தலையங்கம்

யார் அடிமை?

தலையங்கம்

எடப்பாடி பழனிசாமியார், தன்னிலை மறந்து, ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் அடிமையாம்! பொதுவுடமைச் சித்தாந்தத்தை, கட்சியின் தலைவர்களை இழிவுபடுத்தி, எந்த மேடையில் பேசினாலும், ஒரு விநாடி நேரம் கூட அங்கு கம்யூனிஸ்டுகள் அமர மாட்டார்கள்.

திராவிடத்தை ஒழிப்போம், பெரியாரும் அண்ணாவும் துரோகிகள் என்று போஸ்டர் ஒட்டி காணொளி போட்டு மேடையில் பேசினார்களே! வெட்கமில்லாமல் உங்கள் தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்களே! யார் அடிமை?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறதாம்! முதல்வராக இருக்கும்போதே, தூத்துக்குடியில் 13 பேரைக் காவல்துறை சுட்டுக்கொன்ற போது, தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன் என்றாரே! நாள்தோறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் களத்தில் நின்று போராடிக் கொண்டிருப்பது பாவம் இவருக்கு எப்படித் தெரியும்?

தங்கள் கட்சியின் பெயரிலேயே இருக்கும் ‘திராவிடம்’ என்பது என்ன என்று ஆய்வாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று சொன்ன இவருக்கு, ‘கம்யூனிசம்’ என்றால் என்ன என்று எப்படிப் புரியும்? கற்பூர வாசனை தெரியவில்லையா என்றா கேட்க முடியும்?

பரப்புரையில், ‘நான் சொல்லக்கூடாது’ என்று சொல்லிக் கொண்டே, “தெய்வபக்தியோடு உண்டியலில் காசு போடுகிறீர்கள்! கோவிலை அபிவிருத்தி செய்வதற்காகத்தானே! அதை எடுத்துக் கல்லூரி கட்டி சதி செய்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

2021 தேர்தலில் எடப்பாடியை மக்கள் ஆட்சியை விட்டு இறக்கினார்கள். அவர் முதலமைச்சராக இருந்தபோது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44 மேல்நிலைப் பள்ளிகளும் 9 கல்லூரிகளும், ஒரு ஐடிஐ தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமும் செயல்பட்டு வந்தன. இது கூடத் தெரியாமல் எப்படி அவர் முதல்வராக இருந்தார்!

இதுவரை, கோவில் பணம், கல்லூரி என்றெல்லாம் அதிமுக பேசியது இல்லை. கல்வி கூடாது, கோவில்தான் வேண்டும் என்று பேசுவது சங்கிகள்தான். அதிமுகவின் பாரம்பரியங்களை எல்லாம் தூர எறிந்து விட்டு, தனது சுயநலத்துக்காக முழுச் சங்கியாக மாறி, காவித் துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு களத்தில் இறங்கி விட்டார்!

இவ்வளவுக்கும், இந்தியாவிலேயே அதிக கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில்தான். அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களோடு சேர்ந்து 3,90,615 இந்துக் கோவில்கள் உள்ளன. குஜராத்தில் கோவில், சர்ச், மசூதி, குருத்துவாரா உட்பட 1,42,135 வழிபாட்டுத்தலங்கள் உள்ளனவாம். அங்கு அறநிலையத்துறை இல்லாததால் எத்தனை கோவில் எனும் கணக்கு கூடத் தெரியாது!

ஒன்றிய அரசு எதுவுமே கொடுக்கவில்லை என்று கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி திரும்பத் திரும்ப தமிழ்நாடு அரசு சொல்லலாமா? என்கிறார் எடப்பாடி. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஒன்றிய அரசிடம் கொடுத்து விட்டோம். ஏற்காமல் நிராகரித்து விட்டார்கள் என்று பேசியதும் அவரது வாயேதான்!

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடிக் கொண்டிருந்தபோது, நானும் விவசாயிதான், இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு நல்லது என்று கூச்சமே இல்லாமல் பொய் சொன்னவர் இவர்.

தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்பட்ட போதெல்லாம், எம்ஜிஆர் அவர்களும், ஜெயலலிதா அம்மையாரும் ஒன்றிய அரசை எதிர்த்து விட்டுக் கொடுக்காமல் போராடி இருக்கிறார்கள்.

அவர்கள் காலத்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்த தீமைகளை விட, ஆயிரம் மடங்கு அதிகமாக மோடி அமித்ஷா ஆட்சி தமிழகத்துக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று, அண்ணாவைத் தூக்கிப் போட்டு விட்டு, அமித்ஷாவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட எடப்பாடி, ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வரும், முதல்வர் யார்? என்று டெல்லி தீர்மானிக்கும்’ என்று வெட்கமின்றிச் சொல்கிறார். தலைமைப் பதவியைத் தவழ்ந்து பிடித்தவருக்கு அந்தக் கட்சியின் வரலாறு தெரிந்திருக்காது.

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது, அதனைத் தாங்கிப் பிடித்து வளர உதவி செய்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே. அதே அதிமுக இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் பாஜகவின் வாலாக மாறி இருப்பதற்காக வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சி வருத்தப்படலாம்!

ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டாம் என்பது போலவே, எடப்பாடியும் இதேபோல பேசிக் கொண்டிருக்கட்டும். தமிழ்நாட்டுக்கும் திமுக கூட்டணிக்கும் மிகவும் நல்லது.

ஜூலை 13 – ஜூலை 19 / 2025

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button