தலையங்கம்

விஜய் மல்லையாவின் விளையாட்டு

தலையங்கம்

ஓடிப்போன விஜய் மல்லையா, பாட்காஸ்ட் வழியாகத் தந்துள்ள நீண்ட பேட்டி, இந்தியாவின் அரசியல், பொருளாதாரத் தளத்தில் ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

தன்னை வங்கிகளும் இந்திய அரசும் கடுமையாகச் சித்திரவதை செய்வதாக அவர் கூறியிருக்கிறார். 2017 கடன் மீட்புத் தீர்ப்பாயத்தில் தனக்கு 6,848 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தீர்ப்பானதாகவும், தனது சொத்துக்களில் இருந்து இந்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய்களை எடுத்து இருப்பதாகவும், தனது கடன் தொகைக்கு மேல் அதிகத் தொகையைச் செலுத்தி விட்டதாகவும், அதற்குப் பின்னும் 7000 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாக வங்கிகள் கூறுவதாகவும், தனக்கு மட்டும் இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

2017ல் ஒரு கடன் தொகை இருந்தால், அதற்கப்புறம் எட்டு ஆண்டுகளில், வட்டியும் தண்டனைத் தொகைகளும் சேர்ந்து கொண்டே வரும் என்பது தெரியாத அப்பாவி போல அவர் பேசியிருக்கிறார்.

இந்தியாவில் நிறுவனங்களை நடத்துவதில் அதிகார வர்க்க, அரசியல் செல்வாக்கு மிகுந்து விட்டது, இனி இங்கு தொழில் நடத்த முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இவர் ஒன்றும் அரசியல் அறியாதவரும் அல்ல. 2002 முதல் 2008 வரை மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவிலும், மீண்டும் 2010ல் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற மக்கள் மாநிலங்களவை உறுப்பினரானவர்.

கார்ப்பரேட்டுகளுக்குக் கட்சியாவது, சித்தாந்தமாவது, அதிகாரத்துக்கு வர அவை ஒரு வாகனம் மட்டுமே!

வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாதவர் மட்டுமல்ல, வாங்கிய கடனை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி, பண மோசடி வழக்குகளில் சிக்கியவர். இதனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு ஒரு நாள் முன்னதாக 2016 மே 2 ஆம் தேதி, இங்கிலாந்துக்குப் பறந்து சென்று விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2016 ஏப்ரல் 24 ஆம் தேதியே அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 2016 மார்ச் 13ஆம் தேதி அன்று அவரைப் பிணையில் வர முடியாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யுமாறு ஐதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னரும் அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முடிந்தது. 2018ல் அவர் தந்த ஒரு பேட்டியில், ஆளுங்கட்சிக்கு நான் ஒரு மிகப்பெரிய தொகையைக் கொடுத்தேன், அதன் பின்புதான் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டேன் என்றும் சொன்னார்.

அவர் லண்டனில் சென்று இறங்கியதற்குப் பின்பு, அவர் வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதான் விந்தை!

தனக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பதாகவும் இன்னும் பிறருக்குப் பல சலுகைகள் தருவதாகவும் அவர் கூறும் குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கிறது.

திருப்பிச் செலுத்தப்படாத கடனுள்ள நிறுவனங்களை, குறைந்த விலையில் விற்று கடனை ஈடு கட்டுவதற்கு, ‘ஹேர் கட்’ என்று அரசு பெயர் வைத்திருக்கிறது. இதற்கெல்லாம் சமஸ்கிருதப் பெயர் இல்லை!

62 ஆயிரம் கோடி ரூபாய் கடனுள்ள 10 நிறுவனங்களை, அதானி வெறும் 16 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கிக் கொண்டார். 74% ‘ஹேர் கட்’. அரசும் வங்கிகளும் மறைத்து வைக்கிற, இதுபோன்ற இன்னும் ஏராளமான விவரங்களை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

தன்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்று விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்தக் கோரிக்கையை 2020ல் நீதிமன்றம் நிராகரித்தது. ஆனாலும் இன்று வரை இங்கிலாந்தில் இருக்கிறார்.

அவர் இந்தியாவுக்கு வர வேண்டுமானால், அவரை மரியாதையோடு நடத்த வேண்டும், விசாரணை மன்றமும் சிறைச்சாலையும் என்ன சூழலில் இருக்கும் என்பதற்கான சட்டபூர்வமான உத்தரவாதத்தை இந்திய அரசு தர வேண்டும் என்கிறார்.

குற்றமற்றவரெனில், மிகச் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து இந்தியாவுக்கு வந்து வாதாடி நிரூபிக்க வேண்டியதுதானே!

கடன் வாங்கிக் கட்டிய நிறுவனம் நஷ்டம் அடைந்தால், கடன் வாங்கியவன் பொறுப்பல்ல என்பது பெரும் முதலாளிகளுக்காக இந்தியா இயற்றி வைத்திருக்கும் சட்டம். இதை வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள்.
வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுகிறவர்களை கிரிமினல் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்த உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button