

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது பேராயம், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செப்டம்பர் 21-25 தேதிகளில் நடைபெற்றது.
ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் சென்ற பேராயத்தில், பிஜேபி ஆட்சியின்கீழ், ஒன்றிய அரசு நிர்வாகத்தில் பாசிசப் போக்குகள் இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.
இன்று அந்தப் போக்குகள் மேலும் அடர்த்தியாகி விட்டன. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி முறைமை உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் அடிப்படை கருத்துகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட முறையில், தகர்க்கப்பட்டு வருகின்றன.
வருவாய்த்துறை, அமலாக்கத்துறை, நீதிமன்றங்களில் இருந்து, ஊடகங்கள், தேர்தல் ஆணையம் வரை ஆர்எஸ்எஸ், -பிஜேபியின் கைப்பிடிக்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுகள் செய்து, வாக்குத் திருட்டு நடத்தப்பட்டு இருப்பது சந்தி சிரித்துக் கிடக்கிறது.
உலக நாடுகளே மோடியின் தலைமையை விரும்பி ஏற்கின்றன. அவர்தான் விஸ்வகுரு (உலகத்தின் ஆசிரியர்) என்று சங்கிகள் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
டிரம்ப் வெல்ல வேண்டும், அவர் இந்தியாவின் நண்பர் என்று அந்த நாட்டுக்கே போய் பிரச்சாரம் செய்தவர் மோடி. வெற்றி பெற்ற ட்ரம்ப் இன்று இந்தியாவின் தலை மீது கை வைக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்கிறார். இந்தியாவுக்கு 50% வரி போடுகிறார். கால், கைகளில் விலங்கிட்டு இந்தியர்களைத் திருப்பி அனுப்புகிறார். விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துகிறார்.
அமெரிக்கா அச்சுறுத்தினாலும் கூட வேறு வழி இல்லாமல் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவை நேற்று வரை எதிரி என்று வசைபாடித் தீர்த்த பின்பு, இன்று அந்த நாட்டுக்கே சென்று கைகுலுக்க வேண்டிய கட்டாயமும் மோடிக்கு ஏற்பட்டிருக்கிறது.
வரிச்சீர்த்திருத்தம் செய்து வரியை குறைக்கப் போவதாகக் கூறி ஜிஎஸ்டி கொண்டு வந்து, உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 28% வரை மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றியது மோடி அரசு. இன்று அதில் சிறிது குறைத்து விட்டு, தன்னை மக்கள் கொண்டாட வேண்டும் என்று மோடி விளம்பரங்களை செய்து வருகிறார்.
இந்த அரசியல் பொருளாதாரச் சூழலில் நடந்து வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது பேராயம் இவற்றில் இருந்து மக்களை விடுவிக்க மேற்கொள்ள வேண்டிய அரசியல் உத்திகள், போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் உத்திகள் குறித்த தீர்மானம், அமைப்பு நிலை தீர்மானம், கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த செயல்பாடுகளின் பரிசீலனை அறிக்கை ஆகியவற்றின் மீது, நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்து அனுப்பப்பட்டிருக்கிற பிரதிநிதிகள் விவாதித்தனர்.
இந்தித் திணிப்புக்கு எதிராக, அரசியல் தீர்மானம் பேசுகிறது. இவ்வாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் முதலாவது தேசியக்கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியேயாகும்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனம், கியூபா நாடுகளோடு ஒருமைப்பாடு தெரிவிக்கும் தனிக் கூட்டமும் நடத்தப்பட்டது. விண்ணதிரும் முழக்கங்களிடையே அந்த நாடுகளின் தூதர்கள் வரவேற்கப்பட்டனர்.
உலகம் முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாட்டை வாழ்த்தி செய்தி அனுப்பியிருந்தார்கள்.
சிபிஐ(எம்), சிபிஐ(எம்எல்), பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று, வகுப்புவாத, பாசிச சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற இடதுசாரிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
“இடதுசாரி ஒற்றுமையைப் பலப்படுத்தி, அதை போராட்டத்தின் மையத்தூணாக மாற்றியமைத்து சோசலிச பாதையில் செல்வது அவசியம். இதற்கான, மக்கள் போராட்டங்கள், அரசியல் பரப்புரைகள், தேர்தல்கள் உள்ளிட்டவற்றில் இன்னும் அதிக இடதுசாரி ஒற்றுமையும், ஒத்துழைப்பும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.
இதன் மூலம் நவ தாராளமய சுரண்டல், எதேச்சதிகாரம், மதவெறி, வெறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு ஆற்றல்மிக்க மாற்று பாதையை நம்மால் காட்ட முடியும்.
இடதுசாரிகள் ஒன்றாக சேர்ந்து இயங்கினால் ஒரு திட்டமிட்டு ஜனநாயக சோசலிச இந்தியாவைப் படைப்பதற்கான பாதையில் முன்னேற்றம் காண இயலும்” என்று அரசியல் தீர்மானம் கூறுகிறது.
மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு, இடதுசாரி ஒற்றுமை அவசியம். அதனை உறுதிப்படுத்த கம்யூனிஸ்ட் ஒற்றுமை அத்தியாவசியமானதாகும்.
புதிய இந்தியாவுக்கான வழி திறக்கப்படட்டும் !