‘‘தொழிலாளி வர்க்கத்தைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்கி வெல்லும் பலம் பெற ஒன்றுபடுவோம்’’
சிஐடியு மாநில மாநாட்டில் தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேச்சு

கோவை என்எஸ்ஆர். கலை அரங்கில் சிஐடியூ வின் 16 வது மாநில மாநாடு 2025 நவம்பர் 6, 7, 8, 9 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
மாநாட்டில் பேசிய ம.இராதாகிருஷ்ணன் “உலகின் தொழிலாளி வர்க்கம் சங்கம் அமைக்கத் துவங்கிய போது எதற்காகச் சங்கம் அமைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்றுத் தந்தார்களோ, அந்த வழியில் நாம் முன்னேறிச் செல்வதற்கு உரிய அத்தனை தடைகளையும் இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். ஏஐடியுசி இந்திய விடுதலைக்கு முன்னால் ஒரு சங்கமாகத்தான் இருந்தது.
இந்தியாவில் தொழிலாளர்கள் ஒன்றாக, ஒரே சங்கமாக நின்று போராடித்தான் வெள்ளையர்களை வெளியேற்றினார்கள். 1921 லேயே, ஏஐடியுசி, இந்தியாவிற்கு முழுமையான விடுதலை வேண்டும் என்று முதன்முதலில் தீர்மானம் இயற்றியது. அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் (1924) விஞ்ஞான சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதே லட்சியம் என்று சூளுரைத்தது.
தற்போது ஒன்றிய பாஜக அரசாங்கம் இருக்கிறது. “ஷ்ரம் சக்தி நிதி” என்ற பெயரில் தொழிலாளர் கொள்கையை ஒன்றிய அரசு பேசுகிறது.
இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் நலன் காக்கும் கொள்கைகளை, சட்டங்களை குழி தோண்டி புதைத்து விட்டது. புதிதாக தொழிலாளர்களுக்காக ஒரு கொள்கையை அது சொல்கிறது.
ஷ்ரம் தர்மா, ராஜ தர்மா என்று பேசுகிறது. ஷ்ரம் சக்தி நிதி, சுக்ல நியாயா அடிப்படையில் என்கிறார்கள். மனுஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் எல்லாம் கொள்கையாகச் சொல்லுகிறார்கள். இந்த விவரங்களுக்குள் நான் போகவில்லை. ஆனால் அதில் சொல்லப்படும் சுக்ல நியாயா என்றால் என்ன? என்று தேடிப் பார்த்தால், சுக்ர நீதி எழுதிய சுக்ராச்சாரியார் “லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதை அனுமதிப்பதுதான்” என்று கூறுகிறார்.
அர்த்த சாஸ்திரம், சுக்ல நியாயாவைக் கடைப்பிடித்தால் அரசாங்கமே இருக்காது, மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்; அது ஒரு அயோக்கியத்தனம் என்று சொல்லுகிறது. எது புனிதமானது, எது மேலானது என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்களோ, அந்த சுக்ல நீதியை அயோக்கியத்தனம் என்று அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது. அப்படியானால் அயோக்கியத்தனத்தை நாட்டில் அரங்கேற்றப்போகிறோம் என்று வெளிப்படையாகவே தொழிலாளர் கொள்கை “ஷ்ரம் சக்தி நிதி” பிரகடனப்படுத்துகிறது.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப்பெற என வேண்டும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கை உள்ளிட்ட இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை எதிர்த்து இடையறாது போராடிக்கொண்டே இருக்கிறோம். அனைத்துத் தொழிற்சங்கங்கள் இணைந்து பல்வேறு பொது வேலை நிறுத்தங்களை நடத்தியிருக்கிறோம்.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நேரடியாக அமலாக்க விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால் மற்றொரு பக்கம் அந்தச் சட்டத்தில் உள்ள சரத்துக்கள் அமலாகிக்கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக நாம் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை சட்ட உரிமை பறிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் இணைந்து போராடியதால், தமிழ்நாட்டு மக்கள் எழுச்சியால், அதுவும் தமிழ்நாடு அரசு சுயமரியாதைக் கொள்கை கொண்டு இருப்பதால் திரும்பப் பெறப்பட்டது. தமிழ்நாட்டைத் தவிர 8 மணி வேலை நேரத்தைப் பறித்து சட்டத் திருத்தம் செய்த எந்த ஒரு மாநில அரசும், அதனை திரும்பப் பெறவில்லை.
