கட்டுரைகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரம் ரத்து – ஒரு காந்தியவாதியின் பார்வையில்…

– பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), திரிணமூல் காங்கிரஸ் (TMC), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் ‘தேசிய கட்சி’ என்பதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்து இருக்கிறது.
அங்கீகார ரத்து தொடர்பாக,
விளக்கம் கேட்டு ஆணையம் அனுப்பிய தாக்கீதுக்கு 18.07.2019 அன்று
கட்சி சொன்ன விளக்கம் வெகு அருமை. ‘அங்கீகாரம் என்பது, வெறும் வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெறும் தொகுதிகள் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கட்சிக்கு இருக்கும் ஆதரவை (மட்டுமே) தெரிவிக்கக் கூடியது; இது குறுகிய காலத்துக்கு ஆனது; மாறுதலுக்கு உட்பட்டது.
மேலும், அரசியல் ஜனநாயகத்தின் உயிர்ப்புத் தன்மைக்கு, ஒவ்வொரு அரசியல் குரலையும் கேட்பது அவசியமாகும். ஜனநாயகக் கோட்பாடுகளை உயர்த்துவதற்கே அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அவற்றில் ஒன்று’.
1952 முதல் எல்லா பொதுத் தேர்தல்களிலும் ஒரே தேர்தல் சின்னத்தில் (கதிர் அரிவாள்) போட்டியிட்ட ஒரே கட்சி;
ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அல்லாத முதல் அரசியல் கட்சி;
சுதந்திரம் சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளை அடிப்படையாய்க் கொண்டு செயல்படுகிற கட்சி.
2016 ஆக 22 அன்று, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீள்பார்வை செய்யப்படும் எனத் தீர்மானிக்கப் பட்டதாய்த் தேர்தல் ஆணையம் கூறியது. அப்படியானால் இப்போது என்ன அவசரம்?
2023, 2024 மிக முக்கியமான தேர்தல் ஆண்டுகள். இதற்கு முன்னதாக ஒரு அரசியல் கட்சியின் தகுதி நிலையை மாற்றுவது நியாயமாக இருக்காது.
அங்கீகாரத்தை ரத்து செய்து ஆணையம் பிறப்பித்த உத்தரவு, ‘ஜனநாயக மாண்பு – என்ன விலை?’ என்று கேட்கிற லட்சணத்தில் இருக்கிறது.
ஜனதா தளம் – எதிர் – தேர்தல் ஆணையம் (1996) வழக்கில் உச்ச நீதிமன்றம்,
General Clauses Act 1897 பிரிவு 21இன் கீழ், அங்கீகாரம் பற்றி முடிவு செய்ய ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியதை ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது. உண்மைதான். யாரும் மறுக்கவில்லை.
அடுத்ததாக ஆணையம், சுப்பிரமணிய சுவாமி – எதிர் – தேர்தல் ஆணையம் (2008) உச்சநீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக் காட்டி, தேர்தல் களத்தில் ‘மோசமாக’ செயல்பட்ட கட்சிக்கு, சின்னத்தை மறுக்க உரிமை இருக்கிறது என்று வாதிடும் ஆணையம், ‘செயல் திறன்’ கொண்ட அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
இன்னும் ஒரு படி மேலே சென்று கூறுகிறது (குறிப்பு எண் 34): ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனைகள், பங்களிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்கிற வாதத்தில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
பொதுத் தேர்தலில் பெறும் வாக்கு, நாடாளுமன்ற சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை…. இதன் அடிப்படையில் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.
சட்டப்படி இது சரியான நடவடிக்கை தான். ஆனால், அங்கீகாரத்தை ரத்து செய்யும் சட்டமே சரி இல்லை. ஓர் அரசியல் இயக்கத்தின் கோட்பாடுகள் பற்றி கவலை இல்லை; வெற்றி பெற்றால் போதும், அங்கீகாரம் கிடைக்கும் என்கிற அணுகுமுறையே அநாகரிகம்.
