கட்டுரைகள்

வெற்றி முழக்கம் எழுப்புவோம்… முடிவான போர்களம் நோக்கி அணிவகுப்போம்

நா.பெரியசாமி

கடந்த ஓராண்டுக்கும் மேலாக 2020 நவம்பர் 26 – முதல் 2021 நவம்பர் 11 வரை தலைநகர்  டெல்லியை சுற்றிலும்  நீடித்து வந்த விவசாயிகளின் அறவழிப்  போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகள் வெற்றி  முழக்கத்துடன் 11.12.2021 அன்று அவரவர் வீடு திரும்புகிறார்கள்.

விவசாயிகள் தொடங்கிய போராட்டத்தை கூர்ந்து கவனித்து வந்த உலக நாடுகள், இந்திய உழவர்கள் ‘இமாலய வெற்றி’ பெற்றிருப்பதாக பெருமை பொங்க வாழ்த்துக் கூறி பாராட்டி வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளும், சமூக செயல்பாட்டாளர்களும், குடிமை சமூக உரிமை ஆர்வலர்களும்  ஆனந்த கூத்தாடி வெற்றி விழா எடுத்து வருகின்றனர். டெல்லி சலோ இயக்கத்திற்கு அழைப்பு விடுத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சாவும் (எஸ்கேஎம்) இதன் தாய் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் (ஏஐகேஎஸ்சிசி) இந்த வரலாற்று சிறப்புப் பெற்ற போராட்டத்தை வழிநடத்தி வந்தன. இந்த அமைப்புகளில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் இணைந்து, ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட்டு வருகின்றன.

1936 ஏப்ரல் 11 ஆம் தேதி லக்னோ நகரில் சகஜானந்த சுவாமிகள் தலைமையில் உருவான அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொடங்கி அண்மையில் உருவான அமைப்புகள் வரை அனைத்தும் சம உரிமை பெற்ற அமைப்புகளாக, ஒரு குடையின் கீழ்  ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

எங்கிருந்து தொடங்கியது ?

மத்திய பிரதேசத்தில் உள்ள மான்ட்சவுர் மற்றும் முல்டாய் ஆகிய இரு இடங்களும் விவசாயிகள் அடர்த்தியாக வாழும் பகுதிகளாகும். இங்கு விவசாயம் தான் அடிப்படையான ஒரே தொழிலாகும். இதனையட்டி தான் அனைவருக்கும் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது. தாப்தி நதிநீர் ஆதாரம் இருப்பினும் மான்ட்சவுர் மற்றும் முல்டாய் பகுதிகள் வறட்சி மற்றும் புயல் மழை என இயற்கை பேரிடர்களை மாறி, மாறி எதிர்கொள்ளும் பகுதிகளாகும்.

1997 ஆம் ஆண்டின் இறுதியில் கடுமையான இயற்கை பேரிடரைச் சந்தித்த விவசாயிகள் வாழ்க்கை நிலைகுலைந்து போனது. அரசின் ஆதரவில்லாமல் மறுவாழ்வுக்கு கதியேதும் இல்லை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பயிர் சாகுபடி செய்து பெரும் சேதாரத்துக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செலவுகளுக்காக பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

விவசாயிகள் போராட்ட முன்னணி (சிசான் சங்கராஷ் மோர்ச்சா) அமைந்தது. இதன் அமைப்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுனிலம் செயலாற்றினர். போராடி வந்த விவசாயிகள் முன்னணி 1997 டிசம்பர் 25 முதல் முல்டாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டம் தொடங்கிய காலத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த அரசுக்கு திக்விஜய் சிங் தலைமை தாங்கி முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். திரு திக்விஜய் சிங் முற்போக்கு சிந்தனையாளர், சமூகநீதி போராட்டத்தில் ஆர்வம் மிக்கவர். மதச்சார்பற்ற கொள்கையாளர் . எல்லாம் சரி ஆனால் அவர், தனியார் மயம், தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் சேவகர். இதன் காரணமாக போராடி வந்த விவசாயிகளை அவர் அழைத்துப் பேசி தீர்வு காணும் அணுகுமுறையை  கடைபிடிக்கவில்லை. மாறாக போராட்டக் களத்தில் விவசாயிகளால் அமைக்கப்பட்ட பந்தல்கள் காவல்துறையினரைக் கொண்டு பிரித்து எறியப்பட்டது. ஆனாலும் திறந்த வெளியில் விவசாயிகள்  போராட்டம் உறுதியுடன் தொடர்ந்தது.
ஆத்திரமடைந்த திக்விஜய் சிங் அரசு 1998 ஜனவரி 12 ஆம் தேதி நிராயுதபாணிகளாக போராடி வந்த விவசாயிகள் மீது காவல்துறை படையை அனுப்பி துப்பாக்கி சூடு நடத்தியது இதில் 19 விவசாயிகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர் இந்தப் போராட்டத்தை வழிநடத்திய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுனிலம் மீது 66 வழக்குகளைப் பதிவு செய்து, நீண்ட விசாரணை நடத்தி ஆயுள் தண்டனைக்கு ஆளாக்கப்படார்.