அதே நேரத்தில் கடந்த காலங்களில் நாம் நடத்திய இடையறாத போராட்டங்கள், வேலை நிறுத்தங்களின் விளைவாக கடந்த தேர்தலின் போது பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. நமது போராட்டங்கள் சக்தியாக நடைபெற்ற இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது என்பது உண்மைதான். ஆனாலும் ஒன்றிய அரசு சிறுபான்மையாக இருக்கிற போதும் மேலும், மேலும் தாக்குதல்கள் தொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதனை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்.
எதிர்த் தாக்குதல் அதாவது நம்மைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்கும் தாக்குதல் தற்காப்புக்கானது என்று சொன்னால், அந்தத் தாக்குதலை நாம் போதுமான அளவிற்குத் தொடுத்து இருக்கிறோமா? இது இன்றைக்குத் தேவையான கேள்வியாக இருக்கிறது.
கடந்த ஜூலை 9 அன்று நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினோம். அதில் 25 கோடி தொழிலாளர்கள் பங்கு பெற்றார்கள். அந்தப் போராட்டத்தை நாம் வலுவாகத்தான் நடத்தினோம். அதன் பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஆனால், இடதுசாரி தொழிற்சங்கங்களில், ஏஐடியுசியாக இருக்கலாம், சிஐடியுவாக இருக்கலாம், ஏஐசிசிடியுவாக இருக்கலாம். நாம் நடத்துகிற போராட்டங்களில், இப்போராட்டக் களத்தில் பங்கேற்கிற தொழிலாளர்கள், நமது உறுப்பினர் பலம் அது வாக்காக மாறுகிற போது வர்க்கக் கட்சி பக்கம் வரமாட்டேன் என்கிறதே ஏன்?
இன்னும் சொல்லப்போனால் வடமாநிலங்களில் போர்க்களத்தில் பங்கேற்று தலைமையேற்று போராட்டங்களில் வெற்றியீட்டும் தலைவர்களில் கூட சங்கிகளுடைய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்கிற ஆய்வு இன்று வந்து கொண்டிருக்கிறது. நாம் எங்கோ தவறியிருக்கிறோம். அதைப் பரிசீலிக்க வேண்டும்.
நான் மீண்டும் விடுதலை பெற்ற 1947 காலத்திற்கே செல்கிறேன். அப்போது ஏஐடியுசியின் பொதுச்செயலாளராக தோழர் எம்.என்.ஜோஷி இருந்தார். அவர் கம்யூனிஸ்ட் இல்லை. காங்கிரஸிலும் மிதவாதி. 20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் இருந்தே தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடிய, தொழிற்சங்க இயக்கம் மதித்துப் போற்றுகிற தலைவர் அவர், ‘அவர் ஏஐடியுசியை சர்வ கட்சி ஸ்தாபனம்’ என்று தெளிவுபடுத்தினார்.
அது சர்வ கட்சி ஸ்தாபனமாக ஒன்றுபட்டு நின்ற காரணத்தால்தான் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று போராடி இந்தியத் தொழிலாளி வர்க்கம் பல்வேறு வெற்றிகளை ஈன்றிருக்கிறது என்றும் உறுதிபடச் சொன்னார்.
தற்போது ஒரு கட்சி தனக்கென்று ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க முடிவு செய்து இருக்கிறது. இவ்வாறு தொழிற்சங்க இயக்கத்தைப் பிளவுபடுத்துவதால் இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு வருகிற காலத்தில் மிகப்பெரிய சேதத்தைக் கொடுக்கும். ஆக இந்த முயற்சியை இந்தியத் தொழிலாளி வர்க்கம் படு சூரணப்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்று குறிப்பிட்டார். ஆனால் இன்றைய நிலை என்ன? அனுபவம் என்ன?
