நாடு கடந்த விடுதலைப் போராளி டாக்டர் அஷ்ரஃப்
கம்ரான் அஸ்தார்அலி எழுதிய கட்டுரையின் சுருக்கம்: ம.ராதாகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1930களின் இறுதியில் காங்கிரசுடன் நெருக்கமாக இருந்தது. 1940களில் அதிலிருந்து வேறுபட்ட அரசியல் நிலைப்பாட்டை படிப்படியாக உருவாக்கியது. முஸ்லிம் அரசியல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான பார்வையை முன்வைத்த முக்கிய சிந்தனையாளர் டாக்டர் குன்வர் முகம்மது அஷ்ரஃப் ஆவார்.
ஆனால் அந்தக் காலகட்டத்தின் பொதுவான வரலாற்று விவரிப்புகளில் அவரது பங்களிப்பு பெரிதாக முன்வைக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டதாகவே இருந்து வருகிறது.
மேவ் சமூகத்தின் தனித்துவம்
மேவாத் பிராந்தியத்தைச் சேர்ந்த ராஜ்புத் மரபைச் சேர்ந்தவர் டாக்டர் குன்வர் முகம்மது அஷ்ரஃப்.
பேரறிஞர், காலனிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் என்ற அடையாளங்களுடன் வாழ்ந்த டாக்டர் அஷ்ரஃப், இந்திய முஸ்லிம்களும் இந்துக்களும் ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற கருத்தை வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார். அந்த நிலைப்பாட்டுக்காக அவர் நாடு கடத்தல், சிறைத் தண்டனை, மற்றும் வரலாற்றில் புறக்கணிப்பு போன்ற பல துன்பங்களைச் சந்தித்தார்.
1903ஆம் ஆண்டு டர்யாபூரில் பிறந்த அஷ்ரஃப், தனது இளமைப் பருவத்தை அங்கேயே கழித்தார்.
1920ஆம் ஆண்டு எம்.ஏ.ஓ. கல்லூரியில் பட்டப்படிப்புக்காக மீண்டும் சேர்ந்தார். அந்த காலம் கிலாஃபத் இயக்கம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட காலம். இந்த இயக்கத்தை மௌலானா முகம்மது அலி ஜௌஹர் வழி நடத்தினார்; அதில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் இணைந்து, அன்னியப் பொருட்களை புறக்கணித்தல் மற்றும் சத்யாகிரகத்தின் மூலம் சுயாட்சி பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தினார்.
டாக்டர் அஷ்ரஃப் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததால், எம்.ஏ.ஓ. கல்லூரி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதி உதவியை ஏற்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார். இதற்கு பதிலடியாக கல்லூரி நிர்வாகம் இவரை வெளியேற்றியது. இந்த நீக்கமே, 1920 அக்டோபரில் எம்.ஏ.ஓ. கல்லூரிக்கு தேசியவாத மாற்றாக ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரி உருவாக காரணமாகியது. அஷ்ரஃப் மற்றும் அவரது நண்பர்கள் அந்த புதிய கல்வி நிலையத்தில் இணைந்தனர்.
ஆனால் 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த இரண்டு முக்கியச் சம்பவங்கள் ஒத்துழையாமை – கிலாஃபத் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஒன்று, சௌரி சௌரா சம்பவத்தில் கோபமடைந்த போராட்டக்காரர்கள் 22 போலீசாரைக் கொன்றதை அடுத்து மோகன்தாஸ் காந்தி சத்யாகிரகத்தைத் திரும்பப் பெற்றது. மற்றொன்று, துருக்கி புரட்சியாளர் முஸ்தபா கமால் அத்தாத்துர்க் ஒட்டோமன் கலீபகத்தை ரத்து செய்தது.
லண்டன் பயணம் — மார்க்சிய சிந்தனையாளரின் உருவாக்கம்
1927ஆம் ஆண்டு கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, அல்வார் அரசின் மகாராஜா ஜெயின் சிங்கை சந்திக்கும் வாய்ப்பை டாக்டர் அஷ்ரஃப் பெற்றார். அதன் மூலம் அஷ்ரஃப் இங்கிலாந்தில் பாரட் லா சட்டப் படிப்பில் சேர்ந்தார். அதே நேரத்தில் லண்டனிலுள்ள கீழைத்தேய, ஆப்பிரிக்க ஆய்வுக்கான பள்ளி என்ற கல்வி நிறுவனத்தில், மத்திய கால வரலாற்றில் முனைவர் பட்ட ஆய்வாளராகவும் இணைந்தார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஷாபூர்ஜி சக்லத்வாலா அவர்களின் ஆரம்ப வழிகாட்டுதலின் கீழ், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of Great Britain) இணைந்து, தேசியவாத அடிப்படையில் இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.
