
விமானத்திலிருந்து, அமெரிக்கக் கொடி போர்த்திய சவப்பெட்டிகள் இறக்கப்படுகின்றன. ஈரானுடனான போரில் உயிர் நீத்த அந்த அமெரிக்க வீரர்களின், நன்கு உடை அணிந்த குடும்பங்கள், அந்தப் பெட்டியின் மீது கவிழ்ந்து கதறுகின்றன.
மறுபுறம் ஈரானில், கை கால் சிதைந்து போன தனது குடும்பத் தலைவனின் உடல் மீது, உடலெங்கும் கரி படிந்த, ஆடை கிழிந்த குடும்பங்கள் கதறி அழுகின்றன.
இழப்பு, இழப்பு தான். இறந்தது அமெரிக்கராக இருந்தால் என்ன, இஸ்ரேலியரானால் என்ன, ஈரானிய மக்களானால் என்ன? அனைத்துமே துயரம் தான்.
எந்த நாடானாலும் போரில் இறப்பது சாதாரண மக்கள் தான்! இதற்கான காரணம் என்ன? ஏகாதிபத்திய போர் வெறி, வளங்களின் மீதான ஆதிக்கம், உலகத்தின் மீதான அரசியல் ஆதிக்க வெறி.
கேளிக்கைக்காக (Fun) குண்டு போட்டேன் என்று, கொஞ்சமும் குற்ற உணர்வு இன்றி, சொல்கிறான் கொடூர நெஞ்சினன் டொனால்ட் ட்ரம்ப்!
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டுள்ள தாக்குதல் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் பொருளாதார பாதிப்புகள்
முதலாவதாக உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்து விட்டது. ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் எங்கு குண்டு விழுமோ என்ற அச்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. சுற்றுலா, வர்த்தகத் துறைகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளன.
அமெரிக்கா கனவில் மண்
ஈரான் மீதான தாக்குதலுக்கு, அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (காவியச் சீற்றம்) என்று பெயர் வைத்துள்ளது. பிப்ரவரி 28ல் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் ஈரானின் பெருந்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
ஆனால், அவரது மகன் மொஜ்தபா கமேனி பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு விட்டார்.
ஈரானின் ராணுவம் (ஐஆர்ஜிசி) 20 ஆண்டுகளுக்கு மேலாக போர் ஆயத்தங்களில் இருந்தது. அது ஒற்றைத் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்படாமல், பகிர்வு அதிகாரத்துடன் கட்டமைக்கப்பட்டிருந்தது. கடுமையான எதிர்தாக்குதலை அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் சந்திக்கின்றன.
தலைவரைக் கொன்று விட்டால் எளிதில் வெற்றி என்ற அமெரிக்காவின் கனவில் மண் விழுந்தது.
ஈரானின் ஏவுகணைத் தளங்கள், அணுசக்தி மையங்களை அமெரிக்கா சேதப்படுத்தியிருந்தாலும், ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் அமெரிக்காவின் முழுமையான வெற்றியைத் தடுத்துள்ளன.
துணைக்கு வர ஆள் இல்லை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் தங்களுக்குப் பணியக்கூடிய ஒரு புதிய தலைமையைக் கொண்டுவர விரும்புகிறார். “ஈரானிய மக்களே கொடுங்கோன்மை ஆட்சியை மாற்றியமையுங்கள்” என்று அமெரிக்கா ஆசை வார்த்தை காட்டியது. அதற்கு ஈரானிய மக்கள் இணங்கவில்லை.
அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் போரில் பங்கேற்க முன்வரவில்லை. போர் நீண்டு செல்வது, அமெரிக்காவிற்கு உள்ளூர அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்யும் பிரான்ஸ், பிரிட்டன், தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள், அந்த நீரிணையை திறப்பதற்கு தன்னுடன் ஒத்துழைக்குமாறு அமெரிக்கா கேட்டது. அவை வரவில்லை. அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் அவற்றுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் தவிர்த்த மற்ற நாடுகளுக்கு வழியை அடைப்பதில்லை என்று ஈரான் அறிவித்திருக்கிறது
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக உதவாவிட்டால் சீனாவுக்கு செல்லும் பயணத்தை ஒத்திவைக்க நேரிடுமென டிரம்ப் மிரட்டிப்பார்த்தார்.
போர்ப் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சீனா வலியுறுத்தி, டிரம்ப்பின் மிரட்டலை இடது கையால் ஒதுக்கி விட்டது.
இஸ்ரேலில் மக்களின் போராட்டம்
ஈரான் மக்கள் தமது அரசுக்கு எதிராக போராட்டங்கள் ஈடுபடுவார்கள் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் இந்தக் கடினமான காலத்தில் தமது உள்நாட்டு பிரச்சினைகளை விட்டு விட்டு மக்கள் அங்கு ஓரணியாக நிற்கிறார்கள்.