இந்தக் கொடூர அடக்குறை செயல் குறித்து அப்போதைய எதிர்கட்சியான ‘பாஜக மனித உரிமை, ஜனநாயக உரிமை, விவசாயிகள் துயரம் என முழங்கியது. அப்போது ஒன்றிய அமைச்சராக இருந்த திரு வெங்கையா  நாயுடு (தற்போது துணை குடியரசு தலைவர்) “ சுதந்திர நாட்டில் நடந்த இந்தப் படுகொலை, அடிமை இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை விடக் கொடூரமானது” என்று காட்டமாக விமர்சித்தார்.

காங்கிரசும், திக்விஜய் சிங்கும் விவசாயிகள் போராடத்தை ஒடுக்கிய அடக்குமுறை அரசியல் பாஜகவிற்கு ஆதாயம் தரும் அரசியலாக மாறியது. இதனைத் தொடர்ந்து பாஜக மத்திய பிரதேசம் மாநில ஆட்சியைக் கைப்பற்றித் தொடர்ந்தது. சிவராஜ் சிங் சௌகான் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார்.

கடந்த 2017 ஜூன் 6 ஆம் தேதி மான்ட்சவுர் என்ற ஊரில் புயல், மழை, பெரு வெள்ளத்தால் பலத்த சேதாரமடைந்த விவசாயிகள் நிவாரணம் கேட்டுப் போராடி வந்தனர். பயிர்களை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 5000 இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளை 1997- 98 ஆண்டுகளில் ஆதரித்துப் பேசிய, விவசாயிகள் படும் துயத்தை கண்ணீர் மல்க எடுத்த வைத்து, காங்கிரஸ் கட்சியின் கார்ப்பரேட் மோகத்தை தீப்பிழம்பு வார்த்தைகளில் விமர்சித்த  பாஜகவும், அதன் பரிவாரங்களும் இன்று ஆட்சியில் இருப்பதால் சுமூக தீர்வு எளிதில் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையோடு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

ஆனால். நிதி மூலதன சக்திகளும், கார்ப்பரேட் சக்திகளும் தனது லாப வேட்டை தடையின்றி நடைபெற வேண்டும் என்பதில் குறியாக இருந்தன. மக்கள் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்த கரங்களை சோப்புப் போட்டு கழுவிக் கொண்டனர். புதிய முகவரை அமர்த்திக் கொள்வதில் முனைப்புக் காட்டின.

குஜராத்தில் 56 இஞ்ச் மார்பு விரித்து, கண்மூடித்தனமான குரூரத்தை அரங்கேற்றும், வீராதி வீரர் பொருத்தமானவர் என தேர்வு செய்து, அவரது ரத்த வாடை வீசும் முகத்துக்கு  அரிதாரம் பூசி ஜனநாயகவாதியாக வேடம் போட்டனர் . நாவினிக்கப் பேசும் நவீன சர்வாதிகாரப் பண்பாளரை   அடையாளம் கண்டனர். அவரின் நெஞ்சுக்கு நெருக்கமான நட்பாக, அவரது  மனசாட்சியாக செயல்படும் மற்றொருவர் இருப்பதையும் கண்டறிந்து, நாக்பூர் குருபீடத்தில் காணிக்கை செலுத்தி “விகாஸ் புருஷ் “ வளர்ச்சி நாயகன் கட்டமைக்கப்பட்டார். அவரை 2014 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் அதிகாரத்தில் அமர்த்தி, கார்ப்பரேட் சக்திகள்  லாப வேட்டையை உறுதி செய்து கொண்டன.

இந்தச் சூழலில் தான் 2017 ஜூன் 6 ஆம் தேதி மத்திய பிரதேச மாநில பாஜக அரசு, சிவராஜ் சிங் சௌகான் அரசு மான்ட் சவுரில் போராடி வந்த விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை படுகொலை செய்தது.

விவசாயிகள் 1997 ஆம் ஆண்டும் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டும் முன்வைத்த கோரிக்கைகளில் எந்தப் பெரிய மாறுதலும் இல்லை. அதே கோரிக்கைகள் தான், போரடிய விவசாயிகள் எதிர்கொண்ட காவல்துறை அடக்குமுறையிலும் மாற்றம் இல்லை. உயிரிழந்ததும், படுகாயம் அடைந்ததும் விவசாயிகள் தான். இதில் ஒரே ஒரு மாற்றம்தான் காண முடிந்தது. முன்னர் 1998 ஜனவரில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங். பின்னர் 2017 ஜூன் மாதம் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது பாஜகவின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவ்வளவுதான். இந்த இரு நிகழ்வுகளும் விவசாயிகள் கண்களை திறக்கச் செய்தது. இனி நமக்குள் கோட்பாடு ரீதியான, கொள்கை சார்ந்த ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் அவசியம் என்பதை தெளிவுற உணர்ந்தனர். அதன் விளைவுதான் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தோன்றியது.

