
2026 மே மாதம், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு அமைவதில் தாமதப்படுத்தியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தீர்ப்பு தீர்க்கமானதாக அமைந்தது. முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் (TVK), 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திராவிட முன்னேற்ற கழகம் (DMK) 59 இடங்களுக்குச் சுருங்கியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) 47 இடங்களை வென்றது. இதன் மூலம் த.வெ.கவின் நிறுவனர் சி. ஜோசப் விஜய், கடந்த 59 ஆண்டுகளாக மாறிமாறி ஆண்டுவந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் வெற்றி கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக (108 இடங்கள்) உருவெடுத்தாலும், ஆளுநர் ஆர்லேகர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்தார். விஜய் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தினார். அது அவரின் பணி அல்ல.
பாஜகவிற்கு வியூகமும் அமைக்கும் ஆளுநர்
டெல்லியில் இருந்து பாஜக மேற்கொண்ட முயற்சிகளால் மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாஜக உடன் கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான அரசை பின்வாசல் வழியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் நாகரிகமான செயல் அல்ல
தனிப்பெரும் கட்சியாக வந்த தவெக-வை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் என்ற நிலையில், அவ்வாறு நடக்காததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துக் கடிதம் கொடுக்க வேண்டியிருந்தது.
விஜய் மூன்றுமுறை ஆளுநரைச் சென்று நேரடியாக சென்று சந்தித்தபோதும் ஆளுநர் வீண் அலைக்கழிப்பு வேலையை செய்தார், ஆட்சி அமைக்க அனுமதி மறுத்தார்.
இந்த நிலையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுநர் இல்லம் நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது சந்திக்க வந்த விஜய்யையும் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டார். பின்பு டெல்லி சுல்தான்களை கலந்து கொண்டு, அதன் பிறகு 6.30 மணிக்கு மேல் சந்திக்க அனுமதி கொடுத்தார் இந்த நிலையில் விசிக-வும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குகும் ஆதரித்துக் கடிதம் கொடுத்தன. இதனால், வேறு வழியின்றி கடந்த 10 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவித்தார்.
ஆளுநர் செய்ய வேண்டியது என்ன?
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், ஆளுநர் மேற்கொள்ள வேண்டிய பணி என்பது சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற அதிக வாய்ப்புள்ள நபரை அடையாளம் கண்டு, அவரைப் பதவியேற்க அழைப்பதே ஆகும். பதவியேற்க அனுமதிக்கும் முன், முதலமைச்சராகப் பதவியேற்பவர் கையொப்பமிட்ட கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருவதற்கு ஆளுநருக்கு உரிமையும் இல்லை. அவசியமும் இல்லை.
ஆட்சி அமைப்பதற்கான நடைமுறை
1988-ஆம் ஆண்டின் சர்க்கரியா ஆணையம், 2002-ஆம் ஆண்டின் வெங்கடாச்சலையா ஆணையம், மற்றும் 2010-ஆம் ஆண்டின் புஞ்சி ஆணையம் ஆகியவை ஆட்சி அமைப்பதற்கான முன்னுரிமை குறித்த நிலைப்பாடு ஒருமனதாக இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய ஒற்றைக் கூட்டணிக்கு முதல் இடம். அதற்கு அடுத்ததாக, ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கக்கூடிய மிகப்பெரிய ஒற்றைக் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே அது.
பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல்
2017 ஆம் ஆண்டு கோவாவில், 40 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 17 இடங்களைக் கொண்டிருந்த காங்கிரஸை விட, 13 இடங்களைக் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைப்பு விடுத்தார். அதே ஆண்டில், மணிப்பூரில், 21 இடங்களைக் கொண்டிருந்த பாஜக, அதைவிட அதிக இடங்களை பெற்றிருந்த காங்கிரஸை விட முன்னுரிமை பெற்றது என்ன வகை?
28 இடங்களுடன். 2018-ல், கர்நாடகாவில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், ஆளுநர் வஜுபாய் வாலா, 115 இடங்களுடன் தேர்தலுக்குப் பிந்தைய காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அனுப்பிய எழுத்துப்பூர்வமான கடிதத்தைப் புறக்கணித்து, 104 இடங்களைக் கொண்ட பாஜகவை ஆட்சி அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார். இந்த வகையில், ஆளுநரின் விருப்புரிமையால் பாஜக பயனடைந்தது.
