
142 கோடி மக்களை கொண்ட மாபெரும் தேசமான, இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். நாட்டின் பிரதமர் என்பதனை அவ்வப்போது மிக வசதியாக மறந்து போய் விடுகின்றார்.
ஆர்.எஸ்.எஸ். நினைப்பதை யும் விரும்புவதையும் நிறைவேற்றக்கூடிய வராக, அவ்வமைப்பின் அடியாள் போன்று செயல்படுகிறார்.
அவரது விருப்பங்களை நாடாளுமன்றத்தை பயன்படுத்தி சட்டப்பூர்வமாக நிறைவேற்ற துடியாய் துடிக்கின்றார்
அவரது துடிப்பு நிறைவேறவில்லை யெனில் தனது கோபத்தை கொந்தளிப்பாக வெளியிடுகின்றார்.
அவரது அல்லது ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பங்களை நாடு ஒருபோதும் ஏற்காது.
நமது நாடு ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்ட நாடு.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அதிகாரத்திற்கு வந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் கடந்த நாடாளுமன்ற (2024) பொதுத்தேர்தலில் அனுமதிக்கவில்லை.
இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ்.சும், மோடியும் உணர்ந்ததாக தெரியவில்லை.
கொள்கை, கோட்பாடுகளை சாக்கடையில் தூக்கி எறிந்து விட்டு, மோடி கும்பலுக்கு சந்திரபாபுவும், நிதிஷ்குமாரும் ஆதரவு தெரிவித்ததால் மோடி பிரதமராக கோலோச்சுகின்றார்.
20 ஆண்டுகாலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக விளங்கிய நிதிஷ் குமாரின் கதி என்ன ஆனது என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
சந்திரபாபுவுக்கும் நிதிஷ்குமார் நிலைதான் ஏற்படும் என்பதனை காலம் உணர்த்தும்.
பாபுவையும் – குமாரையும் கைப்பாவையாக்கிக் கொண்டு ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள மோடி, அவர்களைக் கொண்டே, அவர்களின் பலவீனங்களைக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். விருப்பங்களை செயல்படுத்த முனைகின்றார்.
அத்தகைய முயற்சி தான் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மேற்கொண்ட மோடியின் திட்டம்.
இத்திட்டத்தை நேரிடையாக நிறைவேற்ற முயன்றால் இயலாது என்பது அறிந்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதையும் கையில் எடுத்தார் மோடி.
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக குரல் கொடுத்து வரும் ஒரு பேரியக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகள் மற்றும் திமுக போன்ற ஜனநாயகக் கட்சிகள் என்பதனை அரசியல் அறிந்தோர் அனைவரும் அறிவர்.
33 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்போதுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தற்போது உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அதுவே நேர்மை! அத்தகைய நேர்மையை ஆழக் குழிதோண்டி புதைத்து விட்டு தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்திட மோடி மேற்கொண்ட சதியை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு முறியடித்தன.
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பது மோடி- அமித்ஷா கம்பெனிகளுக்கு தெரியாத ஒன்றல்ல- நன்கு தெரியும்-ஆனாலும், அரசியல் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடன், சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறக்கூடிய நேரத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் என்கிற பெயரால் நாடகம் ஆடி – ஆட்டம் தோற்றுப் போனது மட்டுமல்ல – அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு, அம்மணமான ஆத்திரத்தில் பொங்கி வழிகின்றார் மோடியார்!
நாடாளுமன்ற தொகுதிகளின் தற்போதைய எண்ணிக்கையை விட 307 தொகுதிகள் அதிகரிப்பதன் மூலம், நாட்டையே தன்வயப்படுத்திக் கொள்ளலாம் என்கிற நப்பாசை.
அந்த நப்பாசை நிறைவேறிவிட்டால் அதனைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அஜண்டாக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமாக நிறைவேற்றி, நாட்டின் ஜனநாயகத்தை, அரசியலமைப்பு சட்டத்தை, மதசார்பின்மை கொள்கை என அனைத்தையும் ஆழக் குழிதோண்டி புதைத்து விட முடியும் என்கிற பேராசை.
இப்பேராசையை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் ‘ஒரே நாடு’, ‘ஒரே கட்சி, ‘ஒரே ஆட்சி’, ‘ஒரே மொழி’ என “ஒரே-ஒரே” எனக் குதூகலிக்கலாம் என்கிற பெரும் கனவு!
கனவு கலைந்து போய்விட்டது – பகற்கனவாய் முடிந்து போய்விட்டது என்கிற வேதனையில் – வெறுப்பில் – அருவறுக்கத் தக்க முறையில் அள்ளி விடுகின்றார் மோடியார்.
தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதியில்தான் மோடி பெரும் பிதற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
மோடியின் பிதற்றலுக்கு முன்னதாக, அவர் தேர்ந்தெடுத்த வாரணாசி – அதுதான் காசி எப்படி இருக்கின்றது என்று அதன் பெருமைகளை திரை நட்சத்திரம் சாரதா கூறுகின்றார்.
