கட்டுரைகள்

விமானப் பராமரிப்பில் ஏனிந்த அலட்சியம்?

த.லெனின்

பொதுவாக ஒவ்வொரு முறையும் விமானங்கள் பறக்க ஆயத்தமாகும் போது அனைத்து விமானப் பணிப் பெண்களும் நின்று சைகை மொழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஆபத்து நேரங்களில் எப்படி விமானத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அனைத்தையும் சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் எந்த விபத்தின் போதும் இது பயன்பட்டதாக வரலாறு இல்லை.

நவீன விஞ்ஞானத் தொழில்நுட்பம் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிற இந்தக் காலத்தில் கூட விமானப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் இது குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு ஒவ்வொரு இருக்கைக்கும் பாதுகாப்பு அளிப்பது என்றால் அதிகச் செலவு பிடிக்கும் ஒன்றாக இருக்கும். மற்றொன்று நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே, லாப வெறி முதலாளித்துவம் இதற்கெல்லாம் எதிராக இருக்கிற காரணத்தால்தான் ஆய்வுகள் மேற்கொள்ள செலவுகளைச் செய்யாது இருக்கின்றனர்.

ஆனால் கார்களில் இருக்கையில் அமர்ந்திருக்கிற ஓட்டுநர் உள்ளிட்ட அனைவருக்கும் காற்றுப் பைகள் (Air bags) விபத்து கால பாதுகாப்பிற்காக உள்ளன. ஆனால் ஆகாய விமானங்களில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை?

அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய விமான விபத்து

அகமதாபாத்தில் சமீபத்தில் நிகழ்ந்த விமான விபத்து இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அனைவரையும் குலைநடுங்க வைத்த இந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர். 241 பேர் இதில் பலியானார்கள். ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மற்றும் தரையில் இருந்தவர்களையும் சேர்த்து எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துவிட்டது.

நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூரச் சம்பவத்தால் பலரும் சோகமடைந்துள்ளனர். இதனிடையே இந்த விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் ட்ரீம்லைனர் ரக போயிங் விமானம் விபத்தில் சிக்குவது உலகில் இதுவே முதல்முறையாகும்.

அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்குப் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, அது பதிவுசெய்யப்பட்ட 625 அடி உயரத்தைத் தொட்டது, இது உலகளாவிய ஆய்வுக்கு உட்பட்டது. 11 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான போயிங் 787-8 விமானத்தில், ஏராளமான வசதிகள் மற்றும் நம்பகமான இரட்டை எஞ்சின்கள் – GEnx-1B67, உள்ளன. இவை ஒவ்வொன்றும் 67,000 பவுண்டுகள் உந்து சக்தி கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இயக்கிய குழுவினர் திடீரெனப் பல நிகழ்வுகளை எதிர்கொண்ட காரணங்கள் குறித்து பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. சுமை (Luggage) திட்டமிடல், சுற்றுப்புறக் காற்று, வெப்பநிலை மற்றும் இயந்திரச் செயல்திறன், இறக்கை மேற்பரப்பு அமைப்புகள் மற்றும் பறவை மோதுவது போன்ற காரணங்களை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 68 விமானங்களை, ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்த போது, வாங்கப்பட்டது.

இந்த வகை விமானங்களின் உலகளாவியப் பாதுகாப்புப் பதிவுகள் பொதுவாக வலுவாக உள்ளன. ஆனால் அசெம்பிளி-லைன் தரக் கட்டுப்பாடு, ‘விசில்-ப்ளோவர்’ அறிக்கைகள், பாதுகாப்பு உத்தரவை ஏற்படுத்திய இயந்திர ஐசிங் சிக்கல்கள், உலகளாவிய தரையிறக்கங்கள், லித்தியம் பேட்டரி தொடர்பான மின் அமைப்புச் சிக்கல், வெப்ப சேதத்தை ஏற்படுத்திய அவசர இருப்பிட டிரான்ஸ்மிட்டர் பேட்டரி தீ, போன்ற பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. அத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டில், இந்த விமானத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

தறிகெட்ட தனியார் மயம்!

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு நான்கு விமான நிறுவனங்களின் இணைப்பிற்குப் பிறகு,இந்திய அரசின் தனியார்மயமாக்கலால் அடிமாட்டு விலைக்கு டாட்டா குழுமத்திடம் விற்றது. இதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் 25.1% பங்குகளை வைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி. தனியார் மயம் என்றாலே தரம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்று கூச்சலிடுபவர்கள் மத்தியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே இதே விமானத்தில் பயணிகள் குளிரூட்டி வேலை செய்யாததையும், எந்த உபயோகப் பொருட்களும் பயன்பாட்டில் இல்லாததையும், காணொளி வாயிலாக விளக்கி இருக்கின்றனர்.

அளிக்கப்படும் உணவு தரம் குறைந்த ஒன்றாக இருப்பது என்பதையும், தேநீர் கேட்டால் அதோடு இணைந்து உணவையும் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களை எல்லாம் பயணிகள் பலமுறை எழுப்பியும் ஒழுங்குமுறை ஆணையம் எப்போதும் போலவே கள்ள அமைதி காத்து நின்றது. லாபம், அபரித லாபம் என்பதை தவிர இவர்களுக்கு பாதுகாப்பு அம்சம் குறித்த எந்த கவலையும் இல்லை என்பதை இந்த விபத்து உலகளாவிய அளவில் வெளிப்படுத்தி இருக்கிறது. சிறு நகரங்களை இணைக்க மோடி அறிவித்த உடான் திட்டம் படுதோல்வி கண்டது.

