ShortNoticeதமிழகம்

பாசிசத்தை எதிர்க்க மக்களோடு இணைந்து நிற்போம்!

நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், வெவ்வேறு கட்சிகள் ஆட்சி நடத்தினாலும், மூன்றுக்கும் இடையில் ஒரு பொதுத்தன்மை உண்டு.

ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்புக்கு பாஜக வந்த பின்பு, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது.

அதிகாரங்களை ஒன்றியத்தில் குவித்தல், நீதிமன்றங்கள், புலனாய்வுத்துறை அமலாக்கத்துறை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை கட்டுப்படுத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றும் அமைப்புகளாக மாற்றுதல், நிதி, கல்வி, மருத்துவம், தொழிலாளர் பணி நிலை உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிய அரசின் முழு கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வருதல், பல்வேறு மொழிகள், பண்பாடு, உணவு, உடைகள், மரபுகளைக் கொண்ட பன்முகத் தன்மை கொண்ட இந்தியா என்ற கருத்தாக்கத்தை ஒதுக்கி வைத்து, ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றியமைத்தல், மாநிலங்களில் பேசப்படும் தொன்மை வாய்ந்த மொழிகளை ஓரம்கட்டி இந்தியை கட்டாயமாக பொது மொழியாக்குதல் என்று பல்வேறு வகைகளில் எதிர்ப்புகளை எல்லாம் ஒடுக்கி, இலக்கை அடைய வேகமாக பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இதற்கு எதிராக நின்றன.

இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லி ஆதிக்கத்துக்கும் இடையிலான போட்டி என்பது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மைய முழக்கமாக அமைந்தது.

‘டபுள் எஞ்சின் சர்க்கார்’ அமைய வேண்டும் என்ற தேனொழுகும் வார்த்தைகளில், தன்னை ஆளும் கட்சியாக ஏற்காத மாநிலங்களுக்கு நாங்கள் பாரபட்சம் காட்டுவோம் என்ற வன்மத்தைத் தான் பாஜக விதைத்தது.

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியைத் தர மறுத்தல், பேரிடர் நிதி மறுத்தல் உள்ளிட்ட ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தியதை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பரப்புரையில் ஆழமாக கொண்டு சென்றது. ஒன்றிய அரசு ஆதிக்கத்தை எதிர்த்ததால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழப்புகள் நிறுத்தப்பட்டனவே தவிர, அந்த எதிர்ப்புகளால் தமிழ்நாடு அடைந்த நன்மைகள் போதிய அளவுக்கு வெளிவரவில்லை.

கல்வி மேம்பாடு, அனைவருக்கும் எட்டும் வகையில் மருத்துவம், நல்ல போக்குவரத்து வசதி, மிகவும் விரிவான பொது விநியோகம், சமூகப் பதற்றமில்லாத அமைதிச்சூழல் ஆகியவை தமிழ்நாடு அடைந்த நன்மைகள் ஆகும்.

வட மாநிலங்களுக்கு சென்று, அங்கு இந்தத் துறைகள் எல்லாம் எப்படி பாழ்பட்டு கிடக்கின்றன என்பதை அறியாத மக்கள், இந்த மேம்பாடுகளைப் பற்றி, ஒப்பீட்டளவில் உணர முடியாமல் போனது வியப்பில்லை.

இவற்றைப் பற்றிய செய்திகள் மக்களை சரியாக சென்றடையவில்லையா? அல்லது இவையெல்லாம் பொருட்டானவை அல்ல என்று மக்கள் கருதினார்களா?

எதற்கெடுத்தாலும் ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்து நிற்கிறார்கள், அதனால் தமிழ்நாடு பல இழப்புகளை சந்திக்கிறது என்று பாஜகவும் அதனோடு அணி சேர்ந்தவர்களும் பரப்புரை செய்ததை மக்கள் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்களா? என்பவை எல்லாம் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன.

ஆர்எஸ்எஸ், பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதும் அவசியம். அதன் கொள்கைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. அதில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் எதிர்த்து நின்றால் போதாது.

மாநிலத்துக்குள், ஆட்சியின் மீது ஒவ்வாமை ஏற்பட்ட விஷயங்களும் உண்டு. குறிப்பாக தொழிலாளர் துறையில் நிறைய பின்னடைவுகள்.

தூய்மைப் பணியாளர், சாம்சங் தொழிலாளர், ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டங்கள் ஆகிய வெளி உலகத்திற்கு தெரிந்த போராட்டங்கள் மட்டுமின்றி, ஏராளமான போராட்டங்களில் தொழிலாளர்களுக்கு அனுசரணையான போக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தொழிலாளர்களுக்கு உண்டு.

அந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நின்றது கம்யூனிஸ்டுகளாக, திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களாக இருக்கலாம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை எட்டுவதற்கு, அந்தத் தலைவர்களாலும் கூட வழி காண முடியவில்லை என்ற உணர்வு சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களிலும், மாநிலம் முழுவதிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மிகப்பெரும்பான்மையான தொழிலாளர்களை ஆட்சியிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டது.

பணி நியமனம், பணியிட மாற்றம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றில் உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கடினத்தன்மை பல குடும்பங்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்தது.

நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாட்கள் குறைக்கப்பட்டது போலவே, தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவை கூட்டங்கள் நடக்கும் நாட்கள் குறைக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட விவாதங்களில் பங்கேற்க உரிய வாய்ப்பு அளிக்கப்படாத சூழ்நிலையும் தொடர்ந்தது.

இப்போது சட்டப்பேரவைக்கு புதியவர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துவோம். தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு ஏற்ப கடமையாற்றுவார்கள் என்று நம்புவோம்.

சென்னை மாகாணமாக இருந்தபோது, 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆளுநர் அழைத்தார். சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ராஜகோபாலாச்சாரியார், உள்நுழைக்கப்பட்டு முதல்வரானார்.

அதற்குப் பின் இப்போதுதான் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஆளுநர் எவ்வாறு நடந்து கொள்வார், அவரை ஆர்எஸ்எஸ், பாஜக எப்படி இயக்கப் போகிறது? ஆட்சி அமைத்த பின்பும் ஆளுநர் வழியாக எவ்வாறு ஆட்டம் காட்டப் போகிறார்கள்? என்பதை வெகு சீக்கிரத்தில் பார்க்கப் போகிறோம்.

கேரளத்தில், இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி நடத்திய இடது ஜனநாயக முன்னணி இப்போது எதிர்க்கட்சியாகி இருக்கிறது. தொழிலாளர் சட்ட தொகுப்புகளை அமுல் நடத்த மாட்டோம் என்று அந்த அரசு அறிவித்த துணிச்சல், புதிதாக அமையப்போகும் அரசுக்கு இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி.

மேற்கு வங்கத்திலோ, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், இடதுசாரிகள் என எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிந்து போக, பிஜேபி ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறது.

மதவெறியூட்டி மக்களைப் பிரித்து, ஒருவருக்கு எதிராய் மற்றவரை நிறுத்துவதையே அதிகாரத்தை கைப்பற்றும் உத்தியாகக் கொண்ட, கார்ப்பரேட்டுகளுக்கு பாதம் தாங்குகிற, ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றிய அரசை உறுதியாக எதிர்த்து நிற்பதற்கு தயங்காத, மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை அந்த மாநில அரசுகள் ஆற்றி வந்த கடமை, இப்போது பொது மக்களின் தோள்களில் விழுகிறது. மக்களோடு சேர்ந்து நிற்போம், அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button