இந்தியா

அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிப்போம்! வெனிசுலாவுடன் இணைந்து நிற்போம்!

டெல்லியில் இடதுசாரி, ஜனநாயக சக்திகள் அறைகூவல்

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும்; வெனிசுலாவுக்கு இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்தும் டெல்லியில் உள்ள சுர்ஜித் பவனில் 12.01.2026 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மூத்த தலைவர் ரவி ராய், பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி.தேவராஜன், புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்.எஸ்.சாகர், திமுக சார்பாக திருச்சி சிவா எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சமாஜ்வாடி கட்சி சார்பாக ஜாவேத் அலி கான் எம்.பி., ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பாக மனோஜ் ஜா எம்.பி, ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த சந்தீப் பதக் எம்.பி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் ஆக்கிரமிப்பையும் கண்டித்தும், ஒரு நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறியதற்கும் அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தலைவர்கள் உரையாற்றினர். இந்தக் கூட்டம், இந்திய மக்களின் முழுமையான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெனிசுலாவுக்குத் தெரிவித்தது. மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி கடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நிபந்தனையின்றி உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிறைவாக, வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும்; இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெனிசுலாவுக்கு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், வெனிசுலா, கியூபா, பாலஸ்தீன மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button