
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனிப்பெரும் ஆற்றலாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் கனவுகளுக்கு சீனாவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் புதிய கண்டுபிடிப்புகளும் இன்று தடையாக உருவாகி வருகின்றன.
1. உலக வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 1970இல் 15% என்றிருந்த நிலை மாறி, 2019இல் அது 9% எனக் குறைந்து, இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், சீனாவின் பங்கு 12.3% என உயர்ந்துவிட்டது.
2. அண்மையில் அறிவியல் நுட்பத்தின் போக்கினை மாற்றிய 50 மாபெரும் கண்டுபிடிப்புகளில் 30க்கும் மேற்பட்டவை சீனாவில் உருப்பெற்றவையாக இருந்தன என்று அறியப்பட்டது. பத்துக்கும் குறைவாகவே அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் இருந்தன.
3. தொடர்பு நுட்பத்தில், 5ஜியின் வளர்ச்சியை முன்னெடுத்த ஹவாய் நிறுவனத்தின் ஈடிணையற்ற தன்மைகள்.
4. ஹவாய் பயன்பாட்டில் 5 என்.எம் சிப்பிகளை மரபு வழியில் அல்லாமல் உருவாக்கிய வகை.
5. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் டீப்சீக் என்ற தொடக்க நிலை நிறுவனம் மாற்று முறையில் உருவாக்கிய வடிவமைப்பின் சிறப்பு.
6. அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களில் 15% பகுதியினரே 2001இல் கல்வியை முடித்துக்கொண்டு சீன நாட்டிற்குத் திரும்பியிருந்தனர். 2008இல் இது 40% என மிகுந்தது. ஆனால், தற்போது ஏறத்தாழ 80%க்கும் மேலானோர் கல்வியினை முடித்துச் சீனாவுக்குத் திரும்பிவிடுகின்றனர்.
7. பொருள் வளத்தில் அமெரிக்கா 30 பில்லியன் டாலர் அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும், சீனா 20 பில்லியன் டாலர் என்று வளர்முகத்தில் பிற நாடுகளைப் புறந்தள்ளி இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. சில ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்புலத்தில் அமெரிக்காவின் அச்சத்தையும் நெருக்கடியையும் காணவேண்டியுள்ளது.
சீனாவின் நுட்ப வளர்ச்சியும் உற்பத்தித் திறனும் பெருகி இருப்பதற்கான அடிப்படையே, அமெரிக்கா கண்டுபிடித்த நுட்பங்களையும் உற்பத்தி முறைகளையும் சீன மாணாக்கர் திருடிச் சென்று தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு வழியமைக்கின்றனர் என்ற எண்ணங்கள், டிரம்ப் போன்றோர் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமும் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டு, அனைவரது மனதிலும் பதிந்துவிட்டன.
அமெரிக்கா அல்லாத பிறர் பெருமளவில் எதையும் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலைப்பாடுகளும் பலருக்கு நெஞ்சில் நிலைத்திருக்கிறது.
அமெரிக்கா அல்லாது, அய்ரோப்பியர், இந்தியர் போன்ற நாட்டினரும்கூட, சீனக் கண்டுபிடிப்புகளும் உற்பத்திப் பெருக்கங்களும் பிறர் நுட்ப அறிவைக் கவர்ந்து உருவாக்கப்பட்டவை என்ற மாயையைப் பெரிதும் இன்று வரை நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கான வாய்ப்புகள், சீன மாணவர் வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன என்று நம்புகின்றனர்.
அனைத்துக்கும் அடிப்படை, சீனாவின் நுட்ப வளர்ச்சியும் உற்பத்தித் திறனும்தான் என நினைத்து, அவற்றை முடக்குவதற்காக அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார் டிரம்ப்.
கடந்த முறை ஆட்சியில் இருக்கும்போது டிரம்ப், சீனப் படையினருடன் தொடர்புடையோர் எனக் கூறி ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன மாணவர்களின் விசா உரிமைகளை நீக்கி, அவர்களை சீனாவுக்கு வெளியேற்றினார்.
அமெரிக்காவில் உள்ள ஆர்வார்டு போன்ற உயர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்லாது, பொதுப் பல்கலைக்கழகங்கள், சிறப்பில்லாத சிறு நிறுவனங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு மாணவர் கற்று வருகின்றனர். 2023-&24ஆம் கல்வியாண்டில் 210 நாடுகளைச் சார்ந்த 11 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வந்தனர். இவர்களில் இந்திய மாணவர்கள் 3,30,000 பேர். அடுத்து,சீனாவில் இருந்து 2,80,000 மாணவர் சென்றுள்ளனர். இந்த இரண்டு நாடுகளின் எண்ணிக்கை மட்டுமே கூட்டளவில் பெரும் பகுதியாக உள்ளது.
ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில், போரினால் துன்பறும் பாலத்தீன மக்களுக்குச் சார்பாகவும், இசுரேலின் வன்முறைக்கு மறுப்பாகவும் நடந்த போராட்டங்களில் யூத எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவற்றில் அமெரிக்க மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இதுவும் டிரம்பு கண்களை உறுத்தியது.
வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களைத் தருமாறு டிரம்ப் அரசு பல்கலைக்கழகத்திடம் கேட்டது. ஆனால், பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, பல்கலைக்கழகத்திற்கான நிதி நல்கை நிறுத்தப்பட்டது. பாலத்தீனத்திற்குச் சார்பாக நின்று, இசுரேல் -யூத எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டோர் சீன மாணவர்கள் மட்டுமல்ல. சீன மாணவர்களின் பங்களிப்பு இவற்றில் குறைவு என்றே தெரிகிறது.
இருப்பினும், சீன மாணவர்களது நுழைவுக்கான விசா ஏற்பினைத் திரும்பிப் பெறும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சீன மாணவர்கள் பிற நாட்டு மாணவர் போலன்றித் தனித்துப் பார்க்கப்படுகின்றனர்.
சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியோடு தொடர்புகொண்டோர் மற்றும் உயர் நுண்ணறிவுக் கல்வியில் பயில்வோர் போன்ற மாணவர்களது விவரங்கள் திரட்டப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியோடு தொடர்பு உடைய அனைவரும் வேவு பார்க்க வந்தோர் என்றும் உயர் நுண்ணறிவு பயில்வோர் யாவரும் அந்த நுட்பங்களைக் களவாடிச் செல்வோர் என்றும் இப்போது கருதப்படுகின்றனர்.
அகவை ஆறில் இருக்கும்போது இளம் கம்யூனிஸ்டு அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்கூடக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுவருகின்றனர். அத்துடன், சீன மாணவர்களது சமூக தளப் பக்கப் பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
தற்போது அமெரிக்காவில் பயின்றுகொண்டிருக்கும் சீன மாணவர்களது விசா நீக்கத்தினை எதிர்த்துப் பல்கலைக்கழகங்கள் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதனால், புதிதாக அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்து செல்வோருக்கான விசா மறுக்கப்படுகிறது. ஒருவேளை கிடைத்தாலும், அமெரிக்காவில் இறங்கியவுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது.
அமெரிக்காவில் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் போன்ற நிதி வருவாய் அடிப்படை வேண்டலாக இருக்கிறது. இந்தக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டண வரவு இல்லாமல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றன.
25% வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டுள்ள ஆர்வார்டு போன்ற உயர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர் இல்லாமல் வேறு வகையில் தங்களைக் காத்துக்கொள்ள முடியலாம். ஆனால், பிற பல்கலைக்கழகங்கள், சிறு கல்வி நிறுவனங்கள் ஆகியன வெளிநாட்டு மாணவர்களின் கட்டண வரவின்றிச் செயல்படுவதே கேள்விக்குறியாக இருக்கும்.
அமெரிக்க நாட்டில் பிறந்த இடைநிலை மற்றும் கீழ்நிலை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி பெறவும், வெளிநாட்டு மாணவர்களின் உயர் கட்டணங்களே உதவியாக இருக்கின்றன.
வர்சீனியா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் வில்லியம் பர்சுடைன் என்பார், வெளிநாட்டு மாணவர் மீதான தடைகள், அமெரிக்கா மீதான தாக்குதலாக மாறிவிடும் என்று எடுத்துக்காட்டுகிறார்.
வெளிநாட்டு மாணவர்களின் பங்களிப்பு 2023-24இல் 14.3 பில்லியன் டாலர்களாக இருந்தது. அவர்கள் 3,78,000 பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதனால், 43.8 பில்லியன் டாலர் அமெரிக்காவின் பொருளிய வளர்ச்சிக்குக் கிடைத்திருக்கிறது என, திறந்த கதவம் என்ற அமைப்பு விவரங்களைப் பகிர்ந்திருக்கிறது.
அறிவியல், நுட்பம், பொறியியல், கணக்கு ஆகிய துறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் பங்களிப்பு 2021இல் 30%க்கு மேல் இருந்ததாக, காப்புப் புலனாய்வு நிறுவனம் மதிப்பிடுகிறது. இருப்பினும், வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்காக இருக்கும் சீனர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன் என்ற வினா எழலாம்.
உயர் கட்டணத்துடன் அமெரிக்கா செல்லும் பிற நாட்டு மாணவர்கள் பெரிதும் செல்வ நிலையில் உள்ளோர். பயணச் செலவு, மிகு கட்டணங்கள் ஆகியவற்றை ஏற்கக்கூடிய நிலையில் இருப்பவர்தாம் அமெரிக்கக் கனவுகளைக் காண முடியும்.

