கட்டுரைகள்தமிழகம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்படுமா?

என்.எஸ்.பிரதாப் சந்திரன்

சென்னை மாநகரின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில், பெரும் பங்கு வகித்து வரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

சுமார் 3800 ஏக்கர் பரப்பளவிளான இந்தச் சதுப்பு நிலப்பகுதியில் பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக 65 வகையான வலசைப் பறவைகள், 195 வகை உள்ளூர்ப் பறவைகள், 50 வகை மீன் இனங்கள், 34 வகை வண்ணத்துப்பூச்சிகள், 20 வகை தட்டான்கள், 24 வகை ஒட்டெலிகள், 15 வகை பாம்புகள், 8 வகை கரப்பான்கள், 10 வகை பல்லிகள், 78 வகை மிதவை உயிரினங்கள், 11 வகை இரு வாழ்விகள், 10 வகை பாலூட்டிகள் மற்றும் 167 வகை தாவரங்கள் இங்கு உள்ளன. பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் சரணாலயமாகவும் உள்ளது.

புயல் மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி வைக்கவும், மழை நீரில் அடித்து வரும் சகதிகளை வடிகட்டி நல்ல நீரை கடலுக்கு அனுப்பவும், கடல் அரிப்பைத் தடுக்கவும், சுனாமி போன்ற பேரிடர்களைத் தடுக்கும் அரணாகவும் இதுபோன்ற சதுப்பு நிலப்பகுதிகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலம் மெல்ல, மெல்ல ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற சதுப்பு நிலங்களை உலக அளவில் பாதுகாப்பதற்காக 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஈரான் தலைநகர் ராம் சார் நகரத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 170 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பரப்பைப் பாதுகாப்பதற்காக, 2022 ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி மத்திய அரசு “ராம் சார் தளமாக” பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை அறிவித்தது. எனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை “பாதுகாப்போம், மேம்படுத்துவோம்.’’என்று‌, தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் இந்தச் சதுப்பு நிலப் பகுதி பாதுகாக்கப்படும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது.

ஆனால், முதல்வரின் அறிவிப்புக்கு நேர் எதிராக பெரும்பாக்கம் – பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து, கட்டிடம் கட்டுவதற்கு, சட்டத்திற்குப் புறம்பாக, பிரிகேட் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி அளித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகச் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட அனைத்துத் துறைகளும், போர்க்கால அடிப்படையில் சட்டத்தை மீறி அனுமதி அளித்தது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

இதற்குக் காரணமான அரசு அதிகாரிகள், சதுப்பு நில ரியல் எஸ்டேட் ஊழல் முதலைகள் யார் என்பதைத் தமிழக அரசு கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி எல்லைக்குள் தனியார் நிறுவனமான பிரிகேட் கட்டுமான நிறுவனம், கட்டிடங்கள் உள்ளிட்ட எவ்வித நிரந்தர அமைப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது.

இந்த இடம் சூழலியல் ரீதியாகப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது என்கிற விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல், சட்டத்திற்குப் புறம்பாக, பிரிகேட் கட்டுமான நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது சென்னை வாழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அந்த நிறுவனம், இந்த நிலம் குறித்த உண்மைகளை மறைத்து, கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையில் கடந்த 2022 ஜூலையில் விண்ணப்பித்துள்ளது.

அதைத் தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் நிலத்தின் அமைவிடம் குறித்து, தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையின் வல்லுநர் குழு ஆய்வு செய்தது.

அந்தக் குழு பெரும்பாக்கம் சதுப்பு நிலப் பகுதி, நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக ராம் சார் ஒப்பந்தப்படி அளவிடப்பட்ட இடம் என்கிற உண்மையை மறைத்து, நிலத்தின் அமைவிட ஆதாரங்களைத் திருத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் பிரிகேட் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சாதகமாக, சட்டத்திற்குப் புறம்பாக, அவர்கள் உரிமை கோரிய 453, 495/2சி, 496, 497 ஆகிய சர்வே எண்கள் அடங்கி உள்ளதாகக் கூறப்படும் 14.7 ஏக்கர் சதுப்பு நிலத்தை முழுவதும் ஆராயாமல், அப்படியே ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்ததன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, தங்கள் துறையின் சார்பாக கள ஆய்வு செய்ததாகப் பதிவு செய்து, நிலத்தின் உண்மைத் தன்மையை மறைத்து விதிகளை மீறி ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதனால், இந்தச் சதுப்பு நிலப் பகுதியில் உள்ள 14.7 ஏக்கர் நிலத்தில், 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1250 வீடுகள் அடங்கிய பிரிகேட் மார்க் சென்டர் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளித்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம், எதிர்காலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுவதும் பறி போய்விடும் என்கின்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து, மேற்குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து, சென்னை மாநகரின் பாதுகாப்பு அரணாக இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செய்வாரா முதல்வர்…?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button