பாஜக போட்டியாளராக இல்லாத மற்றும் ஒன்றிய அரசு விரும்பிய கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள தமிழ்நாட்டில், இந்தக் கொள்கை ஏன் மாற்றப்பட்டது? தற்போது அழைப்பு அனுப்புவதற்கு முன்பே, ஆட்சி அமைப்பதற்குத் தேவைப்படும் 118 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதற்கான ஆதாரத்தைக் கோருகிறார். இது ஒருதலைப்பட்சமான நிலைப்பாடு.
சிறுபான்மை அரசுகள்
சிறுபான்மை அரசாங்கங்கள் கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன என்பதை ஆளுநர் மறந்துவிட்டார் போலும். 1996, மே 16 அன்று, பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவால் பதவியேற்க வைக்கப்பட்டார். அவரிடம் பெரும்பான்மை இல்லாத போதும், அதனை நிரூபிக்க 13 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அவர் மே 28 அன்று வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலேயே பதவி விலகினார். அவர் பதவியேற்காமல் இருந்திருக்க வேண்டும் என்று அப்போது யாரும் கூறவில்லை.
பி.வி.நரசிம்மராவ், சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமராக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார், 1993 ஜூலையில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நரசிம்மராவ் தப்பினார். எச்.டி.தேவே கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் மத்தியில் சிறுபான்மை ஐக்கிய முன்னணி அரசாங்கங்களை வழிநடத்தினர். 2004-ல், காங்கிரஸின் மன்மோகன் சிங்கின் முதல் அமைச்சரவை, இடதுசாரிகள் வெளியிலிருந்து கொடுத்த ஆதரவில் முழு பதவிக்காலமும் நீடித்தது.
அப்போதெல்லாம், ராஷ்டிரபதி பவன் அல்லது லோக் பவனில் முன்கூட்டியே கையொப்பங்களைச் சமர்ப்பிப்பது அரசியலமைப்புச் சோதனையாக இருந்ததில்லை. இதற்கான ஒரே சோதனைக்களம் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம்தான். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்காத வரை ஒரு அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும். அதுவே அரசமைப்பின் பிரிவு 164(2) மற்றும் அதிலிருந்து உருவாகும் மரபின் சாராம்சம் ஆகும்.
எனவே, திரு.ஜோசப் விஜய் பதவியேற்பதற்கு முன்பு ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 பேரின் கையொப்பமிட்ட கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுநர் கூறியிருப்பது, வேண்டும் என்றே உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் எந்த விதியும் அதனைக் கோரவில்லை. எந்த ஆணையமும் அதைப் பரிந்துரைக்கவில்லை. அப்படிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமும் இல்லை. திரு. விஜய்யின் ஆட்சியை எதிர்க்க விரும்பும் எவரும் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். பிறகு எதற்காக அவர் அழைக்கப்படவில்லை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்
அரசு அமைப்பதில் ஆளுநரின் விருப்புரிமை குறித்த சட்டத்தை வகுப்பதற்கு, எஸ்.ஆர். பொம்மை (1994), ராமேஷ்வர் பிரசாத் (2006) மற்றும் 2018-ஆம் ஆண்டின் கர்நாடக உத்தரவு போன்ற வழக்குகளில் நீதிமன்றத்திற்குப் பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு முறையும், இது ஓரளவிற்கு மட்டுமே செயல்பட்டுள்ளது. இப்போது முழுமையாகச் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆளுநரின் ஆட்சி எதற்கு இட்டுச் செல்லும்?
இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ஆட்சி வந்து விடக்கூடாது என்று கருதுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியின்போது தான் அது இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டு சட்டமன்றம் அளிக்க வேண்டிய தீர்மானத்தை ஆளுநரே அளித்து, அதன் மாநில உரிமைகளையும் பிரித்த கொடூரத்தை செய்தது. உச்ச நீதிமன்றம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும் இன்று வரை அந்த தீர்ப்பை அமல்படுத்தாமல் அடாவடி அரசியலை மோடியின் பாசிச ஆட்சி தொடர்ந்து செய்து வருகிறது. எனவே ஆளுநர் ஆட்சி தானே என்று நாம் சாதாரணமாக இருந்து விட முடியாது.
ஜனநாயகத்தை காக்க, மாநில உரிமைகளைக் காக்க, இரு மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, சமூகநீதி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு என அனைத்திலும் தமிழ்நாட்டு நலன் சார்ந்து இயங்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்து செயல்படுத்தி வருகிறது.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஜனநாயக கடமை ஒருபுறம், இதுவரை பெற்ற சமூக நீதி கல்வி வாய்ப்புகளை காப்பாற்றுவது மறுபுறம் என்ற நிலையில் நிகழ்கால அரசியலை எடை போட்டு முடிவுகள் எடுப்பது தான் முதிர்ச்சியான அரசியல்!