கட்டுரைகள்

கோர்ப்பசேவ்: மேற்குலகின் மீட்பர் – உள்நாட்டில் தோற்றுப் போனவர்

– வகிதா

கோர்ப்பசேவ் அமைதி நாயகரா? அல்லது அவல நாயகரா? என்ற பொருளில், பாட்டாளி படிப்பு வட்டம் கடந்த சனிக்கிழமையன்று( 10.9.2022) கூட்டம் நடத்தியது. இணைய வழியில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான வகிதா, சோவியத் ஒன்றியத்தின் நெருக்கடி, கோர்பசேவ் செய்ததும்- செய்யத் தவறியதும் குறித்துப் பேசினார்.

கோர்ப்பசேவ் காலத்தில்தான் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக பிரிந்து போனது. சமதர்ம கொள்கையிலிருந்து தடம் புரண்டு, சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியது.

“கோர்ப்பசேவ் இல்லையென்றாலும் சோவியத் ஒன்றியம் அதன் நெருக்கடிகளால் தானாகவே சிதைந்திருக்கும் என நான் முன்பு நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அவ்வாறு நினைக்கவில்லை. கோர்ப்பசேவை வரலாறு கடுமையாக, வருந்தத்தக்க ஒருவராக பார்க்கும்.” என குவின்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் பணியாற்றும், ஐரோப்பிய நவீன வரலாற்று ஆசிரியரான அலெக்சாண்டர் டிட்டோ கூறுகிறார்.

1985 ம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக, கட்சியால் நியமிக்கப்பட்டவர்தான் கோர்ப்பசேவ். அதற்கு முன்பாக கட்சியின் பல பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அவருக்கு முன்பாக கட்சியின் பொறுப்புகளில் யூரி ஆண்ட்ரபோவ், கான்ஸ்டன்டின் ஷரபோவ் என்பவர்கள் பொறுப்பில் இருந்த 1982 – 1985 காலத்தில் பொருளாதார பின்னடைவு இருந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறன் குறைந்திருந்தது. ஆலைகளை கட்சி மூலம் நிர்வகிப்பது நடந்தது. எனவே, இதனை மாற்றும் விதத்தில் சில சீர்திருத்தங்கள் அப்போது மேற்கொள்ளப்பட்டு வந்தன. சிறு தொழில்களைத் தனிநபர்கள் செய்வதை ஊக்குவிக்கும் விதத்தில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

1987 ல், சோவியத் கட்சியின் 27வது மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கோர்ப்பசேவ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் நிர்வாகியுமாக ஆனார். இவர் பொறுப்புக்கு வருவதை மேற்குலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

பெரிஸ்த்ரோய்கா:

1987 ல் கட்சி மாநாட்டிற்குப் பிறகு பெரிஸ்த்ரோய்கா (சீர்திருத்தம்) வை கோர்ப்பசேவ் அறிமுகப்படுத்தினார். சோவியத் ஒன்றியத்தில் 1972 வரை லெனின் அமலாக்கி இருந்த புதிய பொருளாதார கொள்கை நடைமுறையில் இருந்தது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம்தான் அதன் ஆதாரமாக இருந்தது. இதனை கோர்ப்பசேவ் மாற்றினார். சந்தைப் பொருளாதாரமாக, அதாவது முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்ற முனைந்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என அவரது ஆலோசகர்கள் கொடுத்த அறிவுரையை அவர் ஏற்கவில்லை.

சோவியத் பொருளாதாரம் 1970 வரை, உலகில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் சிறந்து விளங்கி இருந்தது. 1971 ல் அமெரிக்க அதிபர் நிக்சன், கையிருப்பில் இருக்கும் தங்கத்திற்கு ஏற்ப (Gold Standard) நாணயங்களை கணக்கிடும் முறையை மாற்றி, டாலர்களின் மதிப்பை செயற்கையாக உயர்த்திக் கொண்டார். இதனால், ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு பாதிப்புக்கு உள்ளானது. 1973 ல் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்த ஐந்து நாடுகளும் (OPEC) விலையை உயர்த்திவிட்டதால் சோவியத் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளானது.

இந்த நிலையில் கோர்ப்பசேவ் காலத்தில் உணவு முறைக்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக உலகப் போர் நடந்த ஸ்டாலின் காலத்தில்தான் ரேஷன் முறையில் உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோர்ப்பசேவ் கறுப்பு பணத்தை ஒழிப்பது என்பதற்காக 50 ரூபிள், 100 ரூபிள்களை மதிப்பிழப்பு செய்தார். 1000 ரூபிள்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. வங்கிக் கணக்குகளை முடக்கினார். இதில் மக்கள் கடுமையான பாதிப்பு அடைந்தார்கள்.

