தமிழகம்

தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி செய்ய வேண்டும் – தோழர் கே.சுப்பராயன் MP முறையீடு!

நிதி நெருக்கடியில் திணறிவரும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் MP முறையீடு!

இது குறித்து முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 21 தாய்த் தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் தமிழையும், தமிழ் வழி அறிவையும் பெற்று வருகின்றனர்.

ஆங்கிலக் கல்வி மோகத்தால் சிறுகச் சிறுக தமிழ் வழக் கல்வி முறை சுருங்கி வருகிறது. இது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் தீங்காக முடியும் என்பதை நிகழ்காலத் தலைமுறை உணர வேண்டும். அதை மாநில அரசு உணர்த்த வேண்டும் என பணிந்து வேண்டுகிறேன்.

“மெல்லத் தமிழினி சாகும்” என்ற மகாகவி பாரதியாரின் எச்சரிக்கை இன்றைய தமிழ்நாட்டின் சூழலிற்கும் பொருந்துவதாகவே உள்ளது. புற்றீசல் போலத் தோன்றி வளரந்துவரும் ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் பிஞ்சுக் குழந்தைகளின் சிந்தனையில் இருந்து தாய்த் தமிழுணர்வை அகற்றி அழித்து வருகின்றன. எனவே, தாய்த் தமிழ் மழலையர் பள்ளிகளை மாநில அரசே தொடங்கி நடத்தத் திட்டமிடுவதோடு தற்போது தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களால் இயக்கப்படுகின்ற தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து அவற்றை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டு ஊக்குவிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

இதுகுறித்து தாய்த் தமிழ் பள்ளி அமைப்பினரோடு மாநில அரசு கலந்துரையாடி கருத்தறிய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மழலையர் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கி நடத்திட பொருத்தமான ஊக்கத் திட்டங்களை, சலுகைகளை மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோருகிறேன். இதன்மூலம்தான் பிஞ்சு மனங்களில் தமிழ் ஆர்வ விதைகளை விதைக்கவும் அது முளைவிட்டு வளர்வதற்குமான சூழல் தோன்றும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆலோசனைகள் தமிழ்நாட்டில் தாய்த் தமிழை பிஞ்சுக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல உதவும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நாள்: 11-02-2022 என்றும் தங்களன்புள்ள, கே.சுப்பராயன் எம்.பி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button