தமிழகம்

இருள் விலகி ஒளிவீசும் – வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம்! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்

நாட்டில் வாழும் மக்கள் இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், புத்தம், ஜைனம், சீக்கியம் என பல்வேறு சமய வழிகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இது தவிர, மலைகளிலும், மலை சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் அவரவர்களுக்கு வழிவழியாக வழங்கப்பட்ட சமய வழிகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.

எந்தவொரு சமய வழி மீதும் நம்பிக்கை கொள்ளாத, எல்லா மதங்களையும் ஒரே குடையின் கீழ் காண்போரும், மதச்சார்பற்றவர்களும், நாத்திக சிந்தனையாளர்களும் வாழ்ந்து வரும் தனித்துவமிக்க நாடாக இந்திய ஒன்றியம் அமைந்துள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கும் சமூக அமைப்பில் ஒவ்வொரு சமய வழியினரும் அவரவர் சமயம் போதிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இதில் மகிழ்ச்சி நிறையும் காலங்களில் பண்டிகையாக கடைப்பிடிக்கும் வழக்கம், பண்பாடு அனைத்து சமயங்களிலும் அமைந்துள்ளது.

இந்த வகையில் வரும் 24.10.2022 தீபாவளி பண்டிகை இந்து சமய மக்களால் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை குறித்து பல கதைகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இலக்கிய சான்றுகளை ஆதாரப்படுத்தி தீபாவளி “வரலாறு” கூறப்படுகிறது. அவைகளில் முற்றிலும் புனைவுக் கதையான நரகாசுரன் வதம் மட்டுமே மக்கள் சிந்தனையில் திரும்பத் திரும்ப அழுத்தி திணிக்கப்படுகிறது. இதன் உண்மை தன்மைக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நாமும் இதனை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், இருளை விலக்கி ஒளிவீசும் நாளாக, நலிவுகள் நீங்கி நன்மைகள் பெருகிய நாளாக, அறியாமையை வெற்றி கண்ட அறிவாற்றலின் வெடி முழக்கமாக “தீபாவளி” பண்டிகையைப் பார்த்தால் அது நமது வாழ்வோடு இணைந்து நிற்கும்.

விருதுநகர் மாவட்டத்துக்கும், குறிப்பாக சிவகாசி சுற்றுவட்டாரத்துக்கும் தீபாவளி பண்டிகை தான் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இந்தத் தொழிலும் சுற்றுப்புற சூழல் மாசு காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன்.? தமிழ்நாட்டிலும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனைக்கு தடையும், கட்டுப்பாடும் பட்டாசு தொழிலாளர்களுக்கு துயரமாகவே அமைந்துள்ளது. வழிவழியாக கற்றறிந்த தொழிலை, அதில் தனித் தேர்ச்சி பெற்ற அறிவை எல்லாம் இழந்து வேலை தேடி அலையும் கூட்டத்தில் சேரும் துயரம் ஏற்பட்டிருக்கிறது.

அரசுப் பணித்துறையிலும் சரி, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளிலும் சரி, நிரந்தரப் பணியிடங்கள் அழித்தொழிக்கப்பட்டு, ஒப்பந்தப்பணி, தொகுப்பூதிய பணி, வெளியிடப் பணி, காலவரம்பு கொண்ட பணி (Fixed Term Employment) என்று நிரந்தரப் பணி முறையும், காலமுறை ஊதியமும் பெருமளவு அழித்தொழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டமும் நடத்தித்தான் ஓய்வூதியச் சட்டம் பெறப்பட்டது.

ஒரு பணியாளர் பணியில் உள்ள காலத்தில் எந்த நிலையில் வாழ்ந்து வருகிறாரோ, அந்த நிலைக்கு சற்றும் குறையாத கண்ணிய வாழ்க்கை வாழ உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தது. ஆனால், இப்போது பழைய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என “நாயின் வாலை வெட்டி, நாய்க்கு சூப்” போடும் வேலை நடக்கிறதே! இது மகிழ்ச்சி அளிக்குமா?

கிராமப் பகுதிகளில் உடல் உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதைச் சட்டபூர்வ உரிமையாகப் பெற்றுள்ளன. இந்தச் சட்டபூர்வ உரிமை ஒன்றிய அரசால் மதிக்கப்படுகிறதா? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில், வேலை அட்டை பெற்றுள்ள 39 சதவீதம் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூட இதுவரை வேலை வழங்கவில்லை. மற்றவர்களுக்கும் சராசரி 50 நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதில் எங்கே மகிழ்ச்சி கொள்வது?

விலைவாசி உயர்வு பல பொருட்களை கைக்கு எட்டாத உயரத்திற்கு தூக்கிச் சென்று விட்டது. இதில் புத்தாடை எங்கே வாங்குவது?

நாளேடுகளின் முழு பக்க விளம்பரங்களில் வரும் வண்ணப்படங்களும், அவர்களது உடலில் அலங்கரிக்கப்பட்டுள்ள நகைகளும் மனதை ஈர்க்கிறது. ஆனால், மடி காலியாக இருப்பதை பார்த்தவுடன் கண்ணீர் வழிகிறது. ஆம், தாலி கட்டி வாழ்க்கை இணையாக வந்தவருக்கு ஒரு சேலை, பெற்றெடுத்து உச்சி முகர்ந்து முத்தங்கள் பொழிந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு சந்தைகளில் கழித்துப் போடப்பட்ட துணி கூட வாங்க முடியவில்லை. அட என்னை பத்து மாதம் சுமந்து, பெற்று வளர்ந்த தாய், வயோதிக நிலையில், கைகளில் கோல் ஊன்றி, நடுங்கும் உடல் தாங்கி என் முன் வந்து, இன்னைக்கு “கோழி சாறு” குடிக்கலாமா? என்று கேட்கும் போது இதயமே நொறுங்கி, மன அழுத்தம் உடைந்து அழுகையாக வெடிக்கும் எரிமலையாக நிற்கும் போது எங்கே மகிழ்ச்சி வரும்….

என்ன செய்வது? என் அய்யன் வள்ளுவன் சொல்லிக் கொடுத்து விட்டார்….

  இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் 
  துன்பம் உறுதல் இலன் - (குறள்: 628) 

துன்பத்தில் துவண்டு விடாமல், துள்ளி எழுந்து நிற்போம். கவலையற்ற வாழ்வு சகலருக்கும் கிடைக்கும் சமதர்மம் நோக்கி பயணிக்க தீபாவளி திருநாளில் உறுதி ஏற்போம்!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

இவண்
தோழமையுடன்
நா. பெரியசாமி
பொதுச் செயலாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button