
ஈரான் யுரேனில் செறிவூட்டலில் ஈடுபடக் கூடாது அணுஆயுதச் சோதனைகளை மேற்கொள்ளக் கூடாது என அழுத்தம் கொடுத்து, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அமெரிக்கா. மூன்று கட்டப் பேச்சு வார்த்தையும் நடைபெற்றது. ஈரானும் ஏறத்தாழ ஒப்புக்கொண்டது.
எங்கள் மீதான பொருளாதாரத் தடை விலக்கப்பட வேண்டும். இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதலில் ஈடுபடாது என்ற உத்திரவாதம் வேண்டும். அரபு மண்ணில் குறிப்பாக பாலஸ்தீன காஸாவில் இருந்து இஸ்ரேல் விலகிச் செல்ல வேண்டும் என ஈரான் நிபந்தனைகள் விதித்தது. இதற்கு செவி மடுக்காமல் அமெரிக்கா உடனடியாக அணு ஆயுதச் சோதனைகள், ஆராய்ச்சிகளை நிறுத்தக் கோரியது. இதற்கு ஈரான் மறுத்தது. கடும் விளைவுகள் ஏற்படும் என அமொ¤க்கா எச்சரித்தது.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிற போதே இஸ்ரேல் ஈரானைத் தாக்கியது.
பல விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். சோதனைக் கூடங்கள் தகர்க்கப்பட்டன. கொஞ்சமும் முன்னறிவிப்பின்றித் திடீர் தாக்குதல் இது. அமெரிக்கா தூண்டிதான் இந்தத் தாக்குதல். எனக்குச் சம்பந்தம் இல்லை என அமெரிக்கா கூறினாலும், உலகிற்குத் தெரியும் இந்த உண்மை.
இஸ்ரேல் உலகிலேயே சிறந்த வான் பாதுகாப்பு அயர்ன் டோம் போன்ற சிறந்த தடுப்புச் சாதனங்கள் கொண்ட நாடு. சிறு கொசு கூட இஸ்ரேல் மீது பறக்க முடியாது என்ற பிம்பத்தை ஈரான் தகர்த்து விட்டது. தன்னிடம் உள்ள மிகப் பழைய ஏவுகணைகளை மறு சீரமைப்பு செய்து, புதிய யுக்திகளைச் சேர்த்து மிக எளிதில் இஸ்ரேல் தலைநகரைத் தாக்க முடிந்தது. இஸ்ரேல் இதனை எதிர்பார்க்கவில்லை. இரு நாடுகளும் அடுத்தடுத்து தாக்கிக் கொள்கின்றன. இரு நாட்டுத் தலைநகரமும் தீப்பற்றி எரிகின்றன. மக்கள் உறக்கமின்றி உயிர் பயத்தில் பதுங்குக் குழிகளை நோக்கி ஓடுகிறார்கள்.
இஸ்ரேல் போர்களில் இதுபோல் இழப்புகளைச் சந்தித்தது இல்லை. ஈரான் தாக்குதலை அவமானமாக, தோல்வியாகக் கருதுகிறது. எப்படியாவது ஈரானை அழிக்க- அமெரிக்க, இங்கிலாந்து போன்ற பெரிய வல்லரசு நாடுகளின் உதவியை நாடுகிறது. அமெரிக்கா நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போரில் இறங்கலாம். இஸ்ரேல் விருப்பமும் இதுதான்.

ஜி7 நாடுகளின் கூட்டம் கனடாவில் நடைபெற்றது. இதனைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு ஈரான் மீது எச்சரிக்கை விடுத்தபடி அமெரிக்க அதிபர் வெளியேறிவிட்டார். அத்தோடு ஈரான் தலைநகர் டெஹ்ரான் மக்களை ட்ரம்ப் வெளியேறச் சொல்கிறார். அதாவது மிரட்டுகிறார். மத்திய கிழக்கில் ராணுவக் கப்பல்களை அமெரிக்கா, இங்கிலாந்து நிறுத்தி உள்ளது. எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்கக்கூடும்.
