கட்டுரைகள்

பாஜக நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு – அரசியல் முருகன் ஆட்சியில் அமர்த்துவாரா?

வ.மணிமாறன்

முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்தி, தமிழ்நாட்டில் காலூன்றி பெரும் வளர்ச்சி காண முடியும் என பாஜக நம்புகிறது. ஆனால் தமிழ்நாட்டின் வரலாறு பாஜகவின் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. பாண்டி கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி, அறுபடை முருகன் கண்காட்சி ஜூன் 17 ஆம் தேதி முதல் நடைபெற்றது. அறுபடை வீடு என்று அழைக்கப்படும் முருகன் கோவில்களின் கோபுரத்துடன் கூடிய முகப்புத் தோற்றம், பிரகாரம், மூலவர் சன்னதி போன்றவை வடிவமைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூசை செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘‘அமித்ஷா ஆன்மீக அன்பராக முருக பக்தர்கள் மாநாட்டைச் சிறப்பாக நடத்துமாறு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரை பாஜக தலைவராகப் பார்ப்பது அபத்தமானது. முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் எந்தப் பிளவுவாத நோக்கமும் கிடையாது” என்று நமச்சிவாயம் கூறினார்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்காக பாஜக நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு பகுதிகளில் கலந்துகொண்டார். விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் முருகா, வீரவேல் முழக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். தமிழகத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு திமுக ஆட்சி இருக்காது. ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். திமுக ஆட்சி ஆன்மிகத்துக்கும் இந்து மக்களுக்கும் எதிரானது. இந்த ஆட்சி இருக்கக் கூடாது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்” என்று தங்களுடைய நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

முருகா.. முருகா.. வேல்.. வேல்.. வீரவேல்… முழக்கங்கள் பாஜகவைத் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் என்று நயினார் நாகேந்திரனும் சங் பரிவாரமும் நம்புகின்றனர்.

பாஜகவுக்குப் பயன் அளிக்குமா?

முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஜூலை 17 முதல் விரதம் இருந்தார். விரதமிருப்பது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில், “அள்ளிக் கொடுப்பதில் எல்லையற்றவனான முருகப் பெருமானின் அருளாசியுடனும், அவர்தம் பக்த கோடிகளின் ஒத்துழைப்புடனும் மாநாடு மாபெரும் வெற்றியடைய ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை விரதம் இருப்பதுடன், ‘மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்’ என பரிபாடல் குறிப்பிடும் ஆறு தலை கொண்ட அறுபடை நாயகனின் திருவடிகளில் ஆறு முக்கியக் கோரிக்கைகளை வேண்டுதலாகவும் சமர்பித்துள்ளேன்.
விரதமும் வேண்டுதல்களும் தமிழர் இறை வழிபாட்டு முறைகளில் வேரூன்றிய பண்பாடு என்பதற்கிணங்க, ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு எத்திசையிலும் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் கருணைக் கடலாம் கந்தனிடம் வேண்டிக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். கூப்பிட்ட குரலுக்கு பக்தர்கள் குறை தீர்க்க ஓடோடி வரும் வேலவன் நமது கவலைகளைத் தீர்க்கவும் அருள் புரியட்டும்” என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் குறைகள், கவலைகள் எல்லாம் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். முருகா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. வேலவா.. ஓடோடி வா.. தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எங்களிடம் கொடு! உம்முடைய அருள் முதலமைச்சர் நாற்காலியை எங்களுக்குத் தரட்டும்! இதுதான் நயினார் நாகேந்திரனின் விரதம், வேண்டுதல் ஆகியவற்றின் நோக்கமாகும்.

ஆசைகளை முற்றாகத் துறந்துவிட்ட சாமியார் என்று சொல்லிக்கொள்ளும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், அதுபோன்ற நிலையை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் போன்றவர்களும் விரதமும் வேண்டுதலும் நிறைவேறப் பங்கேற்றனர்.

ஜெய் ஜெகன்நாத்

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க “ஜெய் ஸ்ரீராம்” என முழங்கினர். ஒடிசா மாநிலத்திலும் “ஜெய் ஸ்ரீராம்” என முழங்கினர்.

“இராமனை நினைவு கொள்வாய் மனமே – அந்த
கோசலை மகனை துதி செய்வாய் தினமே!
சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து
இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த
இராமனை நினைவு கொள்வாய் மனமே..”

