கட்டுரைகள்

முகமது ஜுபைருக்கு ஜாமீன் : தண்டனைக்கு உள்ளாகி வரும் கருத்துச் சுதந்திரம்

-ஆனந்த் பாசு

2018 ஆம் ஆண்டில் இடப்பட்ட ஒரு ட்வீட் தொடர்பான வழக்கில் ஆல்ட் நியூஸ் (Alt News) இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு தில்லி நீதிமன்றம் ஜூலை 15 அன்று ஜாமீன் வழங்கியது.

“ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிர்ப்புக் குரல் அவசியம். எனவே, எந்தவொரு அரசியல் கட்சியையும் வெறுமனே விமர்சித்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 153A (பகைமையை ஊக்குவிப்பது) மற்றும் 295A (மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்) பிரிவுகளைப் பயன்படுத்துவது நியாயமானதல்ல” என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

நீதிமன்றம் ஜுபைருக்கு ₹50,000 பத்திரம் மற்றும் அதற்கு இணையான ஒரு உத்தரவாதத்தின் மீது ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் நீதிமன்றத்தின் வெளிப்படையான அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும், அவரது கடவுச்சீட்டை (Passport) மூன்று நாட்களுக்குள் காவல்துறையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அவருடைய ட்வீட், ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக செய்யப்பட்ட சமூக ஊடகப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த ஜூன் 27 அன்று தில்லி காவல்துறையினரால் ஜுபைர் கைது செய்யப்பட்டார். இந்த சர்ச்சைக்குரிய ட்வீட்டில், ‘ஹனிமூன் ஹோட்டல்’ என்பதிலிருந்து ‘ஹனுமான் ஹோட்டல்’ என்று மாற்றப்பட்ட ஒரு ஹோட்டலின் பெயர் கொண்ட, 1983 ஆம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Cerification) அனுமதி வழங்கிய ‘கிஸ்ஸி சே நா கெஹ்னா’ எனும் திரைப்படத்தில் இருந்து, ஒரு படம் உபயோகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தைப் பதிவு செய்து, அதனுடன், சுபைர் “2014 க்கு முன்: ஹனிமூன் ஹோட்டல்/ 2014க்குப் பின்: ஹனுமான் ஹோட்டல்” என்று பதிவு செய்திருந்தார்.

இந்த வழக்கில் திரு. ஜுபைருக்கு ஜாமீன் வழங்கிய கூடுதல் அமர்வு நீதிபதி தேவேந்தர் குமார் ஜங்காலா, விண்ணப்பதாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஜுபைர், “2014க்கு முன் மற்றும் 2014க்கு பின்” என்ற வார்த்தைகளை ஒரு அரசியல் கட்சியைச் சுட்டிக்காட்டவே பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்திய ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இல்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிர்ப்புக் குரல் அவசியம், என்று பதிவு செய்துள்ளார்.

டெல்லி போலீஸ் வழக்கில் அந்தப் பத்திரிகையாளருக்கு ஜாமீன் கிடைத்துள்ள போதும், உத்தரபிரதேச மாநிலத்தில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள 6 முதல் தகவல் அறிக்கைகளிலும், ஜாமீன் கிடைக்கும் வரை அவர் தற்போதுள்ள சிறையில்தான் இருக்க வேண்டும். இந்த ஆறு வழக்குகளில், மூன்றில் (அதாவது ஹத்ராஸ், லக்கிம்பூர் கெரி மற்றும் சீதாபூர் வழக்குகளில்) ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். சீதாபூர் வழக்கில், அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கினாலும், ஹத்ராஸ் மற்றும் லக்கிம்பூர் கெரி வழக்குகளால், அவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். ஜுபைரின் வழக்கறிஞர்கள் ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி அல்லது அவற்றை ஒன்றாக இணைத்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த ட்வீட் மீதான வழக்கைப் பொறுத்தவரை, தீங்கிழைக்கும் நோக்கமின்றி, ஒரு ஹோட்டல் அல்லது நிறுவனத்திற்கு ஹிந்துக் கடவுளின் பெயரைக் குறிப்பிடுவதில் எந்தக் குற்றமும் இல்லை என்றும், ஹிந்து மதம் பழமையான, மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் என்றும் நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும், “குற்றம் சாட்டப்பட்டவரின் ட்வீட் 2018 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதுடன், 2022 ஆம் ஆண்டு வரையிலும், தற்போதைய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் தேதி வரை, குற்றம் சாட்டப்பட்டவரின் ட்வீட் மீது ஹிந்து சமூகத்தை புண்படுத்துகிறது அல்லது அனுமனுக்கு அவமரியாதை காட்டுவதாக உள்ளது என்று வேறு எந்த புகாரும் வரவில்லை.” என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய ட்விட், படித்தவரின் மனதைப் புண்படுத்தியதன் அடிப்படையில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும், “இன்று வரை விசாரணையின் போது அந்த ட்விட்டால் புண்படுத்தப்பட்டதாகச் சொல்கின்ற அந்த நபரின் அடையாளத்தை நிறுவக் காவல்துறை தவறிவிட்டது. மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 161 இன் கீழ் அவர் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும் தவறிவிட்டது.” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அயல்நாட்டு நன்கொடைகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் பிரிவு 35 இன் கீழ், பின்னர் சேர்க்கப்பட்ட குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ஜுபைரும் அவரது நிறுவனமான ஆல்ட் நியூஸ்-ம், அயல்நாட்டு நன்கொடைகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், எந்தவொரு வெளிநாட்டு பங்களிப்பையும் பெறுதலைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டவரின் வழக்கறிஞர்களுடைய வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

“தாங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதில்லை” எனத் தமது இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், வெளிநாட்டு நிதி பெறுவதற்குத் தமது பணப் பட்டுவாடா நுழைவாயில் (payments gateway) செயலூக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளர் ஜுபைர் சமர்ப்பித்துள்ளார். மேலும், ஒருவர் தான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல், நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) மற்றும் இதர விவரங்களை வெளியிடாதவரை, தன்னுடைய இணையதளம் நன்கொடை அளிக்க அனுமதிக்காது என்றும் அவர் தகவல் சமர்ப்பித்திருந்தார்.

ஜுபைரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து ஏற்கனவே போலீசார் விசாரித்துள்ளனர் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விசாரணைக்கு, முன்னிலையில் இருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டாலன்றி, அவரது சுதந்திரத்தைப் பறிப்பது தண்டனையாகக் கருதப்பட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கோடிட்டுக் காட்டி, ஜாமீன் மறுப்பதன் நோக்கம் தண்டிப்பதாக இருக்கக் கூடாது என்று கூறி உள்ளது.

ஊடகவியலாளர் ஜுபைரின் கைது நடவடிக்கை உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும், உத்திரப் பிரதேச வழக்குகளால் அவர் நீதிமன்றக் காவலில் நீடிக்கும் நிலையே உள்ளது, இவர் மீதான வழக்குகள் ஊடக உலகின் மீது கூடுதல் வெளிச்சம் பாய்ச்சி உள்ளது.

தொடர்புக்கு – 9444183310

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button