ரஷ்ய அதிபர் புட்டின் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு ஈரான் தலைவர் கொமேனி ஆகியோரிடமும் அமெரிக்க ட்ரம்ப் அவர்களிடமும் பேசி உள்ளார். நான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன். பேசித் தீர்க்க முயற்சிக்கலாம். ஈரானுக்கு மின்னுற்பத்திக்கான யுரேனியச் செறிவூட்டலுக்கு நாங்கள் உதவுகிறோம் என்றும் புட்டின் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஈரான் 90 சதம் யுரேனியச் செறிவூட்டலில் முன்னேறி விட்டது. இன்னும் 10 சதம் அணு ஆயுதங்களை அதனால் தயாரிக்க முடியும். இதனைத்தான் அமெரிக்க – இஸ்ரேல் விரும்பவில்லை. இவை மட்டுமல்ல ஏராளமான பொருளாதாரத் தடைகளை மீறி ஈரான் முன்னேறுகிறது.
தற்போது சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் எனும் பிரமாண்ட திட்டத்தில் இணைந்துள்ளது. இதையும் அமெரிக்கா வெறுக்கிறது. போர் நடந்தால் இவையாவும் பாதிக்கப்படும் அல்லவா! எனவேதான் போரைத் தூண்டுகிறது அமெரிக்கா.
ஏற்கெனவே ஆப்கன் மீது போர் தொடுத்தது. ஈராக் மீது போர் தொடுத்தது. நிறைவில் அமெரிக்கா தோல்வியில்தான் வெளியேறியது. முன்னர் சின்னஞ்சிறிய வியட்நாம், சிறிய நாடு கியூபா இரண்டு நாடுகளிடமும் தோற்று வெளியேறியது அமெரிக்கா. எனினும் அடங்கவில்லை. அமெரிக்கா ஜி7 நாடுகளுக்கு, உலகில் போர் நடந்து கொண்டே இருக்க வேண்டும். தனக்கு இசையாத நாடுகளைக் கூட்டாகத் தாக்கி நிலைகுலையச் செய்வார்கள். லிபியா,- செர்பியா என ஏராளமான உதாரணம் உண்டு. ஆனால் இவர்களால் ரஷ்யாவை ஒன்றும் செய்ய இயலவில்லை.
மூன்று ஆண்டுகள் போர் தொடர்கிறது. யாரால்? அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளால். இவர்கள்தான் உக்ரைனைத் தூண்டினார்கள், ஆயுதம் கொடுத்தார்கள். ரஷ்யா – & உக்ரைன் போர் தொடர்கிறது.
இவர்கள் அனைவரும் சேர்ந்தும் கூட ஏன் ரஷ்யாவை அடக்க முடியவில்லை, தோற்கடிக்க முடியவில்லை. ஜி7 நாடுகளின் பின்னால் ஆயுத உற்பத்தி உள்ளது. இவர்கள் அனைவரும் மரண வியாபாரிகள். எனினும் ரஷ்யாவிடம் எடுபடவில்லை.
இவர்களால் உக்ரைனைச் சேர்க்கவும் முடியவில்லை. உக்ரைன் அழிவைத் தடுக்கவும் முடியவில்லை. இது ஜெலன்ஸ்கி போன்ற தலைவருக்குப் புரியவில்லை.
சரி ஐநா சபை என்ன செய்கிறது? ஐநாவில் தலை எப்போதோ சாய்ந்து விட்டது. ஐநாவின் நோக்கங்களையும் ஜி7 நாடுகள் தகர்த்து விட்டன.
அமெரிக்க – இங்கிலாந்து தனது வீட்டோ ரத்து அதிகாரத்தால் உலக விடுதலை இயக்கங்களுக்கு இழைத்த தீமைகள் ஏராளம்.
நெல்சன் மண்டேலாவைச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆப்பிரிக்கா விடுதலை பெற வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்து வீட்டோவைப் பயன் படுத்திய நாடுகள்தான் அமெரிக்காவும் ஜி7 நாடுகளும். இவர்கள் யாருக்கும் உலகத் தலைவர் தகுதி ஏதுமில்லை. அனைவரும் காலனி ஆதிக்கச் சக்திகள் போர் வெறியர்கள்.
இன்றைய சூழலில் இந்தியா போர்ச் சூழலை வெறுக்க வேண்டும். பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும். ஈரான் – இஸ்ரேல் அமைதிப்பேச்சுக்கு முயற்சிக்க வேண்டும். நாடு என்ற முறையில் இந்தியாவிற்குத் தார்மீக நெறிகள் உண்டு. ஆனால் முன்னெடுப்புச் செய்ய நேரு போன்ற சர்வதேசப் பார்வை கொண்ட தலைவர்கள் இல்லையே?
எது எப்படியோ! போர் இல்லா உலகம் எழுக!
போர்களுக்கு எதிராக மானுடக் குரல் எழுக!