கடந்த வாரம் புது தில்லியில் நடந்த 81வது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்க ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டில், இந்தியா மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், அதன் வேகமாக விரிவடைந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை தரையிலும் வான்வெளியிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த கோர விபத்து பல அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதானி நிறுவனம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

விமானங்களையும், விமான நிலையங்களையும், விமானத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் பராமரிப்பதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற, நீண்ட அனுபவமும் கொண்ட, செலிபி (CELEBI) (Çelebi Aviation Holding) என்னும் நிறுவனம் இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து வந்தது. அவற்றில், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து புறப்பட்ட விமானம்தான் கடந்த 12.6.2025 அன்று கீழே வீழ்ந்து சிதறியது‌.

இந்த நிறுவனத்துடன் இந்தியாவால் கடந்த 2008 இல் போடப்பட்ட ஒப்பந்தம் 2032 வரைக்குமானது ஆகும். ஆனால், பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி துருக்கியை சார்ந்த இதனை கடந்த மே மாதம் 15 ஆம் தேதியுடன் வெளியேற்றிவிட்டது. பஹல்காமில் நடைப்பெற்ற தாக்குதலை ஒட்டி ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து துருக்கி மீது சங்பரிவார் கும்பலுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வு. அந்த வெறுப்புணர்வை தேசபக்த உணர்வாக பாவித்துக் கொண்ட பாஜகவின் மோடி அரசு இந் நிறுவனத்தை வெளியேற்றியது.

அந்நிறுவனம் பார்த்து வந்த விமானம்-விமான நிலையங்கள் மற்றும் விமானத்தில் ஏற்றப்படும் சரக்குகளின் எடை பராமரிப்பு பணிகளை மோடியின் உடன்பிறவா சகோதரர் அதானியின் ‘AAHL’ (Adani Airport Holding Limited) என்னும் நிறுவனத்திடம் தான் ஒப்படைத்தது.

அதானியின் நிறுவனம் விமான நிலைய- எடை சார்ந்த (Baggage Handling) பணிகளில் போதிய அனுபவம் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை. இதுவரை விபத்து குறித்து வந்துள்ள செய்திகளில் இரட்டை என்ஜின் இருந்தும் ‘அந்த விமானம் மேலே எழமுடியாமல் போனது ஏன்? விமானப் பராமரிப்பு பிரச்சனையா? அல்லது அதில் ஏற்றப்பட்ட அதிக எடை பிரச்சனையா? இதற்கெல்லாம் விடை தெரிய மோடியின் நண்பரான அதானியின் நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

செய்வாரா மோடி? அல்லது மறைப்பாரா மூடி?

ஏற்கனவே விமான நிலைய வளர்ச்சிக்கான நிதியை ஒவ்வொரு பயணியிடம் கறாராக வசூலித்தும், அதனை விமான நிலைய அபிவிருத்திக்கு பயன்படுத்தவில்லை என்பதை சிஏஜி கவனத்தோடு சுட்டிக்காட்டியும் இருக்கிறது. ஆக அனைத்து வகையிலும் கட்டணக் கொள்ளை தான் நடக்கிறதே தவிர எந்த வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை.

எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை இன்மை

விமான விபத்துக்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளது. கடந்த 2010 இல் மங்களூரில் ஒரு பெரும் விபத்தும், 2020 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் ஒரு பெரிய விபத்தும் நடைபெற்றது. இந்த விசாரணைகளில் பரிந்துரையாக அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்ந்து இப்போதும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. இதன் காரணமாகத்தான் இதுபோன்ற கோரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்த விபத்துகளில் ஓடுபாதை சரியாக பராமரிக்கப்படாதது,பறவைகள் ஆபத்து, அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்த தவறியது, ஆகியவைகள் அடங்கும். இந்த விபத்தின் போதும் கூட ஓடுபாதைக்கு அருகில் மிக அதிக உயரத்தில் புட்கள் வளர்ந்துள்ளதை காரணமாக சொல்கின்றனர். இது போன்ற புட்கள் வளர்ந்தால் அவற்றால் பறவைகள் ஈர்க்கப்பட்டு உள்ளே வரும் அபாயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தும் அகமதாபாத் விமான நிலையத்தில் இதை புறக்கணித்து விட்டனர்.

ஒழுங்குமுறை அமைப்பின் மேற்பார்வையில் பொறுப்பு கூறல் இல்லாதது. விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பருவ மழை காலங்களுக்கு முன்பே சீர்படுத்தப்பட வேண்டிய ஓடு பாதைகளை புறக்கணித்து விடுகின்றனர்.

விபத்துகள் ஏற்பட்டால் விமானிகள் மீது பழி சுமத்தி விடுகின்றனர். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதிகாரிகள் விமானிகளை ஆக்கி விடுகின்றனர் விபத்துகளை முறையாக விசாரிப்பதற்கு முன்பே இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது என்று பன்னாட்டு சிவில் வான் பயண அமைப்பு (ஐசி ஏஓ) விதிமுறைகளை வகுத்து இருந்தாலும் இந்த விபத்திலும் அது மீறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button