இவர்கள் அனைவரும் கல்வியினை முடித்த பின்னர், பெரிதும் அமெரிக்காவில் பணியில் சேர்ந்து, குடியுரிமை பெறும் எண்ணங்கள் கொண்டவராகவே இருக்கின்றனர்.
ஆனால், கல்விக்காக அமெரிக்கா செல்லும் 80% சீன மாணவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிவிடுகின்றனர். 2011இல் இந்த எண்ணிக்கை 15% மட்டுமே இருந்தது. 2008க்குப் பிறகு இது 40% என உயர்ந்து படிப்படியாக வளர்ந்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் கட்டமைப்புகள், தொழில்கள், வாழ்முறை என யாவும் பிற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பெரிதும் முன்னேறியுள்ளன. கற்ற கல்வியைப் பயன்படுத்தும் வேலை வாய்ப்புகளும் அங்கு பெருகியிருக்கின்றன.
இதனால், அமெரிக்கா செல்லும் சீன மாணவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 25% அளவுக்குக் குறைந்திருக்கிறது.
அமெரிக்காவைப் போன்று தரத்திலும் தகுதியிலும் பெருமை கொண்ட பல கல்வி நிறுவனங்கள் சீனாவில் செயல்படுகின்றன. உலக அளவிலான தரவரிசைப் பட்டியலில் அவை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு மேலாக மதிப்பிடப்பட்டு வருகின்றன.
ஆனால், மேம்பட்ட நிறுவனங்களில் இடம் பெற இயலாதோர் மட்டுமே இப்போது கல்விக்காக அமெரிக்காவை நாடுகின்றனர் என்று விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலை இந்தியாவிலும் இருக்கிறது. அய்.அய்.டி. போன்ற உயர் நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் இடம்பெற இயலாதோர்தாம் பெருமளவில் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். ஆயினும், அய்.அய்.டி.யில் படித்து உயர் கல்வி பெற்றோர் அடுத்து அமெரிக்க நிறுவனங்களில் புகுந்து பறந்து விடுகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கிய இந்தியா, அங்கு படித்தோருக்காகப் பணி வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கவில்லை என்பது வியப்பான உண்மை.
இங்கிலாந்து, கனடா, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள நிலை வேறு. அங்கு கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டு மாணவர்களுக்கான தடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்திய மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளைக் கனடா அறிவித்தது.
இங்கிலாந்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளை விரிவாக்கியபோது, சேர்க்கைக் குறைவால் உள்நாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனை எதிர்த்து நீண்ட போராட்டங்கள் நடைபெற்றன.
வெளிநாட்டினரின் வருகையால் உள்நாட்டில் வேற்று இனத்தாரின் எண்ணிக்கை கூடிவிடுவதை அந்த நாட்டு அரசுகளும் விரும்பவில்லை.
இன ஒதுக்கல் என்பதில் தொடங்கி, உள்நாட்டில் நிலவி வரும் இருப்பினைக் காக்கும் முயற்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடியேற்ற நாடான அமெரிக்காவிலும் இத்தகைய நிலைமைகள் இருந்தபோதிலும், அங்கு சீன மறுப்பு மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வந்து பயின்று, நுட்பங்களை அறிந்து, பின்னர் சீனா திரும்பிச் சென்ற பிறகு அவற்றைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் சீனா இப்போது இல்லை. அமெரிக்காவைக் காட்டிலும் நுட்ப அளவில் மேம்பட்டோரை உருவாக்கிக்கொள்ளும் அளவில் சீனா வளர்ச்சி பெற்றுவிட்டது.
செயற்கை நுண்ணறிவு, மின்வண்டிகள், மின்கலன்கள், சிப்பிகளின் உருவாக்கம், தொலைத்தொடர்பு, விண்வெளி ஆய்வுகள், இயந்திர மனிதன் என்பன போன்ற இன்னும் பல்வேறு நுட்பங்களில் சீனா முன்னிலையில் நிற்கிறது.
இவை யாவும் அமெரிக்காவில் படித்துவிட்டு வந்தோர் மட்டும் உருவாக்கித் தந்தவையாக இருக்கவில்லை.
தொடக்கத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் நுட்பங்களை சீனா நாடியிருக்கலாம். இன்று அந்த நிலை மாறிவிட்டது.
டிரம்ப் மட்டுமல்லாது, அமெரிக்கர்களும் அய்ரோப்பியரும் முதலில் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்கா இல்லை என்றாலும் வேறு நாடுகளுக்குச் சீன மாணவர்கள் செல்ல முடியும். அல்லது சீனா தனது கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள இயலும்.
சீனாவை எதிர்த்து டிரம்ப் நிழல் போர் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.