முஸ்லிம் கேள்வி — கம்யூனிஸ்ட் பதில்
பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இருந்த தொடர்பின் தாக்கத்தில், டாக்டர் அஷ்ரஃப் 1932-33 காலகட்டத்தில் உறுதியான மார்க்சியராக இந்தியாவுக்கு திரும்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், பி.சி.ஜோஷி தலைமையின் கீழ் அவர் இணைந்தார். 1935ஆம் ஆண்டு அவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
1936ஆம் ஆண்டு நேரு காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அஷ்ரஃப் அலகாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். அங்கு அவர் அரசியல் பிரிவு செயலாளராகவும், இந்திய தேசிய காங்கிரஸின் “முஸ்லிம் பிரிவு” பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.
1922ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டதால் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை முஸ்லிம் லீக் அரசியல் ஆதாயமாக பயன்படுத்த முடியும் என்று அஷ்ரஃப் குறிப்பிட்டார். மேலும் தனித்த முஸ்லிம் வாக்குச்சாவடிகளை நிராகரித்த நேரு அறிக்கையும், அதிகரித்த மதச்சார்பான பதற்றங்களும் அந்த அதிருப்தியை தீவிரப்படுத்தியதாக அவர் விளக்கினார். அதே நேரத்தில், முஸ்லிம்கள் காங்கிரஸின் முற்போக்கு அணிகளுடன் இணைய வேண்டும் என்பதாகவே இருந்தது. மார்க்சியராக, அரசியல் என்பது அடிப்படையில் வர்க்க நலன்களைச் சுற்றியே அமைந்துள்ளது; ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சுரண்டலுக்கு அதுவே காரணமாகிறது என்ற நிலைப்பாட்டை அவர் உறுதியாகப் பேணினார்.
1939ஆம் ஆண்டு அக்டோபர்–நவம்பர் மாதங்களில், இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆலோசனை இல்லாமல் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய பிரிட்டிஷ் அரசின் முடிவை எதிர்த்து, இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.
போரின் தொடக்க காலம் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் கூட்டுறவை சோதனைக்கு உட்படுத்தியது. ஆரம்பத்தில் இரு கட்சிகளும் இந்தப் போரைக் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராகவே கண்டனப்படுத்தின. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அதைவிடக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது — தேசியப் புரட்சி மற்றும் மக்கள் எழுச்சியின் மூலம் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. 1941க்குள் இந்த தீவிர நிலைப்பாட்டின் விளைவாக, பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரை கைது செய்தது. அவர்களில் டாக்டர் அஷ்ரஃப் உட்பட பலர் டேயோலி சிறை முகாம் எனப்படும் கடுமையான தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
1940களில், முஸ்லிம் லீக் முன்வைத்த பிரிவினை கோரிக்கையை (1940 லாகூர் தீர்மானம் மூலம் வெளிப்பட்டது) பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சி மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. இந்த மாற்றமான முஸ்லிம் அரசியல் சூழ்நிலைக்கு பதிலளிக்கும்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய அஷ்ரஃப் “தேசிய இனங்களின் உரிமை” மற்றும் “சுய நிர்ணய உரிமை” என்ற கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினார். பின்னர் இவை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அரசியல் திட்டங்களில் ஒன்றாக வளர்ந்தன.
இந்தியாவின் பன்முக மொழி மற்றும் மத மரபுகள் இந்திய அரசியலில் இரண்டு பெரிய கேள்விகளை முன்வைத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. ஒன்று இந்து–முஸ்லிம் பிளவு; மற்றொன்று மொழி அடிப்படையிலான மாநிலங்களின் கேள்வி. இந்தியா ஒரே நாடா? அல்லது இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்த தேசியங்களா? அதுபோல பெங்காலிகள் அல்லது தமிழர்கள் தனித்தோ, தன்னாட்சி கொண்ட மாநிலங்களோ பெற வேண்டுமா? என்ற விவாதங்கள் எழுந்தன.
1942 செப்டம்பரில், டாக்டர் அஷ்ரஃப் முன்வைத்த “சுய நிர்ணய உரிமை” கருத்தைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. இந்தியாவை ஒரே கலாச்சாரமாக அல்லாமல், பல்வேறு கலாச்சாரங்கள், மொழிக் குழுக்கள், தேசிய உணர்வுகள் இணைந்த ஒன்றாகக் காண வேண்டும் என்றே அதன் கருத்து. இந்த விரிவான பார்வையில், “பாகிஸ்தான்” கோரிக்கை என்பது தனித்த தேசியங்களுக்கான சுய நிர்ணயமும் ஜனநாயக உரிமைகளும் கோரும் கோஷமாகக் கருதப்பட்டது.
