்பாய்), (16) அயோத்யா பிரசாத் (ஜான்சி), (17) கே.என். செகல் (லாகூர்), (18) ராதாராமன் மித்ரா (கல்கத்தா), (19) அர்ஜூன் ஆத்மராலே (பம்பாய்), (20) எஸ்.எச்.ஜாப்வாலா (பம்பாய்), (21) டி.ஆர்.தொப்கடி (பூனா), (22) கோபன்சக்கரவர்த்தி (டாக்கா), (23) ஜி.ஆர். காங்லே (பம்பாய்), (24) கிணோரிலால் கோஷ் (கல்கத்தா), (25) விஸ்வநாத் முகர்ஜி (கோரக்பூர்), (26) எல்.ஆர். கதம் (ஜான்சி), (27) கவுரிசங்கர் (மீரட்), (28) டிம் அல்ஹூடா (கல்கத்தா), (29) தரம்வீர்சிங் (மீரட்), (30) பிலிப்ஸ் பிராட் (கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்டுக்கட்சி உறுப்பினர்), (31) பி.எப்.பிராட்லி ஆகியோர் தேச துரோக சதிச் செயலில் ஈடுபட்டோர் என பிரிட்டிஷ் அரசு வழக்கு தொடர்ந்தது.

செஷன்ஸ் கோர்ட்டில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே அனுபவித்த தண்டனை போதுமானது என்று மேல்முறையீடு செய்து கொண்டதில் விடுதலை செய்தனர். அந்தக் காலத்தில் வழக்காடுவது ஊர்விட்டு ஊர் செல்வது, நிதி திரட்டுவது, இயக்கம் நடத்துவது என்பது பெரிய வனவாசமாகும். இதைப் போல பல துன்பங்களை கம்யூனிஸ்டுகள் இந்தியா முழுமையும் அனுபவித்தனர். குத்தூசி போட்டு தானியங்களை எடுத்துக் காட்டுவது போல் மீரட் சதிவழக்கை மிக மிகச் சுருக்கமாக நாம் இங்கே எடுத்துக்காட்டி இருக்கின்றோம்.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதற்குப் பிறகு பி.சி.ஜோஷி பொதுச்செயலாளராய் இருந்த காலம் வரை (1948 பிப்ரவரி வரை) கட்சியின் போராட்டங்கள் நாடு முழுமையும் சிறியதும் பெரியதுமாக நடைபெற்றே வந்தன. இவற்றில் ஏற்பட்ட எல்லா வகையான இழப்புகளையும் கம்யூனிஸ்டுக் கட்சி எதிர்கொண்டது. சற்றொப்ப முதல் கால் நூற்றாண்டு காலம் இத்தகைய நிகழ்வுகள் நிகழ்ந்தன. இவை கட்சியின் இருப்பை மக்களிடம் போர்க்குணத்தோடு கம்யூனிஸ்டு இயக்கம் வெளிப்படுத்தியது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிய புரிதல் சரியாகவும், தவறாகவுமாக விளங்கிக் கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால், இன்னொரு வகையில் பெருத்த ஆதாயம் கம்யூனிஸ்டுகள் பெற்றனர். அது என்னவென்றால் இந்தியா முழுமையும் கம்யூனிஸ்டுக் கட்சி நன்கு அறிமுகமாயிற்று. தொழிற்சங்கம் நடத்துவதில் மிகச் சிறந்த இடத்தைக் கம்யூனிஸ்டுச் சங்கங்கள் பெற்றன. அவர்கள் ஆட்சியதிகாரம் காண்பதைவிட மக்களிடம் செல்வதில்தான் முதலில் ஆர்வம் காட்டி நின்றனர்.

ஆசைக்கும், அச்சத்திற்கும் இடையே வாழ்ந்த மக்களிடம் கம்யூனிஸ்டுகளுக்கு என்று இருக்கும் பண்பையும், ஒழுக்கத்தையும் ஒரு முத்திரையாக அவர்கள் காட்டி நின்றனர். மக்கள் அதை அறிந்தனர். ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரஷியாவோடு இணைந்து இந்தியாவில் ஆயுதப் புரட்சி மேற்கொள்ள சதி செய்தார்கள் என்றுதான் ‘மீரட் சதி வழக்கு’ நடந்தது. ஜோஷியின் தலைமைக்குப் பின் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றவரான பி.டி.ரணதிவே வழிகாட்டுதலில் ஆயுதப் புரட்சிக்கு கட்சி அறிவிப்பு செய்தது. ‘ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் நிலப்பிரபுத்துவ அமெரிக்க ஏகாதிபத்ய ஆதரவு காங்கிரஸ் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்று கல்கத்தாவில் கூடிய கட்சி காங்கிரஸ் முடிவு எடுத்தது.