என்று ஸ்ரீராமனை மனமுருகி வேண்டினர். பஜனை பாடினர். ஒடிசா மாநிலத்தில் எதுவும் நடக்கவில்லை. “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் “ஜெய் ஜெகன்நாத்” என்று மாறியது. ஒடிசா மாநில மக்கள் தனித்துவமாக வழிபடும் ஜெகன்நாதர் இடம்பிடிக்கத் தொடங்கினார். “ஜெய் ஸ்ரீராம்” காணாமல் போய்விட்டது. கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி “ஜெய் ஜெகன்நாத்” என்றே முழங்கினார். சங் பரிவாரங்கள் “ஜெய் ஜெகன்நாத்” என்று முழங்கின.

இதேபோன்று, மேற்கு வங்கத்திலும் “ஜெய் ஸ்ரீராம்” காணாமல் போய்விட்டது. “ஜெய் ஸ்ரீராம்” என்று சொன்ன போதெல்லாம் எவரும் கண்டுகொள்ளவில்லை. “ஜெய் காளி” “ஜெய் துர்க்கா” என்று மாறியது. “ஜெய் ஸ்ரீராம்” காணாமல் போய்விட்டது. சங் பரிவாரங்கள் “ஜெய் காளி” “ஜெய் துர்க்கா” என்றே முழங்கின. ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும், கணிசமான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில்..?

கந்த சஷ்டி கவசம்

‘‘உன் எண்ணம் ஈடேற, உலகில் உள்ளோர் ஓதி இன்புற்று வாழ ஒரு மந்திரத்தை செந்தமிழில் பாடு’’ என்று கடவுள் முருகன் எழுந்தருளி ஆசி கூறிவிட்டு மறைந்துவிட்டார். மடைதிறந்த வெள்ளமாய்ப் பாடினார் தேவராயர். கந்த சஷ்டி கவசம் பிறந்தது.

“இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக! வருக!
நேசக் குறமகள் நினைவோன் வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக!..”

இந்த கந்த சஷ்டி கவசம் பாடுவோருக்குக் கவசமாக இருந்து காக்கும் என்பதே முருக பக்தர்களின் நம்பிக்கை. தங்களுக்கும் கவசமாக இருந்து, தமிழ்நாட்டின் ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் எனச் சங்கிகள் மாநாடுகளை நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் முருகன் தங்களைக் காப்பாற்றுவார் என நம்புகின்றனர்.

“தமிழ் மண் ஆழ்வார்களின் மண், ஆன்மிக மண்” என்று சொல்லும் பாஜக, இந்து மதத்திற்கு எதிரான கட்சியாக திமுக இருக்கிறது என குற்றம்சாட்டுகிறது. அதனால்தான் “தமிழ்நாட்டில் அதிகமாக வழிபடக்கூடிய தெய்வமான முருகனை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்” என்று பாஜக கூறுகிறது.

“முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைத் துடைக்கும் மாநாடு. இதன்மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க முடியும்” என்கிறார் பாஜகவின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.சேகர்.

ஆட்சியும் அதிகாரமுமே நோக்கம்

எத்தகைய ஆன்மீகச் சாயம் பூசினாலும், இலக்கு என்பது தமிழ்நாட்டின் ஆட்சியும் அதிகாரமும் என்பதை பாஜகவின் கூற்றுகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு பாஜக, முருகன் கோவில்களுக்கு வேல் யாத்திரை சென்றது. அதிமுகவின் தயவால் நான்கு தொகுதிகளையும் 2.62 விழுக்காடு வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது.

பாஜக முருக பக்தர்கள் மாநாடு நடத்தும் இதே மதுரையில், மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவுக்குப் பல லட்சம் பேர் திரளுகின்றனர். வன்முறையோ வெறுப்பு உணர்வோ எழுந்ததே கிடையாது. ஆன்மீகம், மதம், கடவுள், அது சார்ந்த செயல்பாடுகள் வேறு, அரசியல், தேர்தல் என்பது வேறு என்பதில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கந்த சஷ்டி கவசம் பாடியோ முருகனை வழிபட்டோ தமிழ்நாட்டு மக்களைக் குழப்பி, அரசியல் ஆதாயம் பெற்றுவிட முடியாது. இதனை எதிர்காலத்திலும் தமிழ்நாடு வெளிப்படுத்தும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button