தமிழகம்

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்! போர் துவங்குவதற்கு முன்பிருந்தே இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்காததே இந்திய மாணவர்கள் படும் பெருந்துயரங்களுக்கு காரணம் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் இன்று (3.3.2022) சென்னையில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி பின்வருமாறு:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் உக்ரைனில் குண்டு வீச்சுக்கு ஆளாகி இறந்துள்ளார். இது மிகவும் கவலை அளிக்கும்,வேதனை தரும் செய்தியாகும். மாணவர் நவீன் அவர்களுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கனத்த இதயத்தோடு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

இனிமேலும், காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும். இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பாக உக்ரைனிலிருந்து வெளியேற , உக்ரைன் மற்றும் ரஷ்ய அரசுகள் உதவிட வேண்டும் என மத்திய அரசு கூடுதல் அழுத்தத்தை கொடுத்திட வேண்டும்.

தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். அது மட்டுமன்றி, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர, போருக்குக் காரணமான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திட தொடர்புடைய நாடுகளை வலியுறுத்த வேண்டும். இத்தகைய நிலைமைகள் ஏற்படாமல் தடுத்திட, உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட உதவும் கருவியாக உள்ள நேட்டோ ராணுவக் கூட்டணியை கலைத்திட வேண்டும்.

நாடுகளிடையே எழும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக ,அமைதி வழியில் பேசி தீர்த்துக் கொள்ளும் முறையை வலுப்படுத்திட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையை நடுநிலையானதாகவும், ஜனநாயகம் மிக்கதாகவும் மாற்றிட வேண்டும். இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், உலக சமாதான சக்திகள், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்கள் வலிமையாக குரல் கொடுத்திட வேண்டும்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இங்கேயே தங்கள் மருத்துவப் படிப்புகளைத் தொடர ,தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும். நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அவர்களை பிரித்து அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கான கல்விச் செலவை மனித நேய அடிப்படையில் அரசே ஏற்க வேண்டும்.

மருத்துவம் பயில விரும்பும் இந்திய மாணவர்கள், இந்தியாவிலேயே மருத்துவம் பயிலும் வகையில் மத்திய – மாநில அரசுகள் போதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிட வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிட தனியாருக்கு அனுமதி வழங்கிடக் கூடாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும்.

வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சி பெற ரூ 2 லட்சத்திற்கு மேல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை ரத்து செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவராகப் பயிற்சி பெற ரூ 12 லட்சத்திற்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. அதை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அந்த பயிற்சி மருத்துவர்களுக்கும் பயிற்சிக் கால பயிற்சி ஊதியம் வழங்கிட வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் பா.அருணந்தி, டாக்டர் கே. நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button