கட்டுரைகள்

எத்தனால் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை?

த.லெனின்

மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற டாக்டர் விட்டல்ராவ் பாட்டீல் கூட்டுறவு, விரிவாக்கப்பட்ட சர்க்கரைத் தொழிற்சாலையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதன் பின்பு, அஹில்யா நகர் மாவட்டத்தில் விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய போது, மோடி பிரதமரானதிலிருந்து, நமது கூட்டுறவுகள் வலுவாகவும், மீள்தன்மையுடனும், மேலும் எதையும் எதிர்கொள்ளும் திறனுடன் வளர்ந்துள்ளன.

சர்க்கரைக் கூட்டுறவுகளின், இருப்புநிலை வியத்தகு முறையில் மாறிவிட்டன, இது பெரும்பாலும் பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தின் காரணமாக அமைந்தது என்று பேசியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் சர்க்கரைக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு எத்தனால் கலப்புத் திட்டம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் பாராட்டினார். நிதிநிலையை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் இது பெருமை சேர்த்துள்ளது என்றும் பேசியுள்ளார்.

இப்படி மாபெரும் புரட்சியை நிகழ்த்திவிட்டதாகக் கூறும் அமித்ஷா பெட்ரோலின் விலையை மட்டும் ஏன் குறைக்க மறுக்கிறார்? அதுவும் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் லிட்டர் 67 ரூபாய் என்று இருக்கும் போது 20 விழுக்காடு இதனை பெட்ரோலில் கலந்த பிறகும் இதனை பெட்ரோலின் விலை ஏன் குறையவில்லை? எத்தனால் கலப்பை பெரும் சாதனையாகப் பேசும் அவர் அதற்கு விலை குறைப்பு செய்யாமல் வெறும் வார்த்தை பூச்சுகளால் யார் காதில் பூ சுற்றுகிறார்?

எத்தனால் விலை!

1ஜி எத்தனால் கரும்பு மொலாசஸ், மக்காச் சோளம், அரிசி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

2ஜி எத்தனால் அரிசி, வைக்கோல், மூங்கில், கரும்பு போன்ற விவசாய எச்சங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆய்வக எத்தனால், 99% தூய்மையான எத்தனால் ரூ.90/லிட்டர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் 99.99% தூய்மையான மெர்க் எத்தனால் லிட்டர் ரூ.2,200 என விற்கப்படுகிறது. அப்படியெனில் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் 62 ரூபாயிலிருந்து 67 ரூபாய் என்றால் அது தூய்மையிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்பது விளங்கும்.

எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எத்தனால் பொதுவாக பெட்ரோலை விட மலிவானதாக இருந்தாலும், அதன் ஆற்றல் மதிப்பு குறைவு என்பதால், பெட்ரோலுடன் ஒப்பிடும்போது அதன் GGE (பெட்ரோல் கேலன் சமநிலை) விலை அதிகமாக இருக்கலாம்.

விவசாயிகளுக்குப் பட்டை நாமம்!

தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், அதன் இலக்கை விட 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20% எத்தனால் கலக்கும் இலக்கை அடைந்துள்ளது. இந்தியாவில் எத்தனால் கலத்தல் 2014 இல் வெறும் 1.5% இலிருந்து 2025 இல் 20% ஆக உயர்ந்தது. 2030ல் 27 சதமாக உயர்த்தும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்குக் கரும்பு விவசாயத்திற்கு அரசாங்கம் வலுவான நிதி ஊக்கத்தொகைகளை வழங்கியது என்று சொல்லி வருகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல, இன்னும் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, கரும்பில் உள்ள சர்க்கரை அளவு, பயன்படுத்தப்படும் கரும்பு வகை போன்ற காரணிகளைப் பொறுத்து, 1 டன் கரும்புக் கழிவில் இருந்து சுமார் 9 முதல் 21.75 லிட்டர்கள் வரை எத்தனால் உற்பத்தி செய்ய முடியும்.

சுமார் 20,000 ரூபாய்க்கு மேல் எத்தனால் விற்கும்போது அதில் விவசாயிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. சாராய ஆலைகளும், எத்தனால் உற்பத்தி நிலையங்கள், ஒத்த ரூபாய் கூட செலவழிக்காது மொத்த லாபத்தையும் அடைந்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் கண்ட பலன் என்ன?

உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

எத்தனால் கலத்தல் மூலம் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்தல் போன்ற பல்வேறு இலக்குகளை அடைகிறது என்று அரசாங்கம் கூறினாலும், சுற்றுச்சூழலுக்கு அதன் தன்மைகள், நன்மைகள் நெருக்கமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பொதுவாக உணவுப் பொருட்களை இதுபோன்ற எரிபொருளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினால் உணவுப் பாதுகாப்பு மாபெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ இந்த முறைக்கு எதிராக அதிலும் குறிப்பாக மக்காச்சோளத்தை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்துவதைக் கடுமையாக எதிர்த்ததுடன் உலகில் உணவுப் பற்றாக்குறையும் பட்டினிச் சாவுகளும் நிகழும் என்று முழக்கமிட்டதும் கவனிக்கத்தக்கது.

உலக அளவில் எத்தனால் பயன்பாடு

உலகின் இரண்டு பெரிய எத்தனால் உற்பத்தியாளர்களான பிரேசில் மற்றும் அமெரிக்கா இரண்டில் அமெரிக்கா அதிக எத்தனால் உற்பத்தி செய்கிறது.

