மாநில செயலாளர்

எதை மீட்கிறீர் எடப்பாடியாரே?

மாநிலச் செயலாளர் முத்தரசன் அடுக்கடுக்காகக் கேள்விகள்

பெரம்பலூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி நடத்தும் பிரச்சார யாத்திரை குறித்த கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்டனர். எதிலிருந்து தமிழ்நாட்டை எடப்பாடி மீட்கப் போகிறார்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை இரா முத்தரசன் முன்வைத்தார். அதன் விவரம் வருமாறு:

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் ஒரு பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

எதை மீட்கப் போகிறார் என்பதை இந்தக் கூட்டங்களில் அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டுக்கான மாநில உரிமைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. இவை பற்றி அந்தப் பிரச்சாரத்தில் அவர் என்ன சொல்லப் போகிறார்?

தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கையைக் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்கிறது. தமிழகம் அதை ஏற்க முடியாது என்று கூறுகிறது. பாடத் திட்டமே, RSS-ன் இந்துத்துவக் கொள்கைகளுக்கு ஏற்பத் திருத்தப்படுகிறது.

ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு உண்டு. ஆனால் மதிப்பெண்கள் அடிப்படையில் யாரையும் தோற்கச் செய்வது கிடையாது. சிறுவயதிலேயே கல்வியில் தோற்று விட்டோம் என்ற உணர்வுக்கு ஆட்பட்டு, கல்வி கற்பதிலிருந்து விலகி நின்று விடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. எடப்பாடியின் ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது.

ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின்படி, மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால்தான் நான்காம் வகுப்பு. அடுத்து ஐந்தாம் வகுப்பில், பிறகு எட்டாம் வகுப்பில், அதையடுத்து பத்தாம் வகுப்பில், மறுபடி பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளை எழுதியாக வேண்டும்.

12ம் வகுப்பில் தேர்வு பெற்று நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும் கூட, மறுபடியும் நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அப்போதுதான் மருத்துவக் கல்லூரியில், இன்ன பிற கல்லூரிகளில் இடம் கிடைக்கும். (பல லட்சக்கணக்கில் பணம் கொடுப்பவர்களுக்குப் பூஜ்ஜியம் மார்க் எடுத்தாலும் கிடைக்கும் என்பது வேறு விஷயம்).

படிப்படியாக மாணவர்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றும் சதி இதில் அடங்கி இருக்கிறது.

மொழித் திணிப்பு

அது மட்டுமல்ல மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டும் என்ற பெயரில் இந்தித் திணிப்பு நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாஜக ஆளுகிற மகாராஷ்டிரா மாநிலத்திலேயே இந்தக் கல்வித் திட்டத்தை அமலாக்க முயன்று, மக்களின் கடும் எதிர்ப்பால் அதனை திரும்பப் பெற்றிருக்கிறார்கள். கூட்டங்களில் அவர் பேச வேண்டும்.

இந்த தேசியக் கல்வித் திட்டத்தை எடப்பாடி ஏற்கிறாரா? நிராகரிக்கிறாரா?

கல்வி நிதி மறுப்பு

அது மட்டுமல்ல இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்ததால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வித் தொகை ரூபாய் 2000 கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்து வருகிறது. இதுவும் சரியானதுதான் என்று எடப்பாடி ஏற்கிறாரா? மறுக்கிறாரா?

100 நாள் வேலை

நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை தர வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது. பல காரணங்களைக் கூறி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றிக் குறைக்கப்பட்ட அந்த நிதியும் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதற்கு எடப்பாடி உடன்படுகிறாரா? அல்லது எதிர்க்கிறாரா?

சமஸ்கிருதம்

இந்தியாவில் அலுவல் மொழிகளாக தமிழ் உள்பட 22 மொழிகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும். சமஸ்கிருதம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தாய்மொழி அல்ல. மக்களால் பேசப்படக்கூடிய மொழியும் அல்ல. ஆனால் பல கோடிகணக்கானவர்கள் பேசுகிற தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிடப் பத்து மடங்குக்கும் அதிகமாக சமஸ்கிருதத்துக்கு மொழி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது ஏன்? இந்தக் கேள்வியை எடப்பாடி கேட்பாரா? கேட்க மாட்டாரா?

