தமிழகம்

பத்மஸ்ரீ சிற்பி!

சிற்பி – சொற்களைச் செதுக்கி அமர கவிதைகளைத் தந்த கவிச்சிற்பி. ஜீவா, தொ.மு.சி. வழியாக பாரதியை இனங்கண்டு தனது ஆதர்ச நாயகனாக வரித்துக் கொண்டவர். “பாலசுப்பிரமணியப் பாவலன் வாழ்க” என்று பாவேந்தரால் தட்டிக்கொடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

வானம்பாடி கவிதை இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், அதை ஓர் இடதுசாரிப் பார்வை கொண்டதாக உருவாக்கியதிலும் பெரும்பங்கு வகித்தவர். தமிழ்க்கவிதை வரலாற்றில் புதுக்கவிதைகளுக்கு சிம்மாசனம் அளித்ததும் வானம்பாடிகளின் தனிச்சிறப்பு. ‘நிலவுப்பூ’, ‘சர்ப்பயாகம்’, ‘ஒளிப்பறவை’, ‘ஆதிரை’ எனத் தொடங்கி ‘ஒரு கிராமத்து நதி’ வரை கவிஞரின் வசீகர வரிகளுக்கு மனம் பறிகொடுக்காதவர் இல்லை.

கவிஞரது தாய்மொழிப்பற்று மிக ஆழமானது. அதுவே தமிழ் பயிற்றுமொழிக்காக நூறு தமிழ்ச் சான்றோர்களுடன் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தது. பல ஆய்வாளர்களை, கல்வியாளர்களை உருவாக்கியவர். கவிதை தவிர, மொழிபெயர்ப்பு, பதிப்புத் துறை, சாகித்திய அகாதெமி வழியாக தமிழ் மண்ணுக்கு அவர் ஆற்றிவரும் பணிகள், தன் அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விருது, பரிசுகள் வழங்கி வருவது என கவிஞர் சிற்பி அவர்களது விரிந்த பார்வையை பெருமையோடு பார்க்கலாம்.

மாறாத தமிழ்ப் பற்றும் மாந்த நேயமும் பிறருக்கு உதவும் குணமும் மிக்கவர்.

*தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர்.*

கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருது அந்த விருதிற்கே பெருமை சேர்க்கக் கூடியது என்றால் மிகையல்ல. கவிஞர் சிற்பி அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக்குழுவின் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறது.

சி. சொக்கலிங்கம், தலைவர்
இரா. காமராசு, பொதுச்செயலர்
ப.பா. ரமணி, பொருளாளர்

தகஇபெ- மாநிலக் குழு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button