கட்டுரைகள்

நிழல் நிதிப் பரிமாற்றமா கிரிப்டோ கரன்சி?

த.லெனின்

நம் கையில் இருக்கும் ரொக்கப் பணத்தைப் போன்றது அல்ல கிரிப்டோ கரன்சி. இது டிஜிட்டல் வடிவத்தைக் கொண்டது. விருச்சுவல் கரன்சி(மெய் நிகர்) என்றும் அழைக்கிறார்கள்.
இது டிஜிட்டல் முறையில் கிடைக்கும் பணமாக செயல்படுகிறது என்பதுடன் என்கிரிப்டட் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவின் டாலர் மற்றும் இந்தியாவின் ரூபாய் போல இதற்கும் மதிப்பு உள்ளது.

ஒவ்வொரு நாட்டின் பொதுச் செலவாணியான நாணயம் அந்தந்த நாட்டிலேயே செல்லுபடியாகும். ஆனால், இந்த கிரிப்டோ கரன்சி இணையதள இணைப்பு இருந்துவிட்டால் போதும். பரிவர்த்தனையை தொடங்கி விடலாம்.

இந்தியாவில் 15 இடங்களில் பரிவர்த்தனை நிலையங்கள் செயல்படுகின்றன. ரூ.6 லட்சம் கோடி கிரிப்டோ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பத்து கோடி முதலீடுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் 50 ஆயிரம் பேர் பணியாளர்களாகவும் பணியாற்றுகிறார்களாம்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு உருவான ஒரு நெருக்கடியான காலத்தில் பிட்காயின் என்பது 2009ஆம் ஆண்டு “சடோஷி நகமோடோ” என்ற பெயரில் ஒருவர் உருவாக்கி இருந்தார். அரசின் எந்தத் தலையீடும் இன்றி கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனையை பிளாக் செயின் சிஸ்டம் என்ற தொழில் நுட்பத்தின் உதவியோடு இதனை பயன்படுத்துகின்றனர்.

இது வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அப்பாற்பட்டது. இதில் மதிப்பின் அடிப்படையில் பல வகைகள் உள்ளன. பிட்காயின், எத்திரியம், டிரான், டோஜ், ஷிபா என 2000க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் புழங்குகின்றன. ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 38,00,627  ரூபாய்க்கு சமமாகும். இது பரிவர்த்தனையின் போது ஏறவோ, இறங்கவோ செய்யும்.

தங்கத்தை எப்படி வெட்டி எடுக்கிறார்களோ அதுபோல ஒவ்வொரு கரன்சிக்கும் ஓபன் சோர்ஸ் கோடிங் மூலம் கிரிப்டோ கரன்சி மைனிங் (உருவாக்கம்) செய்யப்படுகிறது. தனிநபர்கள் தன்னிச்சையாக கிரிப்டோ கரன்சியை வாங்கவும், விற்கவும் செய்யலாம்.  இந்த பரிவர்த்தனையின் போது அதன் மதிப்பு ஏறலாம்; இறங்கலாம். இது யூக பேரத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதில் முதலீடு செய்வது சூதாட்டம் போன்றது ஆகும்.
இந்த பிட்காயினை எந்த அரசும் நிர்வாகம் செய்யவில்லை. ஆனால் 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

வங்கிகளில் நடைபெறும் பரிவர்த்தனை என்றால் கே.ஒய்.சி. முறையில் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் முறைமை உள்ளது. இதன் திடீர் புகழை கண்ட இந்திய அரசு இதனை முறைப்படுத்த மெய்நிகர் சொத்து சேவை மற்றும் வழங்குபவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு கே.ஒய்.சி. அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த கிரிப்டோ கரன்சி முறையில் வாடிக்கையாளர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது. இப்படி இவை அனுமதிக்கப்பட்டால் ஹர்சத் மேத்தாக்கள், கேட்டன் பரேக்குகள் போன்று பல பங்குச் சந்தை ஊழலை ஏற்படுத்தும்.

கடந்த 2018 ஏப்ரல் 6ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைகளை வெளியிட்டபோது, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதித்தது. பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள் ஆன்லைன் பணப் பரிமாற்ற நிறுவங்கள் பிட்காயினை வாங்கவோ விற்கவோ  அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு பின்பு அதன் முதலீட்டாளர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, உச்சநீதிமன்றம் கிரிப்டோ கரன்சியின் மீது ரிசர்வ் வங்கி விதிக்கும் தடை ஏற்றுக் கொள்ளும் வகையில் அதில் எவ்வித காரணமும் இல்லை எனவும், இதனை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றதுடன், 2018 ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவானது அரசியல் அமைப்புக்கு விரோதமானது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, மீண்டும் இந்தியாவில் இது புழக்கத்தில் வர ஆரம்பித்தது.