ஆயுதப் புரட்சியின் மூலம் சமூக அமைப்பை – அரசியல் அதிகாரத்தை மாற்றுவது என்று திட்டம் வகுக்கப்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தடை, தலைவர்களுக்கு சிறை மட்டுமில்லை. சட்டம் கொண்டு வந்து கட்சியைக் கலைக்கிறோம் என்றனர். இப்படித் தடை வருவதற்குக் காரணம் ஆயுதப் புரட்சியை ‘மற்றவர்கள்’ முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் விரும்பவில்லை. கம்யூனிச தத்துவக்காரர்கள் இச்சமயத்தில், “பலாத்காரம் தவறு அல்ல. எந்த அரசும் பலாத்காரத்தினால்தான் அமைகிறது. அதிலும் முதலாளித்துவ அரசு ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கி விடுகிறது. அந்தப் போலி ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்கப் போவதில்லை. பலாத்கார முறையைப் பயன்படுத்தினால் தவறு இல்லை. முதலாளித்துவ அரசை, கவிழ்க்க, மாற்ற, பாட்டாளி அரசு அமைக்க” என்று பேசினார்கள். எழுதினார்கள், அதனால்தான் கட்சிக்குத் தடை வந்தது. இதற்குப் பிறகுதான் சிறை, தடை, கலைப்புச் சட்டம் எல்லாம்!

கட்சி தடை செய்யப்பட்டபோது, சிறையில் இருந்த தலைவர்கள் போக எஞ்சியவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். அந்த வாழ்க்கை ஒரு துணிவுமிக்கதாக இருந்தது. அதற்குக் காரணம் ஆயுதப்புரட்சியின் மூலம் புரட்சி அரசு அமையப் போகிறது என்ற எண்ணம்தான்! அந்தத் துணிவைப் பற்றி நம் அன்பிற்குரிய தோழர் ‘சரஸ்வதி’, ‘விடிவெள்ளி’, ‘சமரன்’ போன்ற இதழ்களின் ஆசிரியரும், ‘சோவியத் நாடு’ இதழின் இணை ஆசிரியருமாக இருந்தவருமான வ.விஜயபாஸ்கரன் தனது ‘திரும்பிப் பார்க்கிறேன்’ நூலில் நிரம்ப எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்டுகளின் சாகசங்களைப் பற்றிய செய்திகள் பல ‘நினைவலை’ நூல்களில் திடுக்கிடும்படியான செய்திகள் பதிவாகி இருக்கின்றன. அதிலே மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இதனால் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடவில்லை. தியாகம் மகத்தானதாக இருந்தது. வீரவணக்கம் செய்யும் நிலைக்கு உயர்ந்தது.

இந்தியாவில் காங்கிரசுக்கு அடுத்த படியாக இருந்த கம்யூனிஸ்டுக் கட்சி முதல் தேர்தலுக்கு முன்பாகவே அந்தச் செல்வாக்கு சற்று குறையத் தொடங்கி இருந்தது. அதாவது சக்தி வாய்ந்த தென்னிந்திய இரயில்வே சங்கமும், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் பறிபோய்விட்டன. 1948 முதல் 1951 வரை இந்திய அரசியலில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு மாபெரும் பரபரப்பை – எதிரிகளுக்கு ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது போல் எந்தக் கட்சியும் ஏற்படுத்தவில்லை. மக்கள் விதவிதமான ‘இரகசிய கதைகளை’ப் பேசிக் கொண்டனர்.

