கட்டுரைகள்

அடக்குமுறை நெருப்பில் பூத்த செம்மலர்!

கே.சுப்பராயன் எம்.பி.

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு 97 வயது !

இன்னும் மூன்று வருடங்களில் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் களை கட்டிவிடும்.

கடந்த ஆண்டும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு  விழா  மார்க்சிஸ்ட் கட்சியினரால் கொண்டாடப்பட்டது! இந்நிலையில், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, 2024 டிசம்பரில் தொடங்கும் என்ற கருத்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் குழப்பமடைய ஒன்றுமில்லை!

1925 ம் ஆண்டு தான் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்று, ஒன்றுபட்ட கட்சியின் தேசியக் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு விட்டது!

1964 ஏப்ரல் மாதம் கட்சியின் தேசியக்குழுக்கூட்டத்திலிருந்து  32 தோழர்கள் வெளியேறினர். அப்படி வெளியேறிய 32 பேரில் தோழர் பூபேஷ்குப்தா திரும்ப கட்சிக்கு வந்து விட்டார் . தேசியக் குழுவின் பெரும்பான்மை முடிவை ஏற்க மறுத்து வெளியேறி, புதிய கட்சி அமைப்பை உருவாக்கியது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

அதற்கு பின்னர் அந்த 32 தோழர்களும் இருந்து எடுத்த ஒன்றுபட்ட கட்சியின்  முடிவை இன்று மீறி, 1920 ல் தான் கட்சி தொடங்கப்பட்டது  என்று அறிவித்தனர். அதனால், அவர்கள் 1920 ஐ  கட்சி தொடங்கிய ஆண்டாக எடுத்து கொண்டனர்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்டிருந்த போது எடுத்த முடிவில் உறுதியாக இன்று வரை நின்று கொண்டாடி வருகிறது.

ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின்படி தேசிய குழுவின் முடிவைக் கட்சி உறுப்பினர்களும் அமைப்புக்களும் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளன. ஏனெனில், லெனின் வகுத்த கட்சி வாழ்க்கை நியதிகளை, கோட்பாடுகளைப் பற்றி நிற்கிற லெனினிஸ்ட் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்று அமலாக்கி வருகிறது. அதே நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்கான பின்புலமாக அதை மதிப்பீடு செய்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் அவ்வளவு எளிய ஒரு சம்பவமாக வரலாற்றில் ஏறிவிடவில்லை. உள்ளும் புறமும் அது சந்தித்த சவால்கள் , தாக்குதல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல ! ஒவ்வொன்றும் நெருப்புத்துண்டு நெஞ்சில் விழுந்த மாதிரி இடைவெளியின்றி விழுந்து கொண்டே இருந்தது.

புறத்தில், பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தின், காலனி ஆட்சியினரின் தாக்குதல்கள் குரூரமானவை, கொலை வெறி கொண்டவை.

இந்திய மண்ணில், கம்யூனிஸ்ட் இயக்கம் பிறப்பதற்கு முன்பே,  அதை கருவறையிலேயே  கருவறுத்து  விட  வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டனர் .

1917 சோவியத் புரட்சி வெற்றி பெற்று உலகில் சோசலிச உதயம் தொடங்கிவிட்ட நேரம். அந்தப் புரட்சியின் ஒளிக்கீற்று இந்திய எல்லைக்குள் நுழைந்து விடாதவாறு தடுப்பதில் வெறிபிடித்தலைந்தது காலனி ஆட்சி .

தனிமனிதர்களின் அங்க அசைவுகளையும், மனப்போக்கையும் கூர்மையாகக் கண்காணித்து வேட்டை ஆடியது. பெஷாவர் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என வழக்கு மேல் வழக்கைப் போட்டு அதிகாரத் திமிரெடுத்து ஆடியது பிரிட்டானிய போலீஸ்.

வேள்விப் பொருளாக நெருப்பில் பிறந்தவள் பாஞ்சாலி என்று மகாபாரத இதிகாசம் பேசுகிறது . இது கதை ! ஆனால், இந்திய அரசியல் வரலாற்றில்  “அடங்காது  எரிந்த அடக்குமுறை நெருப்பில்“ பிறந்தது தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

கவச குண்டலங்களோடு பிறந்தவன் கர்ணன் என்று மகாபாரதம் சொல்கிறது! இதுவும் கதை தான். ஆனால், மனித இன வரலாற்றில், தகர்க்க முடியாத தத்துவ ஞானத்தோடும், அசைக்க முடியாத அமைப்பு நிலை செயல்பாட்டோடு கூடிய அர்ப்பணிப்பும் இணைந்து பிறந்த கட்சி தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

கம்யூனிஸ்டுகளிடம் இருந்து தத்துவத்தையோ, அமைப்புரீதியான நடைமுறைகளையோ ஒருபோதும் பிரிக்க முடியாது. உடலில் இருந்து உயிர் போனால் அது பிணம்! கம்யூனிஸ்டுகளிடமிருந்து தத்துவம் பிரிந்தால் அது நடமாடும் பிணம்! உடலுக்கு உயிர் போல் கம்யூனிஸ்டுகளுக்கு தத்துவ ஞானம்!

