கட்டுரைகள்

பகத் சிங்கிற்கு வீரவணக்கம்! அவர்தம் இலட்சியங்களை உயர்த்திப் பிடிப்போம்!

டி. ராஜா

“பாட்டாளி வர்க்கம் வெல்லும்! முதலாளித்துவம் வீழும்! ஏகாதிபத்தியம் ஒழியும்!” என்று 1930 ஆம் ஆண்டில் லெனின் நினைவு நாளையொட்டி மூன்றாவது அகிலத்திற்கு அனுப்பவிருந்த தந்தி செய்தியைக், கழுத்தைச் சுற்றியவாறு செந்துண்டு அணிந்திருந்த, பகத் சிங் வாசித்தார்.

பகத் சிங்கின் இந்தச் செய்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சர்வதேச ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டியதோடு மட்டுமின்றி அவர்தம் சித்தாந்தத் திரட்சியை முன்னிலைப்படுத்தியது. அந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் அவர் ஒரு சுதந்திர இந்தியாவை, வளமான வையகத்தைக் கட்டமைக்க விரும்பினார்.

“இந்திய உழைக்கும் மக்களும், இயற்கை வளங்களும் சிற்சில ஒட்டுண்ணிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், ஒரு போர்ச்சூழல் நிலவிக் கொண்டு தான் இருக்கும். இத்தகைய சுரண்டல்காரர்கள் பிரிட்டிஷ் முதலாளிகளாகவோ, பிரிட்டிஷ் மற்றும் இந்திய முதலாளிகளின் கூட்டாகவோ, அல்லது முற்றிலும் இந்திய முதலாளிகளாகவோ இருக்கக் கூடும். அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும்; அவர்களை வீழ்த்த வேண்டும்.” என்று பஞ்சாப் கவர்னருக்கு பகத் சிங் அனுப்பிய இறுதி மனுவில் கூட பிரகடனம் செய்திருந்தார். சமுதாயத்தைப் பற்றிய பகத் சிங்கின் புரிதலின் அடிப்படையில், நாம் இன்றைய எதார்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; அவரின் மகா உன்னதமான தியாகத்தில் இருந்து சில படிப்பினைகளை நாம் பெற்றிட வேண்டும்.

அண்மைக் காலங்களில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, சமத்துவமின்மையும், குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் செல்வம் குவிவது ஆகியவை அதிகரித்து உள்ளது. பகத் சிங்கும் அவரது காலத்தில் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வாழ்விடத்திற்காகவும், இரு வேளை உணவிற்காகவும் உழைக்கும் மக்கள் இன்று கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் போது, முதலாளிகள் செல்வத்தைப் படைப்பவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பான, மோசமான பின்விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காமல், அறநெறியற்ற இலாப வெறியால் இயற்கை, வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைச் சிதைத்து, நாட்டின் அனைத்து துறைகளிலும் பாதுகாப்பற்ற சூழலை முதலாளிகளே உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதானி குழுமத்தின் அறநெறியற்ற வியாபார செயல்பாடுகள் இப்போது அம்பலமாகி இருக்கிறது. இந்தக் குழுமத்திற்கு அரசாங்கம் அள்ளிக் கொடுத்திருக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. நமது மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்திருப்பதும், சிலரிடம் மட்டும் செல்வம் பெருமளவில் குவிந்து வருவதும், நவீன-தாராளமய முதலாளித்துவத்தைப் பா.ஜ.க கடைபிடிப்பதன் நேரடி பின்விளைவாகும். இதனை, அதானி குழுமத்திற்கான அரசாங்கத்தின் திண்மையான ஆதரவும், பின்புலமும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இத்தகைய சூழ்ச்சி நிறைந்த முறை குறித்து லெனின் கூறியதை நாம் கட்டாயம் நினைவுகூர வேண்டும். “முதலாளித்துவம், அது என்னவாக இருப்பினும், ஒரு நாட்டின் வெகுமக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக உபரி மூலதனம் அங்கே பயன்படுத்தப்படாது, ஏனென்றால், அது முதலாளிகளின் இலாபத்தில் சரிவை உண்டாக்கும்.”