சிறையிலே தலைவர்கள், கட்சியோ கலைக்கப்பட்டுவிட்டது. இதற்குப் பிறகு கம்யூனிஸ்டுக் கட்சி, ஜனநாயக முறையில் பலாத்காரமற்ற முறையில் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்ட கட்சியாகப் பணியாற்றும்’ என்று அறிவித்தார்கள். அதற்கு உரியனவற்றைச் செய்தார்கள். பிறகு கம்யூனிஸ்டுக் கட்சி இயங்கத் தொடங்கியது. புரட்சியைத் தாண்டி இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி வாக்கு முறை-வோட்டு முறை தேர்தல் ஜனநாயகத்தில் அடியெடுத்து வைத்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தனது வளர்ச்சியின் பாதையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

சிறை வாழ்க்கையும், தலைமறைவுகளும், சாகசங்களும் கட்சி எதிர்பார்த்த பலனை வழங்கவில்லை. எனினும் ‘ஓர் அரசியல் பூகம்பத்தை’ கம்யூனிஸ்டுக் கட்சி இந்தியாவில் ஏற்படுத்தி இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் (1951-1952) கம்யூனிஸ்டுத் தலைவர்கள் சிறையில் இருந்தவாறே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, வெற்றி பெற்றனர். இந்திய காங்கிரசுக்கு ஆளுங்கட்சியான நாடாளுமன்றத்தில்-மக்களவையில் எதிர்க்கட்சியாக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அமர்ந்தது. மொத்த மக்களவை உறுப்பினர்கள் பத்தில் ஒரு பங்கினரோ அல்லது அதற்கு மேலோ எண்ணிக்கை உள்ள கட்சியினரே எதிர்க்கட்சிக் கட்சியாக வரமுடியும். கம்யூனிஸ்டுகள் 16 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் சுதந்திர ஒளியில் காங்கிரஸின் அமோக வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட்டதே. அப்போது மக்களவைக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இது குறைத்து மதிப்பிடத் தகுந்த வெற்றி அல்ல. ஆம்; கம்யூனிஸ்டுக் கட்சி ‘பிரதான’ எதிர்க்கட்சி. ஏ.கே. கோபாலன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுக்கு முன்பும் பின்புமாக மக்களவைத் தேர்தலில் பங்கேற்றது. 1951-52 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பங்கேற்ற கம்யூனிஸ்டுக் கட்சிகளின் விவரத்தைக் கீழ்க்காணும் விதத்தில் தந்து இருக்கின்றோம்.

 

(1) 1951-52-CPI – போட்டியிட்ட இடங்கள் 49,
வெற்றிபெற்ற இடங்கள் -16
பெற்ற மொத்த வாக்குகள் – 34,87,401

(2.) 1957-CPI -போட்டியிட்ட இடங்கள் 110
வெற்றி பெற்றவை – 27
பெற்ற வாக்குகள்-1,07,54,075

(3.) 1962-CPI- போட்டியிட்ட இடங்கள்-137
வெற்றி பெற்றவை – 29
பெற்ற மொத்த வாக்குகள் 1,14,50,037

பிளவுபடாத கம்யூனிஸ்டுக் கட்சி மூன்று மக்களவைத் தேர்தலில் பங்கேற்றது. முதல் தேர்தலைவிட இரண்டாவது மக்களவைத் தேர்தலில் 11 இடங்கள் கூடுதலாகப் பெற்றனர் கம்யூனிஸ்டுக் கட்சியினர். 1951-52 இல் முதல் தேர்தல் நடந்த போது சென்னை மாகாணத்தில் ஆந்திராவும் இணைந்து இருந்தது. சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டுக் கட்சித் திகழ்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக பி.இராமமூர்த்தியும், துணைத்தலைவராக ப. ஜீவானந்தமும் பணியாற்றினர்.

1957ல் கேரளாவில் தேர்தலில் வெற்றி பெற்றுக் கம்யூனிஸ்டுக் கட்சி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைச்சரவையை அமைத்தது. உலகத்திலேயே தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம் இது. இந்தியாவில் முதல் முறையாகக் கம்யூனிஸ்டுகள் ஒரு மாநிலத்தில் ஆளுங்கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த அளவுக்கு மக்களிடையே கம்யூனிஸ்டுகளுக்குச் செல்வாக்கு இருந்தது. இந்தச் செல்வாக்கு மிக்க அரசாங்கத்தை முதல் முறையாக இந்தியாவில் சட்டத்தைப் பயன்படுத்திக் கலைத்தனர்.