“நிமஜ்ஜனம்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சாரதா, தான் கண்ட காசி பற்றிச் சொன்னார்:
“காசிக்குப் போனால்தான் கருமம் தீரும் என்பார்கள். ஆனால், கங்கையில் சாம்பலைக் கரைப்பதும், அருகிலுள்ள சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதும். மிதக்கும் சவங்களைக் கழுகு, காக்கைகள் கொத்தித் தின்பதும், அதே நீரில் ஸ்நானம் செய்வதும் ரொம்ப மன வேதனையாக இருக்கிறது.
காசி விஸ்வநாதரை தரிசனம் பண்ணப் போனபோது கோட்டும் ஸ்வெட்டரும் போட்ட வயதான ஒருவர் பீடி குடித்துக் கொண்டிருந்தார். அவர்தான் பூசாரியாம். அவர் புஷ்பங்களை நம்மிடம் இடது கையினால் வாங்கி, வலது கையினால் சாமி பக்கம் வீசுகிறார். அதையெல்லாம் பார்த்து மனசு வெறுத்துப் போச்சு. தென்னிந்தியக் கோயில்களில் இருக்கும் சுத்தம், வட இந்தியக் கோயில்களில் இல்லையே என்று வருத்தம் அடைந்தேன்” (ஆனந்த விகடன் 6.5.2026, பக்கம்-53)
இத்தகைய புனிதமான இடத்திலிருந்து தான் மோடி உரையாற்றுகின்றார்,
“உத்தரப்பிரதேசத்துக்கு எதிரானவர்கள், சமாஜ்வாதி வளர்ச்சிக்கு எதிரானது மட்டுமல்ல, பெண்களுக்கும் விரோதமான கட்சி, உத்தரப்பிரதேசத்திலிருந்து வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்று அவர்கள் இம்மாநில மக்களை இழிவுபடுத்துகிறவர்களின் பக்கம் நின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை ஆட்சேபிக்கும் திமுக போன்ற கட்சிகளுடன் கைகோர்த்து, அதே நிலைப்பாட்டை எதிரொலித்தனர். இத்தகைய அரசியல் சமூகத்தை பிளவுபடுத்தி, வளர்ச்சியை தடுக்கும் போக்கை பிரதிபலிக்கின்றது” (தினமணி, 30.4.2026)
யார் பிளவுவாதி? – மோடியா? தி.மு.க.வா?
நாடாளுமன்றத்தில் அரசால் முன்வைக்கப்படும் மசோதா குறித்து கருத்து கூறவும் – அதன்மீது வாக்கெடுப்பில் பங்கு கொண்டு வாக்களிக்கவும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அளிக்கப்பட்ட உரிமையை பிரிவினைவாதம் என்கின்றார் பிரதமர் மோடி-
திரிசூலத்தை கையில் வைத்துக் கொண்டு அவர் சாதிக்க விரும்புவது என்ன?
நாட்டை ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – இத்தகைய ஒற்றைக் குறிக்கோளோடு செயல்படுபவர் நாட்டில் பிரதமராக இருக்க தகுதி உடையவரா?
உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கும், தமிழ்நாடு மாநில மக்களுக்கும் மோதலை உருவாக்கி அதன் மூலம் தன் அற்ப அரசியலை நிறைவேற்ற முயற்சிப்பவர் நாட்டின் பிரதமராக இருக்க தகுதி உடையவரா?
இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறுகின்ற மணிப்பூர் மாநிலத்தின் மக்களை இரு கூறாக்கி, மோத விட்டு மூன்றாண்டு காலமாக கைகொட்டி மகிழும் மோடி, தற்போது உத்தரப்பிரதேச மக்களையும் – தமிழ்நாட்டு மக்களையும் மோதவிட தூபம் போட்டுள்ளார்!
பிரதமரின் பிரிவினைவாத பேச்சை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.(தினமணி 30.5.2026)
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஏனைய அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவிக்க முன்வருவார்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கின்றோம்!
நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேரியக்கம் எண்ணிலடங்கா தியாகம் புரிந்த பேரியக்கம், சிறை, சித்திரவதை கண்ட பேரியக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிவினையை -மோதலை ஒருபோதும் அனுமதிக்காது.
மிகப் பெரும் பொறுப்பில் உள்ள ஒருவர் தான் வகிக்கும் பொறுப்பிற்கு மதிப்பளிக்காது, பொறுப்பற்ற முறையில் பேசும் – மோதலை உருவாக்கும் – பிரிவினையை உருவாக்கும் மோடி நாட்டின் பிரதமரா? பிரிவினைவாதியா?
நாட்டின் மீது அக்கறை கொண்ட நல்லோரே!
ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லோரே!
நல்ல தீர்ப்பை வழங்க முன் வாரீர்!
பொய்யை திரும்ப, திரும்ப கூறி உண்மையாக முயலும் வஞ்சகம் நிறைந்த கூட்டமாக மோடியின் கூட்டம் பவனி வருகின்றது.
ஆபத்து, பேராபத்து- நாட்டிற்கு என்றும் இல்லா பேராபத்து.