1848 ல் “கம்யூனிஸ்ட் லீக் “ என்ற பொதுவுடைமை புரட்சியாளர் அமைப்பிற்கான வேலைத்திட்டமாக மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரால் படைக்கப்பட்ட வரலாற்று ஆவணம் தான் “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை”. இந்த அறிக்கை சுரண்டும் கும்பலின், தாங்கள் உழைக்காமல் சமூகத்தின் உழைப்பைக் கபளீகரம் செய்து சொகுசாக வாழ்ந்த முதலாளித்துவத்தின் அடித்தளத்தையே அசைத்தது!

இந்தச் சின்னஞ்சிறு, “அக்கினி குஞ்சைக்” கண்டு முதலாளிகள் நடுநடுங்கினார்கள்! பல நூற்றாண்டுகளாகத் தொடரும் தங்கள் சுரண்டல் வேட்டைக்கு அந்திம காலம் தொடங்கி விட்டதாக அஞ்சினர். இந்த ‘அனல் வீச்சைத்‘ தடுத்திட சகல ஆயுதங்களையும் பயன்படுத்தினர், பயன்படுத்துகின்றனர், பயன்படுத்துவர் !

உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தொழிலாளி வர்க்கமே , ஒன்று சேருங்கள்! உங்களைப் பிணைத்துள்ள அடிமைச்சங்கிலி அறுந்து விழட்டும்! உங்களுக்காக பொன்னான உலகம் காத்திருக்கிறது! என சிம்ம கர்ஜனை புரிந்து நம்பிக்கையூட்டியது  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

சமூகத் தீமைகளை அழிக்கிற அந்தத் தீப்பொறி இந்தியாவை வந்தடைய 77 ஆண்டுகள் கழிந்தன.
ஏன் இந்தியாவை வந்தடைய இவ்வளவு காலதாமதம்? இது விரிவாகச் சொல்லப்பட வேண்டிய, ஆராயப்பட வேண்டிய ஒன்று தான்.

கம்யூனிசம் என்ற கருத்து, மார்க்சியத் தத்துவம் என்பது அன்னியச்சரக்கு என்று அந்நியர்கள் காலடிகளில் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டுக் கிடந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலும் அதன் அறிவு ஜீவிகளும் சொல்லித் திரிகின்றனர்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “ என்றுதான் இந்த மண்ணும், மரபுகளும் முழங்கின!

அதற்கு ஒருபடி மேலே போய் “உலகில் எல்லோருக்கும் உரியதாய் எது இருக்கிறதோ, அதுவே எனக்கும் உரியது!” “பிறர் துன்பம்  தீர்ந்தால்தான்  எனக்கு  இன்பம்“ என்று உலகம் இன்பகரமாக வாழ்ந்திட வாழ்நாளெல்லாம் துன்ப நெருப்பில் வாழ்ந்து மறைந்தார் காரல் மார்க்ஸ்!

அது அந்நிய சரக்கல்ல, முழு மொத்த மனிதகுலம் நெடுங்காலமாக கண்டு வந்த நற்கனவுகளுக்கு நடைமுறையில் , நனவில் அவை நிறைவேறிட, கண் துஞ்சாது நனவிலே  காரல் மார்க்ஸ் கண்ட கனவு தான் கம்யூனிசம்!

இது மனிதகுலத்தின் மகத்தான ஞானச்செல்வம்!

அதைத் தனது இலட்சியமாகக் கொண்டு, அதற்கான வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியத்தைத் தாங்கி நிற்கிற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்தியப் படைப்பிரிவு ! தனது தத்துவஞான ஒளியில், தேசிய விடுதலை இயக்க காலம் முதல் இன்று வரை, இந்தியாவின் தலை மீது வலதுசாரி பிற்போக்கு ஆபத்து இருக்கிறது, என்று தொடர்ந்து எச்சரித்து வந்த கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

ஆனால் அன்று சிலர், “அது வெறும் பிரமை, அப்படி எல்லாம் நடக்காது என்றனர். என்ன நடந்தது வரலாற்றில்? நடக்கக்கூடாத விபத்து நடந்தே விட்டது! மகாத்மா காந்தி அடிகளை சுட்டுக்கொன்ற இந்துத்வா அதிகாரத்திற்கு வந்து விட்டது .!

1946 தேர்தலில், 1952 ல், 1957ல், 1962 ல் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சதவிகிதம் ஏறுமுகமாகவே இருந்தது! 1962 ல் 9.5 சதவிகித வாக்குகளைப்பெற்றது இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி.
ஆனால் இன்று… ஏன் இந்தப்பின்னடைவு ?காங்கிரசை எதிர்த்த மக்கட்பகுதி கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி நகர்ந்தது 1962 வரை. அதற்குப்பின் கட்சி இரண்டாகப் பிளந்தது, மக்கள் கம்யூனிஸ்டுகள் மீது நம்பிக்கை  இழந்தார்கள், அதை  லாவகமாக வடித்துக்கொண்டது வலதுசாரி பிற்போக்கு கும்பல்!! வரலாறு மண்டையில் ஒரு கொட்டுக் கொட்டி  பாடம் சொல்லிக் கொடுத்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு லெனினியக் கட்சி! அனுபவம் தந்த பாடங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கான பாதையில் முன்னேறும்! சோசலிசமே வெல்லும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button