ஆக, கேரளாவில் கம்யூனிஸ்டுகள் சாத்தியமான வழியைப் பயன்படுத்தி அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இது கம்யூனிஸ்டுகளின் அரசு இல்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

மேலும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுபடாத கால கட்டங்களான 1952, 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இடங்கள் முறையே 16,27,29 என எண்ணிக்கை வளர்ச்சி நிலையில் முன்னேற்றத்தை நோக்கியவாறு இருந்தது.

(4) இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அதன் பிளவுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளைப் பார்ப்போம்.

1967-CPI-போட்டியிட்ட இடங்கள்-109.

வெற்றி பெற்ற இடங்கள் 23. பெற்ற மொத்த வாக்குகள் – 74,58,396

மார்க்சிஸ்டுகள்-போட்டியிட்ட இடங்கள்-59.

வெற்றி பெற்ற இடங்கள் 19. வாங்கிய மொத்த வாக்குகள்- 62,46,522

இரண்டு கட்சிகளும் சேர்ந்து

பெற்ற இடங்கள்-42, வாக்குகள்  -1,37,04918

1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலும் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலைப் போலச் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒன்றாகவே நடைபெற்றது. 1971க்குப் பிறகுதான் தேர்தல் நடைபெறுவதில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1967ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்ற போது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி பிளவு பட்டு இருந்தது.

1967 பொதுத்தேர்தலில் எட்டு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. தமிழ்நாட்டில் தி.மு.கழக வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வரானார். 1957ல் கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்டுகளின் அரசை 1959ல் கலைத்தனர். ஆனால் 1967ல் மீண்டும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். இ.எம்.எஸ். முதல்வரானார். மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுக் கட்சி பங்கேற்ற கூட்டணி ஆட்சி உருவாயிற்று. அங்கே ஜோதிபாசு துணை முதல்வரானார். மொத்தத்தில் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு நல்வரவேற்பைக் கூறியது.

 

(5) 1971-CPI-போட்டியிட்ட மொத்த இடங்கள்-87
வெற்றி பெற்ற இடங்கள் – 23
பெற்ற வாக்குகள்              – 69,33,627

மார்க்சிஸ்டுகள்-போட்டியிட்ட இடங்கள்-85
வெற்றி பெற்ற இடங்கள்-25
பெற்ற வாக்குகள்-75,10,089

இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்-48
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-1,44,43,716

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டு இயங்கியது. காங்கிரஸ் (ஐ) என்றும் காங்கிரஸ் (ஓ) என்றும் அக்கட்சிகள் அடையாளப்படுத்தப்பட்டன.

(6)1977-CPI-போட்டியிட்ட இடங்கள்- 91
வெற்றிபெற்ற இடங்கள்-7
பெற்ற வாக்குகள்-53,22,088

மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-53
வெற்றி பெற்ற இடங்கள் 22.
பெற்ற வாக்குகள் 81,13,659
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்-29
இரண்டு கட்சிகளின் வாக்குகள்-1,34,35,747

1977 மக்களவைத் தேர்தல் நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலாகும். இரண்டு கட்சிகளின் இடங்கள் 19 குறைந்துவிட்டன. ஆனால் பெற்ற வாக்குகளில் சுமார் பத்து இலட்சம் மட்டுமே குறைந்து காணப்பட்டது.

(7) 1980-CPI-போட்டியிட்ட இடங்கள்-47
வெற்றி பெற்ற இடங்கள்-10
பெற்ற மொத்த வாக்குகள்-49,27,342
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-64
வெற்றி பெற்ற இடங்கள்-37
பெற்ற வாக்குகள்-1,23,52,331
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 47
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-1,72,79,673

(8) 1984-CPI-போட்டியிட்ட இடங்கள்-61
வெற்றி பெற்ற இடங்கள்- 6
பெற்ற மொத்த வாக்குகள்-63,63,430
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-59
வெற்றி பெற்ற இடங்கள்-22
பெற்ற மொத்த வாக்குகள்-1,38,09,950
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்:28
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,01,73,380