அமெரிக்காவில் எத்தனால் உற்பத்திக்குச் சோளம் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. பிரேசிலில் எத்தனால் உற்பத்திக்குக் கரும்பு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

பிரேசில் உலகின் இரண்டாவது பெரிய எத்தனால் எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடு. பிரேசிலும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக எத்தனால் எரிபொருள், தொழில்துறை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இவை 2017 ஆம் ஆண்டில் மொத்த உலக உற்பத்தியில் 85 சதவீதத்தைத் தங்கள் வசம் கொண்டுள்ளன. பிரேசில் 26.72 பில்லியன் லிட்டர்களை (7.06 பில்லியன் அமெரிக்க திரவ கேலன்கள்) உற்பத்தி செய்தது. இது 2017 ஆம் ஆண்டில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் உலகின் மொத்த எத்தனாலில் 26.1 சதவீதத்தைக் குறிக்கிறது.

பிரேசிலில் உள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல்கள், ஹைட்ரஸ் ஆல்கஹால் (E100) அல்லது கேசோஹோல் (E25 கலவை பெட்ரோல்) ஆகியவற்றில் இயங்குகின்றன , ஏனெனில் பெட்ரோலுடன் 25% நீரற்ற எத்தனால் கலவை, நாடு முழுவதும் கட்டாயமாகும்.

கடந்த 2003 முதல், ஹைட்ரஸ் எத்தனால் மற்றும் பெட்ரோலின் எந்த விகிதத்திலும் இயங்கும் இரட்டை எரிபொருள், எத்தனால் ஃப்ளெக்ஸ் வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. இவை எரிபொருள் வகையைக் கண்டறிந்து இயந்திர எரிப்பைப் பொருத்தமாகச் சரிசெய்யும் மின்னணு சென்சார்களைக் கொண்டுள்ளன. எனவே பயனர்கள் மலிவாகக் கிடைக்கும் எரிபொருளைத் தேர்வு செய்யலாம். ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்களின் விற்பனை டிசம்பர் 2009 இல் 9.3 மில்லியனை எட்டியது, இது பயணிகள் வாகனத்தைப் பொறுத்தவரை 39% ஐக் குறிக்கிறது. 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தையில் 70 ஃப்ளெக்ஸ் மாதிரிகள் கிடைத்தன. டிசம்பர் 2010 இல் உற்பத்தி 12.5 மில்லியனுக்கும் அதிகமான ஃப்ளெக்ஸ் வாகனங்களை எட்டியது, இதில் 500 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃப்ளெக்ஸ் எரிபொருள் மோட்டார் சைக்கிள்கள் அடங்கும்.

ஆனால் இந்திய வாகனங்களில் இதற்கு ஏற்ற வடிவமைப்புகளைப் போதிய அளவு செய்யாமல், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல அவசர அவசரமாக இவற்றைச் செய்வதன் மூலம் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் பழைய வாகனங்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றன. அதிலும் மோட்டார் பைக்குகள் பெரும் சேதத்தைச் சந்திக்கின்றன, குறிப்பாக கேஸ்கட், என்ஜின், ரப்பர் ட்யூப் போன்றவை பெரும் சேதத்துக்கு உள்ளாகின்றன. இதனை எந்தக் காப்பீட்டுத் திட்டத்திலும் பெற முடியாது, மொத்தச் செலவும் வாடிக்கையாளர்களின் தலையில் போய் விழுகிறது.

இந்தியாவில் ஏற்படும் பிரச்சனைகள்!

ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் ஆய்வுகளும் இன்றி, வெறும் வாய்ச் சவடாலாகவே இது மாறிவிட்டது.

வடகிழக்குப் பருவமழை, காலத்தில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் கவலையடைந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள கடைகள் மற்றும் நிலத்தடித் தொட்டிகளில் தண்ணீர் கசியும் சூழ்நிலைகள் பரவி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், நகரத்தில் உள்ள சில சில்லறை விற்பனை நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன, குறிப்பாக எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டீலர்கள் சில லட்சம் ரூபாய்களை இழப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது, ​​தங்களிடம் 20% கலப்பு எம்எஸ் (மோட்டார் ஸ்பிரிட்) உள்ளது, மேலும் இந்த எம்.எஸ் உள்ள நிலத்தடி தொட்டிகளில் தண்ணீர் நுழைந்தால், எத்தனால் எரிபொருளிலிருந்து பிரிந்துவிடும், அதனால் கிடைப்பது வெண்மையான தண்ணீர்தான். குறைந்தபட்சம் மழைக்காலத்திலாவது தங்களுக்குச் சாதாரண பெட்ரோலை வழங்குமாறு அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களை (OMCs) கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இதற்குக் கூட விடிவு பிறக்கவில்லை! பாதுகாக்க இதற்கான எந்த முயற்சியும் இல்லை.

ஆக, கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பாசிசம் தனக்கான பரப்புரைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும். அதைத்தான் எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டில் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துவதாகவும் கரும்பு விவசாயிகளுக்குப் பெரும் வாழ்க்கையைத் தந்ததாகவும் பசப்புரையை மேற்கொள்கிறார் சாட்சாத் அமித்ஷா!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், நமது மக்களுக்கு அந்தப் பயன் விட்டுவிடக்கூடாது என்று வரிமேல் வரி விதித்து விலையை இறங்கவிடாமல் செய்து தனியார் நிறுவனங்களுக்குத் தக்க பலனைத் தந்தவர்தான் இங்கே எத்தனால் பெட்ரோலுக்குப் பக்கப் பாட்டு பாடுகிறார். சதி வலைகளை அறுத்தெறிந்து, உண்மைகளை உரக்கச் சொல்வோம்! ஆட்சி அதிகாரத்திலிருந்து பாசிசத்தை அடித்து வீழ்த்துவோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button