மது விற்பனையில் அரசுக்கு நல்ல வருவாய் வந்து கொண்டு இருந்தது. லெனின் மது தடை செய்யப்பட்டதை நீக்கினார். மது மூலம் கிடைத்து வந்த கணிசமான வருவாய் நிறுத்தப்பட்டதால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறாக கோர்ப்பசேவ் கொண்டு வந்த பெரிஸ்த்ரோய்கா மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியது.

கிளாஸ்நாஸ்ட்

பிறகு, வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் கிளாஸ்நாஸ்ட்- ஐ அவர் கொண்டு வந்தார். தன்னை நிலைநிறுத்த கோர்ப்பசேவ் அதனை பயன்படுத்திக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், கட்சியின் மத்தியக் குழுவில் இருந்த வயதானவர்களாலும், கட்சியின் முந்தைய கொள்கைகளை வலியுறுத்தியவர்களாலும் எதிர்க்கப்பட்டது. இதனை எதிர்கொள்ள மக்கள் சபையின் பேராயம் (Congress of Peoples Deputies) என்ற அமைப்பை உருவாக்கினார். இது உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டிருந்தது. இதனை கட்சியை விட அதிகாரம்மிக்கதாக கோர்ப்பசேவ் மாற்றினார்.

வெளிநாட்டுக் கொள்கை

ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு 1922 ல் லெனின் புதிய வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி இருந்தார். அது அமைதி, கூட்டுறவு, ஒத்துழைப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது; ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்தது; ஆசிய நாடுகளின் விடுதலைக்கு உந்துசக்தியாக இருந்தது. துருக்கியின் ஒட்டாமன் பேரசை எதிர்த்து, சோவியத் ஆதரவோடு முஸ்தபா கமால் ஆட்சி அமைத்தார். இன்னமும் துருக்கியில் முற்போக்கு சக்திகள், கம்யூனிச கட்சிகள் அங்கு இருக்கின்றன. எகிப்து அதிபர் நாசர், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதற்கு சோவியத் ஆதரவு கொடுத்தது. இந்தியாவுக்கு சோவியத் ஒன்றியம் அளித்து வந்த ஆதரவையும் நாம் அறிவோம்.

ஆனால் கோர்ப்பசேவ் இந்த நெடிய பாரம்பரியமான வெளிநாட்டுக் கொள்கையிலிருந்து விலகினார். மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கினார். ரீகனுடன் ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதைதான் மேற்குலக நாடுகளும் விரும்பின. சிம்ம சொப்பனமாக விளங்கிய சோவியத் ஒன்றியம், எளிதாக கையாளக்கூடிய ஒன்றாக மாறியது.

ஏற்கனவே, சோவியத் ஒன்றியம், தன் நாட்டு ஜிடிபியில் பாதுகாப்பிற்காக 25 சதவிகித நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. எங்கோ இருக்கும் நாடுகளுக்காக நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். இதனை மார்க்சிய அடிப்படையில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேற்குலக நாடுகளில் இருந்து அங்கு நுழைந்த ஊடகங்கள் பெருமளவில் பிரச்சாரம் செய்து மக்களை கிளப்பி விட்டனர். இதற்கு கோர்ப்பசேவ் உருவாக்கி இருந்த கிளாஸ்ட்நாஸ்ட் காரணமாக இருந்தது. புரட்சிக்குப் பிறகு 1917 முதல் 1922 வரை பிரான்ஸ், ஜெர்மானி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளையும், அதே கால கட்டத்தில் உள்நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளையும் எதிர்த்து வென்றது சோவியத் ஒன்றியம். ஆட்சிப்பொறுப்புக்கு வந்த உடனேயே ‘என்னுடைய முதன்மையான எதிரி கம்யூனிஸ்ட் தான்’ என்று பகிரங்கமாக கூறினான் ஹிட்லர். அத்தகைய ஹிட்லரை இரண்டாம் உலகப் போரில் தோற்கடித்தது சோவியத் ஒன்றியம். இத்தகைய நெடிய பாரம்பரியத்தை மக்கள் மறந்தார்கள்.