(9) 1989-CPI-போட்டியிட்ட இடங்கள்-50
வெற்றி பெற்ற இடங்கள்-12
பெற்ற வாக்குகள்-17,34,697
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-64.
வெற்றி பெற்ற இடங்கள்-33
பெற்ற மொத்த வாக்குகள்-1,96,91,3009
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 45
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,14,26,006

(10) 1991-CPI-போட்டியிட்ட இடங்கள்-42
வெற்றி பெற்ற இடங்கள்-14
பெற்ற மொத்த வாக்குகள்-68,51,114
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்டஇடங்கள்-60
வெற்றி பெற்ற இடங்கள்-35
பெற்ற மொத்த வாக்குகள்-1,69,54,797
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 49
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,38,05911

(11) 1996-CPI-போட்டியிட்ட இடங்கள்-43
வெற்றி பெற்ற இடங்கள்-12
பெற்ற மொத்த வாக்குகள்-65,82,263
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-75
வெற்றி பெற்ற இடங்கள்-32
பெற்ற மொத்த வாக்குகள்-2,049,6810
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 44
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-270,79073

(12) 1998-CP1-போட்டியிட்ட இடங்கள்-58
வெற்றி பெற்ற இடங்கள்-  9
பெற்ற மொத்த வாக்குகள்-64,29,569
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-71
வெற்றி பெற்ற இடங்கள்-32
பெற்ற மொத்த வாக்குகள்-1,89,91,867
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 41
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,54,21,436

(13) 1999-CPI-போட்டியிட்ட இடங்கள்-54
வெற்றி பெற்ற இடங்கள்-  4
பெற்ற மொத்த வாக்குகள்-53,95,119
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-72
வெற்றி பெற்ற இடங்கள்-33
பெற்ற மொத்த வாக்குகள்-1,96,95,767
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 37
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,50,90,886

(14) 2004-CPI-போட்டியிட்ட இடங்கள்-34
வெற்றி பெற்ற இடங்கள்-10
பெற்ற மொத்த வாக்குகள்-54,84,111
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-69
வெற்றி பெற்ற இடங்கள்-43
பெற்ற மொத்த வாக்குகள்-2,20,70,614
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 53
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,75,54725

(15) 2009-CPI-போட்டியிட்ட இடங்கள்-56
வெற்றி பெற்ற இடங்கள்- 4
பெற்ற மொத்த வாக்குகள்-59,51,888
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்டஇடங்கள்-82
வெற்றி பெற்ற இடங்கள்-16
பெற்ற மொத்த வாக்குகள்-2,22,19,111.
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்:20
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,81,70,999

(16) 2014-CPI-போட்டியிட்ட இடங்கள்-67
வெற்றி பெற்ற இடங்கள்-  1
பெற்ற மொத்த வாக்குகள்-43,27,460
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-93
வெற்றி பெற்ற இடங்கள்-  9
பெற்ற மொத்த வாக்குகள்-1,79,88,955
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்: 10
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-2,23,16,415

(17) 2019-CPI-போட்டியிட்ட இடங்கள்-49
வெற்றி பெற்ற இடங்கள்-2
பெற்ற மொத்த வாக்குகள்-35,76,184
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்டஇடங்கள்-69
வெற்றி பெற்ற இடங்கள்-3
பெற்ற மொத்த வாக்குகள்-1,0744908
இரண்டு கட்சிகளின் மக்களவை இடங்கள்:5
இரண்டு கட்சிகளின் மொத்த வாக்குகள்-1,43,21092

(18) 2024-CPI-போட்டியிட்ட இடங்கள்-30
வெற்றி பெற்ற இடங்கள்-2
பெற்ற மொத்த வாக்குகள்-31,59,184
மார்க்சிஸ்டுகள் போட்டியிட்ட இடங்கள்-52
வெற்றி பெற்ற இடங்கள்-4
பெற்ற மொத்த வாக்குகள்-1,13,42,553
CPI(ML)-போட்டியிட்ட இடங்கள்: 7
வெற்றி பெற்ற இடங்கள்:2
பெற்ற மொத்த வாக்குகள்:17,36,771
மூன்று கட்சிகளின் மக்களவை இடங்கள்:8
மூன்று கட்சிகளின் மொத்த வாக்குகள்-1,62,36,508