நாம் களத்தில் ஒன்றுபட்டுதான் நிற்கிறோம். தோழர் தபன்சென் அவர்கள் குறிப்பிட்டதைப்போல ‘கிராஸ் ரூட் லெவல்’ (அடிமட்டம் வரை) ஒற்றுமையைக் கொண்டு செல்வதில் சிக்கல் இருந்தாலும் செல்கிறோம். துறைரீதியாக ஒற்றுமைக்கு சிரமம் இருந்தாலும் முயற்சிக்கிறோம். ஆனாலும் நம்முடைய எதிரிகள் மேலும் மேலும் தாக்குதலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தொழிற்சங்க இயக்கத்தைத் தொடங்கிய போது நமக்குக் கற்றுத் தந்தவர்கள் (Collective Bargaining) கூட்டு பேரம் என்று சொன்னார்கள். கூட்டு பேரம் என்று சொல்லுகிற போது, கூட்டு பேர சக்தி (Collective Bargaining capacity) வேண்டும் என்று சொன்னார்கள்.
இந்தியாவில் வங்கித் துறையில் பணியாற்றுகிற வங்கி ஊழியர்கள் சங்கம் இருக்கிறது. அவர்கள் போராடுகிறார்கள். மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றிய அரசு உங்களுக்கு நாங்கள் டிரிபியூனல் அமைக்கிறோம் என்று சொன்னது.
வங்கி ஊழியர் சங்கத் தலைவர்கள் நீதிபதி முன்னால் எங்களுக்கு ட்ரிபியூனல் வேண்டியதில்லை என்று சொன்னார்கள். நீதிபதி வியந்து போய் கேட்டார். அரசாங்கம் உங்களுடைய கோரிக்கையைக் கேட்டு, உங்கள் நலனைப் பிரதிபலிப்பதற்காக டிரிபியூனல் உத்தரவுகளைத் தரப்போகிறதே! அதை ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்? என்று கேட்டார்.
தலைவர்கள் சொன்னார்கள், நாங்கள் ஒன்றாக பலமாக இருக்கிறோம். எங்களுக்கு வேலை தருகிற முதலாளியாக இருக்கிற ஐபிஏ உடன் சம பலத்தோடு இருக்கிறோம். எனவே ஐபிஏ உடன் பேசி, அல்லது போராடி எங்களுக்கு உரியதைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, மூன்றாம் தரப்பான டிரிப்யூனல் தேவையில்லை என்று சொன்னார்கள்.
எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் (Collective Bargaining capacity) என்று சொல்லக்கூடிய கூட்டு பேர சக்தியை வங்கி ஊழியர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த பலத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் எத்தனை துறைகளில் பெற்றிருக்கிறது. இலக்கு நமக்கு உண்டு: அந்த இலக்கை அடைவதற்குரிய பலத்தோடு நாம் முன்னேற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்தியாவிலேயே எங்கும் இல்லாத பாரம்பரியம் அது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் இருவரும் (ஏஐடியுசி, சிஐடியு) இணைந்த மே தின விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளில் இணைந்து நிற்கிறோம், போராடுகிறோம். சிந்தனையில் செயல்பாட்டில் தனி மேடையாக இருந்தாலும், ஒரே மேடையாக இருந்தாலும் ஒன்றாக நின்று போராடுகிறோம்.
ஒரு அரசாங்கம் இருக்கிறது என்று சொன்னால்; அதனை எதிர்க்க, வீழ்த்த, முன்னேற ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் தேவை. அதற்கும் மேலாக ஒரே தொழிற்சங்கம் என்பதை நோக்கி முன்னேற வேண்டிய தேவையை, 1947 இல் என்.எம்.ஜோசி அவர்கள் உணர்த்தியதை நாம் சிந்திக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. இத்தகைய வழியில் நாம் பயணிப்போம். நாம் வெல்லுவோம்! நாம் மட்டுமே வெல்லுவோம்! இந்தியத் தொழிலாளி வர்க்கம் மட்டுமே வெல்லும்!’’.