அதற்கு மாறாக, இஸ்ரேல் நாட்டின் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ளனர். டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்தப் போர் தமது பாதுகாப்பை கேள்விக்குறியாகி விட்டதாகவும், பணயக் கைதிகளை விடுவிக்கத் தவறியது மற்றும் ஊழல் புகார்கள் காரணமாக நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தத்தினால் ஏற்படும் பொருளாதாரச் சுமை மற்றும் உயிரிழப்புகளை மக்கள் விரும்பவில்லை.
அமெரிக்க மக்களின் போராட்டங்கள்
பெரும்பான்மையான அமெரிக்க மக்களும் போரை முற்றிலுமாக எதிர்க்கின்றனர்.
ஈரானுடனான போர் தேவையற்றது என்றும், இது அமெரிக்க வீரர்களின் உயிரைப் பறிப்பதோடு பொருளாதாரத்தைச் சீரழிக்கும் என்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
நியூயார்க், வாஷிங்டன் டி.சி., லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, பிட்ஸ்பர்க் உட்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
⚫ ஈரான் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
⚫ மத்திய கிழக்கில் புதிய போர்களைத் தவிர்க்க வேண்டும்.
⚫ போருக்காகச் செலவிடப்படும் சுமார் 1 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 92 லட்சம் கோடி ரூபாய்) நிதியை கல்வி, மருத்துவம் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்
என்று மக்கள் கோருகிறார்கள்
ஈரான் தாக்குப்பிடிக்குமா?
ஈரான் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், நூற்றுக்கணக்கான ஏவுகணைத் தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஈரான் தனது ‘நிழல் ராணுவ’ பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் ஏவுகணைகள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கி வருகின்றன. ஈரான் சரணடையத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
பாதிக்கப்படும் இந்தியா
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதியையே நம்பியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்படும் எந்தவொரு சிறு சலனமும் இந்தியாவின் சமையலறை வரை எதிரொலிக்கும்.
🔴 கச்சா எண்ணெய் விலை
ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 140 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹15 முதல் ₹25 வரை உயரக்கூடும்.
🔴 போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால், காய்கறிகள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 10% முதல் 15% வரை உயர்ந்து, சாமானிய மக்களின் மாத பட்ஜெட்டைப் பெரிதும் பாதித்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
🔹 சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.43 என்ற நிலையை எட்டியுள்ளது. இது இறக்குமதியாகும் மின்னணு பொருட்கள், இயந்திரங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
🔹 பங்குச் சந்தை சரிவு: யுத்தம் தொடங்கியதில் இருந்து, மும்பை பங்குச் சந்தை (Sensex) மற்றும் தேசிய பங்குச் சந்தை (Nifty) ஆகியவை சுமார் 8% முதல் 10% வரை சரிவைக் கண்டுள்ளன.
🔹 முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குகளிலிருந்து எடுத்து, பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,17,200த் தாண்டி புதிய உச்சங்களுக்கு செல்கிறது
🔹 ஏற்றுமதி, வணிகம் பாதிப்பு; தேயிலை மற்றும் பாசுமதி அரிசி ஆகியவை ஈரானுக்கான நமது முக்கிய ஏற்றுமதிகள். இப்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
வளைகுடாவில் இந்தியர்கள்
சுமார் 80 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். போர் விரிவடைந்து சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் வரை பரவினால், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பது கடினமானதாக மாறும். மேலும், அவர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி (Remittances) குறைவது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில்…
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் நாடுகளுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான முட்டைகள் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 70 க்கு மேற்பட்ட கண்டெய்னர்களில், சுமார் 6 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கியுள்ளன.
திருப்பூர் தனது 80% உற்பத்தியை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல வேண்டிய கப்பல்கள் இப்போது ஆப்பிரிக்காவைச் சுற்றி செல்வதால், பயண காலம் 20 – 30 நாட்கள் அதிகரித்துள்ளது.
கோடைகால ஆடை ரகங்கள் உரிய நேரத்தில் செல்லாததால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்துள்ளன. இதனால் பல கோடி மதிப்பிலான ஆடைகள் குடோன்களில் தேங்கியுள்ளன.
கோயம்புத்தூரிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் 10,000 கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ஜபெல் அலி’ துறைமுகத்திற்குச் செல்ல வேண்டிய பல சரக்குக் கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தென்னை நார் பொருட்கள் மற்றும் கயிறு ஏற்றுமதி சுமார் ரூ100 கோடி அளவிற்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தேங்கி விட்டன
இந்தப் பாதிப்புகள் அனைத்தும் சாமானிய இந்தியர்களின் தலை மீது தான் ஏறும். போரின் சுமை மீண்டும் உழைப்பாளிகளின் தோள்களில்!
இந்தப் போர் யாருக்காக? உறுதியாக மக்களுக்காக இல்லை.
ஆயுத கம்பெனிகளுக்காக, எண்ணெய் அரசியலுக்காக, உலக ஆதிக்கத்துக்காக!
இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மத்திய கிழக்கில் அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும்.
ஏகாதிபத்திய தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
உலக மக்கள் ஒன்றிணைந்து, போருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

