மாநில செயலாளர்

ஏன் இந்தக் கொந்தளிப்பு?

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் கொந்தளித்துள்ளார். அவர் சாதாரணமானவர் அல்ல, பத்தோடு பதினொன்றாகக் கருதக்கூடியவர் அல்ல, ஆக உயர்பொறுப்பை வகிக்கக் கூடியவர், மாநிலங்களவையின் தலைவர், தற்போதுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து, அடுத்த குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்புள்ளவர்.

அத்தகைய பெரும் பொறுப்பை வகிக்கக் கூடியவரும் எதிர்காலத்தில் பெரும் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளவருமான குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தங்கர் கொதித்தெழுந்துள்ளார்.

இவர் தான் வகிக்கும் நாட்டின் உயர் பொறுப்புகளை மறந்து, வகிக்கும் பொறுப்புகளுக்கு இழிவு தேடும் நிலையை உருவாக்கிக் கொந்தளித்து இருப்பது மிகக் கவலைக்குரியது.

தன்கர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதியாக இருக்கலாம், அவ்மைப்பிற்கு விசுவாசமுள்ளவராகக் கூட இருக்கலாம். அதற்காக உச்ச நீதிமன்றத்தைச் சாடுவதற்கு அவருக்கு அனுமதி அளித்தது யார்?

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகள் என்று வரவேற்றுப் புகழாரம் சூட்டியவர்கள், இன்று கொதிப்பது ஏன்?
உலையில் போட்ட அரிசி வேகுவதற்கு முன்னர், நொய்யரிசிகள் வெந்து மேலே வந்து கொந்தளிக்கும். நொய்யரிசி தடபுட வென கொந்தளிப்பது போல் இன்று தன்கர் கொந்தளித்துள்ளார். ஏன் கொந்தளிக்க வேண்டும்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை அவர் ஏற்றுத் தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.

அல்லது திருத்தம் இருப்பின், அத்தகைய திருத்தங்களைக் குறிப்பிட்டுத் திருப்பி அனுப்பலாம். அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.

எதனையும் செய்யாமல் மசோதாக்கள் அனைத்தும் ஆளுநர் மாளிகையில் முடங்கிக் கிடக்கின்றன.

இவை குறித்து ஆளுநர் என்ன கூறினார். உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை, கால வரம்பின்றி மசோதாக்களை வைத்துக் கொள்ளலாம், அது குறித்து எவரும் கேள்வி கேட்க முடியாது.

நீண்ட காலமாக மசோதாக்கள் கிடப்பில் கிடந்தால், அது செத்துப் போய்விட்டது என்று பொருள்படும் என்று கூறியவர் யார்? எவரோ அல்ல! அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவார்.

வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அரசுக்கு எதிராக, பேரவைக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்ட போது குடியரசுத் தலைவருக்கு, துணைத் தலைவருக்கு, பிரதமருக்கு உள்துறை அமைச்சருக்கு இவை எல்லாம் தெரியாதா?

இவர்கள் ஊடகங்களைப் பார்ப்பது இல்லையா? நாளேடுகளைப் படிப்பது இல்லையா?
தொலைக்காட்சியில் பார்த்தார்கள், நாளேடுகளில் வரும் செய்திகளையும் வரி விடாமல் படித்தார்கள், இவற்றிற்கும் மேலாக ஒன்றிய அரசின் சக்தி வாய்ந்த உளவுத்துறை ஆளுநரின் அராஜகம் குறித்து மேற்கண்ட பெரிய மனிதர்களுக்கு எடுத்துரைக்கவில்லையா? உளவுத்துறை எழுத்துப்பூர்வமாகக் கொடுத்திருக்கும் அறிக்கைகளைப் பார்க்காமல், படிக்காமல் இருப்பார்களா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டு எட்டுக்கோடி மக்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தமிழக ஆளுநரின் அரசியலமைப்புச் சட்ட விரோதச் செயல்கள் குறித்தும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்தும் விரிவான கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

அவ்விண்ணப்பம் குறித்து இன்று வரை குடியரசுத் தலைவர் மாளிகை பதில் அளிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்கும் லட்சணம் இது தானா? 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் அவமதித்துள்ளார்.

மொத்தத்தில் ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்றார்கள், அவமதிக்கின்றார்கள்.

அப்போதெல்லாம் வாய்மூடி மௌனமாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள் இன்று கொதிப்பது ஏன்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றது. அத்தகைய அரசுக்கு எதிராக ஓர் போட்டி அரசை ஆளுநர் ரவி நடத்திக் கொண்டுள்ளார்.
ஆளுநர் மாளிகையை அரசியல் கூடமாக்கி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக் களமாக்கிச் செயல்பட்டு வருகின்றார்.

