சமூக அநீதிகளை மீண்டும் உள்நுழைக்கும் சதி!
டி. ராஜா, பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி


இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டுவிழா நிகழ்ந்த நேரம்! “சமயச்சார்பற்ற” (secular) மற்றும் “சோசலிச” (socialist) என்ற சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்தது சரிதான் என உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், இந்தியக் குடியரசின் அடிப்படைத் தன்மையை மீண்டும் வலியுறுத்தியது.
1976-ல் நெருக்கடி நிலையின் போது இந்திரா காந்தி அரசால் 42-வது திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட இந்தச் சொற்கள், வலதுசாரிகளின் அரசியல் மற்றும் சட்டத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. இந்தச் சொற்களைச் சேர்த்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 1949 நவம்பர் 26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அசல் முன்னுரையில் இந்தச் சொற்கள் இல்லை என்ற காரணத்துக்காக, அவற்றைச் சேர்த்ததைச் செல்லாது என்று கூற முடியாது எனத் தீர்ப்பளித்தது.
இந்தச் சொற்கள் சேர்க்கப்பட்டதை மறு உறுதிப்படுத்திய தீர்ப்பு அவர்கள் எழுப்பிய வாதத்துக்கு முடிவை எழுதியது. ஆனால் பாஜகவின் கருத்தியல் முதுகெலும்பான ஆர்.எஸ்.எஸ், அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மீது ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே “சமயச்சார்பற்ற” மற்றும் “சோசலிச” என்ற வார்த்தைகளை முன்னுரையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுபடியும் எழுப்புகிறார். அவரின் கூற்றுப்படி, இவை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் அரசியலமைப்பு பார்வைக்கு அந்நியமானவை.
இந்தியத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் இன்னும் ஒரு படி இறங்கி, இந்தச் சொற்களைச் சேர்ப்பதை “சனாதனத்தின் ஆன்மாவுக்கு அவமானம்“ என்று குறிப்பிட்டார். இந்த அறிக்கைகள் நாட்டின் மிக உயர்ந்த அலுவலகங்களில் இருந்து வெளியாகின்றன என்பது ஏதோ தற்செயலானது அல்ல. இது ஒரு அறிவார்ந்த விவாதமே அல்ல. இது நவீன, பன்முக, ஜனநாயக இந்தியக் குடியரசின் சட்டபூர்வத்தன்மையை மடை மாற்றி, மீண்டும் ஏற்றத்தாழ்வுள்ள சமூகக் கட்டமைப்பு முறைமையை நிலைநாட்ட வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் உத்தியாகும்.
விளிம்பிலிருந்து முதன்மை நிலைக்கு ஒரு திட்டம்
அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்ட போது, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை அரசியல் நிர்ணய சபை உறுதியாகவும் ஒருமனதாகவும் ஆதரித்தது. ஒரு மதம் சார்ந்த இறையியல் அரசை ஒரு உறுப்பினர் கூட வலியுறுத்தவில்லை. இந்தியாவின் கருத்து பன்முகத்தன்மையில் ஒற்றுமை, காலனியப் பிரித்தாளும் கொள்கையையும், எந்தச் சாதியும் மதமும் மேலாதிக்கம் செய்வதையும் நிராகரித்தல் என்ற அடிப்படைகளின் மீது எழுப்பப்பட்டது. இந்த ஒருமனதான இந்தியா என்ற கருத்தாக்கத்தை இடித்து நொறுக்கவும், இந்துராஷ்டிரா என்ற கருத்தைத் திணித்து அரசியல் சாசனத்தைச் சிதைக்கவும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக பெரும்பாடு படுகிறது. ஒரு ஓரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்த நிலை மாறி, இப்போது இந்தத் திட்டம் அரசியல் முதன்மை நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அயோத்தியில் ராமர் கோவில் சிலை நிறுவப்பட்ட நாளில், பிரதமர் நரேந்திர மோடி “ராமன் என்றால் அரசு, கடவுள் என்பது நாடு” என்று ஒருமைப்படுத்தி, அரசியல் சாசனத்தில் அடிப்படைகளைத் தகர்க்கும் தூண்டுதலை வழங்கினார். மதத்தையும் அரசையும் இவ்வாறு ஒன்றிணைப்பது, அரசியல் சாசனத்தை வடித்தவர்களின் எச்சரிக்கைகளைப் புறம் தள்ளி விலகிச் செல்வதாகும்.
“மதச்சார்பின்மை அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதி. அதனை நாடாளுமன்றத்தால் கூட மாற்ற முடியாது” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நேர் எதிரானது.