நாடாளுமன்ற மக்களவையில் 2% இடங்கள் (11)
அல்லது, குறைந்தது நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்கு மற்றும் மக்களவையில் 4 இடங்கள் அல்லது குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகாரம் இருந்தால் அது தேசிய கட்சியாகும். இல்லையேல் இல்லை.
மேற்கு வங்கம், ஒடிசாவில் ‘மாநிலக் கட்சி’ அங்கீகாரமும் இதே ஆணையில் ரத்து செய்யப் பட்டுள்ளது. இப்போதைக்கு கேரளா, தமிழ்நாடு, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே அங்கீகாரம் உள்ளதால் தேசியக் கட்சி ஆக முடியாது.
இந்தப் பிரசினையில் இவ்வளவு தீவிரமாகச் செயல்படும் ஆணையத்தின் செயல்பாடு, இதற்கு அப்பால் எப்படி இருக்கிறது?
பொதுத் தேர்தலில் ஒருவர் வாக்களித்தல், அடிப்படை உரிமையாகவோ, அடிப்படைக் கடமையாகவோ இன்று வரை இல்லை. இதுகுறித்து ஆணையம் ஒரு முறையும் வாய் கூடத் திறக்கவில்லை.
பொதுத் தேர்தலின் போது பெரிய கட்சிகளின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் தேர்தல் ஆணையம், சிறிய கட்சிகளையும், சுயேட்சை வேட்பாளர்களையும் துரும்புக்கும் மதிப்பதில்லை. அவர்களின் ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கத் தயங்கியதே இல்லை.
இதன் நீட்சியாகவே இப்போது, வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கித் தடாலடியாக அங்கீகாரத்தை ரத்து செய்து மகிழ்ச்சி காண்கிறது.
விதிமுறைகளின் படி, சட்டம் தந்துள்ள அதிகாரத்தின் கீழ்தான் ஆணையம், தேசியக் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. ஆனால், ஒரு ஜனநாயகக் குடியரசில், சாதி மதம் இனம் மொழி.. எல்லாவற்றையும் விட ‘பணம்‘ ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்த, ஆணையம் என்ன செய்து இருக்கிறது? ஒவ்வொரு அரசியல் கட்சியும் நியாயமான, நேர்மையான முறையில் மட்டும்தான் வாக்குகளைப் பெறுகிறதா?
எந்தத் தவறான வழிமுறைகளுக்கும் இடம் தராது, உண்மையாகவே ஜனநாயக நெறிமுறைகளின் படி செயல்படுகிற ஓர் இயக்கத்துக்கு, தேவையான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைக்காமல் போனால், அது குறித்து, ‘பொறுப்பானவர்கள்’, கவலைப்பட வேண்டாமா? வெட்கப்பட வேண்டாமா?
கொள்கைகளில் மாறுபடலாம்; நோக்கங்களில் உடன்படாமல் போகலாம். ஆனால், தேர்தல் களத்தில் உண்மையாகப் பணியாற்றி நேர்மையாகப் போட்டி இடுகின்றன இடதுசாரி இயக்கங்கள். இந்த அரசியல் திண்மைக்கான பாராட்டுச் சான்றிதழ் – ‘தேசியக் கட்சி’ அங்கீகார ரத்து!
இந்திய அரசியல் இயக்கங்களுக்கு ஒரு ஜனநாயகக் கடமை இருக்கிறது. நாடாளுமன்றம் மூலம், அங்கீகாரம் ரத்து தொடர்பான சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இது ஓர் உடனடித் தேவை. அவசியம், அவசரம்.
‘நோட்டு – ஓட்டு – சீட்டு’ என்கிற குமிழுக்குள் கட்சிக்குள் அடங்காது.
இறுக்கமான சட்ட வரிகளுக்குள் சிக்கித் திணறுகிறது இந்தியாவின் மக்களாட்சித் தத்துவம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான அங்கீகார ரத்து, நமக்குத் தொடுக்கும் கேள்வி இதுதான்:
தேசத்தின் முகம் மாறி விட்டது; தேசம் என்பதன் பொருள் திரிந்து விட்டது. இனியும், ‘தேசியக் கட்சி’ என்பது எப்படிப் பொருந்தும்? ‘ஒரு நியாயம் வேணாமா..?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button