எல்ட்சின்

கோர்ப்பசேவ் 1985 ல் பொறுப்புக்கு வந்தவுடன், எல்ட்சினை மாஸ்கோ நகர கட்சிப் பொறுப்புக்கு கொண்டுவந்தார். எல்ட்சினை கோர்ப்பசேவ் நம்பினார். எல்ட்சினை ஏற்றுக்கொள்ள சோவியத் ஒன்றியத்தின் மத்தியக் குழு விரும்பவில்லை. மாஸ்கோ நகரக் குழுவிலிருந்து 1986ல் எல்ட்சினை நீக்கினார்கள். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்ற வகையில், மக்கள் சபையின் பேராயத்திற்கு (Congress of People’s Deputies) அவர் வருகிறார்.

இந்த நிலையில் 1991 ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தைக் குறைக்க ஒரு கருத்துகணிப்பு நடத்தினார். அதோடு சோவியத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கலாமா என்ற கருத்துக் கணிப்பையும், கோர்ப்பசேவ் நடத்தினார். அப்படி அதிகாரத்திற்கு வந்தவர்தான் போரிஸ் எல்ட்சின். இதனை எதிர்த்து 1991 ஆகஸ்டில் ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபி, காவல்துறை, இராணுவம், கம்யூனிஸ்டு கட்சி ஆகியன இணைந்து ஒரு கலகத்தை (Coup) நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு நடந்த கருத்துகணிப்பில் மீண்டும் போரிஸ் எல்ட்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, அவர் கோர்ப்பசேவை வீட்டுக்காவலில் வைத்தார். 1991 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக பிரிந்தது. இதைத்தான் எல்ட்சினும் விரும்பினார். போரிஸ் எல்ட்சின் ஒரு சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து, அதன் சொத்துகளைப் பறிமுதல் செய்தார்.

கோர்ப்பசேவ் இறப்பிற்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து நாடுகள் புகழஞ்சலி செலுத்தின.

அமெரிக்காவின் ரொனால்டு ரீகன், இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர், கத்தோலிக்க கிறித்தவ மதத் தலைவரான போப் ஆண்டவர் ஜான் – II ஆகியோர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமானவர்கள் ஆவார்கள். போலந்து நாட்டிற்கு நான்கு முறை சென்றார் போப் ஆண்டவர். “கடவுள் உங்களை காப்பாற்றட்டும்” என்று அவர் சொன்னதே அந்த மக்களை உசுப்பிவிட போதுமானதாக இருந்தது.

பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிலபிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு சென்றுவிட்டது. சோவியத் ஒன்றியத்தில் மிக தாமதமாகத்தான் முதலாளித்துவம் உருவானது. அதுவும் நகரங்களில்தான் உருவானது. அது ஒரு சோவியத் மாதிரி பரிசோதனை என்று ரிச்சர்ட் உல்ஃப் என்ற மார்க்சிய அறிஞர் கூறுகிறார்.

இன்று பல இலத்தீன் அமெரிக்க நாடுகளும் சோசலிசத்திற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றன. 2017 ம் ஆண்டு, மாஸ்கோவில் நடந்த ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பலர், ஸ்டாலினை மிக உயர்வாக பேசியதை நான் கண்டேன். ஒருவேளை யூரி ஆண்ரபோவ் காலத்தில், கட்சி முன்னெடுத்த சீர்திருத்தங்கள் அதன் போக்கில் தொடர்ச்சியாக சென்றிருந்தால் சோவியத் ஒன்றியம் வீழ்ந்து இருக்காது; உரிய மாற்றங்களை அந்த மக்களே செய்திருப்பர். அல்லது கோர்ப்பசேவ் சொல்லிய பெரிஸ்த்ரோய்கா, கிளாஸ்நாஸ்ட் வழியில் சென்று, சோவியத் ஒன்றியம் பிளவுபடாமல் இருந்திருந்தால் இன்று பல நாடுகள் சோசலிச பாதையை அடைந்திருக்கும். அமைதியான உலகம் எட்டப்பட்டிருக்கும்.

இறுதியாக ஒரு வரலாற்று ஆசிரியர் கூறியதைச் சொல்லி எனது உரையை முடிக்கிறேன் : “கோர்ப்பசேவ், சோவியத் ஒன்றியத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். ஆனால் நல்ல மனிதர். அவர் மேற்குலக நாடுகளின் மீட்பர். ஆனால் உள்நாட்டில் தோல்வி அடைந்தவர்”

இவ்வாறு வகிதா கூறி முடித்தார்.

தொகுப்பு: பீட்டர் துரைராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button