தலைவர்களும் அவர்களின் எச்சரிக்கைகளும்
நமது தேசியத் தலைவர்களின் எச்சரிக்கைகள் இன்று மேலும் பலத்துடன் ஒலிக்கின்றன. 1931-ல், அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில், அரசு மத விஷயங்களில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் “அரசு எந்த மதத்தையும் அரசு மதமாக அங்கீகரிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் விலகி நின்ற, மதச்சார்பற்ற தேசியத்தை எதிர்த்த இந்து மகாசபை, 1944-ல் தனது “இந்துஸ்தான் ஃப்ரீ ஸ்டேட் ஆக்ட்”ல் இதேபோன்ற விதியைச் சேர்த்தது.
அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள், விடுதலை பெற்ற இந்தியாவின் அடிப்படைகளைக் கட்டமைத்த தலைமுறையின் நோக்கத்தை நன்றாக விளக்குகின்றன.
1947 ஆகஸ்ட் 27-ல், கோவிந்த் வல்லப பந்த் ஒரு நேரடியான கேள்வியை எழுப்பினார்: “உண்மையான தேசிய, சமயச்சார்பற்ற அரசு வேண்டுமா அல்லது மதம் சார்ந்த அரசு வேண்டுமா?” இந்தியா மதச்சார்புள்ள அரசாக மாறினால், அது ஒரு இந்து அரசாக மட்டுமே இருக்க முடியும் என்று எச்சரித்த அவர், அத்தகைய அரசியலில் இருந்து விலக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பினார்.
1949 நவம்பர் 21-ல், ஜஸ்பத் ராய் கபூர், காந்தி தெளிவாக்கியதைக் குறிப்பிட்டார்: “மதம் ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும்.” நவம்பர் 22-ல், பெகம் ஐசாஸ் ரசூல் மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தின் “மிக முக்கியமான அம்சம்“ என்று அழைத்து, அது “களங்கப்படுத்தப்பட்டு விடாமல் பாதுகாக்கப்படும்“ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
1949 அக்டோபர் 14-ல், சர்தார் வல்லபாய் படேல் இந்திய அரசியல் சாசனம் “சமூக அடிப்படையிலான எந்த விதிகளாலும் சிதைக்கப்படாது” என்று உறுதியளித்தார்.
நவம்பர் 23-ல், டி.ஜே.எம்.வில்சன் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஏற்கெனவே உருவாகி விட்டன என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கை அச்சுறுத்துவதற்கானதல்ல. மாறாக ஆழ்ந்த புரிதலுடன் இருந்தன, இப்படி ஒரு சூழல் எழக்கூடும் என்பதை அன்றே முன்கூட்டி உணர்ந்து அந்த எச்சரிக்கையுடன் அரசியல் சாசனம் வரையப்பட்டது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
எதிர்ப்பின் அவசியம்
அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகளை, மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரைகளைத் திறன்வாய்ந்த முறையில் செய்வதன் மூலமும், நீதிமன்றங்களில் சட்டபூர்வமாக எதிர்த்து வாதாடுவதன் மூலமும், அரசியல் இயக்கங்களை அணி திரட்டுதல், பெருமக்கள் திரள் ஜனநாயகப் போராட்டங்களில் மூலமும் நாம் எதிர்கொள்ள வேண்டும். அரசியல் சாசனம் என்பது ஒரு சட்ட ஆவணம் மட்டுமேயல்ல. இது நமது சுதந்திரப் போராட்டத்தின் உலைக்களத்தில் உருவான ஒரு அரசியல், சமூக மற்றும் தார்மீக ஒப்பந்தம்.
இது எண்ணற்ற தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் சாசனத்தை வடித்தவர்களின் கனவுகளை உள்ளடக்கியது, அவர்கள் அனைவருக்கும் சொந்தமான ஒரு இந்தியாவையே கற்பனை செய்தனர். இன்று மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தைப் பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தையே பாதுகாப்பதாகும். இது ஒவ்வொரு குடிமகனின் உரிமையை -மதம், சாதி, வர்க்கம் அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும்- கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்துடன் வாழ்வதைப் பாதுகாப்பதாகும். குடியரசைப் பாதுகாக்க வேண்டும், வளர்க்க வேண்டும். தேவைப்பட்டால், அதை உள்நாட்டிலிருந்து அழிக்க முயல்பவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அந்தத் தேவையை நிறைவேற்ற நாம் அச்சமற்றும், சிந்தனைத் தெளிவுடனும், கூட்டு உறுதியுடனும் நாம் கிளர்ந்து எழுந்தாக வேண்டும்.