ஒரு ரூபாய்க்கு 29 பைசா

பிஜேபி ஆளுகிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழ்நாடு போன்ற பிஜேபி ஆளுங் கட்சியாக இல்லாத மாநிலங்களில் நிதி ஒதுக்கீட்டைச் சுருக்கி அவற்றை பற்றாக்குறைக்கு ஆளாக்குகிறது. இந்த அநீதி பற்றி எடப்பாடி பேசுவாரா? பேச மாட்டாரா?

இயற்கைப் பேரிடர் நிதி என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தலைவரே பிரதமர் மோடிதான். தமிழ்நாடு இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட போது மோடி அரசு நிதி எதுவும் தரவில்லை. அப்போது எடப்பாடி தமிழ்நாட்டுக்கு நிதி தர வேண்டும் என்று கேட்டார். இப்போது அதைக் கேட்பாரா? கேட்க மாட்டாரா?

தொகுதி எண்ணிக்கைக் குறைப்பு

தொகுதிகளை மறுவரையறை செய்வது என்பது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இப்போது உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படுகிற அபாயம் உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர்கள் மழுப்பலாகப் பேசுகிறார்கள் தெளிவாக எதையும் கூறுவதில்லை. தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படுவதை எடப்பாடி ஒத்துக் கொள்வாரா? அல்லது எதிர்ப்பாரா?

கீழடி அறிக்கை

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை ஒன்றிய அரசுக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாகியும் அதை வெளியிடவில்லை. தமிழரின் தொன்மையை நிரூபிக்கும் அந்த ஆய்வுகளை, போதிய அறிவியல் ஆதாரமில்லை என்று கூறி ஒன்றிய அரசு மறைக்கப் பார்க்கிறது. ஒன்றிய அரசின் செயலை எடப்பாடி ஏற்கிறாரா? அல்லது கண்டிக்கிறாரா?

மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்துகிறது என்கிறார் எடப்பாடி. மோடி அரசு மின்சாரம் குறித்த ‘உதய்’ திட்டத்தைக் கொண்டு வந்த போது, இதை ஒப்புக் கொண்டால் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை அடிக்கடி உயர்த்த வேண்டி இருக்கும் என்று சொல்லி ஜெயலலிதா கையெழுத்திட மறுத்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பின்பு எடப்பாடி முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் போது, அந்தத் திட்டத்தை ஏற்று அவரது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார். மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கிய உதய் திட்டத்தில் தனது அரசுதான் கையெழுத்திட்டது என்பதை எடப்பாடி மறந்து விட்டாரா? மறைக்கிறாரா?

ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி தலைமையில் நடந்த ஆட்சி பாஜகவுக்கு அடிமை போல செயல்பட்டது. அப்போது ‘தமிழ்நாட்டை மீட்போம்’ என்று நாங்கள் பிரச்சாரம் செய்தோம். அந்த முழக்கத்தைத் தான் அவர் இப்போது கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்ற பின்பு, இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று இவரே சொன்னார். இப்போது மீண்டும் சேர்ந்து கொண்டார்.

ஏன் கூட்டணி சேர்ந்தார் என்பதையும் எடப்பாடி விளக்க வேண்டும். கொள்கைகளில் ஒற்றுமை வந்து விட்டதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா?

பொறுப்பு

நான் எப்போது வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பேன் என்கிறார் எடப்பாடி. தனது கட்சியின் அடிப்படைகளையே கொச்சைப்படுத்தும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதைக் குறித்து கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு ஒரு அரசியல் தலைவருக்குப் பொறுப்பு உள்ளதா? கிடையாதா?

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் என்கிறார்கள். தமிழ்நாட்டை மோடி அரசு வஞ்சிப்பதை எதிர்த்து திமுக போராடுகிறது. தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் போராடுவதை எடப்பாடி தவறென்று சொல்கிறாரா? தானும் போராடுவாரா?

மீட்பதா? மூழ்கடிப்பதா?

எந்தக் கட்சி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறதோ அதனுடனே கூட்டணி வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை வர்ணாசிரமச் சிறைக்குள் தள்ளிவிட பின்னிருக்க எடப்பாடி முயல்வது தமிழ்நாட்டை மீட்பதா? அல்லது மூழ்கடிப்பதா?

தொகுப்பு: டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button