இதுவரை 1952 முதல் 2024 வரை நாடாளுமன்றத்திற்கு 18 தேர்தல்கள் நடைபெற்று இருக்கின்றன. மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம் கீழ்க்காணும் வகையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 1952-499; 1957-494; 1962-494; 1967-520; 1971-518; 1977 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மக்களவையில் எண்ணிக்கை -543 என்றே இருந்து வருகிறது. 1951-52 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் மொத்தம் 37 கட்சிகள் போட்டியிட்டன. அவற்றில் சுயேச்சைகள் உட்பட 19 கட்சிகள் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன. மீதமுள்ள 18 கட்சிகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சுயேச்சைகள் உட்பட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 122 கட்சிகள் போட்டியிட்டன. இவற்றில் 24 கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 98 கட்சிகளிலிருந்து பிரதிநிதிகள் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1951-52 ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடி, 2024 ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 97 கோடி. வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 5 மடங்கு உயர்ந்துள்ளது.

இதுவரை நடைபெற்ற 18 மக்களவைத் தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. நாம், அவர்கள் மக்களவையில் இடம் பெற்றுள்ள எண்ணிக்கையையும் வாங்கிய மொத்த வாக்குகுளையும் 18 மக்களவைத் தேர்தலுக்கும் இந்தக் கட்டுரையில் விவரங்களைத் தந்து இருக்கின்றோம். அதை ஒரு கண்ணோட்டம் விட்டால் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன.

இவற்றைப் பற்றியெல்லாம் கூறவும் எடுத்துரைக்கவும் இடதுசாரி சாய்வுள்ள பெரியார் இயக்கத்தைத் நாம் சார்ந்தவர் என்கிற பெருமை ஒன்றே போதுமானது. அதன் நோக்கமும் ‘விஞ்ஞான சோஷலிசம்’ என்கிற இலட்சியமே ஆகும். மேலும் இந்தியாவெங்கும் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ வளர வேண்டும் ஊருக்கு ஒருவர் இருக்க வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் இந்த நூற்றாண்டு விழாவின் போது எமது எண்ணத்தை வெளிப்படுத்தவே இக்கட்டுரையை எழுதுகின்றோம். இது தத்துவத்தின் பால் உள்ள பற்று என்று கூறி மேல் செல்ல விரும்புகின்றோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்டுக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி (எம்.எல்.) ரேடிகல் சோஷலிஸ்டுக் கட்சி, பார்வர்டு பிளாக் எனக் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவையில் மொத்தமாக 60க்கு மேல் அங்கம் வகித்தனர். சுமார் 5 கோடி வரை வாக்குகளைப் பெற்று இருக்கிறார்கள். முதல் தேர்தலின் போது மக்களவையில் இருந்த எண்ணிக்கை 2024 தேர்தலில் உறுப்பினர் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இந்த வெற்றி, தோல்விகளால் ‘முழுவெற்றி’யை அடைய முடியாது.

இந்த முறையைக் கொண்டே கேரளா, வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆளுங்கட்சிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வங்காளத்திலும், திரிபுராவிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தனர். நாம் இங்கே கம்யூனிஸ்டுகள் என்று இரு கட்சிகளையும் சேர்த்தே கூறுகின்றோம்.

இந்தியாவில் கால் நூற்றாண்டு காலம் கம்யூனிஸ்டுக் கட்சி மலர்ச்சி அடையவும் தனது புரட்சிகரத் தன்மையை வெளிப்படுத்தவும் பெருந்தியாகத்தோடு காலத்தை எடுத்துக்கொண்டது. இத்தனைக்கும் சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்குப் பின்பும் கம்யூனிஸ்டுக் கட்சித் தடை செய்யப்பட்டு இருந்தது. மேலும், மக்களுக்கு கம்யூனிஸ்டுக் கட்சியின் ஓர் அறிமுகம் கிடைத்தது. அதேநேரத்தில் அதன் எதிரிகளுக்கு பெரும் அச்சத்தை கொடுத்தது. முற்றிலுமாக கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டு விடுமோ என்கிற போது சாத்தியமான இங்கேயுள்ள வாக்கு முறையை ஏற்றுக் கொண்டு கட்சி செயல்படலாயிற்று. இது முழுமை இல்லை. ஒரு பகுதி பயணம்தான். ஆனால், இது கட்சி வளர்ச்சியின் அடுத்த கட்டப்பணிக்கு இட்டுச் சென்றது. அதன் ஈவுகளைத்தான் 18 மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளாகத் தந்து இருக்கின்றோம்.

