தமிழகம்

பேரோசையாக மாறும் காலம் வரும்

டி.எம்.மூர்த்தி மேதின உரை

மத்திய சென்னையில், ஏஐடியுசி – சிஐடியு இணைந்து நடத்திய மே தின ஊர்வலம் அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டது. எல்லீஸ் சாலை வழியாக மேயர் சிட்டிபாபு தெருவை அடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் சிஐடியு சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஏஐடியுசி சார்பில் தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

டி.எம்.மூர்த்தி ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு;

40 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளிக்கு 500 ரூபாய் சம்பளம் என்றால், சூப்பர்வைசருக்கு 700 ரூபாய் சம்பளம், மேனேஜருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம். அடிநிலைத் தொழிலாளிக்கும் உயர்நிலை அதிகாரிகளுக்கு இடையே சம்பள வித்தியாசம் இரண்டு மடங்கு தான். இன்று அது 30 மடங்கு 40 மடங்கு என்றாகிவிட்டது. அடிமட்டத் தொழிலாளி, அதிகாரியைக் கேள்வி கேட்க முடியாது; தனது நியாயத்தை வலியுறுத்த முடியாது; வேலை நிரந்தரம் கிடையாது; வேலைக்கு வா என்றால் வரவேண்டும், வேண்டாம் என்றால் போய் விட வேண்டும். மொத்தத்தில் அவருக்கு மனிதனுக்குரிய மதிப்பே கிடையாது.

மனுதர்மம், வர்ணாசிரமம், சனாதனம் என்ன சொல்கிறது? உழைப்பவர்கள் எல்லோருமே சூத்திரர்கள். அதற்கும் கீழே பஞ்சமர்கள். இவர்கள் படிக்கவே கூடாது; கேள்வி கேட்கக் கூடாது; அவர்களுக்கு கூலி கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் போகலாம்; மேலிருக்கும் மூன்று வர்ணங்களுக்கு வேலை செய்வது சாவதே இவர்களுடைய பிறவிக் கடன்.

கார்ப்பரேட் கொள்கைகளும், மனுதர்ம, வர்ணாசிரமக் கொள்கைகளும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இணைகின்றன. இந்த இரண்டையும் சேர்த்து கடந்த 12 ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்து அமலாக்கி கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.

1881 ஆம் ஆண்டிலிருந்து நாம் போராடி 44 சட்டங்களை பெற்றோம். இவற்றுக்கு மூன்று அடிப்படைகள் தான்.

நான் வேலைக்குச் சேர்ந்து நிரந்தர தொழிலாளியானால், 58 வயது அல்லது 60 வயதில் ஓய்வு பெறும் வரை எனக்கு வேலை உண்டு என்ற வேலை பாதுகாப்பு.

வேலை பார்த்தால் மாதம்தோறும் சம்பளம் உண்டு. எனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என்பதற்கான கோரிக்கையை எனது சங்கம் முன்வைக்கும், அதன் மீது பேசித் தீர்த்து, உடன்பாடு காண வேண்டும், நியாயமற்றவகையில் முதலாளி மறுத்தால் நான் வேலை நிறுத்தம் செய்வேன், அரசிடம் முறையிட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தைக்குப் போவேன், நீதிமன்றகா கதவுகளையும் தட்டுவேன். இது சம்பளப் பாதுகாப்பு.

நான் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது வெறும் கையை வீசிக் கொண்டு செல்லக்கூடாது. எனக்கு ஒரு கௌரவமான முதுமைக் காலத்தை அமைத்துக் கொள்வதற்காக, எனக்கு கிராஜுட்டி என்ற பணிக்கொடை உண்டு; பிராவிடண்ட் பண்ட் உண்டு; 1995 பிறகு ஓய்வூதியமும் உண்டு. வேலை பார்க்கும் போது இஎஸ்ஐ மருத்துவ வசதி உண்டு. இது சமூகப் பாதுகாப்பு.

44 சட்டங்களை ரத்து செய்ததன் மூலம் மேற்சொன்ன உரிமைகள் அனைத்தும் மிகப்பெரும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளி என்று அங்கீகரித்தால் தானே இந்த பாதுகாப்புகள் எல்லாம் கிடைக்கும்? நீ காண்ட்ராக்ட் தொழிலாளி, அவுட் சோர்சிங், குறித்த காலம் மட்டுமே வேலைவாய்ப்பு பெறக்கூடிய, சட்டரீதியாக வெளியேற்ற முதலாளிகளுக்கு உரிமை உள்ள பிக்சட் டேர்ம் தொழிலாளி என்று இந்த நான்கு தொகுப்பு சட்டங்களும் என்னை சட்டத்திற்கு வெளியே நிறுத்துகின்றன.

1586 இல் சிகாகோவில் நடைபெற்ற மே தின ஊர்வலத்திற்கு பின்பு, ஆல்பர்ட் பார்சன்ஸ், அகஸ்டஸ் ஸ்பைஸ், அடால்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் எங்கல் என்ற நான்கு தொழிலாளர்கள் தூக்கிடப்பட்டார்கள்.

கழுத்தில் சுருக்கு கயிறு மாற்றப்பட்ட போது, அகஸ்டஸ் ஸ்பைஸ் சொன்னார்: “எங்கள் குரல் வளையை நெரிப்பதன் மூலம் எந்த மௌனத்தை உருவாக்க நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே மௌனம் உங்கள் காதுகளைக் கிழிக்கும் பேரோசையாக மாறுகிற காலம் வரும்”

ஆளரவமற்ற அந்தத் தூக்கு மேடைக்குள், இதைச் சொல்ல அவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்! 140 ஆண்டுகள் கழித்து, எல்லிஸ் ரோட்டில் ஊர்வலம் வந்து, மேயர் சிட்டிபாபு தெருவில் கூட்டம் நடத்தி இதைப் பேசுவோம் என்று அவர் நினைத்திருப்பாரா?

இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இதையேதான் பேசிக் கொண்டிருக்கிறது. அது ஒரு தனி மனிதனின் சொல்லல்ல, சத்தியத்தின் சொல்!

ஆர்எஸ்எஸ் மதவெறி, கார்ப்பரேட் பேரபாயத்தை, அதே நம்பிக்கையைக் கொண்டு தூள் தூளாய் உடைத்தெறிவோம். அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது!

மதுரைக்கு பக்கம் இருக்கும் திருப்பரங்குன்றத்தில், மதவெறி சக்திகள் தலைதெறிக்க ஆட்டம் போட்டன. மலை மீது இருக்கும் தர்காவை அகற்றுவோம், இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்றார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் தீர்ப்பாக எழுதி தர நீதிபதியையும் ஏற்பாடு செய்தார்கள்.

இன்று மதுரையிலே சித்திரை திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது. மீனாட்சி வேடமிட்டு இளம் பெண்கள் வலம் வருகிறார்கள். அதில் ஒரு மீனாட்சிப் பெண்ணை, ஒரு இஸ்லாமிய பெண் உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கும் காட்சி காணொளியாக வலம் வருகிறது. அதுதான் இந்தக் கேடுகெட்ட மத வெறியர்களை, பிடரியில் அடித்து விரட்டும் ஜனசக்தி!

தமிழ்நாட்டு மக்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். தேச விடுதலையும், பொதுவுடமைச் சித்தாந்தங்களும், திராவிட இயக்கங்களும் கலந்து களமாடிய மண் இது. அதனால் தான் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு 2023ல் சட்டம் கொண்டு வந்த போது அதனை எதிர்த்து நின்று திரும்ப பெற வைக்க முடிந்தது.

வெறியூட்டி மதத்தால் மக்களைப் பிரித்து, கார்ப்பரேட்டுகளுக்கு பாதம் தாங்கும் கொள்கைகள் தமிழ்நாட்டுக்குள் புகுந்து சீர்குலைக்க விடக்கூடாது என்பதற்காகவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை ஆதரித்தோம். ஆட்சிக்கான ஆதரவு என்பது உழைக்கும் மக்களை மக்களின் நலன்களைப் பலியிடுவதற்காகவோ அல்லது கடந்து செல்வதற்காகவோ அல்ல.

இங்கு தூய்மைப் பணியாளர்கள் போராடினார்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராடினார்கள், மருத்துவப் பணியாளர்கள் போராடினார்கள், அரசுப் பணியாளர்கள் போராடினார்கள், அப்போது நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று சில பதர்கள் நம்மைப் பார்த்து கேட்கின்றன.

இந்த போராட்டங்களை நடத்தியது யார்? பாஜகவா, அதிமுகவா, பாமகவா, நாதகவா? இந்தப் போராட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்தது, தலைமை தாங்கியது, சட்டமன்றத்தில் வாதிட்டது, அரசியல் அழுத்தம் கொடுத்தது, கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் கூட களம் புகுந்து கைதானது எல்லோருமே கம்யூனிஸ்ட்டுகள்.

மே நான்காம் தேதி, தேர்தல் முடிவு வரப்போகிறது. போட்டியிட்ட அணிகள் எல்லாம் அமைச்சர்கள் பட்டியலோடு, எந்த இடத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என்று சமூக வலைத்தளங்களில் உரையாடல் நடக்கிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டாயம் வெல்லும். யார் ஆட்சிக்கு வந்தாலும், உழைப்போர்களின் உரிமைகளை பாதுகாக்கிற, ஆபத்துகளை அகற்றுகிற, புதிய உரிமைகளை வென்றெடுக்கிற போராட்டங்களை இந்தச் செங்கொடி முன்னெடுக்கும்.

நம்மைச் சூழ்ந்திருக்கும் அபாயம் மிகப்பெரியது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது வெறும் முழக்கம் மட்டுமன்று. அதற்கு செயல் வடிவம் கொடுப்பது அவசியம். உழைப்பவர்கள் அனைவரையும் ஒன்று திரட்ட சிவப்புச் சிந்தனை உள்ளவர்கள் ஒன்றுபடுவது இன்னும் அவசியம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் கடந்த 45 ஆண்டுகளாக ஏஐடியுசி, சிஐடியு இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து மே தின பேரணி பொதுக்கூட்டங்களை நடத்துவது நடந்து கொண்டிருக்கிறது. “இந்தியா உலகிற்களிக்கும்” என்றான் பாரதி. இந்த ஒற்றுமையை தமிழ்நாடு இந்தியாவுக்கு அளிக்க வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுக்காக ஜனசக்தி வெளியிட்ட மலரில், பெருமைக்குரிய மூத்த தலைவர் எஸ்.ஏ. பெருமாள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் ஒன்றாக வேண்டும். அணிகள்தான் கட்சி எனும் பெரும் மாளிகையின் தூண்கள். அணிகள் ஒன்றுபடுவதையே விரும்புகின்றன.

ஒன்றுபடுவோம், நிச்சயம் வெல்வோம்! இடதுசாரிகளின் ஒற்றுமை, உழைப்பவர்களின் ஒற்றுமை ஓங்குக! கம்யூனிஸ்ட் ஐக்கியம் வெல்க!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button