சுய நிர்ணய உரிமை என்றால் அதனுடன் இறையாண்மை, சமத்துவம் மற்றும் தேவையான போது பிரிவதற்கான உரிமையும் இணைந்தே வரும் என்று கட்சி விளக்கியது. இந்தக் கோணத்தின் அடிப்படையில், 1945–-46 தேர்தலுக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை உடனடி சுதந்திரத்தையும் அதிகார மாற்றத்தையும் மட்டும் அல்லாமல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அரசுகளுக்குப் பதிலாக 17 இடைக்கால “இறையாண்மை கொண்ட” தேசியச் சபைகளுக்கு அதிகாரம் மாற்ற வேண்டும் எனக் கோரியது.
பிரிவினைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதற்காக இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தது.
நாடு இல்லாதவர்
பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட காலத்தில் வெடித்த வன்முறை மேவாத் பகுதியையும் விட்டு வைக்கவில்லை. பல தலைமுறைகளாக இணைந்து வாழ்ந்த சமூக ஒற்றுமை முறிந்தது; பன்முக மத பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வைக்கப்பட்டனர். இதன் பின்னணியில், டாக்டர் அஷ்ரஃப் மற்றும் சயித் முதலபி மத கலவரங்களைத் தூண்டியதாக காவல்துறை குற்றம் சாட்டியது. அவர்களை கைது செய்ய
வழக்கு தொடுக்கப்பட்டதால், தற்காலிகமாக பாகிஸ்தான் செல்ல தீர்மானிக்கப்பட்டது.
அஷ்ரஃப் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்; மதக் கலவரங்களை தூண்டியவர் என்ற குற்றச்சாட்டுகளுடன், அவரது பெயர் அங்குள்ள உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கு சென்ற சில காலத்திலேயே, உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்தபோதும், அவர் கராச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. பின்னர் பாகிஸ்தான் அரசு அவரை விடுவிக்க சம்மதித்தாலும், அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதே நேரத்தில் இந்திய அரசு அவரை மீண்டும் நாட்டுக்குள் வர அனுமதி வழங்கவில்லை. இதனால், பிரிட்டிஷ் குடியுரிமை கொண்டவராக அவர் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இங்கிலாந்தில் இருந்த காலத்திலும் டாக்டர் அஷ்ரஃப் உடல்நலம் சீராக இல்லை. இருந்தாலும், மத்திய கால இந்திய வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்வதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைக்கும் வரலாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். 1949 முதல் 1954 வரை ஐந்து ஆண்டுகள் அங்கு இருந்த பிறகு, பிரிட்டிஷ் குடியுரிமையுடன் ஆறு மாத விசாவை பெற்று இந்தியாவுக்கு திரும்பினார். இந்தியாவில் தங்க அனுமதி பெற தனது நண்பரும் வழிகாட்டியுமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் உதவியை நாடினார். ஆனால் விசா காலம் முடிந்தபோதும் அரசு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை.
பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் காஷ்மீரில் இருந்து அந்தப் பகுதியின் வரலாற்றை எழுதும் பணியில் ஈடுபட்டார். அதன் பின் கிரோரி மால் கல்லூரியில் மத்திய கால வரலாற்றின் வருகைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1960ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், அவர் கிழக்கு பெர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்துக்கு சென்று ஆராய்ச்சி செய்து, நடுத்தரகால இந்திய வரலாற்றில் வருகை பேராசிரியராக பணியாற்றினார்.
பிரிட்டிஷ் ஆட்சியால் ஊக்குவிக்கப்பட்ட மத அடிப்படையிலான அரசியலால், இந்தியா பிரிக்கப்பட்டது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். அதே சமயம், காலனிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகப் போராடும் சூழலில், முகமது அலி ஜின்னா மற்றும் மோகன்தாஸ் காந்தி ஆகியோருக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கொள்கையையும், முஸ்லிம் லீக்கின் வளர்ந்த ஆதரவையும் அரசியல் நிஜமாக ஏற்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அரபு, பாரசீக, உருது மொழிகளில் புலமை பெற்ற அறிஞர், கவிதை, சிறுகதை, நாடகங்கள் எழுதியவர்; கவர்ச்சிகரமான பேச்சாளர் — இப்படியான பல அடையாளங்களுடன் வாழ்ந்த டாக்டர் அஷ்ரஃப், 1962 ஜூன் 7ஆம் தேதி கிழக்கு பெர்லினில் இதயத் தாக்கத்தால், தமது 59 வயதில் மரணமடைந்தார்.
அவர் பெர்லின்-ப்ரிட்ரிச்ஃபெல்டே பகுதியில் உள்ள சோஷலிஸ்ட்களின் நினைவுச் சுடர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஃபாசிசத்துக்கு எதிராகவும் சோஷலிசத்திற்காகவும் போராடிய பல புரட்சியாளர்களுடன் அவர் அங்கு நினைவாக நிலைத்து நிற்கிறார்.