இந்திய அரசு இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு இவற்றை வரைமுறை செய்யவும், ஒழுங்குபடுத்தவும் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் இதற்கான ஒரு சட்ட முன்வடிவையும்  கொண்டுவந்துள்ளது. ஒழுங்குபடுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் இருந்தால் நிச்சயமாக அது உலக பொருளாதாரத்தை பாதிக்கவே செய்யும். அத்துடன் சமூகத்திற்கான ஒரு அபாயமாகவும் அது மாறிவிடும். இந்தப் பரிவர்த்தனை எந்த கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட்டால் குற்றவாளிகள், வரி ஏய்ப்பவர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளினுடைய உள்ளாச  புரியாக மாறி கருப்பு பணத்தை உருவாக்கும் புதிய நடைமுறைகளை உண்டாக்கி விடும்.
ஏற்கனவே செயல்பட்டு வரும் வங்கி முறைகளிலேயே அதுவும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கான பணப் பரிவர்த்தனை வாடிக்கையாளரின் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நுட்பமான முறையில் பல பண மோசடிகள் நடைபெற்றே வருகின்றன. இதனை கண்டு பிடிக்கவும், இக்குற்றங்களை களைவதற்கும் இன்னும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் கிரிப்டோ கரன்சி அனுமதிக்கப்பட்டால் பண மோசடிகளின் சொர்க்கம் போல இது மாறிவிடும். கருப்பு பணத்தை ஆன்லைனிலேயே பதுக்கல் செய்வதற்கான அறிவியல் வடிவமாகவும் இது மாறிவிடும்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இந்த கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தக் கூடியவர்கள் பல லட்சம் மில்லியன் டாலர்களை கடந்த 2011 முதல் 2019 வரை இழந்துள்ளனர். ஆண்டுக்கு நான்கு முதல் பனிரெண்டு வரை பல புறம்பான பரிவர்த்தனைகள் நடைபெற்றதை கண்டறிந்ததும் 2019ல் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிற்கு திருட்டு நடந்ததையும் அவைகள் சட்ட விரோத சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டதையும் அது சுட்டிக் காட்டியது.

கிரிப்டோ கரன்சி கள்ளச் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதுடன் உலகளாவிய பல்வேறு முதலீடுகள் தங்கச் சாலை திட்டம், நிரந்தரமற்ற வீட்டுவசதி சந்தைகள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன.

அல்ஜீரியா, பொலிவியா, எகிப்து, ஈராக், மொராக்கோ, நேபாள், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்த கிரிப்டோ கரன்சியை தடை செய்துள்ளன. பகரைன், பங்களாதேஷ், சீனா, கொலம்பியா, இந்தோனேஷியா, ஈரான், குவைத், லெசோத்தோ, வித்வேனியா, மக்காவ், ஓமன், கத்தார், சவுத் அரேபியா மற்றும் தைவான் உள்ளிட்ட 15 நாடுகள் மறைமுகமாக இதனை தடை செய்துள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவும் அந்தந்த நாடுகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நாற்பதுக்கும் மேற்பட்ட பிட்காயின் ஊழல்களை விசாரித்து வருகின்றன. ரஷ்யாவில் இது சட்டபூர்வமானது  என்றாலும், ரஷ்ய நாட்டவர் பொருட்களை வாங்குவதற்கு ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பிற நாட்டவர்கள் அந்நிய நாட்டு கரன்சிகளை பயன்படுத்தலாம் என்றும் அறுதியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடையால் அவதிப்படும் கியூபா, எல்சால்வடார் ஆகிய நாடுகள்  கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. பல வங்கிகள் இந்த கிரிப்டோ கரன்சி சேவையை ஏற்றுக் கொள்ளவில்லை. பொருளாதார மந்தம் அதிகம் உள்ள நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் பெரும் சிக்கல்களை அனுபவிக்க வேண்டிவரும். சிந்தாந்த பூர்வமாகவும், சட்டபூர்வமாகவும், கிரிப்டோ கரன்சிகள் பலர் நினைப்பது போல பணம் அல்ல. அதுபோலவே பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கிரிப்டோ கரன்சியில் சொல்லப்படவில்லை. எந்த கிரிப்டோ கரன்சியும் உலக அளவில் பரிவர்த்தனைக்கான பணமாக அங்கீகரிக்கவில்லை.

ஆனால், கிரிப்டோ கரன்சி ஆப்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற விளம்பரங்கள் நமது இந்திய காட்சி ஊடகங்களில் காணக் கிடக்கின்றன. எது எப்படியாக இருந்தபோதிலும், உழைப்புக்கும் உண்மைக்கும் எதிராக இருக்கும் இந்த கிரிப்டோ கரன்சி உலக அளவில் எந்த முக்கிய பரிவர்த்தனைக்கும் கொடுக்கல் வாங்கலுக்கும்  பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், நிழல் உலக சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு இவை மிகப் பெரிய சேவை செய்யலாம். நாடுகளின் நிதி இறையாண்மையும் இதனால் மிகப் பெரிய சேதத்தை எதிர்கொள்ளும்.

தொடர்புக்கு: 94444 81703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button