தான்தோன்றித்தனமாக ஊர் தோறும் செல்கின்றார். ஆளுநர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊர் ஊராகச் சுற்றி வருகின்றார்.

செல்லும் இடமெல்லாம் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பிசிறின்றிப் பிரச்சாரம் செய்து வருகின்றார்! ஆளுநர் இவ்வாறு செயல்படலாமா? அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்ததன் நோக்கமென்ன?

ஆளுநரின் அராஜகச் செயல்பாட்டில் இருந்து தமிழகத்தை எப்படிக் காப்பாற்றுவது?
கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கண்டிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் மௌனம் காத்த நிலையில், மௌனத்தைக் கலைக்கவும் நீதியைப் பெறவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அங்கீகாரம் பெறவும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு என்ன வழி உள்ளது?

எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டுவதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெளிவாக தனது தீர்ப்பை வழங்கியது. ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதமாகும். சட்டத்திற்குப் புறம்பான நிலையில் செயல்பட்டுள்ளார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களும், உடனடியாக அமல்படுத்திடவும் உத்தரவிட்டது.

பேரவை நிறைவேற்றிய மசோதாக்கள் குறித்து, மூன்று மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்றும், அதேபோன்று குடியரசுத் தலைவரும் தனக்கு வரும் மசோதாக்கள் குறித்து மூன்று மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிய நாளில் இருந்து மசோதாக்கள் அமலுக்கு வரும் என்றும் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சில பா.ஜ.கவினர் பெரும் கூச்சலிடுகின்றனர்.
பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் நாள் பகிரங்கமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் பெரும் கூட்டமாக ஆயுதங்கள் ஏந்தி அராஜகம் செய்தனர். பாபர் மசூதி இடித்து, தரைமட்டமாக்கப்பட்டது.

அங்கே மேற்கண்ட தலைவர்கள் புடைசூழ நடந்தது, முரளி மனோகர் ஜோசியின் தோள்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு உமா பாரதி ஆட்டம் போட்டது அனைத்தும் நேரிடையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்தன. பாபர் மசூதியை இடிக்க அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் டிசம்பர் 6, ஆம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளாகும்.
அவரது நினைவு நாளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாளில்தான், மசூதி இடிப்பு பயங்கரத்தை பா.ஜ.க. குண்டர்கள் மேற்கொண்டனர்.

அவர்கள் இடித்தது மசூதியை அல்ல மாறாக நாட்டின் மதச்சார்பின்மை கொள்கையை இடித்துத் தள்ளிவிட்டார்கள்.

சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

இத்தகைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டது.

1. பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதச் செயல்.
2. இடித்த இடத்திலேயே ராமர் கோவில் கட்ட அனுமதி.
3. மசூதியை வேறொரு இடத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
4. மசூதியை இடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆகவே அனைவரும் ஒட்டுமொத்தமாக வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு என்றும் தர்மம் வென்றது என்றும் வானளாவ உச்சநீதிமன்றத்தைப் புகழ்ந்து தள்ளியவர்கள் பா.ஜ.கவினர்.

இன்று உச்சநீதிமன்றத்தை வசைமாரி பொழிகின்றனர். குறிப்பாக மிக உயர் பொறுப்பில் உள்ள குடியரசு துணைத் தலைவர் உச்சநீதிமன்றத்தைச் சகட்டுமேனிக்குச் சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படுகின்றது என்றெல்லாம் குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மசோதாக்கள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்தது குறித்து அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் கவலை இல்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டது குறித்தும் இவர்களுக்குக் கவலை இல்லை.

தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக முடங்கிப் போக வேண்டும் என்பதே இவர்களின் விருப்பம்.
இவர்களின் விருப்பங்களுக்கு மாறாக நீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்பதே தன்கரின் விருப்பமாக உள்ளது.

ஆதலால் தான் நொய்யரிசி போன்று கொதிக்கிறார்கள், கொந்தளிக்கின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களின் கொடிய சிந்தனைகள் நாட்டை ஒற்றுமைப்படுத்துமா? வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா? அல்லது அழிவை நோக்கி இட்டுச் செல்லுமா? என்பது குறித்து, நாட்டின் மீது அக்கறை உள்ளோர் சிந்திக்கட்டும்!

மீண்டும் சந்திப்போம்

வணக்கம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button