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இடதுசாரி வேட்பாளர்களின் எண்ணிக்கை அல்லது முற்போக்கு கூட்டணியின் எண்ணிக்கை குறைந்தது 400 தொகுதிகளுக்கு நிறுத்தப்பட்டால்தான் கிடைக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் வாக்கு புலத்தை ‘சரியாக’ அறிய முடியும். அந்த நிலையைக் கட்சி(கள்) எட்ட வேண்டும். அதற்குரிய திட்டத்தை ‘பைய’ கட்சி(கள்) மேற்கொள்ள வேண்டும் என்பது எமது அவா. இது மலர்ச்சியைத் தொடர்ந்து, கட்சி வளர்ச்சிக்குள் புகுந்து தொடர்ச்சியை மேற்கொள்ளும் என நம்பலாம்.

இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2024 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அரசில் இருக்கும் பா.ஜ.க.37% வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது. எதிர்க்கட்சிகள் 63% வாக்குகள் வாங்கி இருக்கின்றன. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. ஒவ்வொரு வாக்கும் ‘பிரதிநிதித்துவ ஆளுமை’யில் பங்கேற்க வேண்டும். அந்த நிலை தற்போதைய தேர்தல் முறையில் இல்லை. அப்படியானால் இந்தத் தேர்தல் முறை மாற வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வரவேண்டும். இந்த முறையினால் ஒவ்வொரு வாக்கும் பயன் மதிப்பைப் பெறும். மக்களவையில் கட்சிகளின் இடங்களின் எண்ணிக்கை கூடும்.

தி.மு.க.வும் கம்யூனிஸ்டுகளும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை உடையவர்களாக இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வற்புறுத்தி வருவது மட்டும் போதாது. மக்களிடையே இந்த புதிய முறைக்கான பரப்புரையை கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் எந்தக் கட்சிகளிலும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள்- அதாவது பொதுமக்களிடையே முற்போக்கு எண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன. இவர்கள் பல கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களை ஒரே பதாகையின் கீழ் திரட்ட வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைப்பை இந்தியா முழுமையும் செயல்படும் வண்ணம்-ஒரே கருத்தை உடைய அமைப்புகளைக் கம்யூனிஸ்டுகள் திரட்ட முன்வரவேண்டும். இது மிகுந்த பெரும்பாடுகளை உடைய பெரும் பணி.

‘வீரத் தெலிங்கனா’ நூலினை வெளியிட்ட தோழர் வைகறை வாணன் 1990களின் இறுதியில் நம்மிடம் ஒரு பட்டியலைத் தந்தார். அப்பட்டியலின் படி நக்சல்பாரி இயக்கம் முதல் பிளவுண்ட கம்னிஸ்யூடுகளின் அமைப்புகளின் பெயர்களை நம்மிடம் தந்தார். சுமார் 20 அமைப்புகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஓர் அணியில் திரட்ட வேண்டும். பிளவு என்பது உலகில் உள்ள எல்லா இயக்கங்களுக்கும் பொதுவானதே.

இந்தியாவைப் பொருத்தவரை இப்போது கம்யூனிஸ்டுக் கட்சி மூன்று அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்தியாவின் நிலைமையைக் கருதி முன்னணித் தோழர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளை ஒரே அணியாக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழா நேரத்தில் நமது பேரவாவும் பெருவிருப்பமும் இதுவாகும். “பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒரு போதும் நிகழ்வதில்லை” என்பார் லெனின். கம்யூனிஸ்டுகளின் தொடர்ச்சிப் பணியில் இனி இங்கே மேலும் ஆக்கம் தெரியும் வண்ணம் பணி அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

ஆகவே ஒரே பதாகையின் கீழ் கம்யூனிஸ்டுகள் அணி திரண்டால்தான் இந்திய மண்ணின் மக்கள் எல்லாம் பெறுபவர்களாக ஆக முடியும். பேதமில்லாத பொதுவுடைமை சமுதாயத்தை அமைத்து வென்று காட்ட முடியும்.

புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்!
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button