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ள இந்தக் காலகட்டத்தில், மனிதகுலத்திற்கான நிலைத்த வருங்காலம் மற்றும் முதலாளித்துவத்தின் பொருத்தப்பாடுகள் குறித்து உலகம் முழுவதிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதானி குழுமம் அதன் சந்தை மதிப்பை இழந்திருப்பதும், 150 ஆண்டுகால கிரெடிட் சூஸ் வங்கி திவாலாகியிருப்பதும் நிதி மூலதன நெருக்கடிகளை அம்பலப்படுத்துகிறது. பருவ காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், கடல் மட்டம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் வாழ்க்கை குறித்த தீவிர கவலைகளும் எழுந்துள்ளன. மனிதத்தன்மையற்ற இந்த சுரண்டல்முறையானது, அதன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆட்சிகளைக் கைப்பற்றுவது, மக்களைப் பிளவுபடுத்துவது, போர் மற்றும் மோதல்களை உருவாக்குவது என்று அனைத்து இழிவான ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது. சமுதாயத்தின் கூட்டு உழைப்பை வெகுசிலர் சுரண்டிக் கொழுத்திட வகை செய்யும் தற்போதைய முறையானது அறியாமையில் உள்ள மக்களின் வாழ்வைப் பலியிடுகிறது. இதற்கு எதிராகத் தான் பகத் சிங் வெகுண்டு எழுந்தார்; உன்னதமான சோஷலிச இலட்சியங்கள், சமத்துவம், வளமை மற்றும் சமாதானம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்திட தம் இன்னுயிரையும் ஈந்தார். சோஷலிச இலட்சியத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மறுநிர்மாணம் செய்திட அவர் விரும்பினார். அவரின் அந்த நிலைப்பாடு மிகச் சரியானது. மனிதகுலம் நீடித்து நிலைபெற்றிருக்க வேண்டுமென்றால், பேராசை மற்றும் பிளவுகளை அடித்தளமாகக் கொண்டிருக்கும் சமுதாயத்தை, ஒத்துழைப்பு மற்றும் ஒத்திசைவின் அடிப்படையில் அமையும் சமுதாயத்தைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும் என்பதைத் துளியும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மால் கூற முடியும்.

நமது தேசத்தின் பயணத்தில், தேசப்பற்று மற்றும் தியாகத்தின் குறியீடாக ஒப்பற்ற சிறப்பிடத்தை பகத் சிங் வகித்து வருகிறார். நமது தேசத்தின் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காக, அவர் தனது இன்னுயிர் ஈந்து வீரமரணம் ஏற்றார். பிரித்தாளும் பிற்போக்கு வன்முறை கும்பல், மாவீரன் பகத் சிங்கின் புகழார்ந்த மரபைத் தனதாக்கிக் கொள்ள, மிகக் கடுமையாக முயன்று வருகிறது. பகத் சிங் ஒரு புரட்சிகர சிந்தனையாளர்; அவர்தம் செங்குருதியில் மதச்ச்சார்பின்மை இரண்டறக் கலந்திருந்தது. தியாகம் என்றால் என்னவென்றும், எந்த இலட்சியத்திற்காகப் பகத் சிங் தனது வாழ்வை அர்ப்பணித்தார் என்றும் ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குரிய வகையில், பகத் சிங்கின் கருத்துக்களை நாம் மக்களிடம் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பகத் சிங் கூறியதாவது: “முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப் போர் நாம் வாழும் காலத்தில் தொடங்கப்பட்டதும் இல்லை, நம்முடன் முடிவுறப் போவதும் இல்லை. இந்தப் போரானது வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தற்போதுள்ள சூழல்களின் தவிர்க்கமுடியாத விளைவு ஆகும்.”

பகத் சிங்கின் தியாக வாழ்க்கை மற்றும் அவரது போராட்டங்களின் ஊடாக இந்தச் சமுதாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது நமது பணி ஆகும். தொடர் போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் ஊடாக உண்மையானதொரு மக்களாட்சியை வென்றெடுப்பதன் மூலம் அவர்தம் புகழார்ந்த மரபை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும். நம்மைச் சுற்றிலும் சமத்துவமின்மை, சாதிய அமைப்பு, வகுப்புவாதம், ஆணாதிக்கம் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. நாம் இவற்றை எதிர்த்துப் போராடி முறியடித்து மக்களுக்கான வெற்றியை அடைய வேண்டும். அந்த உன்னத நோக்கத்திற்காகப் போராடுவதே பகத் சிங்கிற்கு நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலி ஆகும்.

தமிழில்: அருண் அசோகன்
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button