ஆம். முல்டாயிலும், மான்ட்சவுரிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் அடக்குமுறைகளை எதிர் கொண்டு சிந்திய ரத்தத்தில் உதித்தெழுந்தது -ஏஐகேஎஸ்சிசி- என்கிற புதிய அமைப்பு . இந்த அமைப்பின் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தான் மோடியின் பாஜக ஒன்றிய அரசு , விவசாயிகளை அழித் தொழித்து , விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றி விடும். வஞ்சகம் நிறைந்த மூன்று வேளாண் வணிக சட்டங்களை 2020 ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அவரசர சட்டங்களாக அறிவித்தது.

இந்த அவசர சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று, புதிய சட்டங்களாக நிறைவேற்றும் போது தான் நாடாளுமன்ற நெறிமுறைகள் லட்சியப்படுத்தப்பட்டன. எதிர்கட்சிகளின் உரிமைகள்  நிராகரிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிக சட்டங்களால் பெரும் தாக்குதலை சந்திக்கும் பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கில் ஆர்த்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை தனிக் கவனம் செலுத்தி வழிநடத்த சக்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற புதிய போராட்டக்குழு அமைக்கப்பட்டது.

இந்த அவசர சட்டங்கள் வெளியான நேரத்தில் 09.06. 2020 ஈரோடு நகரில், நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமையில் கூடிய விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக அவரச சட்டங்களை பாஜக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது. இதே கூட்டத்தில் ஏப்ரல் 17. 2020 ஆம் தேதி பாஜக ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 கைவிடப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.  

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள், மின் நுகர்வோர் என அனைவரிடமும் 2020 ஜூன் 20 முதல் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைப்பது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் “விவசாயி மகன்” எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சர். அவரது அரசு விவசாயிகள் பக்கம் நிற்கவில்லை. கார்ப்பரேட் ஆதரவு நிலை மேற்கொண்டது. அஇஅதிமுக அரசின்  காவல்துறையினர் கையெழுத்து இயக்கம் நடத்துவதையும் அனுமதிக்கவில்லை. அதன்  அடக்குமுறைகளையும், மிரட்டல்கள், அச்சுறுத்தல்களையும் மீறித்தான் 2020 ஜூன் 20 ஆம் தேதி விவசாயிகள் இயக்கத்தின் முன்னோடித் தலைவர் கே.சின்னுசாமி கவுண்டர் நினைவிடத்தில் கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

அன்று தொடங்கிய போராட்டப் பயணம் இமாலய வெற்றி பெற்று 11.12.2021 விழாக் கொண்டாடி நிறைவு பெறுகிறது. அப்படியானால் விவசாயிகளுக்கு இனி போராட வேண்டிய அவசியம் ஏற்படாதா? எல்லாப் பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டதா?. அது தான் இல்லை..

விவசாயிகள் எதிர்ப்பை மீறி, தன்னககங்காரத்துடன், எதேச்சதிகார வெறியோடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைச் சிதைத்து நிறைவேற்றிய, விவசாயிகள் விரோத சட்டங்கள் திருப்பப் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் உள்ளிட்ட மின் நுகர்வோர் அனைவரையும் பாதிக்கும் மின்சார சட்டத் திருந்த மசோதா 2020 சட்டமாக நிறைவேற்ற மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவுகளோடு 50 சதவீதம் கூடுதலாக கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தீர்வு காண உயர்மட்டக் குழு ஒன்று  அமைக்கப்படுகிறது.

போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன.
போராட்டக் களத்தில் உயிரிழந்துள்ள விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தருவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு செய்யும் இவைகள் மட்டும் தான் நாம் இப்போது எட்டியுள்ள சாதனை. இது தவிர  நமது நிலவுரிமை, ஜனநாயக உரிமை, நாட்டின் சுயசார்பு பொருளாதாரம், மாநில உரிமை  என பல்வேறு கோரிக்கைகளில் போராட வேண்டிய கடமையும் இருக்கிறது.

எனவே, தொடரும் போராட்டத்தில் ஒரு  கட்டம்  முடிவுக்கு வந்துள்ளது. மற்றவைகள் தொடரும்… போராட்டம் தான் வாழ்க்கை… வாழ்க்கைக்காவே  போராட்டம்… போராட்டங்கள் ஒரு போதும் தோற்றதில்லை. களப் போராளிகள்  சிந்தும் ரத்தம் வீண்போகாது. இது விவசாயிகள் போராட்டம் உணர்த்தியுள்ள பாடம்.

ஜனநாயக புரட்சியை முன்னெடுப்போம்!
முடிவான போராட்டம் நோக்கி முன்னேறுவோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button