மே 20 வேலைநிறுத்தம்: வெற்றி பெறச்செய்வீர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அறைகூவல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் மே 7ஆம் தேதி அன்று, திருப்பூர் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது.
தேசியச் செயலாளர் டாக்டர் கே.நாராயணா, உலக அரசியல் சூழல், பயங்கரவாத தளங்கள் மீதான இந்திய ராணுவத் தாக்குதல், சண்டிகரில் நடக்க இருக்கும் கட்சிப் பேராயம் உள்ளிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை மாநாடுகள் குறித்த விவரங்களை விளக்கிக் கூறினார். அவரது ஆங்கில உரையைத் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி தமிழில் மொழிபெயர்த்தார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து மற்றும் செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் கட்சி மாநாடுகளில் முன்னுரிமை தந்து விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்த அறிக்கையை மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன் வைத்தார்.
பின்வரும் தீர்மானங்களை மாநிலக் குழு ஒரு மனதாக நிறைவேற்றியது.
மே 20 பொது வேலை நிறுத்தம்:
இந்தியத் தொழிலாளர்கள் 150 ஆண்டு காலமாகப் போராடிப் பெற்றெடுத்த வேலைப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை முற்றிலும் பறித்து, அவர்களை உரிமைகளற்ற அற்றைக் கூலிகளாக மாற்றும் வகையில் ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்படி மே 20ல் நடைபெற இருக்கும் வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் மாநிலக் குழு அறைகூவல் விடுத்தது.
100 நாள் வேலையை உறுதிப்படுத்துக:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு நாள் ஊதியத்தை ரூ.319ல் இருந்து ரூ.336 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி இருப்பதைப் பாராட்டியும், இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும், 100 நாள் வேலை தருவதை உறுதிப்படுத்தக் கோரியும், இதற்கு ஒன்றிய அரசு போதிய நிதி விடுவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில் மனை வாடகை:
கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகை அவர்களால் செலுத்த முடியாத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இதுகுறித்து கோவில் மனையில் குடியிருப்பவர்கள் சங்கம் தமிழ்நாடு முதல்வருக்குத் தந்துள்ள மனுவில் கோரியுள்ளவாறு, பழைய பகுதிமுறை அடிப்படையில் வாடகையை நிர்ணயித்துச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மாநிலக் குழு வலியுறுத்தியது.
நீட்டிலிருந்து விதிவிலக்கு:
நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களை அலங்கோலப்படுத்தி, அவமதித்து, மனித உரிமைகளை மீறும் செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டதை மாநிலக் குழு கண்டித்தது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை மாநிலக் குழு வலியுறுத்தியது.